பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு

.
பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்
கிழக்குப்பல்கலைக்கழகம்,
இலங்கை
மனிதசமூகத்தில் அதிகாரக்கட்டமைவு என்பது காலந்தோறும் நிலையான ஒன்றாகவே காணப்படுகிறது. சமத்துவ சமுதாயம் என்பது பெரும்பாலும் சொல்லளவிலேதான் உள்ளது. ஆண்டான்-அடிமை ஏழை -பணக்காரன் முதலாளி -தொழிலாளி ஆண்-பெண் என்ற வேறுபாடுகள் பொருளாதாரத்தினால் கட்டமைக்கப்பட்டவை. பொருளாதார அதிகாரத்திலுள்ளோர் தம்மிலும் அதிகாரத்தில் குறைந்தோரை ஆட்டிப்படைத்தலும் பொருளாதார அதிகாரமற்றோர் அதிகார முடையோரைப் பார்த்துப் பயப்படுவதும் அடிபணிந்து வாழ்தலும் இயல்பான நடவடிக்கைகளாக என்றும் காணப்படுகின்றன. சங்க இலக்கியக் கோட்பாடான திணைக்கோட்பாடானது அக்கால சமூகத்தின் பொருளாதார அசமத்துவ நிலையைப் பிரதிபலிக்கிறது என்பார் கா.சிவத்தம்பி (பார்க்க: திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள் -சிவத்தம்பி.கா )
தமிழ் இலக்கியங்களில் மேற்கொள்ளப்பட்ட பெண்கள் பற்றிய பெண்ணிய ஆய்வுகள் பெண்களும் வர்க்கமும் தொடர்பாக ஆய்வு செய்வதில் பெரும்பாலும் கவனஞ் செலுத்துவதில்லை. பெண்கள் எந்த வர்க்கத்திலிருந்தாலும் அவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே மதிக்கப்படுகின்றனர். எனினும் அப்பெண்கள் வாழும் அவ்வச்சமூகத்தின் சிந்தனைக்கு ஏற்ப தம் சிந்தனைகளையும் வாழ்க்கையையும் கட்டமைத்துக் கொள்கின்றனர். அதாவது ஓரு ஆண்டானின் மனைவி ஆள்பவளாவும் அடிமையின் மனைவி அடிமைப் பெண்ணாகவுமேயுள்ளனர்.இந்த அடிமைப்பெண் தன்னிலும் உயர்ந்த வர்க்க ஆண்களுக்கு மட்டுமல்ல உயர்வர்க்கப் பெண்களுக்கும் அடிமையாகவே இருந்தாள். இங்கே ஆண்டானின் மனைவியின் சிந்தனைக்கும் வாழ்க்கை முறைக்கும் அடிமையாக இருக்கும் பெண்ணின் சிந்தனைக்கும் வாழ்க்கை முறைக்குமிடையே வேறுபாட்டைக் காணலாம்.
வீரயுகத்தின் இறுதிக்கட்டத்தில் இருந்த சங்ககால சமூகமும் அதன் தன்மைகளுக்கேற்ப அதிகாரப் படிநிலையில் உயர்ந்தவர்களையும் அதிகாரத்திற் குறைந்தவர்களையும் கொண்டிருந்தது.

ஆட்சியாளரும் பெண்களும்
ஆட்சியாளர்களான வேந்தர், குறுநிலமன்னர், கிழார்கள் என ஆள்பவருக்கிடையே கூட அதிகார வேறுபாடு இருந்தது. வேந்தருக்குப் படைவேண்டும் போது படையுதவியும் வினைவேண்டும் போது வினையுதவியும் வாழ்ந்தவர்கள் குறுநில மன்னர்களும் கிழார்களும்.
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூட் பாண்டியன்மறவன்
படைவேண்டுவழி படையுதவியும்
வினை வேண்டுவழி யறிவுதவியும்
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்
தசைநுகம்படாஅ ஆண்டகை யுள்ளத்துத்
தோலா நல்லிசை நாலை கிழவன். (புறம் 179) எனவரும் இப்பாடலில் நாலைகிழவன்(கிழான்) வேந்தருக்குச் செய்த உதவிகள் குறிக்கப்படுகின்றன.
ஈர்ந்தூர்கிழான் தோயன்மாறன் என்பவன்
நிரப்பாது கொடுக்கும் செல்வமுமிலனே
இல்லென மறுக்கும் சிறுமையுமிலனே (புறம்180) எனப்படுகிறான்
அதுமட்டுமல்லாது காலாட்படையில் போரிடும் போர்வீரரும் இருந்தனர்.
கையிலே யாழும்
மெய்யிலே புரவலரின்மையிற் பசியும்
அரையிலே வேற்றிழை நுழைந்த
வேர்வை நிரம்பிய உடையும் உடுத்த (புறம்;;69) பாணர்கள் இருந்தனர். இந்தக் குழுவினருள் அவ்வக் குழுமங்களுள் வாழ்ந்த பெண்களின் வாழ்க்கையும் அடங்கும்.
காவலில் வாழ்ந்த உயர்வர்க்கப் பெண்கள்;
சங்க இலக்கியங்களைப் பார்க்கும்போது பெண்கள் எந்த வர்க்கத்தினராயினும் காவலுக்குரியவர்கள் என்ற கருத்து நிலவியமையைக் காணலாம். அரச குடும்பத்துப் பெண்கள் மிகுந்த காவலையுடையவர்களாயினர். அவர்கள் தாய்மாரின் அல்லது தந்தையரின் காவலில் வாழ்ந்ததை சங்க இலக்கியங்கள் காட்டும். பின்வரும் பாடல்கள் அவர்களின் காவலின் கடுமையை தெரிவிக்கின்றன.
அருந்தெறல்மரபின் கடவுள்காப்ப
பெருந்தேன் தூங்கும் நாடுகாண் நனந்தலை
அணங்குடை வரைப்பின் பாழி ஆங்கண்
வேன்முது மாக்கள் வியல்நகர்க் கரந்த
அருங்கல வெறுக்கையின் அரியோள். (அகம்114)
அணங்குகள் உறைகின்ற மலைக்குகையிலே மறைத்து வைக்கப்பட்டு; வேல்களை வைத்திருக்கும் முதுமாக்களால் பாதுகாக்கப்பட்டுவரும் அருங்கலங்களை விடவும் பெறுதற்கு அவள் அரியவள்.
நன்னன் உதியன் அருங்கடிப் பாழி
தொன்முது வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமை நற்கு அறிந்தும்
அன்னோள் துன்னலம் மாதோ. (அகம்258)
அரிய காவலையுடைய குகையிலே தொன்முதுவேளிரால் பாதுகாத்து வைக்கப்பட்ட பொன்னை விட அரியவள்.
மல்லல் ஆவண மறுகுடன் மடியின்
வல்லுரைக்கடுஞ்சொல் அன்னை துஞ்சாள்
பிணிகோள் அருஞ்சிறை அன்னை துஞ்சின்
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்.(அகம்122)
தலைவனைச் சந்திக்க விரும்பும் பெண் வெளியேறாதபடி சமூகம் அவர்களைக் காத்தது.தாய் பெண்ணைக் காத்தலும் வெளியே தூங்காத காவலர் உலவுதலும் இப்பாடலில் கூறப்படுகின்றன எனக்காவல் பற்றிய விபரம் கூறப்படுகிறது.
ஏதோ ஒரு வகையில் பொருள் தேடச் சென்ற தலைவரின் காதலியரான பெண்களும் இவ்வாறு காவலுடையவராகக் காட்டப்படுகின்றனர்.
குறுநிலமன்னரின் மகளிர்
குறுநிலமன்னரின் பெண்கள் வேந்தரின் (மூவேந்தர்கள்) வேண்டுகோளுக்கு இணங்க அல்லது அவர்களின் ஆணைக்கிணங்க அவர்களை மணம் செய்ய வேண்டியவராயிருந்தனர். வேந்தரின் வேண்டுகோள் அல்லது ஆணைக்கு குறுநிலமன்னர் இணங்கவில்லையானால் போரின் மூலம் அப்பெண்களை அடைவர். புறநானூற்றில் வரும் மகட்பாற் காஞ்சி மகண்மறுத்தல் பாடல்கள் இவ்வகையிலான விடயங்களை உள்ளடக்கியவை.
மகட்பாற் காஞ்சித் துறைக்குள் 333-354 வரையான பாடல்களும் 356ஆம்பாடலும் அடக்கப்படுகின்றன.இத்துறைக்குள் அக்காலத்தில் குறுநிலமன்னரின் பெண்களை வேந்தர் தமக்கு மணம் முடித்துத் தருமாறு வேண்டுதலும் பெண்ணின் தந்தையர் மறுப்பதும் மறுக்குமிடத்து நடந்த போர்களும் அதனால் ஏற்பட்ட அழிவுகளும் விபரமாகக் கூறப்பட்டுள்ளன.
வேட்டவேந்தனும் வெஞ்சினத்தினனே
கடவன கழிப்பினிவடந்தையுஞ் செய்யான். (புறம்336)
அவளை விரும்பியவன் மிகவும் சினங் கொண்டுள்ளான். ஆனால் அவளது தந்தையோ செய்ய வேண்டியதைச் செய்யலாம் செய்யவில்லை. ஆகவே போர் மூளப்போகிறது என்பதை இப்பாடல்கள் கூறுகின்றன.
வேந்தர் வேண்டி வந்தாலும் தம்மை வணங்காதவர்களுக்குப் பெண்களைக் கொடுக்க மாட்டார்கள் குறுநில மன்னர்கள் என பின்வரும் பாடல் வரிகள் கூறுகின்றன.
கொற்றவேந்தர் வரினுந் தற்றக
வணங்கார்க் கீகுவனல்லன்
ஆரமருழப்பத மமரியளாகி
முறஞ்செவியானை வேந்தன்
மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித்தோளே. (புறம்339)
வேந்து குறையுறவுங் கொடான். (புறம் 341.)
அதனால் ஏற்பட்ட பெரும் போர்கள் பற்றி பின்வரும் பாடல்கள் கூறும்.
தண்பணைக் கிழவனிவ டந்தையும் வேந்தரும்
பொறாமையின் பேரமர் செய்தலின் (புறம் 342)
விளங்குறு பராரைய வாயினும் வேந்தர்
வினை நவில் யானை பிணிப்ப
வேர் துளங்கின நம்மூருண் மரனே.
பெண்ணைக் கொள்வதற்காக போர் செய்ய வந்த வேந்தர்கள் பெரிய கிளைகள் கொண்ட மரங்களில் தங்கள் யானைகளைக் கட்டி வைத்திருக்கின்றனர். யானைகள் அசைப்பதனாலே மரங்கள் வேரோடு சாயத்தொடங்கிவிட்டன எனக் கூறப்படுகின்றன.இவ்வாறு வந்த வேந்தருக்கு தங்கள் பெண்களைக் கொடை நேர்ந்தமை பற்றி அதாவது பெண்களைக் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டமை பற்றி அகச் செய்யுள்களும் கூறுகின்றன..
புறப்பாடல்களில் மகட்கொடை மறுக்கப்பட்ட நிலையில் வேந்தர் குறுநில மன்னருடன் செய்த போர்களே அதிகம் கூறப்பட்டுள்ளன. குறுநிலமன்னன் தன்பெண்ணைக் கொடாமையால் ஏற்படும் ஊரழிவும் அவளது தந்தை மற்றும் தமையன் மாரினதும் வீரமும் இப்பாடல்களில் பேசப்படுகின்றன. பெண்ணால் ஊரழிகின்றது. இவள் தந்தையோ செய்ய வேண்டியதைச் செய்ய மாட்டான். இவளது தாய் பெண்ணை வளர்க்கவில்லை பகையை வளர்த்தாள் எனப்படுகிறது. புறம் 36) வேந்தரும் இவளது தமையன்மாரும் இவளுக்காகப் போரிடுகின்றனர். யார் இவளை மணக்கப் போகிறார்கள்.337) அவளை மணக்காவிட்டால் வாரா உலகம் புகு வேன் எனப் போர் செய்யச் செல்லுவான் வேந்தன். புறம் 342வது பாடல் பொருநருக்கே இவளது தமையன்மார் பெண்ணைக் கொடுப்பார்கள் என்கிறது. மகட்கொடைக்கு ஒப்புக்கொண்டால் திறைகள் விழுப்பொருள்கள் கொடுப்பர் எனப்படுகிறது.
வேந்தரைச் சார்ந்திருந்த புலவர்களே பெரும்பாலும் இப்பாடல்களைப் பாடியுள்ளனர். பரணர் கபிலர் குன்றூர்கிழார் அரிசில்கிழார் போன்றோர் அவர்கள்;.
இம்மகட்பாற்காஞ்சிப் பாடல்கள் குறு நில மன்னரின் வீரத்தையும் அதே சமயம் வேந்தரின் வீரத்தையும் புகழ்வதாக அமைகின்றன. பெண்ணை மணம் முடித்தல் என்பது ஒரு அந்தஸ்துப் போட்டியாகி கௌரவப் பிரச்சினையாகி அதனால் நடந்த போர்களினால் நாடழிந்தமை பெண் பிறந்தமையால் நாடழிந்தது எனக் கூற வைக்கிறது.
மகண்மறுத்தல் துறை இது மகட்பாற்காஞ்சியுடன் தொடர்புற்றதே.
வேந்தன் குறுநில மன்னனின் பெண்ணை மணம் முடித்துத்தருமாறு வேண்ட அக்குறுநிலமன்னர் பெண்களைத் தரமாட்டோம் என மறுத்தல் பாடல்களிற் கூறப்படுகிறது. புறம்109-111 வரையான பாடல்கள் மகண்மறுத்தல் துறையில் அமைந்தவை. இவை பாரி மகளிரை அடைய விரும்பிய வேந்தரைப் பார்த்து கபிலர் பாடியதாக அமைகின்றது.
மரந்தொறும் பிணித்த களிற்றினிராயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிராயினும்
தாளிற் கொள்ளலிர் வாளிற்றாரலன்
யானறிகுவனது கொள்ளுமாறே
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தனும் விறலியர்பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடுங்குன்றும் ஒருங்கீயும்மே (புறம் 109)
வேலின் வேறல் வேந்தற்கோ அரிதே. (புறம் 111)
கடந்தடு தானை மூவருங்கூடி
உடன்றனிராயினும் பறம்பு கொளற்கரிதே. (புறம் 110.)
தன் மகளிரை வேந்தருக்கு கொடுக்க மறுத்த பாரி போரில் இறந்து விடுகிறான். இதனை அவனது மகளிர் பாடியதாக வரும்
அற்றைத்திங்கள் அவ்வெண்ண்pலவில்
எந்தையு முடையோம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவில்
எம்குன்றும் பிறர் கொண்டார்
நாம் எந்தையுமிலமே. என்ற பாடல் காட்டும்
பாரி இறந்து விட பாரியின் நண்பனான கபிலர் பாரிமகளிரைப் பொறுப்பேற்கிறார.; அவர்களுக்கு மணம் முடித்துக் கொடுப்பதற்காக விச்சிக்கோ, இருங்கோவேள் போன்ற குறுநில மன்னரிடமும் கொண்டு செல்கிறார். அவர்கள் பாரிமகளிரைத் திருமணம் செய்ய மறுத்ததாகப் பாடல்கள் கூறுகின்றன. பின்னர் பாரிமகளிருக்கு என்னாயிற்று என்பது தெரியவில்லை. பாரிமகளிரி;ன் இந்தக்கதி ஏனைய குறுநிலமன்னரின் மகள்மாருக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு பார்க்கும்பொது பெண் ஒரு பண்டமாகவே பார்க்கப்பட்டாள் என்பது தெரிகிறது.பெண்கள் மன்னரின் மக்களாயினும் திருமணத்தின்போது அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்கப்படவில்லை .
கணவரின் இறப்பை வேந்தரின் மனைவியரும் குறுநில மன்னரின் மனைவியரும் எதிர்கொள்ளும் முறை.
சங்க இலக்கியத்தில் கணவரை இழந்த பெண்கள் பலர் பேசப்படுகின்றனர். அவர்கள் தம் கணவர் இறந்த பின் அன்றைய நிலையில் கைம்பெண்களுக்கென விதிக்கப்பட்டநோன்பு நடைமுறைகளைப் பின் பற்றி வாழ்ந்ததாக பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.பொழுது மறுத்து இன்னா வைகலுண்ணல், கணவனின் நடுகல் இருக்குமிடத்தை மெழுகுதல், கூந்தல் கொய்து வளையலை நீக்கி குறுணல் உணவை உண்டல், பாயின்றி வதிதல் வளையில் வறுங்கை யுடையவளாதல், போன்றவற்றைக் கைக்கொண்டு உயிர் வாழ்ந்தனர்.
மூவேந்தர் வமிசத்தவர்களுள் ஒருவனான ப+தப்பாண்டியனின்; தேவி பெருங்கோப்பெண்டு பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் கிடைக்கிறது. அது ஆனந்தப்பையுள் துறைக்குள் அடக்கப்பட்டுள்ளது. அவளின் கணவன் ப+தப்பாண்டியன்; இறந்த போது அவள் பாடிய பாடல் ஆகும். பெண்கள் கணவரை இழந்த போது உடன்கட்டை ஏறியதான செய்தி ஒன்றை பெருங்கோப்பெண்டுவின் பாடலின் மூலம் அறியலாம். அதாவது கணவனின் உடலை ஈமவிறகில் வைக்கும் வேளையில் பெருங்கோப்பெண்டு தான கணவனோடு; உடன்கட்டையேறப் போவதாக அங்கிருந்தவர்களுக்கு கூறும்போது அவர்கள் அவளை உடன் கட்டை ஏறவேண்டாமென தடுக்கின்றனர். அவ்வாறு தடுக்கின்றவர்களைப் பார்த்து தன்னைத் தடுக்க வேண்டாமெனக் கூறும் பாடல் இது. இப்பாடல் உடன்கட்டை ஏறும் பெண்தான் சிறந்தவள் என்ற கருத்துப்பட அவளால் பாடப்பட்டுள்ளது.
அப்பாடல் வருமாறு
பல்சான்றீரே பல்சான்றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான்றீரே
அணில் வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்தட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டா
தடையிடைக் கிடந்த கைபிழ் பண்டம்
வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சியாக
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரே மல்லே மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டீமம்
நுமக்கரிதாகுக தில்ல வெமக்கெம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ விழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயு மோரற்றே.
இங்கிருக்கும் சான்றோரே உடன்கட்டையேறவிடாது தடுக்கும் சான்றோரே கணவனை இறந்து குறிப்பிட்ட நோன்புகளைச் செய்து உயிர்வாழும் பெண்ணல்ல நான். இந்த ஈமம் உங்களுக்கு அரியதாகலாம் ஆனால் எனக்கு அரிதல்ல கணவன் இறந்தபின் எமக்கு தாமரை மலர்ந்த பொய்கையும் தீயும் ஒன்றுதான் எனக் குறிப்பிடுகிறாள்.
ஆனால் மாறோக்கத்து நப்பசலையார் என்ற பெண்பாற் புலவர் இவ்வாறு நோக்கவில்லை. அவர் பின்வருமாறு கூறுகிறார்.
என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்
நெடுநகர் வைப்பின் விளக்கு நில்லா
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்
அஞ்சு வரு குராஅற் குரலும் தூற்றும்
நென் னீரெறிந்து விரிச்சி யோர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா
துடிய பாண பாடுவல் விறலி
என்னா குவிர்கொல் அளியிர் நுமக்கும்
இவணுறை வாழ்க்கையோ வரிதே யானும்
மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வார
தொன்று தாமுடுத்த வம்பகைத் தெரியற்
சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும்
கழிகலமகளிர் போல
வழி நினைந்திருத்த லதனினு மரிதே.
இப்பாடலில் வரும் தலைவி கைம்மை நோன்பின் கொடுமையைக் கூறி தலைவன் இறந்ததால் பாணர், துடியர், விறலி போன்றோருக்கு ஏற்படக்கூடிய இழப்பையும் கூறி தன்னால் உயிர்வாழ்தல் அரிது என்கிறாள். பெண்கள் அந்தஸ்தில் உயர உயர கட்டுப்பாடுகள் அதிகமாயின. அக்கட்டுப்பாடுகளே அவர்களின் கௌரவமாகவும் கருதப்பட்டன.
அகப்பாடல்களில் பெண்ணின் கூற்றுகள்
அகப்பாடல்களில் பெண்ணின் கூற்றுகள் பற்றி தொல்காப்பியம் கூறும்போது
தலைவிக்காயின் அவளறி கிளவி
தோழிக்காயின் நிலம் பெயர்ந் துரையாது என்கிறது.
அதாவது தலைவி தானறிந்த விடயங்களைப் பற்றியே பேச வேண்டும். அதன்படி தலைவியை விட தோழி சற்று விஷயம் தெரிந்தவளாகக் காட்டப்படுகிறாள். மேலும் பெண்களை வெளியே விடாது அடக்கி வைத்திருத்தல்(இற்செறித்தல்) என்றது கூடுதலாக வேந்தர் மற்றும் மன்னர் குடும்பங்களிலேயே நிகழ்ந்திருக்கிறது.
வினையே ஆடவர்க்குயிரே மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென வகுக்கப்பட்டு காலங்காலமாகப் போற்றப்பட்டு வரும் வழக்கத்தைக் கூறும் குறுந்தொகைப் பாடலைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ ஆவான்;. அதாவது ஆணுக்கு வினை அதாவது அவனது தொழில் முக்கியமானது என்றும் மனைவிக்கு அவளது கணவனே முக்கியமானவனென்றும் கூறப்படுகிறது.
ஐவகை நிலங்களும் பெண்களும்
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்பட்ட நானிலங்களில் வாழ்ந்த பெண்கள் அவ்வந்நிலங்களுக்குரிய தொழில்களில் ஈடுபட்டனர். அவர்கள் ஆண்களின் தொழில்களில் உதவி செய்தவராகக் கூறப்படுகின்றனர். குறிஞ்சி நிலப் பெண்கள் தினைக் கதிரைக் கிளிகள் மற்றும் விலங்குகள் கொண்டு போகாது காத்தனர் எனப்படுகிறது. அவர்கள் பரணில் ஏறி கிளிகளை ஓட்டி பயிரைக் காப்பர் என குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும். முல்லை நிலத்துப் பெண்கள் ஆய்மகளிர் எனப்பட்டனர்.இவர்கள் மந்தைகளைப் பாதுகாத்தலுடன் பாற்பொருள்களான தயிர், மோர், நெய் என்பவற்றை உற்பத்தி செய்து ஆ முதலிய மிருகங்களைப் பண்டமாற்று செய்து தமக்குரிய பொருள்களைப் பெற்றுக் கொண்டனர். மருத நிலத்து உயர்வர்க்கப் பெண்கள் பேரில்லரிவையர் எனப்பட்டனர். இவர்கள் வீட்டிலிருந்தவாறே குடும்பத்தைப் பரிபாலித்தனர். நெய்தல் நிலத்துப் பெண்கள் மீன்களைக் கருவாடாக்கி பதப்படுத்தலிலும் வீட்டுக்காரியங்களிலும் ஈடுபட்டனர்.பாலை நிலத்தில் வாழ்ந்த எயிற்றியர் மண் வெட்டிகளாலே நிலத்தைத் தோண்டுவர். நிலத்தை வளம் படுத்துவர். முன்றிலில் உள்ள உரலிலே நெல்லைக் குற்றுவர்.
பாசறைப்பெண்கள்
ஈட்டிகளையுடைய பெண்கள் போர்த்தலைவர்களின் பணிப்பெண்களாக இருந்தனர். அவர்கள் பாசறைகளிலே விளக்கையேற்றுவர்
பெண்களின் கற்பு
கற்புக் கோட்பாட்டின் இறுக்கம் சொத்துடைமையிலிருந்து வளர்ச்சி பெற்றதென்பர். முல்லை மருதம் போன்ற நிலங்களில் இதன் அழுத்தம் அதிகமாகவேயுள்ளது. முல்லை கற்பின் அடையாளமாகக் கொள்ளப்பட்டது. முல்லை சான்ற கற்பின் மெல்லியள், உயர்நிலை யுலகத்து அருந்ததியன்ன கற்பிற் குரும்பை மணிப்ப+ட் புதல்வன்றாய், பெருநல் வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன்புரையும் கற்பின் நன்னுதல், வடமீன்புரையுங் கற்பின் மடமொழி என பெண்ணுக்கு சிறப்பைக் கொடுக்கும் விடயமாக கற்பு பேசப்படுகிறது.
பாடினிஃ விறலி
பாடின்p அல்லது விறலி பாணர் குழுவைச் சேர்ந்தவள் இவள் பாணருடன் சேர்ந்த அரசவையில் அரசர்களையும் ஆடிப்பாடி மகிழ்வித்தவர்கள். பாடினிகள் ஊரூராகத் திரிந்தவர்கள் இவர்கள் பிற்காலத்தில் பரத்தையராக மாறினர் என்றும் கூறப்படுகிறது.
பாணர் சுகிர் புரிநரம்பின் சீறியாழ் பண்ணி விரையொலி கூந்தல் விறலியர் பின்வர அரசவைக்குச் சென்றனர். புறம்109 பாரியைப் பாடிய பாடலில் பாணர் தம் விறலியருடன் ஆடிப்பாடிச் சென்றால் பாரி நாட்டையும் குன்றையும் ஈவான் எனக் கூறப்படுகிறது. முதன் முதலாக பொருனராற்றுப்படையிலே பாடினி பற்றிய கேசாதிபாத வருணனை வருகிறது.
அறல்போற் கூந்தல் பிறைபோற் றிருநுதல்
கொலைவிற் புருவத்துக் கொடை மழைக்கண்
இலவிதழ் புரையு மின்னொளித்துவர்வாய்
பலவுறு முத்திற் பழிதீர்வெண்பல்
மயிர் குறைகருவி மாண்கடையன்ன
பூங்குழையூசற் பொறை சார் கரி
னாணடச்சாய்ந்த நலங்கிளரெருத்தி
னாடமை பணைத்தோள் அரிமயிர் முன்கை
நெடுவரைமிசை காந்தள் மெல்விரல்
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென வகுத்த சுணங்கணியாகத்
தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயர்ச் சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென உணரா உயவு நடுவின்
வண்டிருப் பன்ன பல்கா ழல்குல்
இரும்பிடித் தடக்கையின் செறிந்து திரள்குறங்கிற்
பொருந்து மயிரொழுகிய திருந்து தாட்கொப்ப
வருந்து நாய் நாவிற் பெருந்தகு சீறடி பெ. ஆ. ப. 25-42
என அவளது அங்கங்கள் ஒவ்வொன்றும் வர்ணிக்கப்படுவதை அவதானிக்க முடியும். இப்பாடினிப் பெண்கள் பிற்காலத்தில் மிகவும் வறுமையுற்றனர். பாடினிகள் அரசர்களிடம்; பொற்றாமரை போன்ற பரிசில்கள் பெற்ற காலம் போய் சிறு குளங்குட்டைகளில் மீன்பிடித்து ச் சீவியம் தள்ளியமையையும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.பிற்காலத்தில் இவர்களே பரத்தையரானார்கள் என்ற கருத்தும் உண்டு.
அம்சில் ஓதி அசைநடைப் பாண்மகள்
சில் மீன்சொரிந்து பல் நெற்பெறு+உம்
யாணர் ஊர நின் பாண்மகன்
யார் நலம் சிதையப் பொய்க்குமோ இனியே.
முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த
அகன்பெறு வட்டி நிறைய மனையோள்
அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர
எனவரும் ஐங்குறு நூற்றுப் பாடல்களில் பாடினியர் தம்நிலையிழந்து தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித்தமையைக் காட்டுகின்றன.
பரத்தையர்
சங்ககால தமிழர் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாகப் பரத்தையர் விளங்கியமையை பாடல்கள் காட்டுகின்றன. முக்கியமான மருதநிலத்தின் மிகையுற்பத்தி இவ்வாறான வாழ்க்கைக்கு வித்திட்டது. மருத நிலத்தவரின் வீடுகள் தொல்பசி அறியாத் துளங்கா விருக்கை எனப்படுகின்றது. மருதநிலப் பெண்கள் ஏரின் வாழ்நர் பேரில்லரிவையர் எனக் குறிப்பிடப்படுகின்றனர் இவர்கள் தம்மிடமிருந்த நெல்லை கானவன் மான்றசை கொண்டு வந்த வட்டி நிறையவும் ஆயமகள் தயிர்கொண்டு வந்த தசும்பும் நிறையவும் கொடுத்தனர் என்றும் கூறப்படுகின்றது. வலைவல்பாண்மகள் வரால்சொரிந்த வட்டியுள் மனையோள் யாண்டு கழிவெண்ணெல்லைக் கொடுத்தாகவும் கூறப்படுகிறது.இவர்கள் தம்மிடம் தேடிப் பொருள்களைக் கொண்டு வந்தவர்களுக்குத் தம் பொருளைக் கொடுத்துப் பண்டமாற்றுச் செய்தனர்.
மேலும் முதன் முதலாக மருதத்தில் தான் உழுவோர் உழுதுவித்துண்போர் பற்றிய குறிப்புகளும் வருகின்றன.
பரத்தையரான பெண்கள் பற்றிக் கூறும்போது அவர்கள் பெரும்பாலும் மருத நிலக்குடும்ப வாழ்க்கைக்கு ஊறு விளைவிப்பவராக இருந்தனர், எனினும் மருதநில ஆண்களைப் பொறுத்தவரை அது தடை செய்யப்படவில்லை. அவர்களின் மனைவியரே அப்பெண்களோடு கணவருக்கு இருக்கின்ற உறவைப் பொறுத்துக் கொள்ள வேண்டியவராக இருந்தனர்.  இம்மனைவியரால் தம் கணவரிடமிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. வேண்டேம் பெரும நின் பரத்தை ஆண்டுச்செய் குறியோடு ஈண்டு நீ வரலே (ஐங்48) எனச்சொல்ல முடிந்ததே தவிர பொருளாதாரத்தில் கணவனைத் தங்கியிருந்ததின் காரணமாக அவர்களால் விடுதலை பெற முடியவில்லை. தோழி ஒருத்தி ஊரன் தேரிலே கொள்ள முடியாத அளவுக்கு பெண்களை கொண்டு வந்ததால் நீ அவனைக் கோபிக்க முடியுமோ அப்படி நீ அவனை வெறுத்தால் செய்யோளாகிய திருமகள் உன்னைவிட்டு விலகி குறுணல் அரிசியை உண்டு தானே சமைத்துண்டு தனியனாகி குழந்தை வாடிய முலைகளைச் சுவைப்ப இருப்பதை நீ அறியாயோ எனக் கேட்கும் பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.
இவ்வாறு பார்க்கும்போது ஒருபுறத்தில் எல்லா நிலத்திலும் மனைவியருக்கு கற்பு வலியுறுத்தப்பட்ட அதே வேளையில் கணவருக்கு குடும்பத்துக்கு அப்பால் பரத்தையருறவு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தமையைக் காணலாம்.. எனினும் பொதுவான சமூகக் கருத்து நிலையில் பரத்தையர் வெறுக்கப்பட்டனர்.
ஆனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறவு என்ற அடிப்படையில் பரத்தையர் தலைவியருக்கு சவால் விடுபவர்களாகவும் இருந்தனர். அதிகார அணைவு அவர்களுக்கு அனுசரணையாக இருந்தது எனலாம். அகம் 106 வது பாடலில் பரத்தை தன்னைக் கோபித்து வரும் தலைவனின் மனைவிக்கு சவால் விடுகிறாள். காரணம் தலைவன் அவள்பக்கம் இருந்தமையாகும.;
எனவே பெண்கள் எவ்வர்க்கத்திலிருந்தாலும்; சமூகக்கட்டுப்பாடுகளுக்குள் அடக்கப்பட்டனர.; வர்க்கம் உயர உயர கட்டுப்பாடுகளும் அதிகரித்திருந்தன என்பதில் ஐயமில்லை.
உசாத்துணை
1.அம்மன்கிளி முருகதாஸ் சங்கக்கவிதையாக்கம் மரபும்மாற்றமும், குமரன்புத்தக இல்லம், சென்னை-கொழும்பு, 2006
2.சிவத்தம்பி.கா பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம், (மொ.பெ. அம்மன்கிளிமுருகதாஸ் குமரன்புத்தக இல்லம், சென்னை-கொழும்பு, 2005
3.சிவத்தம்பி.கா திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள் (மொ.பெ. வானமாமலை, சிவசுப்பிரமணியம் )ஆராய்ச்சி 1977
4.மாதையன்.பெ. புறத்திணைத்துறைப்பாகுபாடும் சமூகப்பின்னணியும், தமிழ்ப்பொழில் 60.8 தஞ்சாவ+ர் 1988
5.மகட்பாற்காஞ்சிப் பாடல்களும் சங்கச்சமூகச்சூழலும் தமிழ்ப்பொழில் 63.2 தஞ்சாவூர் 1988

No comments: