ஆஸ்திரேலியா அரசே 42 தமிழ் அகதிகளை விடுதலை செய்!

.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பல ஆயிரக்கணக்கான அகதிகளில் 46 அகதிகள் ஐந்து ஆண்டுகளாக காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 42 பேர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆஸ்திரேலியா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அரசாங்கத்தினால் இவர்கள் கால வரையரையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் அனைவருக்குமே சிறிங்கா நாட்டில் உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அகதிகளுக்கான அந்தஸ்து என்ற நிலையை வழங்கியிருக்கின்றது.
ஆனால் அதன்பின்னர் அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பானது இவர்களை அவுஸ்திரேலிய நாட்டுக்கு அல்லது சிறிலங்கா நாட்டுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கருதி ஒரு மதிப்பீட்டை வழங்கியுள்ளது.


சிறிலங்காவில் எவ்வாறு "பயங்கரவாதம்" என பயம் ஊட்டி தமிழ்மக்கள் அடக்கப்படுகின்றார்களோ அதேபோலவே அவுஸ்திரேலியாவிலும் "பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" என்ற வரையறை பிரயோகிக்கப்படுகின்றது.

ஈழத் தமிழர்களின் உயிர்வாழ்வுக்கான விடுதலைப் போராட்ட அமைப்பில் இணைந்திருந்தமை அல்லது அவர்களது குடும்பத்தினர் இணைந்ததிருந்தமை அல்லது விடுதலைப்புலிகளின் நியாயமான போராட்டத்தை ஆதரித்தமை போன்ற காரணங்களை மையமாக வைத்து ஏசியோவின் இம்மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஏசியோ சொல்கின்ற காரணங்களுக்கு ஆதாரங்கள் அல்லது சாட்சியங்கள் கூட தேவையில்லை. "நாங்கள் நினைக்கிறோம் நீங்கள் ஆபத்தானவர்கள்" என்பதே போதுமானது. இந்தக்காரணங்களை சட்டரீதியாக சவால் விடமுடியாது என்பது இதிலுள்ள பாரதூரமான விடயமாகும்.

மேற்குறித்த காரணிகளை காரணம் காட்டியே கடந்த ஐந்து வருடங்களாக 42 ஈழத் தமிழர்கள் தடுத்து வைக்கப் பட்டுள்ளார்கள்.


இதில் குடும்ப பொறுப்புள்ள இளைஞர்கள் குடும்பத்தை பிரிந்து வந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் திருமணமான பெண்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் இதில் உள்ளடங்குகின்றார்கள்.

இந்த 42 ஈழத் தமிழ் உறவுகள் நீண்டகாலமாக சமூகத்தில் இருந்து வேறாக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் உளவியல்த் தாக்கங்களுக்கும் மனவிரக்திக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள். இவர்கள் தங்களின் விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்கள். அதற்க்கும் அவுஸ்திரேலியா அரசு செவிசாய்க்கவில்லை. சிலர் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டார்கள். இப்படியாக பல போராட்டங்களை முன்னெடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற் கொண்டதாக தெரியவில்லை.
இவர்களின் விடுதலையை வலியுறுத்தி உலகளாவிய ரீதியில் தமிழர்கள் அனைவரும் போராடவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.

இது ஒரு புறமிருக்க இவர்களின் தடுப்புகாவலுக்கு பின்னால் பாரிய சதி வலை பின்னபட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களால் நம்பப்படுகிறது. பல நாட்டவர்களும் புகலிடத் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வந்திருந்தாலும் பிரதானமாக ஈழத்தமிழர்களை குறிவைத்தே இச் செயற்ப்பாட்டில் அவுஸ்திரேலியா அரசு இறங்கியுள்ளது.

“ஈழத் தமிழர்களை இவ்வாறான உருப்படியற்ற காரணிகளை காரணம் காட்டி நீண்ட காலத் தடுப்புக் காவலில் வைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரான ஒரு செயற்ப்பாடு” என தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளரும் ஆஸ்திரேலியாவின் பிரபல ஊடகவியலாளருமான றேவோர் கிராண்ட் தெரிவிக்கிறார்.
இது மட்டுமன்றி ஆஸ்திரேலியாவில் தமிழ் அகதிகளை குறிவைத்தும் ஆஸ்திரேலியாவில் வாழ்கின்ற தமிழ் சமூகத்தை குறி வைத்தும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகவும் அவுஸ்திரேலியா அரசு பல்வேறு செயற் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது. பல்வேறு நாட்டு சமூகத்தவர்களும் அவுதிஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகின்ற நிலையில் ஈழத் தமிழர்களை மட்டும் வேண்டத் தகாதவர்களாக அவுஸ்திரேலியா அரசு நோக்குகின்றது.
இது இவ்வாறிருக்க அவுஸ்திரேலியா அரசியல்வாதிகளும் அரசியல் தலைவர்களும் அண்மைக்காலமாக வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நியாயப் படுத்துவதாகவும் இனப்படுகொலையை புரிந்த இலங்கை அரசை சர்வதேசத்திடம் இருந்து பாதுகாப்பதுமாக அமைகின்றது.

கடந்த நவம்பர் மாதத்தில் பொது நலவாய மாநாட்டிற்காக இலங்கை சென்றிருந்த ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட் அவர்கள் தமிழினப் படுகொலையை நியாயப் படுத்தி கூறிய கருத்துக்கள் இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது "...Australian Government deplores any use of torture. We deplore that, wherever it might take place, we deplore that. But we accept that sometimes in difficult circumstances, difficult things happen” எனக்கூறுகிறார். இக்கருத்துக்கள் தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பது மட்டுமல்லாது மகிந்த ராஜபக்சவின் தமிழினஅடக்குமுறையை ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது.

இவ்வேளையில் தமிழர்களின் விடிவிற்காக குரல் கொடுத்த காரணத்திற்காக 42 ஈழத் தமிழ் அகதிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக காலவரையறையற்ற தடுப்புக் காவலில் உளவியல் ரீதியான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களின் விடுதலைக்காக உலகத் தமிழர்களாகிய நாம் குரல் கொடுக்க வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும்.

உலகத் தமிழினமே அமெரிக்க கனேடிய பிரித்தானிய அரசுகள் கூட சிறிலங்கா மீது செலுத்துகின்ற ஆகக் குறைந்த அழுத்தங்களைக் கூட கருத்தில் கொள்ளாமல் ஒற்றைவழியில் செயற்படும் அவுஸ்திரேலியா அரசின் தமிழின விரோதச் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும் என உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்!

No comments: