மெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை இலக்கியம் அனுபவப்பகிர்வு

.

மெல்பனில்  நடந்த  தமிழ்ச்சிறுகதை இலக்கியம்  அனுபவப்பகிர்வு
வாசிப்பு அனுபவமும் - செம்மைப்படுத்தலும் - தேர்ந்த ரஸனையும்
( கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் வேர்மண்ட் சவுத் சமூக நிலைய மண்டபத்தில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய நிகழ்ச்சி)
                                               முருகபூபதி


தொடக்கவுரை:
இந்த நாட்டில்     புகலிடம்    பெற்ற    எழுத்தாளர்கள்,      இங்கு    வந்தபின்னர்  படைபிலக்கியத்துறைகளில்    ஈடுபடுபவர்கள்      எம்மத்தியிலிருக்கிறார்கள்.  சிறுகதை,     கவிதை,    நாவல்,    விமர்சனம்,     நாடகம்,     பத்தி     எழுத்துக்கள்  எழுதுபவர்கள்      இந்தக்கண்டத்தில்       சில      மாநிலங்களில் வசித்துவருகிறார்கள்.     நாம்     இன்று      சிறுகதை     இலக்கியம்  தொடர்பாகவே     அனுபவப்பகிர்வு     நிகழ்ச்சியை     ஒழுங்கு    செய்துள்ளோம்.      எதிர்காலத்தில்     இலக்கியத்தின்    இதர துறைகள் தொடர்பான     அனுபவப்பகிர்வுகளையும்    நடத்தவுள்ளோம்.
ஆங்கில    இலக்கியத்துறையில்     இந்த    நடைமுறை     நீண்டகாலமாக இருந்துவருகிறது.     ஆனால்     எமது      தமிழ்ச்சூழலில்     ஒரு படைப்பிலக்கிய      நூலின்     வெளியீட்டு     விழாவில்     நூலாசிரியரை போற்றிப்புகழ்ந்துவிட்டு,       அவரது      நூலைப்பற்றி      மேலெழுந்தவாரியான  கருத்துக்களை      மாத்திரம்     சொல்லிவிட்டு      சிறப்புப்பிரதி      வழங்கும்  சடங்குகளுடன்      ரசனையை     மட்டுப்படுத்திக்கொண்டு  அகன்றுவிடுகிறோம்.      இணைய     இதழ்கள்      பத்திரிகைகளில்  படங்களுடன்       செய்தி    வெளியானதும்    அதனைப்பார்த்து திருப்தியடைவதுடன்       காரியம்     முடிந்துவிடும்.
சிறப்பு     பிரதி     பெற்றவர்      அதனைப்படித்தாரா?      என்ன    கருத்துடன்  அவரது    வாசிப்பு    அனுபவம்     இருக்கிறது?     என்ற    கவலையெதுவும் இல்லாமல்       அடுத்த நூலை    எழுதவும்    வெளியிடவும்  தயாராகிவிடுகின்றோம்.

புகலிடத்தில்      நாம்    கற்றதும்    பெற்றதும்    அநேகம்.    அவற்றை பகிர்ந்துகொள்வது   போன்றதே      வாசிப்பு    அனுபவங்களை பகிர்ந்துகொள்வதும்.
இதுபோன்ற     நிகழ்ச்சிகள்      பிறந்த நாள் -    சாமத்தியச்சடங்கு - கலியாணவீடு       போன்ற      வைபவங்கள்      அல்ல.      கல்வி,    மருத்துவம், சட்டம்,      கணக்கியல்,      பொறியியல்,     கட்டிடக்கலை,     முதலான துறைகளில்      பணியாற்றுபவர்களுக்காக      காலத்துக்காலம்  கருத்தரங்குகள்       பயிலரங்குகள்      நடப்பதை     அறிவோம்.
குறிப்பிட்ட    துறைகளில்     நாளுக்கு      நாள்    ஏற்படும்      மாற்றங்கள் முன்னேற்றங்கள்     தொழில்     நுட்ப வளர்ச்சிகள்     என்பன     குறித்த அரங்குகளில்       ஆராயப்படும்.     அதாவது     Updating      இடம்பெறும். படைப்பிலக்கியவாதிகளிடம்       அறிந்ததை     பகிர்ந்து     அறியாததை அறிந்துகொள்ள     முயற்சிக்கும்     தேடலிருந்தால்தான்     ஆரோக்கியமான  வளர்ச்சி     உருவாகும்.
அதற்காகவே     இந்த    அனுபவப்பகிர்வு.
பல      வருடங்களுக்கு    முன்னர்       தமிழகத்தின்      முன்னோடி      இலக்கிய விமர்சகர்      க.நா. சுப்பிரமணியம்    (க.நா.சு)     எழுதிய      படித்திருக்கிறீர்களா?     என்ற      நூலின்      முன்னுரையில்     அவர் சொல்கிறார்:-
இலக்கியத்தில்    தேர்ச்சியுள்ளவர்கள்     பழசைத்தாண்டி     புதுசு பக்கம் வர மறுத்தார்கள்.      புதுசை    மட்டும்     அறிந்தவர்கள்     பழசின்      பக்கமே    போக மறுத்தார்கள்.   

 இவ்வாறு    1957    ஆம்   ஆண்டு     எழுதியிருக்கிறார்.    ஐம்பத்தியாறு ஆண்டுகளின்     பின்னரும்    இதுதான்     நிலைமை.
சங்கத்தின்    நடப்பாண்டு     தலைவர்    டொக்டர் நடேசன் தலைமையில்    நடந்த    இந்நிகழ்ச்சியில்    இலங்கையின்    மலையக    இலக்கிய  முன்னோடி - படைப்பாளி   தெளிவத்தை ஜோசப்பின்  மனிதர்கள் நல்லவர்கள்  ஆவூரான் சந்திரனின்   நான் இப்படி அழுததில்லை   பாடும்மீன் சு ஸ்ரீகந்தராசாவின் வழக்குத்தவணைக்கு   வரமாட்டேன் கே.எஸ்.சுதாகரனின்   காட்சிப்பிழை    நடேசன்    எழுதிய    பிரேதத்தை அலங்கரிப்பவள் என்ற சிறுகதை ஆகியன வாசிக்கப்பட்டு அவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
தலைமையேற்ற     நடேசன் சமீபத்தில் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றுள்ள அலிஸ் மன்றோவைப்பற்றிய   சிறு அறிமுகத்தை வழங்கியதுடன்  அலிஸ்மன்றோ சிறுகதைகள்   மாத்திரமே படைத்து அந்தத்துறையில்   சாதனைகள்    படைத்திருப்பதாகக்குறிப்பிட்டார்.
முருகபூபதி தெளிவத்தை ஜோசப்பின் மனிதர்கள் நல்லவர்கள்  என்ற பலவருடங்களுக்கு   முன்னர்   மல்லிகையில்   வெளியான சிறுகதையை    வாசித்து    தனது வாசிப்பு அனுபவங்களை சொன்னார். அதனைத்தொடர்ந்து    குறிப்பிட்ட    சிறுகதை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.


ஆவூரன்   சந்திரனின்   நான் இப்படி அழுததில்லை என்ற   சிறுகதையை    அபர்ணா சுதன்    வாசித்தார்.   இச்சிறுகதை தொடர்பாகவும்    கலந்துகொண்டவர்கள்    தமது   கருத்துக்களை தெரிவித்தனர்.


பாடும் மீன் சு.ஸ்ரீகந்தராசாவின்  வழக்குத்தவணைக்கு வரமாட்டேன் என்ற சிறுகதையை அவரே வாசித்தார். கே. எஸ். சுதாகரன் காட்சிப்பிழை என்ற தமது சிறுகதையை அவரே வாசித்தார். நடேசன் எழுதிய பிரேதத்தை அலங்கரிப்பவள் சிறுகதையை பேராசிரியர் ஆசி. கந்தராஜா வாசித்தார்.


ஒவ்வொரு  கதையும் வாசிக்கப்பட்டதும் நீண்ட நேரம் கதைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு  விவாதிக்கப்பட்டது.  உரையாடல்கள் மிகவும் புரிந்துணர்வுடன் நிகழ்த்தப்பெற்றமை இச்சந்திப்பில் ஆரோக்கியமானது.
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தேர்ந்த ரஸனையை வளர்க்கும் நோக்கத்துடன் நடைபெற்ற அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில்  மருத்துவம்  கல்வி  படைப்பிலக்கியம்  வானொலி ஊடகம்  இதழியல் இணையம் வலைப்பூக்கள் முதலானவற்றில் தொடர்புடைய பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தகுந்தது.
 இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்:
ஆவூரன் சந்திரன்,   சங்கர சுப்பிரமணியன்,    எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.எஸ்.சுதாகரன்,   க. தயாளன்,    அல்லமதேவன்,     மனோகரன், யாழ். பாஸ்கர்,     பாடும்மீன் சு. ஸ்ரீகந்தராசா,   நிர்மலன் சிவா, சிவசங்கர்,   அபர்ணா சுதன்,   ரமேஸ்வரலிங்கம்,  ஜெயராம சர்மா,  அறவேந்தன்,   ஜெயகுமாரன்,  இப்ரகீம் ரஃபீக், ஃபர்ஸான், மருத்துவகலாநிதி   திருமதி வஜ்னா ரஃபீக்,   டொக்டர் நடேசன், பேராசிரியர் ஆசி. கந்தராஜா,   திரு, திருமதி முருகபூபதி,  திரு,திருமதி சிவசம்பு,   திரு திருமதி (சாந்தினி) புவனேந்திரராஜா,


                             ---0--No comments: