முள்ளி வாய்க்கால்

.
கவிஞர் வைரமுத்து அவர்கள் இலங்கையில் எழுதிய கவிதை



முள்ளி வாய்க்கால் போயிருந்தேன் – அந்த
    முல்லைத் தீவையும் மோதிவந்தேன்
முள்ளில் கிழிந்தஎன் கண்களிலே – நீர்
    முட்டித் தெறித்ததை யாரறிவார்?

ஆனந்த புரத்தைக் கடக்கையிலே – என்
    ஆவி துடித்ததை என்னசொல்ல?
நானந்தத் துயரம் சொல்வதற்கு – என்
    நாபடும் பாடு கொஞ்சமல்ல


இந்த இடம்தான் அந்தஇடம் – எம்
    இலட்சம் உயிர்களைக் கொன்றஇடம்
சொந்தம் சொல்லி நானழுதால் – விண்
    சுற்றும் கோள்கள் நின்றுவிடும்




சாகாத காற்றின் சப்தங்களில் – எம்
    சனங்களின் அழுகுரல் கேட்டறிந்தேன்
ஆகாயம் எரித்த சாம்பல்துகள் – மண்ணில்
    ஆங்காங் கலைவதைக் கண்டறிந்தேன்



எரிவாய்ப் பட்ட சருகுகளாய் – உடல்
    இற்றுப் போனவர் எத்தனையோ?
நரிவாய்ப் பட்ட நண்டுகளாய் – ஈங்கு
    நசுங்கிய சிசுக்கள் எத்தனையோ?


தாயிடம் பால்கொண்ட பிள்ளையரை – ஒரு
    தடயம் இன்றியே எரித்தாராம்
ஆயிரம் எலும்புக் கூடுகளைச் – சீன
   அமிலம் ஊற்றியே அழித்தாராம்


படர்ந்து கிடக்கும் வெறுமையிலே – இனம்
    பட்ட பெருந்துயர் சிலஅறிவோம்
நடந்த மெய்க்கதை மொத்தமென்ன – ஏ
   நந்திக் கடலே நீயறிவாய்


தோண்டு மிடத்தில் தங்கம்வரும் – என்று
    சொல்லிக் களித்த ஈழத்தில்
தோண்டு மிடத்தில் குருதிவரும் – என்று
    சொல்லிப் புலம்பும் நிலையுற்றோம்



மைநீட்டிச் செய்த நிறம்படைத்த – பல
     மங்கையர் கூந்தலில் பூவுமில்லை
கைநீட்டிப் பார்த்தேன் தோழர்களே – சிலர்
     கரங் களுமில்லை கைகுலுக்க


மண்ணில் விழுந்த மழைத்துளிகள் – அவை
     மண்ணில் தொலைந்து போவதில்லை
எண்ணில் அடங்கா உயிர்த்தியாகம் – வெறும்
     இறப்புக் கணக்கில் சேர்வதில்லை


அழிந்து போனது போலிருக்கும் – ஆயின்
     அருகம் புல்லுக் கழிவேது?
பொழியும் ஒருதுளி பட்டவுடன் – அது
     பொட்டென் றெழுமே அழியாது


எந்த யுகத்தில் போர்களில்லை? – அட
     எந்த யுகத்தில் தோல்வியில்லை?
அந்த யுகத்தை எருவாக்கு – நீ
     அடுத்த யுகத்தை உருவாக்கு