அன்பர்கள் நினைவுகூர்ந்த நிகழ்வில் ஒலித்த அருண்.விஜயராணியின் குரல்

.

மெல்பனில் கடந்த ஆண்டு இறுதியில் இயற்கை எய்திய எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான திருமதி அருண். விஜயராணி நினைவரங்கு மண்டபம் நிறைந்த அன்பர்களுடன் இடம்பெற்றது.

அருண். விஜயராணியின் அன்புக்கணவர் திரு. அருணகிரியும் புதல்வர்களும் மற்றும் குடும்பத்தினரும் ஒழுங்குசெய்திருந்த இந்நிகழ்வு மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் கடந்த 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு. ஆதித்தன் அருணகிரியின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்நிகழ்வில் திரு. அர்ஜூனன் புவீந்திரன், அருண். விஜயராணிக்கு பிடித்தமான பாரதி பாடல்களை பாடினார்.

அருண். விஜயராணியின் மூத்த அண்ணன் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் - திருமதிகள் வாசுகி பிரபாகரன் - ரேணுகா தனஸ்கந்தா - திருவாளர்கள் தெய்வீகன் - லெ. முருகபூபதி ஆகியோர் அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் குறித்து நினைவுரைகளை நிகழ்த்தினர்.
சிட்னி தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வானொலியில் (ATBC)  ஒலிபரப்பாளர் திரு. கானா. பிரபாகரனுக்கு,   அருண். விஜயராணி கலை இலக்கிய திரைஇசைப்பாடல்கள் தொடர்பாக முன்னர் வழங்கிய நேர்காணலின்  ஒலிக்கீற்றையும் சபையில் அன்பர்கள் செவிமடுத்தனர்.

குடும்பத்தினரும் இலக்கிய நண்பர்களும் வெளியிட்ட விஜயதாரகை என்னும் இமைகள் கவிந்த இலக்கிய இதழும் அருண். விஜயராணியின் வாழ்க்கைக்குறிப்புகளும் திருவாளர்கள் ஆரூரன் ரவீந்திரன் - அர்ஜூனன் புவீந்திரன் - ஆதித்தன் அருணகிரி - அஜந்தன் அருணகிரி - அகிலன் நித்தியானந்தன் - செல்வி விதுஷினி - ஆகியோரின் கட்டுரைகளும்  திரு. செல்வத்துரை விக்னேஸ்வரனின் கவிதையும் இடம்பெற்ற  நினைவு மலரும் வெளியிடப்பட்டது.விஜயதாரகை இதழின் முதல் பிரதிகளை திரு. அருணகிரியும் திருமதிகள் செல்வராணி இராஜரட்ணம் ஜெஸி ரவீந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

திரு. அஜந்தன் அருணகிரி நன்றியுரை நிகழ்த்தினார்.
----0----