கூட்டித்துடைத்துத் துப்புரவாக்கவேண்டும். - -வடபுலத்தான்





cleaningவடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கமல் என்ற கமலேந்திரன் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கொலையுண்டதும் கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்.

அப்படியென்றால் இது உட்கட்சி மோதலா? அல்லது தனிப்பட்ட முறையிலான முரண்பாடா?

எதுவென்று அறிவதற்காக விசாரணைகள் நடக்கின்றன.
ஆனால், இந்த மாதிரியான சம்பவங்களை மக்களும் விரும்பவில்லை. கட்சி அபிமானிகளும் விரும்பியிருக்க மாட்டார்கள்.

இதை அந்தக் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே கண்டித்திருக்கிறது.

இவற்றை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சட்டத்துறையிடம் விட்டிருப்பது ஆரோக்கியமான விடயம்.

இந்தச் சம்பவம் அவருடைய கட்சிக்கு நெருக்கடியைக் கொடுத்தாலும் சட்டத்தின் பொறுப்பில் இதை அவர் விட்டிருப்பது கட்சியை பாதுகாக்கக் கூடிய ஒரு நடவடிக்கையே.

அரசாங்கத்தின் செல்வாக்கையோ அமைச்சுப் பதவியின் அங்கீகாரத்தையோ வைத்து அவர் தன்னுடைய ஆட்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல் சட்டத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பது பரவாயில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொழும்பு – கம்பஹா பகுதியிலும் இதைப்போன்று ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் மோதினர். அதில் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் சிறைக்குச் சென்றார்.

கொல்லப்பட்டவர், பாரத லஷ்மன் பிரேமச்சந்திர.

சிறைக்குப்போனவர், துமிந்த சில்வா.

இரண்டு பேரும் அரசாங்கத் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்.

அண்மையில் ஐக்கியதேசியக் கட்சியின் இரண்டு குழுக்களுக்கிடையில் இதேபோன்றதொரு மோதல் நடந்தது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவாளர்கள் ஊர்வலமாக செல்லும்பொழுது மங்கள சமரவீரவின் தரப்பு மோதலில் ஈடுபட்டது.

நல்லவேளையாக அங்கே கொலைகள் விழவில்லை. ஆனாலும் மங்களவை பொலிஸ் பிடித்து அடைத்தது.

இந்த மாதிரி ஒரே கட்சிக்குள் நடக்கின்ற அடிதடிகள், கொலைகள் இலங்கையின் வழமையாகி விட்டது.

ஆனால், இவர்கள் எல்லாம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். இவர்களின் மீது நம்பிக்கை வைத்து, மதிப்ப வைத்தே இவர்களை மக்கள் தங்களின் பிரதிநிதிகள் ஆக்கினார்கள்.

ஆகவே இதற்கு விசுவாசமாக நடக்க வேண்டியது இவர்களின் பொறுப்பாகும். இப்படி பொறுப்பற்று சமூகத்தை வன்முறைக்களமாக்கக் கூடாது.

முன்னர் இயக்கங்கள் இந்த மாதிரி வன்முறைகளைத் தாராளமாகச் செய்தன.

புளொட் இதில் மிகப் பிரபலம்.

பின்னாளில் புலிகள் இதில் கொடிகட்டிப்பறந்தார்கள்.

பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தயாவையும் அவருடன் தொடர்பு பட்டவர்கள் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கானவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துத் தண்டனை வழங்கினார் பிரபாகரன்.

அப்பொழுதும் மக்களுக்குப் பெருங்குழப்பம் ஏற்பட்டது. என்ன ஏது என்று தெரியாமல் மக்கள் தடுமாறினார்கள். புலிகளில் இருந்த பல உறுப்பினர்களும்  தடுமாறினார்கள். புலிகளின் ஆதரவாளர்களும் தடுமாறினார்கள்.

இப்பொழுது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் ஏகப்பட்ட உள் மோதல்களும் முரண்பாடுகளும் உள்ளன.

இப்பொழுதே தப்பித்தவறி இருட்டில் இவர்கள் சந்தித்தால் ஒருவரை ஒருவர் கடித்துத் தின்றுவிடக்கூடிய நிலையில்தான் இருக்கிறார்கள்.அந்த அளவுக்கு உட்பகையின் சூடு உள்ளது.

எனவே இந்த உட்பகை எப்போது வெடிக்கும்?  அப்பொழுது என்னவெல்லாம் வெடிக்கும்? என்று யாருக்கும் தெரியாது.

ஏனென்றால் இவர்களில் சிலர் புலிவாசனையுள்ளவர்கள்.

சிலர் புளொட் வாசனையுள்ளவர்கள்.

சிலர் ஈபிஆர்எல்எவ், ரெலோ என்ற வாசனைகளையுடையவர்கள்.

எல்லாவற்றையும் விட தமிழரசுக்கட்சி இருக்கிறது. மற்றவர்களைத் தூண்டிவிட்டுக்காரியம் பார்ப்பதில் அது பெரும் கில்லாடிக்கட்சி.

எனவே என்றோ ஒரு நாள் கூட்டமைப்பிலும் இந்த மாதிரி அமர்க்களம் நடக்கத்தான் போகிறது.

எல்லாவற்றையும் பார்த்து மக்களும் கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரியான வில்லங்கள் இல்லாமல் எப்ப ஒரு அமைதியான அரசியல் சூழல் உருவாகும்? என்பதே பலருக்கும் உள்ள கேள்வி.

மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். நாடும் அமைதியையே விரும்புகிறது.

அப்படியென்றால் மக்களுக்கும் நாட்டுக்கும் அமைதியைக் கொண்டு வருவதற்காக உழைக்கும் அரசியல்வாதிகளே முதலில் அமைதியைக் கொண்டு வரவேண்டும்.

அதற்கு முதல் அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

இதற்கு நல்லதோர் ஆரம்பமாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு தீர்மானத்தை எடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

கட்சியை மீள் கட்டமைப்புச் செய்யவுள்ளதாக அந்த அறிவிப்புச் சொல்கிறது.

இது நடந்தால் நல்லது என்பதே மக்களின் விருப்பம்.

இது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு மட்டுமல்ல, எல்லாக்கட்சிகளுக்கும் பொருந்தும். 
நன்றி தேனீ

No comments: