சங்க இலக்கியத் தூறல் -- அன்பு ஜெயா சிட்னி

.
மருந்தறிந்தவன் நோய்தீர்க்க மறுப்பானோ……?


காதலனின் பிரிவினால் தவிக்கின்ற காதலி தன் செயலற்ற நிலையை எண்ணித் தனக்குள்ளே புழுங்குகின்றாள். இதைக் கண்ணுற்ற அவள் தோழி தலைவியின் இந்தப் பிரிவாற்றாமையைப் போக்க வேண்டி தலைவனைச் சந்தித்துத் தலைவி மற்ற பொருள்களையும் உயிரினங்களையும் அழைத்து அவற்றால் பேசவும்,  கேட்கவும் முடியும் என்று நினைத்துக்கொண்டு அவற்றிடம் தன் வருத்தத்தின் உச்சத்தில் பலவாறு புலம்புகின்ற அவல நிலையை எடுத்துக் கூறுகின்றாள்.
---
தலைவியின் புலம்பல்
“உலகத்து உயிர்களெல்லாம் தம் வாழ்நாளின் இறுதியில் இறந்து, மறபடியும் பிறந்து, பல பிறவிகள் எடுத்து, உலக முடிவு காலத்தில் (ஊழி) தம்மைப் படைத்த இறைவனிடம் சென்று ஒடுங்குகின்றன. அதன் பின் பேரிருள் சூழும். அதுபோலப் பகல் நேரத்தில் தன்னுடைய ஒளியினால் இவ்வுலகத்தை வாழ்வித்த சூரியன், அந்நாளின் முடிவில் தன் ஒளிக்கதிர்களைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டு மலைகளிடையே மறைந்திடுவான். அப்போது எங்கும் இருள் சூழும். நல்ல நெறியுடன் ஆட்சி செய்த மன்னனுக்குப்பின் அவனுக்கு நேர்மாறான, வலிமையற்ற ஓர் அரசனின் ஆட்சிக்காலம் வருவதுபோல, அந்த இருளுக்கும் பகலுக்கும் எல்லையாக இருக்கும் மாலை நேரம் வந்துசேரும். அந்த மாலை நேரம்தான் எனக்கு எவ்வளவு துன்பத்தைத் தருகின்றது.”


சங்க இலக்கியப் பாடல்:
தொல்ஊழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தால்
பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான்போல்
எர்உறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய
நல்லற நெறிநிறீஇ உலகாண்ட அரசன்பின்
அல்லது மலைந்திருந்து அறநெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம்போல்  மயங்குஇருள் தலைவர
எல்லைக்கு வரம்பாய இடும்பைகூர் மருண்மாலை ;           
(கலித்தொகை,129: 1-7)

 “எப்போதும் அலைகளினால் ஓசையிட்டுக் கொண்டிருக்கும் பரந்து விரிந்த கடலே! எங்கள் வலிமை போய்விட்டது என்பது போல எண்ணி எங்களைக் கைவிட்டுப் பிரிந்த தலைவர்களால் நாங்கள் படுகின்ற வேதனையைக் கண்டு நீயும் வருந்துகின்றாயோ? அதனால்தான் ஓசை எழுப்பி உன் வருத்தத்தைத் தெரிவிக்கின்றாயோ?  அல்லது, எங்களைப் போலவே, நீயும் உன்னைக் காதலித்துப் பின் பிரிந்து போன காதலனை நினைத்து வருந்துகின்றாயோ?”
பாய்திரை பாடுஓவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்!
தூஅறத் துறந்தனன் துறைவன்என்று  அவன்திறம்
நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ? - எம்போலக்
காதல்செய்து அகன்றாரை உடையையோ நீ?            
(கலித்தொகை,129: 8-11)

