அப்பாச்சிக்கு அஞ்சலியாக அமைந்த இசை நிகழ்ச்சி

.
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


முத்துப்பிள்ளை சின்னத்தம்பி டாக்டர் கந்தராஜாவின் தாயார் அவரது முதலாவது சிரார்த்த தினத்திற்கு வாரிசுகளின் அஞ்சலி. ஆமாம் வாரிசுகளானால் இப்படி அல்லவா  இருக்க வேண்டும் என்பது போல அமைந்தது அஞ்சலி நிகழ்ச்சி. தந்தை டாக்டர் கந்தராஜா எழுத்தாளர். ஈழத்து எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தை வகிப்பவர். பேரக் குழந்தைகளோ இசைக் கலைஞராக  ஆஸ்திரேலியா மண்ணில் வாழ்பவர்கள்.

நிகழ்ச்சி நடை பெற்ற இடம் சிட்னி பஹாய் சென்டர். நிகழ்ச்சியின் ஆரம்பமாக பிரதம அதிதியாக வந்தவர் முது பெரும் எழுத்தாளர் ஜாம்பவான் எஸ் பொன்னுத்துரை டாக்டர் கந்தராஜவிற்கும் தனக்குமான அறிமுகத்தைக் கூறி கந்தராஜாவின் எழுத்துத் துறையில் தாம் குரு சீடனாகவும், நண்பராகவும் பழகுவதாகவும் கூறி ஆசிமல்கியது மட்டும் அல்லாது ஆசி கந்தராஜாவின் ஆக்கங்களைப் பற்றி கூறி அவரது இரு நூல்களையுமே மேலோட்டமாக அறிமுகம் செய்தார். ஆசி கந்தராஜவுக்கு இலங்கை சாகித்திய பரிசு சில வருடங்களுக்கு முன் கிடைத்ததை கூறி இதுவரை தனக்கு கிடைக்காததையும் கூறினார். அளப் பெரிய சேவையை தமிழுக்கு செய்த செம்மல் எஸ் போ அவர்கள் தமிழ் உள்ளவரை அவரது இலக்கிய சேவை போற்றப்படும். இதை நன்கு அறிந்த அவர் தமிழனின் மானத்தை ராஜபக்சவிடம் அடமானம் வைக்க மறுத்ததையும் கூறினார். மண்டபம் நிறைந்த கூட்டம் கரகோஷம் செய்தது.




விக்னங்களை அகற்றும் விக்னேஸ்வரரை முதன்மை படுத்தி அமைந்த அழகிய மேடைக்கு ஒவ்வொரு கலைஞராக வர அறிமுகப்படுத்தப் பட்டனர். அன்று அப்பாச்சிக்கு அஞ்சலியாக தனது முழுநீள வயலின் கச்சேரியை வழங்கிய மயூரி கந்தராஜா அவர்களுக்கு உறுதுணையாக கான வினோதன் ரத்தினம் புல்லாங்குழல் இசைத்தார். மயூரியின் தமையன் ஐங்கரன் கந்தராஜா தபேலாவும், பல்லவராயன் நாகேந்திரன் மிருதங்கமும் வாசித்தார்கள். குட்டிப் பெண் ஜெயலக்ஷ்மி தம்பூரா மீட்டினார். ஆசி வழங்கினார் குரு பாலாஜி ஜெகநாதன். சிஷ்யையான மயூரி ஆர்வத்துடன் பொறுமையாக கற்றுக் கொண்ட சிறப்பைக் கூறினார். எந்த ஒரு சாஸ்திரிய கலையை கற்பவரிடம் இருக்க வேண்டிய குணாம்சம் அது. இவை இல்லாவிட்டால் அவர்கள் கலைஞராக உருவாக முடியாது.


வர்ணத்துடன் கச்சேரி ஆரம்பமானது. கச்சேரி களை கட்டுமா என விசனத்துடன் பார்த்திருந்தேன். கம்சத்தொனி ராகம் வயலினில் மீட்ட தொடங்கியதும் ஆகா இவர் எம்மை மறந்து தலையாட்டி தாளம் போட வைத்து சபையை தன்னுடன் இனத்து விட்டார் மயூரி. காண வினோதன் வேனுவிலே இணைந்தும் அதே சமயம் மயூரியின் வாசிப்புக்கு அனுசரணையாகவும் வாசித்தார். வெளியே மழை ஆனால் உள்ளே அமிர்த வர்ஷனியாக இசை பொழிய ஒவ்வொரு உருப்படியின் இறுதியிலும் கூடியிருந்த கூட்டம் கைகளை தட்டி தமது மகிழ்ச்சியை தெரிவித்தது. முக்கிய உருப்படியான கீரவானியிலே கற்பனா சுரங்கள் வேணுவிலும் வயலினிலும் மாறி மாறி இசைக்கப் பட்ட போது பிரமாதமான ஒரு கர்நாடக இசை நிகழ்ச்சியை அனுபவிக்கும் திருப்தி ஏற்பட்டது. நிகழ்ச்சியின் இறுதி போல அமைந்த தாள வாத்தியக் கச்சேரி பிரமாதம். " கந்தராஜா தம்பதிகளின் முகத்திற்காக வந்தோமானாலும் மாலைப் பொழுதில் இசையுடன் இணைந்தோம் நன்றாக ரசித்தோம்" என்றார் ஒரு நபர்.


இதற்கிடையில் சவுந்தரி கணேசன் நூல்களை அறிமுகம் செய்வார்  என காந்தராஜா  அறிவித்தார் சவுந்தரி கணேசன் ஆசி கந்தராஜா பல்வேறு பட்ட நாடுகளில் வாழ்ந்தவர் அந்தந்த நாட்டில் நடப்பவற்றை உன்னிப்பாக கவனித்து அவற்றை அழகுநடையில் எழுதும்  திறமை படைத்தவர்  என்றார் . பலரால் உற்று கவனிக்காத பல அவரது கண்ணிலே படுவது மட்டுமல்ல அதை வாசகர்களுக்கு எடுத்துக் கூறுவதில் வல்லவர் ஆசி கந்தராஜா. மேலும் தாவரவியல் விற்பன்னரான இவர் தனது துறையில் கண்டறிந்தவற்றை  பொதுமக்களும் அறியும் வண்ணம் எழுதியுள்ளார் என கூறினார். ஒரு வாசகியாக அவரது ஆக்கங்களை ரசித்ததை கூறினார். அவரது நூல்களான கறுத்தக் கொழும்பான் , கீதையடி நீ எனக்கு மற்றும் ஆங்கில நூலான Horizon  விற்பனைக்காக வெளியே வைக்கப்பட்டிருந்தன. அவற்றால் பெறப்படும் பணம் தாயகத்தில் இன்னலுறும் எமது உறவுகளுக்கு அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இடைவேளையின்போது பலர் புரியாணியை ரசித்தவண்ணம் நூல்களை வாங்கினார்கள். இடை வேலையின் பின் Light Music நடைபெறும் என காந்தராஜா அறிவித்தார்.ஆனால் கச்சேரி கர்நாடக சந்கீதத்திற்குரிய அம்சம் கெடாது தொடர்ந்தது . நளின காந்தியில் நளினத்துடன் கச்சேரி தொடர்ந்தது . பாரதியாரின் வெள்ளைத்தாமரை, பாபநாசம் சிவனாரின் என்னதவம் செய்தனை என்ற பாடலை அறிமுகபடுத்திய கானவிநோதன்  என்னதவம் செய்தனை மயூரி இத்தகைய பெற்றோரை பெற , இவ்வாறன குரு  அமைய , இத்தகைய இரசிகர் கூட்டத்தை பெற என வேடிக்கையாக கூறிய போதும் அத்தனையும் உண்மையே.


இறுதியாக  காந்தராஜா குடும்பத்தவரின் விருப்பமென அறிவித்து கானவிநோதன் ராஜாஜியின் "குறை ஒன்றும் இல்லைக்கண்ணா " தனியாக வாசித்தார் .மங்களத்துடன் கச்சேரி இனிதே நிறைவேறியது .

அப்பாச்சி முத்துப்பிள்ளை சின்னத்தம்பி கொடுத்து வைத்தவர் .இவ்வாறான ஒரு நினைவாஞ்சலியை பெறுவதற்கு. இவ்வாறாக குடும்பம் உருவாவதற்கு தனது தாயாரே காரணம் என காந்தராஜா கூறினார்.
















3 comments:

Anonymous said...

well written. Yes it is a good concert. Tabla miruthangam solo wes excellent.

Kaumaranathan

Anonymous said...

Talented family.

Anonymous said...

pacha kallan