திரும்பிப்பார்க்கின்றேன் - (கடந்த வாரத்தொடர்ச்சி ) - முருகபூபதி

.
  
இலங்கையின்   தென்னஞ்சோலைத் தோப்பிலிருந்து   ஸ்காபரோ   பனிமழைவரையில்  இணைந்துவரும்   இலக்கியத்தங்கை
தர்மத்திற்கும்  தார்மீகத்திற்கும்   உள்ளே  ஊடுறுவியிருக்கும்   வலியை   இனம்காண்பிக்கும்
 பச்சை மிளகாய்    சிறுகதை
    

ஸ்ரீரஞ்சனி கனடாவில்  தமிழ்  கற்கும்  மாணவர்களுக்கும்   தமிழ்  போதிக்கும் ஆசிரியர்களுக்கும்   எழுதியவர்,  இலக்கிய  வாசகர்களுக்கு    ஏற்கனவே   எழுதப்பட்ட  தமது  கதைகளையும்  தொகுத்திருந்தார்.
2009 இல்  தமிழ் படிப்போம்  என்ற  நூலின்  இரண்டு  பாகங்களையும், 2010   இல்  நான் நிழலானால்  என்னும்  கதைத்தொகுப்பையும் வெளியிட்டார்.
இந்த கதைத்தொகுப்பிற்காக 2010   இல் எனது பார்வையில் ஓரு குழந்தையும் படைப்பாளியும்  எனத்தொடங்கி  பின்வருமாறு எழுதியிருந்தேன்.
" சில தசாப்தங்கள் யார் யார் எங்கெங்கே இருக்கிறோம் என்பதே தெரியாமல் கழிந்துபோன காலங்கள்.  அவர் கனடா செல்லுமுன்னர் நீர்கொழும்புவந்து  சந்தித்ததாக  நினைவு.   ஆனால்,  மீண்டும் தொடர்புகள்   தொடராமல்  இடைவெளி  நீண்டது.    இந்த இடைவெளிகளை  நீக்கும்  வலிமைபெற்றது  இலக்கியம்  என்பதை அனுபவபூர்வமாக  அறிந்திருக்கின்றேன்.  ஈழத்தமிழ்  மக்களின் புலப்பெயர்வு  வலிகள்  நிரம்பியது.  அந்த  வலிகளை 




 சுமந்துவாழும் படைப்பாளிகள்  பலர்  தமது  உள்ளார்ந்த  கலை  இலக்கிய ஆற்றல்களை   வற்றச்செய்யாமல்,  தாம்  எங்கு  வாழ  நேர்ந்தாலும் தமது  இருப்பை  தக்கவைத்துக்கொள்வார்கள்.   அப்படி தக்கவைத்துக்கொண்ட  ஸ்ரீரஞ்சனியை   மீண்டும்  பல  வருடங்களின் பின்னர்  கனடாவில்  2007  ஆம்  ஆண்டு  இறுதியில்  சந்தித்தது எதிர்பாராத   நிகழ்வுதான்.   அவரிடமிருந்த  இலக்கிய  உணர்வுதான் என்னை  அவர்  தேடிவந்து   சந்திக்கச்செய்ததாக  அந்தக்கணங்களில்   புரிந்துகொண்டேன்.
  “ பூபதி   அண்ணா   நான் மீண்டும் எனது படைப்பிலக்கிய எழுத்தை தொடரப்போகின்றேன்.  உங்களது  நேர்காணல் எனக்கு தெம்பூட்டியிருக்கிறது-   என்றார்.   அத்துடன்  முதலில் உங்களிடமிருந்துதான்  ஆரம்பிக்கின்றேன்  என்றவர்  தாமதமின்றி  சில கேள்விகளுடன்   எனது  நேர்காணலையும்  பெற்று  கனடா  உதயன் இதழில்  பிரசுரித்து  அதன்  நறுக்கை  அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பியிருந்தார்.
  இறுதியாக   2007  இறுதியில்  கனடாவில் பனிபொழியும்  காலத்தில் அவரது  கனிவான  உபசரிப்பிலிருந்து  விடைபெற்ற  நான்,  2010 ஆரம்பத்தில்  அவுஸ்திரேலியாவில்  கொளுத்தும்  வெய்யில் சுட்டெரிக்கும்  கோடை  காலத்தில்  அவரது  கதைத்தொகுதியை கணினியில்  பார்க்கின்றேன்.   இலங்கை  தமிழக  கனடா  இதழ்களில் அவரது   சிறுகதைகளை  படிக்கும்போது  கடந்த  மூன்று ஆண்டுகளுக்குள்   அவரிடமிருந்த  வேகத்தைப்பார்த்து பிரமித்துப்போனேன்.
அன்று  கனடா  வானொலி  கலையகத்தின்  வாசலில்  அவர்  அளித்த வாக்குறுதியை   நிறைவேற்றுவதற்காக,  ஆக்க இலக்கியத்துக்கு  அவர்  வழங்கியுள்ள  உழைப்பை  இக்கதைகளினூடகப்பார்த்து வியக்கின்றேன்.   பெரும்பாலும்  அவரது  கதைகள்  தன்னிலைசார்ந்தும்   குடும்பங்கள்  சார்ந்தும்  சித்திரிக்கப்படுவதில் உளவியல்   காரணங்கள்  இருக்கக்கூடும்.


அவரது  கதைகள்  கூடுதலாக  குழந்தைகள்,  பெண்கள்  சார்ந்தவை. குறிப்பாக   புகலிடத்தில்  பெண்கள் -  தமிழ்க்குழந்தைகளின் மனஎழுச்சிகளை   சித்திரிப்பவை.   எங்களில்  பல  படைப்பாளிகள் (நான் உட்பட)  21  ஆம் நூற்றாண்டில்   வாழ்ந்துகொண்டு  20  ஆம் நூற்றாண்டை  நினைத்தவாறு  கடந்துபோனவற்றை பதிவுசெய்துகொண்டிருக்கும்  காலத்தில்  21   ஆம்  நூற்றாண்டையே தனது   படைப்புகளில்  நிகழ்கால  நினைவுகளாக பதிவுசெய்துவருகிறார்.    2007 – 2010   காலப்பகுதிக்குள்   சுமார்  16 கதைகளை   அவர்  எழுதியிருக்கிறார்.   ஒவ்வொரு  கதையிலும்  ஏதோ   ஒரு  செய்தி  இழையோடிக்கொண்டே   இருக்கிறது.  அந்த இழைகளுக்கூடாக  எம்மையும்  நாம்  தரிசிக்கமுடியும்.
  ஸ்ரீரஞ்சனியின்  சில   கதைகள்   ஆங்கிலத்திலோ   அல்லது பிறமொழிகளிலோ  மொழிபெயர்க்கத் தகுந்தவை.
தமிழ்நாடு   சித்தன்  கலைக்கூடம்  வெளியிட்ட  அச்சிறுகதைத்தொகுதி   தொடர்பாக   பெரும்பாலான   படைப்பாளிகள் பதிப்புத்துறையில்  சந்திக்கும்  கசப்பான  அனுபவங்களையும் புத்திக்கொள்முதலாக்கினார்.    பலரையும்  சந்தித்து  பேட்டி  கண்டு எழுதியவர்,   2010  ஜூலை  மாதம்  கொழும்பு   தினக்குரலுக்கு கனடாவிலிருந்து  மின்னஞ்சல்  நேர்காணலும்  வழங்கினார்.
எழுத்தில்  ஒரு   தர்மமும்  தார்மீகமும்  இருக்கவேண்டும்  என்று அந்த  நேர்காணலில்  அழுத்திச்சொல்லியிருக்கும்    ஸ்ரீரஞ்சினியின் அக்கருத்து,    இன்று    பரவலாகியிருக்கும்  முகநூல்  கலாசாரத்திற்கும் பொதுவானதுதான்.
ஸ்ரீரஞ்சனியை  தினக்குரலுக்காக  பேட்டி கண்ட   கவிதா  றஜீவனின்  ஒரு  கேள்வி:-
இளந்தலைமுறை  எழுத்தாளர்களுக்கு  நீங்கள்  என்ன  கூற விரும்புகின்றீர்கள்---?
ஸ்ரீரஞ்சனியின் பதில்:   " இதற்கு  நான்  எப்படி  பதில்  சொல்ல முடியும்---?  நான்  நடுத்தர  வயதுக்காரராக  இருந்தாலும் எழுத்துலகில்  ஆரம்பப்படியில்தானே   நிற்கிறேன்.   எழுதுவது  பற்றி  கற்க  நிறைய  விடயங்கள்  இருக்கின்றன.  ஆனால் வாசகியாக   இருந்து   எல்லோருக்கும்   நான்   சொல்ல  விரும்புவது இதுதான்.    போலியாக  எழுதாதீர்கள்.    யதார்த்தத்தை   எழுதுங்கள். நீங்கள்   உணர்வனவற்றை  உங்களுக்கு   தெரிந்தவற்றை துணிச்சலுடன்    எழுதுங்கள்.    உங்கள்   எழுத்தில்  ஒரு  தர்மமும் தார்மீகமும்  இருக்கவேண்டும். "
2010  இல்  எழுத்தில்  தர்மமும்  தார்மீகமும்  வேண்டும்  என்று  சொன்ன  ஸ்ரீரஞ்சனி,  ஆறு  ஆண்டுகளும்  ஆறு  மாதங்களும் கடந்த பின்னர்  இம்மாதம்  (எதுவரை  இணைய  இலக்கிய  இதழில் - www.eathuvarai.com )  எழுதியிருக்கும்  பச்சை மிளகாய்  என்ற சிறுதையை  இரண்டு  தளங்களில்  நின்று  எனது  வாசிப்பு அனுபவத்தை   எனக்குள்ளேயே  பதிவுசெய்துகொண்டேன்.


தர்மத்திற்கும்  தார்மீகத்திற்கும் உள்ளே  ஊடுறுவியிருக்கும்  வலியை இனம்காண்பிக்கும்  பச்சை மிளகாய்   உறைக்கிறது.   உண்மை எப்படி சுடுமோ  அவ்வாறே  பச்சை  மிளகாய்   உறைக்கும்.
எனது  இந்தப்பதிவை  பார்த்த பின்னர்  குறிப்பிட்ட  பச்சைமிளகாயை யாரும்  படித்தால்,  அது  எனது  இந்தப்பதிவுக்கு  கிடைத்த வெற்றிதான்.
வாழ்வின்  தரிசனம்தான்  எமது  படைப்புலகம்   என்போம்.  நாம் கண்டதை  அறிந்ததை  கேட்டதைத்தான்  இலக்கியமாக்குகின்றோம். பெரும்பாலான  வாசகர்கள் ஒரு கதையை , நாவலை அல்லது  பத்தி எழுத்தை  படித்தபின்னர் - அவற்றை  எழுதியவரை  நேரில் சந்திக்கும்பொழுது   எழுதியிருப்பது  உண்மைச்சம்பவமா---? கேள்விப்பட்ட    செய்தியா---?  உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கிடைத்த  அனுபவமா---?  என்றெல்லாம்  கேள்வி  மேல்  கேள்வி தொடுப்பார்கள்.   அல்லது  குறிப்பிட்ட  படைப்பில்  வரும்  இடங்களை நேரில்  சென்று  பார்ப்பதற்கு ஆசைப்படுவார்கள்.
எனது  இலக்கிய  நண்பர்  ஒருவர்  எழுதிய  நாவலில்  வரும்  மனைவி  பாத்திரம்  சிங்கள  இனத்தைச்சேர்ந்தவராக சித்திரிக்கப்பட்டிருந்தார்.   அந்த  நாவல்,  தமிழ்,  சிங்களம்,  ஆங்கிலம் ஆகிய  மொழிகளில்  வெளியானது.  அதனைப்படித்த  மூவினத்து வாசகர்களில்  பலரும், அந்த  நாவலாசிரியரை  முதல்  முதலில் சந்தித்தபோது  கேட்ட  முதல்  கேள்வி " உங்கள்  மனைவி சிங்களமா...?  "  அல்லது  உங்கள்  முன்னாள்  காதலி சிங்களப்பெண்ணா...?
இவ்வாறு  வாசகரின்  சிந்தனையில்  ஊடுறுவும்  பல படைப்பாளிகளை  அறிவோம்.
அண்மையில்   ஷோபா சத்தியின்  பொக்ஸ்  நாவலைப்படித்த பின்னர் மீண்டும்  வன்னிக்குச்சென்றால், அந்த பெரிய பள்ளன் குளம் கிராமத்தையும்   அதனைச்சூழவுள்ள  இதர  கிராமங்களையும் பார்க்கவேணடும்  என்ற  விருப்பத்தை  அந்தப்புதினம்  மனதில் தூண்டிக்கொண்டிருக்கிறது.
-------------
எழுத்தால்  இணைவோம்  என்ற  மகுடத்தில்  கனடா தமிழ் எழுத்தாளர்  இணையம்  அமைப்பில்   ஸ்ரீரஞ்சனி  செயலாளராக இருந்தவேளையில்  வெளியான  சங்கப்பொழில் 20 ஆவது ஆண்டு விழா மலரில்,  தமது  செய்திக்குறிப்பில்,
எழுத்தாளர்கள்  சமூகத்தில்  நிகழும் அநீதிகளுக்கெதிராகக்  குரல் எழுப்பவேண்டிய   தார்மீகப்பொறுப்புள்ளவர்களாக   இருக்கவேண்டும்.   அவ்வகையில்  சமூக  நீதிக்காக  நடைமுறையில்   நம்மில்  எத்தனைபேர்   போராடுகின்றோம் ? அதற்கென   எமது  மனங்களை  எந்தளவுக்கு பக்குவப்படுத்தியுள்ளோம்--?   என்றவாறான  வினாக்களை  எம்மிடம்   கேட்டுப்பார்க்கவேண்டும்.  இவை  குறித்து எமக்கு நாமே நாணயமானவர்களாக   இருந்தால்  மட்டுமே  உண்மையான  ஒரு  சமூக   மாற்றத்துக்கு  எம்மால்  வித்திட  முடியும்   என்பதை  நாம் நினைவில்   கொள்வது  அவசியமானது "  என்று எழுதியிருக்கிறார்.
ஸ்ரீரஞ்சனி  இதிலும்  தார்மீகம்,  நாணயம்,  சத்தியம்  பற்றி பதிவுசெய்கிறார்.
அவருடைய  தொடர்ச்சியான  பதிவுகளை அது நேர்காணலாக இருந்தாலென்ன  சிறுகதையாக  வந்தாலென்ன  கட்டுரையாக பதிவானால்  என்ன,  அனைத்திலும்  தார்மீகத்தை  வேண்டி  நிற்கும் குரலே  ஓங்கி  ஒலிக்கின்றது.
ஸ்ரீரஞ்சனியின்   புதல்வி சிவகாமி ஆங்கிலத்தில்  எழுதும்  படைப்பாளி.
கனடா டொரண்டோ ஸ்டார் பத்திரிகை நடத்திய சிறுகதைப்போட்டிக்கு  A NEW WORLD என்னும் சிறுகதையை  எழுதி  பரிசுபெற்றவர்.  லதா ராமகிருஷ்ணன்  மொழிபெயர்ப்பில்  பதிவுகள்  இணைய  இதழில் வெளியாகியது.
           வேறும்   இதழ்களுக்கு மகள் எழுதிய  ஆங்கிலக்கட்டுரைகள்,  கதைகளைத்தொகுத்து மகளின் 18 வயது பிறந்த தினத்தில் (A portrait of a young artist )  தனி நூலாக அச்சிட்டுக்கொடுத்து   பிறந்ததினப்பரிசுக்கு   புதிய பரிமாணத்தை  அறிமுகப்படுத்தியிருந்தார்  ஸ்ரீரஞ்சனி.
இந்தத் தகவல்களை பதிவுகள் இணைய இதழில் படித்து தெரிந்துகொண்டேன்.
நான்  பலவருடங்களுக்கு  முன்னர்  தாயகத்தில் குழந்தையாகப்பார்த்த ஸ்ரீரஞ்சனி,  இன்று  ஆளுமையுள்ள  பெண்ணியவாதியாக,  சவால்களை  எதிர்கொண்டு   எழுதிவருவதைப்பார்க்கின்றபோது, மனநிறைவாக  இருக்கிறது.
    கடந்த 2011 ஆம்  ஆண்டில் நாம் கொழும்பில் நடத்திய மாநாட்டுக்கும் தார்மீக  ஆதரவை  வழங்கியிருந்தார்.  அவ்வேளையில்  எமது தரப்புக்காக   வாதாடியதுடன்,  தினக்குரல்   நேர்காணலில் (2010)  மா நாட்டை வரவேற்றும்  கருத்துப்பகிர்ந்தார்.
அவ்வேளையில்  வடமராட்சியில்  அவருடைய  தாயார் மறைந்துவிட்டார்.
சில  மாதங்கள்  கடந்து,   வடமராட்சிக்குச்சென்று   ஸ்ரீரஞ்சனியின் தங்கையை   சந்தித்து அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டேன்.
ஏற்கனவே  குறிப்பிட்டதைப்போன்று  இவரின்  தாயார்  திருமதி சிவஞானசுந்தரி  எனக்கும்  ஒரு  தாயார்தான்.
இலக்கியம்   இணைத்துவிட்ட  பலரில்  ஒருவராக  ஸ்ரீரஞ்சனி இருந்தாலும்அதற்கும்  அப்பால்  சகோதரவாஞ்சையை  நான்கு தசாப்தங்களுக்கு முன்பே   எங்கள்  ஊரின்  நெய்தல்  நிலத்தில் விதைத்துவிட்டது
நாம் கடந்த 2015  ஆம்  ஆண்டு   தொடக்கத்தில்   எமது  ஆரம்பப்பள்ளியின் வைரவிழாவை  முன்னிட்டு  வெளியிட்ட  நெய்தல் இலக்கியத்தொகுப்பிலும்  ஸ்ரீரஞ்சனி    இணைந்திருந்தார்.    அதில் இவருடைய   கட்டுரையும்  சிறுகதையும் வெளியாகியிருக்கிறது. ஸ்ரீரஞ்சனிக்கு   நான்   வாழ்த்துக்கூறக் கடமைப்பட்டவன்.
                                  ------0------