“முற்றத்தில் நின்கின்ற பனைமரத்திலே உள்ள அன்றில் பறைவையே! தலைவர் நன்றி மறந்தார் என்று நான் வருந்துவதால் ஏற்படுகின்ற என் துயரத்தை அறிந்துதான் எனக்காக நீ ஓசை எழுப்புகின்றாயோ? இல்லை, என்னுடைய தலைவர் எனக்கு இன்பம் அளித்துப்பின் பிரிந்து சென்றதைப்போல உன் காதலரும் உன்னைப் பிரிந்து சென்றதனால் ஓசை எழுப்பி உன் துயரத்தை வெளிப்படுத்துகின்றாயோ?”
மன்றுஇரும் பெண்ணை மடல்சேர் அன்றில்!
நனறுஅறை கொன்றனர் அவர்எனக் கலங்கிய
என்துயர்  அறிந்தனை நரறியோ? - எம்போல
இன்துணைப் பிரிந்தாரை உடையையோ நீ?   
(கலித்தொகை,129: 12-15)
தலைவி ஒரு புல்லாங்குழலைப் பார்த்து, “வருத்தத்தையுடைய குழலே! என் தலைவர் இந்த நேரத்திலே திரும்ப வந்தாலும் ஊர் மக்களின் பழிச்சொல் நீங்கிவிடுமே. இப்போது வருவாரோ மாட்டாரோ என்று என்னைப்போல் தலைவரின் வரவுக்காக ஏங்கும் மங்கையர் அனைவருடைய துன்பத்தையும் கண்டு நீ வருந்துகின்றாயோ? ஒருவேளை என்னை மகிழ்வித்த என் தலைவர் என்னைத் தனியேவிட்டுப் பிரிந்து சென்றதுபோல உன்னை மகிழ்வித்த உன்னுடைய காதலரும் உன்னைவிட்டுப் பிரிந்து சென்றாரோ?” என்று வினவுகிறாள்.
பனிஇருள் சூழ்தரப் பைதல்அம் சிறுகுழல்!
இனிவரின் உயரும்மன்  பழிஎனக் கலங்கிய
தனியவர் இடும்பைகண்டு  இனைதியோ? - எம்போல
இனியசெய்து அகன்றாரை உடையையோ நீ?        (கலித்தொகை,129: 16-19)
இவ்வாறு தான் வருத்தத்தில் உள்ளபோது தான் பார்க்கும் பொருள்களெல்லாம் வருந்துவதாகத் தோன்றுகின்றது தலைவிக்கு.

தோழியின் கூற்று
தலைவனைச் சந்தித்த தோழி அவனிடம், “தலைவனே! இவ்வாறெல்லாம் என் தலைவி புலம்புகின்றாள். அவளுடைய மனம் ஒடிந்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு இது தெரிந்துபோனதால் அவள் வருத்தம் அதிகமாகிப் பித்துப்பிடித்தவள் போல இருக்கின்றாள். அவளுடைய வருத்தத்தை விரைந்து வந்து நீக்குவாயாக. அப்படிச் செய்யாமல் உன்னைச் சேர்ந்தோரின் மனம் அழிந்து சிதறும்படி விட்டுவிடுவாயானால், அது நோயால் வருந்தும் ஒருவனுக்கு அதைத் தீர்க்கும் மருந்தைத் தெரிந்திருந்தும் கூறாமல் மறைப்பதைவிடக் கொடுமையான செயலாகும்”, என்று கூறினாள். இப்படிப் பலவிதமாகத் தலைவி புலம்பி, வருந்துகின்ற நிலையைத் தலைவனுக்கு எடுத்துரைத்துத் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும்படி தோழி தலைவனிடம் வேண்டிக்கொள்கின்றாள்.
எனவாங்கு;
அழிந்துஅயல் அறிந்த எவ்வம் மேற்படப்
பெரும்பே துறுதல் களைமதி பெரும
வருந்திய செல்லல் தீர்த்த திறன்அறி ஒருவன்
மருந்துஅறை கோடலின் கொடிதே – யாழநின்
அருந்தியோர் நெஞ்சம் அழிந்துஉக விடினே.       (கலித்தொகை, 129: 20-25)


சங்க இலக்கியங்களில் ஒரு தலைவன்-தலைவியினுடைய வாழ்க்கையில் தோழியின் பங்கு எவ்வளவு சிறப்பானதாக இருந்தது என்பதற்கு இது போன்ற சங்க இலக்கியப் பாடல்கள் பல சான்று பகர்கின்றன.

No comments: