சொல்லவேண்டிய கதைகள் - முருகபூபதி

.
இயற்கை   தந்துள்ள  கொடைகளை  இலக்கியத்திற்கும்    பயன்படுத்துவோம்

  
  நாடுகளுக்கும்    மனிதர்களுக்கும்   இனங்களுக்கும்     மொழிகளுக்கும் வரலாறு    இருப்பதுபோன்று    இயற்கை   தந்த  கொடைகளான    தாவரங்கள் மற்றும்    மரங்கள்  செடி   கொடி    மலர்களுக்கும்    அவற்றின்  அழகை  நாம் ரசிக்கும்   பூங்காக்களுக்கும்    வரலாறுகள்    இருக்கின்றன.
உலகநாடுகளில்   பெருநகரங்களில்    எங்காவது    ஒரு    புறநகர்    பிரதேசத்தில்    தாவரவியல்   பூங்காக்களை    பார்த்திருப்பீர்கள்.   தாவரவியல் ஆராய்ச்சியில்    ஈடுபடும்    மாணவர்களுக்கும்   அந்தத்துறை பேராசிரியர்கள்   விரிவுரையாளர்கள்   சுற்றுச்சூழல்    குறித்து அக்கறை  செலுத்தும்    சமூக  நலன்   விரும்பிகள்    யாவரும்    பூங்காக்களை   நேசிப்பது இயல்பு.
எம்மவர்கள்   இலங்கையில்   பெரும்பாலும்    விடுமுறைக்கால உலாத்தலுக்கும்    தங்கள்   குழந்தைகளுக்கு    வேடிக்கை காட்டுவதற்காகவும்    பூங்காக்களுக்கு   செல்வார்கள்.
கொழும்பிலிருக்கும்    விஹாரமாதேவி  பூங்கா,    நுவரேலியாவிலிருக்கும்  ஹக்கல பூங்கா,   ( இந்தப்பிரதேசத்தில்தான்   இராவணன்   சீதையை சிறைவைத்த   அசோகவனம் 








   இருந்ததாக     ஐதீக    கதைகள்   இருக்கின்றன.) பேராதனை    பூங்கா  ,   யாழ்ப்பாணம்     சுப்பிரமணியம்    பூங்கா   ( இந்தப்பூங்கா பற்றி   இயக்குநர்    மணிரத்தினத்தின்    கன்னத்தில்   முத்தமிட்டால்  படத்தில் சுஜாதா   ஒரு   வசனமும்   எழுதியிருக்கிறார்)    எனது    பூர்வீக    ஊர் நீர்கொழும்பிலிருக்கும்    ராஜபக்ஷ   பூங்கா    முதலானவற்றுக்கெல்லாம் சென்றிருக்கின்றேன்.
ஆனால்  -   அந்தப்பூங்காக்களினுள்    பிரவேசித்தபொழுது   கிட்டாத   புதிய அனுபவம்    எனக்கு   அவுஸ்திரேலியாவில்   சில     மாநிலங்களிலிருக்கும்  பூங்காக்களுக்குள்    பிரவேசித்த    பின்னர்   கிட்டியது.
இந்நாட்டில்    பூங்காக்களில்    கோடைகாலத்தில்    பாபர்கியூ   எனப்படும்   திறந்த  வெளி    குடும்ப - நண்பர்கள்   ஒன்றுகூடும் விருந்துக்கொண்டாட்டங்கள்     நடக்கின்றன.    திருமணங்கள்     பிறந்த நாள் கொண்டாட்டங்களும்   இடம்பெறுகின்றன.     அதற்காக    எந்தக்கட்டணமும்    இல்லை.     ஒன்று  கூடல்    விருந்து   முடிந்ததும் அவ்விடத்தை   சுத்தப்படுத்திச்செல்வதுதான்   முக்கியமான   கடமை. அதனைச்சரிவரச்செய்துவிட்டால்     அதன்பிறகு   அவ்விடத்திற்கு    வந்து   தங்கள்   ஒன்று    கூடல்களை    நடத்தவிருப்பவர்களுக்கு   சௌகரியமாக இருக்கும்.
நான்    அவுஸ்திரேலியாவுக்கு    வந்த   புதிதில்   மெல்பனில்   சில நண்பர்கள்   இணைந்து    மக்கள்குரல்   என்ற   மாதாந்த  கையெழுத்து   இதழை    வெளியிட்டார்கள்.   அதில்    இணைந்து   நானும்    மக்கள்குரலில் அவ்வப்பொழுது    ஆக்கங்கள்    எழுதியிருக்கின்றேன்.
பெரும்பாலும்   குறிப்பிட்ட   இதழ்    ஒவ்வொரு    மாதமும்    முதல்  வாரம் வெளிவருமுன்னர்    அதற்கு   முதல்   மாத  இறுதியில்   வாரவிடுமுறையில்   நாம்   எங்காவது   ஒரு  பூங்காவில் ஒன்றுகூடுவோம்.    நண்பர்களின்    மனைவிமார்   மற்றும்  குழந்தைகளும் வருவார்கள்.   புற்தரையில்    நாம்   அமர்ந்து    மக்கள் குரலில்   பதிவுசெய்யப்படவேண்டிய   படைப்புகள்    பற்றி   கலந்துரையாடி விவாதிப்போம்.
நண்பர்களின்    மனைவிமார்   வேறு  ஒரு  திசையில்   அமர்ந்து உரையாடுவார்கள்.    அவர்களின்   குழந்தைகள்    குதூகலத்துடன் விளையாடுவார்கள்.    இயற்கையை    ரசித்தவாறு   இதமான   தென்றல்  காற்று   தழுவிச்செல்ல   சுவாரஸ்யமான    கலந்துரையாடலை   நடத்திவிட்டு வீடுகளுக்கு    மனநிறைவுடன்    திரும்புவோம்.
பின்னாளில்   நாடகக்கலைஞரும்   எழுத்தாளருமான   நண்பர்   மாவை நித்தியானந்தன்    மெல்பனுக்கு   புலம்பெயர்ந்து    வந்தபின்னர்  அவர் உருவாக்கிய   மெல்பன்  கலைவட்டம்   என்ற  அமைப்பும்    இவ்வாறு  கோடைகாலங்களில்     பூங்காக்களில்    இலக்கிய    சந்திப்புகளை  நடத்தியிருக்கிறது.
1990   களில்   மெல்பன்   தாவரவியல்    பூங்காவில்    அவ்வாறு    ஒரு சந்திப்பில்   கலந்துகொண்டபின்னர்    வீரகேசரி  வாரவெளியீட்டில் கோடையில்   மலர்ந்த   சிந்தனை   மலர்கள்   என்ற  கட்டுரையும் எழுதியிருக்கின்றேன்.
2001   ஆம்  ஆண்டு   மெல்பனில்   முதல்    தடவையாக     எனது நண்பர்களுடன்     இணைந்து     முதலாவது   எழுத்தாளர்  விழாவை   ஜனவரி மாதம்  கோடைகாலத்தில்   இரண்டு   நாட்கள்     நடத்தினேன்.    முதல்   நாள் முழுநாள்   நிகழ்ச்சியும்    ஒரு   மண்டபத்தில்    காலை   முதல்   இரவு வரையில்    நடைபெற்றது.
மறுநாள்    மெல்பனில்   பிரசித்திபெற்ற   பண்டூரா   என்ற   இடத்தில் அமைந்த   பெரிய    பூங்காவில்    ஒன்றுகூடல்   சந்திப்பு    கலந்துரையாடலுடன்   ஒடியல்கூழ்    விருந்தும்    வழங்கி   விழாவை இனிதே    நிறைவுசெய்தோம்.
இந்நிகழ்வில்    ஞானம்  ஆசிரியர்   ஞானசேகரன்   தம்பதியர்    கலாமணி தம்பதியர்    மற்றும்   அவரது   பிள்ளைகள்,     பேராசிரியர்   பொன். பூலோகசிங்கம்    தம்பதியர்,     சிட்னியிலிருந்து    வருகைதந்த    கவிஞர்  அம்பி, டொக்டர்  வாமதேவன்  ,  பாஸ்கரன்,     சந்திரஹாசன்,    பாமதி,    சந்திரலேகா (இலங்கையர்கோன்  மகள்)   நடராஜா  கருணாகரன்,   மற்றும்   மெல்பன் படைப்பாளிகள்   உட்பட    பலர்    கலந்துகொண்டனர்.
மிகவும்    உற்சாகமான    நாளாக   அந்தத் திறந்தவெளி    பூங்கா   ஒன்று   கூடல் இன்று  வரையில்   பேசப்படும்   நிகழ்வாகக்    கருதப்படுகிறது. அதன்பின்னர்    அடுத்துவந்த    சில   எழுத்தாளர்    விழக்களின்    இரண்டாம் நாள்    நிகழ்வு    அதே   பூங்காவில்  கவியரங்குடன்   இனிது நிறைவெய்தியது.   ஒரு  தடவை    கவிஞர்    அம்பியின்    தலைமையிலும் மற்றுமொரு    தடவை   கவிஞர்    பாடும் மீன்  சு.   ஸ்ரீகந்தராசா   தலைமையிலும்    அந்தப்பூங்காவில்   கவியரங்குகள்    நடந்துள்ளன.
 சிட்னியில்    சில  வருடங்களாக   இயங்கும்   உயர்திணை  சந்திப்பு நிகழ்வொன்றுக்கு   என்னையும்    சமீபத்தில்   அழைத்திருந்தார்கள்.    இதனை    சரியாக   நெறிப்படுத்தி   நடத்திவருபவர்    செல்வி  யசோதா பத்மநாதன்.     இலக்கிய    ஆர்வலர்.    தேர்ந்த    வாசகர்.    ஒவ்வொரு    மாதமும்   இறுதியில்   வரும்     ஞாயிற்றுக்கிழமையன்று    அவர்கள் சிட்னியிலிருக்கும்   பிரசித்திபெற்ற   பரமட்டா  பூங்காவில்   ஒன்று கூடுகிறார்கள்.    ஒருவரை   விசேட    பிரதிநிதியாக   அழைத்து   கலை, இலக்கியத்தலைப்பொன்றில்   பேசவைத்து    அதன்பின்னர் கலந்துரையாடுகிறார்கள்.
பல   மாதங்களாக   இந்நிகழ்வு    சிட்னி   பரமட்டா   பூங்காவில் நடைபெறுகிறது.
நான்   கலந்துகொண்ட   சந்திப்பில்   இலங்கையிலிருந்து   வருகைதந்திருந்த     படைப்பாளி   தாமரைச்செல்வி  தனது    கணவர் மற்றும்   தங்கையுடன்    வந்திருந்தார்.    முன்னர்    இலங்கையில்    தரமான நாட்டிய   நாடகங்களை    அரங்கேற்றியிருப்பவரும்     நாட்டியக்கலை தொடர்பான    சில   ஆய்வு   நூல்கள்     எழுதியிருப்பவருமான   திருமதி கார்த்திகா  கணேசரை  நீண்ட    இடைவெளிக்குப்பின்னர்   அங்கு   அன்று சந்தித்தேன்.     தாமரைச்செல்வியும்    நானும்    இலங்கையில்   என்றைக்குமே சந்தித்துக்கொண்டவர்கள்    இல்லை.    அன்றுதான்    முதல்    முதலில் புகலிட நாட்டில்    சந்தித்தோம்.
சிட்னி  உயர்திணை  அமைப்பு   சில   வருடங்களுக்கு    முன்னர்    ஜீவநதி அவுஸ்திரேலியா   சிறப்புமலருக்கெனவும்  ஒரு   விமர்சன  அரங்கை நடத்தியது    என்பதை   இங்கு   நினைவூட்டுகின்றேன்.
வழக்கமாக    மண்டபங்களில்   அல்லது    வீடுகளில்தான் இலக்கியச்சந்திப்புகள்   நடக்கும்.    சற்றுவித்தியாசமாக    திறந்தவெளிகளில் பூங்காக்களில்   -   கடற்கரைகளில்   அவற்றை    நடத்திப்பாருங்கள். உங்களை     அறியாமலேயே    உற்சாகம்   பிறக்கும்.     மண்டபங்களுக்குள்    நெருக்கியடித்துக்கொண்டு    இருக்கும்பொழுது   ஒருவகையான  இறுக்கம் அங்கு   தவிர்க்கமுடியாததாயிருக்கும்.
ஆனால்   -   பூங்காக்களில்   கடற்கரையோரங்களில்   அத்தகைய சந்திப்புகளை     நடத்தும்பொழுது    இயற்கையின்   எழிலையும்   பருகி உள்வாங்கியவாறு    உரையாடும்பொழுது    வித்தியாசமான அனுபவங்களுடன்    வீடு    திரும்புவீர்கள்.
அண்ணாத்துரை    தமிழகத்தின்   முதலமைச்சரான  1967   காலப்பகுதியில்  தனது    அமைச்சரவைக்கூட்டத்தை    சிறிது  காலம்   மெரீனா  பீச்சில்தான்  நடத்தியிருக்கிறார்.
எங்கள்  ஈழத்தின்   மூத்த   எழுத்தாளர்களான   டொமினிக்   ஜீவா, டானியல்,    எஸ்.பொ.,    ரகுநாதன்,   பசுபதி    உட்பட    பலர் யாழ்ப்பாணத்தில்   ஒரு   காலத்தில்   யாழ்ப்பாணம்   முற்றவெளியிலும் கடலேரிக்கு    சமீபமாகவும்   இலக்கிய  சந்திப்புகளை  நடத்தியிருக்கிறார்கள்.
அதுபோன்று  இலங்கையில்   எம்மவர்கள்     (படைப்பாளிகள் - இலக்கிய ஆர்வலர்கள் - ஊடகவியலாளர்கள் )    மண்டபங்களை    விட்டு    வெளியே வந்தால்   ஆரோக்கியத்திற்கும்     நல்லது.     கருத்தாடல்களையும் ஆரோக்கியமாக    நடத்தலாம்    என     நம்புகின்றேன்.
அங்கிருக்கும்   மூத்த    படைப்பாளிகளை   மாதம்   ஒரு   தடவையாதல் அழைத்து    அவர்களின்   எழுத்துலக    வாழ்க்கை    அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்   அனுபவப்பகிர்வு    நிகழ்ச்சிகளை    பூங்காக்களில் அல்லது    திறந்தவெளி   மைதானங்களில்     நடத்திப்பாருங்கள்.      எங்களை  அறியாமலேயே    மனமும்     விசாலமடையும்.    புதிய   தேடல்களுக்கும்   வழிபிறக்கும்.
இயற்கை    தந்துள்ள    கொடைகளை    இலக்கியத்திற்கும்   பயன்படுத்துவோம்.
(நன்றி:   ஜீவநதி  இதழ்   (ஓகஸ்ட் 2014)  -  யாழ்ப்பாணம்)

   ---0---

No comments: