ராயப்பேட்டையில் குவியும் ஆயிரக்கணக்கான கிளிகள்

.


சென்னையின் மைய பகுதியான ராயப்பேட்டையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ, மணிக்கூண்டுக்கு அருகில், பரபரப்பான பாரதி சாலையில், காலை 6:00 முதல் 8:30 மணிவரையும், மாலை 5:30 முதல் 6:30 மணி வரையும், ஆயிரக்கணக்கான கிளிகள், 30 கி.மீ., தூரம் பயணித்து வந்து ஒரு வீட்டில், பசியார வருகின்றன.
பசியாற்றுபவர், கேமரா சேகர்.

அவரிடம் பேசியதில் இருந்து...
*உங்களை பற்றி?
நான், கேமராக்களின் காதலன்; பறவைகளின் காவலன். தர்மபுரி, என்னைப் பெற்றெடுத்தது; சென்னை, என்னை வளர்த்தெடுத்தது.பழைய, தனித்துவமான கேமராக்களை தேடி சென்று வாங்கி, சேகரிக்க துவங்கினேன். இப்போது, மகாத்மா காந்தியை படமெடுத்த, ஜெர்மனி கேமரா, இந்தியசீன போரை படமெடுத்த வீடியோ, ஸ்டில் கேமரா, தண்ணீருக்குள் இருந்து படம் எடுக்கும் தனித்துவமான கேமரா, 160 வயதான பல கேமராக்கள் உட்பட 4,500க்கும் மேற்பட்ட கேமராக்கள் என்னிடம் மட்டுமே இருப்பதாக, பி.பி.சி., செய்தி நிறுவனம், சான்று அளித்துள்ளது.

* உங்களுக்கும், கிளிகளுக்கும் உள்ள தொடர்பு...?
பொதுவாகவே, என் மனைவி, மொட்டை மாடியில் காக்கைக்கு உணவளிப்பார். அந்த உணவுக்கு, காலப்போக்கில், அழையா விருந்தாளியாக சில கிளிகளும் வந்தன.காக்கைகளும், கிளிகளும் தமக்குள் சண்டையிட்டு தமது உரிமையை நிலைநாட்ட நினைத்தன. அதில், கிளிகள் வெற்றி பெற்றன. காக்கைகள் விரட்டப்பட்டன.மறுநாள், ஒரு கிளி கூட்டமே வந்தது. என் வீட்டு மாடியில் அமர்ந்து, உணவுக்காக எங்களை அழைத்து கொண்டே இருந்தது. பின், அவற்றிற்கு அரிசி வைத்தோம். அப்போது, இரண்டிலக்கத்தில் இருந்த கிளிகளின் எண்ணிக்கை, இப்போது நான்கு இலக்கமாகியுள்ளது. 10க்கும் மேற்பட்ட அலெக்சாண்டிரியா வகை கிளிகளும் வருகின்றன.

* என்ன உணவு கொடுக்கிறீர்கள்? 
துவக்கத்தில், பொட்டுக்கடலை, சிறு தானியங்களை வைத்தோம். இப்போது, தினமும் 20 கிலோவுக்கும் அதிகமாக, ரேஷன் அரிசியை நீர் தெளித்து பதப்படுத்தி, காலையும், மாலையும் வைக்கிறோம்.



* இந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்... 
கிளிகள், என்னை நண்பனாகவும் பாதுகாவலனாகவும் நினைக்கின்றன. கடந்த ஆண்டு, என் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து விட்டார்.அதற்காக, நான் செல்ல வேண்டி இருந்ததால், பக்கத்து வீட்டுக்காரரை உணவளிக்க சொன்னேன். காலை, 5:00 மணிக்கு உளவு பார்க்க வந்த கிளிகள், மற்ற கிளிகளிடம் தகவலை பரப்பி விட்டன.அத்தனை கிளிகளும் வட்டமிட்டு, காலை 8:30 மணி வரை என்னை தேடி இருக்கின்றன. மாலையும், அவரையே பார்த்து ஏமாந்த கிளிகள், ஒன்று கூட இறங்கி வந்து உணவருந்தவில்லையாம். இதை, அக்கம்பக்கத்தினர் சொன்னபோது, கண்களில் நீர் வந்து விட்டது எனக்கு.இவ்வளவு பெரிய சென்னையில், என்னை நம்பி இருக்கும் 1,500க்கும் மேற்பட்ட கிளிகளுக்கு, நான் நம்பிக்கையாக இருக்கவே நினைக்கிறேன். அதற்காகவே, காலையும் மாலையும், என் பணி நேரத்தில் இருந்து தலா மூன்று மணிநேரத்தை அவற்றுக்காக ஒதுக்குகிறேன்.அவை உண்ணும் நேரத்தில், பக்கத்து வீட்டுக்காரர்களையும் மொட்டை மாடிக்கு வரவேண்டாம் என, கேட்டுக் கொண்டுள்ளேன்.சாலையின் குறுக்கே, கட்டுக் கம்பிகளை கட்டி, அவை உட்கார வழி செய்திருக்கிறேன். நான், வெளியூர் செல்வதை தவிர்க்கிறேன். என் வருமானத்தில் பெரும்பகுதியை, அவற்றுக்காகவே செலவழிக்கிறேன். இந்த கிளிகளுக்காகவே, 4 ஆண்டுகளாக வீடு மாறவில்லை.

* உண்ணும் கிளிகளுக்கு, ஏதும் தொந்தரவு இருக்கிறதா?
சிலர், கிளிகளை, கவண்டி வில் வைத்து அடிக்க வருவர். வேடிக்கை பார்க்க வரும் காதலர்களில் சிலர், தங்கள் இணையை சந்தோஷப்படுத்த கல் எறிந்து, கிளிகளை பறக்க வைக்க முற்படுவர்; சிலர் பெருஞ்சத்தம் எழுப்புவர்.இவற்றால், சந்தேகப்படும் கிளிகள், பறந்து சென்று தொலைவில் உள்ள மரங்கள், கட்டடங்களில் அமர்ந்து, கண்காணிக்கும்.அவற்றுக்கு நம்பிக்கை வர, 20 நிமிடங்கள் ஆகும். அதனால், அவர்களை கண்காணிக்க, நான் சாலையிலேயே நின்று காவல் காப்பேன். அதனால், என் தொழில் பாதிக்கப்படும். ஆயினும், அதை விரும்பியே செய்கிறேன். வானத்தில், கழுகு வட்டமிட்டால், கிளிகள் கீழேயே இறங்காது. ஆங்காங்கே அமர்ந்து விட்டு, பாதுகாப்பாக திரும்பி விடும்.




*கிளிகளை ரசித்தது?
கிளிகளின் கீச் கீச் ஒலியே... என்னை தேடுவதாக தோன்றும். கிளிகள், மனிதனை போலவே பெரும்பாலும் ஒரே ஜோடியுடன்தான் வாழுமாம்.ஆண் கிளிகள், வெகுவாக சேட்டை செய்யும். ஒற்றை கண்ணால் ஜாடை செய்யும்; ஒற்றை காலால் கம்பியை கவ்வி கொண்டு, தலைகீழாக தொங்கி வேடிக்கை காட்டும். தலைக்கு மேல் பறந்து பறந்து வட்டமடிக்கும்; சிறகை திடீரென விரித்து, சிலிர்த்து கொள்ளும்; மூக்கோடு மூக்கை உரசி முத்தமிடும்; மெதுவாக காதல் மொழி பேசி பெண் கிளியை கவரும். இன்னும் என்னென்னவோ செய்யும்.குறிப்பாக கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இவற்றை ரசித்தால், மனதுக்கும். உடலுக்கும் நல்லதாம்.

* எதிர்கால ஆசை? 
கிளிகளை விட்டுப் பிரிய மனமில்லை. ஆயினும், வாடகை வீடு நிரந்தரமில்லையே. நான் செல்லுமிடத்தை, கிளிகளுக்கு எப்படி சொல்வது? அதை, நினைத்தால் தூக்கம் வருவதில்லை. நான், 50,000 ரூபாய் வரை செலவழித்து, ஒவ்வொரு முறையும் கேமரா கண்காட்சி வைக்கிறேன். சமீப காலமாக அவற்றை நடத்த முடியவில்லை. என் சேகரிப்புகளை காண வெளிநாட்டு, உள்நாட்டு மாணவர்கள் நிறைய வருகின்றனர். அவற்றை நிரந்தர கண்காட்சியாக மாற்ற, அரசு உதவி செய்தால், தமிழகத்திற்கு பெருமை கிடைக்கும். ஒருவேளை, அது நிறைவேறாமல் போனால், என் 40 ஆண்டு கேமரா சேகரிப்புகளை வெளிநாட்டு, அருங்காட்சியகங்களுக்கு விற்றால், எனக்கு பல கோடிகள் கிடைக்கும்.ஆனால், அரிய பொருட்களை கொண்டுள்ள பெருமை, அவர்களின் நாட்டுக்கு போய் சேர்ந்து விடும். 
Click Here
Nantri dinamalar

No comments: