இலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்துள்ள மைல்கல்

.
 மெல்பனில்  
  இலங்கை   மாணவர்  கல்வி  நிதியம்  கடந்துள்ள   மைல்கல்
இலங்கையில்   போரில்  பாதிப்புற்ற  மாணவர்களுக்கு  உதவிய  அமைப்பின்   வெள்ளிவிழா.இலங்கையில்   நீடித்த   உள்நாட்டுப்போரில்   பெரிதும்  பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ்மாணவர்களின்  கல்வி   வளர்ச்சிக்கு  1988  ஆம்   ஆண்டு முதல்   அவுஸ்திரேலியாவிலிருந்து   உதவி   வரும்  இலங்கை மாணவர்   கல்வி   நிதியத்தின்  25   வருட   நிறைவு   வெள்ளிவிழா கடந்த  6  ஆம்  திகதி    சனிக்கிழமை   மெல்பனில்   Noble Park Community Centre  மண்டபத்தில்  வெகுசிறப்பாக  நடைபெற்றது.
நிதியத்தின்    நடப்பாண்டு    தலைவி   திருமதி  அருண். விஜயராணியின்    தலைமையில்   நடைபெற்ற    இவ்விழாவில் நிதியத்தின்   நீண்ட   கால   உறுப்பினர்கள் -   முன்னாள்  தலைவர்கள் மற்றும்    வெள்ளிவிழாவுக்கு   ஆதரவு    வழங்கிய   வர்த்தக ஸ்தாபனங்களின்    இயக்குநர்கள்   உட்பட    பெருமளவு   மக்கள் வருகைதந்தனர்.
நிதியத்தின்   ஸ்தாபகர்    திரு. லெ. முருகபூபதி   -  கடந்த காலத்தலைவர்கள்   சட்டத்தரணி    ரவீந்திரன்  -   பட்டயக்கணக்காளர்  ஆ. வே. முருகையா  -   திருவாளர்கள்    இராஜரட்ணம்   சிவநாதன்  -  ஆவூரான்   சந்திரன்  -  திருமதி   புவனா    இராஜரட்னம்   -   டொக்டர் நடேசன்  -   டொக்டர்   சந்திரானந்த்  -   டொக்டர்  மதிவதனி  சந்திரானந்த்    ஆகியோர்   மங்கள   விளக்கேற்றி   நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கையில்  தமிழ்   அகதிகள்   புனர்வாழ்வுக்கழகத்தின்    ஸ்தாபகர்   அமரர்   கே. கந்தசாமி  -    நிதியத்தின்   ஆரம்பகால உறுப்பினர்   அமரர்  டொக்டர்   இராசநாயகம்  -   கிழக்கு பல்கலைக்கழகத்தின்    முன்னாள்   துணைவேந்தர்    அமரர் பேராசிரியர்    ரவீந்திரநாத்   ஆகியோரின்   படங்களுக்கும் விளக்கேற்றி    அஞ்சலி   செலுத்தப்பட்டது.
உலகெங்கும்    நீடித்த -  நீடித்துக்கொண்டிருக்கும்   போர்களில் உயிரிழந்த    எண்ணிலடங்கா   மக்களின்   ஆத்ம    சாந்திக்காகவும் மௌனம்    அனுட்டிக்கப்பட்டது.
திருமதி   சத்தியா   சிவலிங்கம்  -  செல்வி    நிசதா   சதாசிவம்   ஆகியோர்   நிகழ்ச்சிகளை    தொகுத்து    அறிவித்தனர்.
மெல்பன்    சிவாலயா    நடனப்பள்ளியின்   அதிபர்   ஸ்ரீமதி  யாழினி திருலோஜனின்   மாணவி   செல்வி   மீரா  சந்தரானந்த்தின்    வரவேற்பு    நடனத்துடன்   ஏனைய   நிகழ்ச்சிகள்   ஆரம்பமாகின.
நிதியத்தின்    நடப்பாண்டு    நிதிச்செயலாளர்   திருமதி   வித்தியா மனுபிரணவன்   ஸ்ரீஸ்கந்ததராஜா    தமது    வரவேற்புரையில்   25 ஆண்டுகளுக்கும்    மேலாக    நிதியத்தின்    ஊடாக   இலங்கையில்   நீடித்த    போரில்   பாதிக்கப்பட்ட   ஏழைமாணவர்களுக்கு   அயராமல் தொடர்ந்து    உதவி   வழங்கிய    அன்பர்களுக்கு    நிதியத்தின்   சார்பில் நன்றியையும்    பாராட்டுக்களையும்    தெரிவித்தார்.


நிதியத்தின்    தொடக்ககால   உறுப்பினரும்    துணைத்தலைவருமான சிட்னியில்   வதியும்    கணக்காளர்   திரு. துரைசிங்கம்   இந்நிகழ்வுக்கு  தவிர்க்க    முடியாத   காரணங்களினால் வருகைதரமுடியாதிருந்தமையால்    அவரது    வாழ்த்துச் செய்தி விழாவில்    வாசிக்கப்பட்டது.
கடந்த   25   வருடகாலத்தில்     நிதியத்தினால்   பயனடைந்த மாணவர்கள்    ஏராளம்.   அதில்    பலர்   இன்று   ஆசிரியர்களாக அதிபர்களாகவும்    பதவிவகிப்பதாகவும்    மற்றும்    பலர்   பல்வேறு  துறைகளில்    தேர்ச்சியடைந்து   சிறந்த    தொழில்   வாய்ப்புகளையும் பெற்றிருப்பதாகவும்   -  முன்னாள்    போராளி   மாணவர்களுக்கும் நிதியம்    உதவியதுடன்   அவர்கள்   விட்டுச்சென்ற    கல்வியை மீண்டும்    பெற்றுக்கொள்வதற்கு    கல்வி    நிதியம்   ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை     மேற்கொண்டு    முன்னுதாரணமான    சமூக அமைப்பாக    வளர்ந்துள்ளது   என்றும்   தமது   செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
நிதியத்தின்   ஸ்தாபகர்    திரு. லெ. முருகபூபதி   வெள்ளிவிழா தொடர்பான   செய்தியை   சமர்ப்பித்து    உரையாற்றுகையில் - நீடித்த  போர்தான்   பாதிக்கப்பட்ட    குழந்தைகளின்   கல்விக்கு   உதவவேண்டும்    என்ற   மனப்பான்மையை   உருவாக்கியது. இனிமேலும்    போர்களை    குழந்தைகளின்    மீது    எவரும்   திணிப்பதை    அனுமதிக்கலாகாது.   இதனை   ஆட்சியாளர்கள் மட்டுமல்ல ,    அனைத்து    தரப்புகளும்   உணர்ந்து  கொள்ளவேண்டும். ஏனென்றால்   குழந்தைகள்தான்    எமது    எதிர்காலம்.   அத்துடன் ஒவ்வொரு     தேசங்களினதும்   எதிர்காலமும்    குழந்தைகளில்தான் தங்கியிருக்கிறது.   என்று    தெரிவித்தார்.


 நிதியத்தின்    வெள்ளிவிழாவுக்கான   மண்டப   வாடகை   மற்றும் செலவுகள்    அனைத்திற்கும்   நிதியத்தின்    கையிருப்பிலிருந்து   ஒரு சதமேனும்   எடுக்கப்படாமல்    அனைத்து    செலவுகளையும் பொறுப்பேற்ற   வர்த்தக    ஸ்தாபனங்களின்   ஆதரவு    திரட்டப்பட்டது என்றும்   குறிப்பிட்டார்.
நிதியத்தின்   பரிபாலன    சபையின்    சார்பில்   ஆரம்பகால   உறுப்பினர்    முன்னாள்   தலைவர்    திரு. இராஜரட்ணம்   சிவநாதன் உரையாற்றுகையில் -   நிதியம்   கடந்த   காலங்களில்    மேற்கொண்ட பணிகளை    புள்ளிவிபரங்களுடனும்   விரிவான    தகவல்களுடனும் குறிப்பிட்டார்.
இதுவரையில்    ஆயிரக்கணக்கான   மாணவர்கள்   இலங்கை மாணவர்    கல்வி    நிதியத்தின்   ஊடாக     பயனடைந்திருப்பதையும் சுட்டிக்காட்டிய   அவர்  25   ஆண்டுகளுக்கு    முன்னரே   இந்நிதியம்   தீர்க்க தரிசனத்துடன்     தோன்றியதனால்தான்     இன்றளவும்   தங்கு தடையின்றி    அன்பர்களின்   ஆதரவுடன்   தனது பணியைத்தொடருகிறது    என்றும்    தெரிவித்தார்.


இதுவரைகாலமும்    நிதியம்   மேற்கொண்ட    கல்வி   மற்றும் புனர்வாழ்வுப்பணிகளை   சித்திரிக்கும்    ஆவணப்படக்காட்சியும் காண்பிக்கப்பட்டது.     இதனை    நிதியத்தின்   உறுப்பினர்   மெல்பன் மயூர்   வீடியோ   திரு. கிருஷ்ணமூர்த்தி  -  இலங்கையையும்   நிதியத்தின்   தோற்றம்    வளர்ச்சியையும்     வரலாற்று   ரீதியாக பதிவுசெய்து    காண்பித்தார்.
வெள்ளிவிழாவில்     வெளியிடப்பட்ட    சிறப்பு    மலரை   நிதியத்தின் பரிபாலன    சபை   உறுப்பினர்   திரு. விமல்  அரவிந்தன் வடிவமைத்திருந்தார்.
மெல்பன்    கண்ணன்   மெல்லிசைக்குழுவின்    இசை   நிகழ்ச்சியும் நடைபெற்றது.    இசைக்கலைஞர்கள் -  பாடகர்கள்     திருவாளர்கள் கண்ணன்    விக்னேஸ்வரன்   -   ஜெயா    பாரதி தாசன்  -   கிருஷ்ண ஸ்ரீகுமார்  -   முரளிதரன்   -    செல்வி    ஹம்ஸா   விக்னேஸ்வரன் ஆகியோரின்    மெல்லிசைப் பாடல்களுடன்    -   நிதியத்திற்கு   மேலும் உதவ    வேண்டிய   மாணவர்களின்    விபரங்கள்   கிடைத்திருப்பதனால்     அவர்களுக்கும்   உதவும்   முகமாக நிதிசேகரிப்பு    நிகழ்வும்    நடைபெற்றது.


இதனை    அமெரிக்க   ஏலம்    முறையில்    நடத்தி   அன்பர்களின் ஆதரவை    திரு. சிவநாதன்    பெற்றுக்கொடுத்தார்.
நிகழ்ச்சியில்    கலந்துகொண்ட     பல    அன்பர்கள்   மேலும்   பல மாணவர்களுக்கு    உதவ   முன்வந்தனர்.


No comments: