நடிகை அஞ்சலி தேவி திங்கள்கிழமை (ஜன.13) காலமானார்.

.

பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி (86) உடல் நலக்குறைவால் சென்னையில் திங்கள்கிழமை (ஜன.13) காலமானார்.
ஆந்திர மாநிலம், பெத்தாபுரத்தை சேர்ந்த அஞ்சலி தேவி சிறு வயதில் இருந்தே நாடகங்களில் நடித்து வந்தார். இவரது நாடகத் திறமையைக் கண்ட பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் புல்லையா இவரை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமான அஞ்சலி தேவி எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், நாகேஸ்வரராவ், என்.டி.ராமாராவ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட  இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
"மணாளனே மங்கையின் பாக்கியம்', "சர்வாதிகாரி', "அன்னை ஓர் ஆலயம்' உள்பட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி தேவி, தெலுங்கில் வெளிவந்த "லவகுசா' படம் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றார். அந்த படத்தில் இவர் சீதை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றார்.
அஞ்சலி பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 27 படங்களைத் தயாரித்துள்ளார். புட்டபர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தையான அஞ்சலி தேவி, தனக்குச் சொந்தமான இடத்தை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சுந்தரம் சாலையில் உள்ள சத்யசாய்பாபா கோயிலுக்கு  தானமாக கொடுத்துள்ளார்.
அஞ்சலி தேவி தெலுங்கு சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஆதிநாராயணராவை திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் கடந்த 1993-ஆம் ஆண்டு காலமானார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.  அஞ்சலி தேவியின் பேரன்கள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருவதால் வரும் வியாழக்கிழமை அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சலி தேவியின் உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments: