ஆரம்பம் |
தமிழ் சினிமாவின் வழக்கமான பழிவாங்கும் கதையை ஆக்ஷனும், த்ரில்லரும் கலந்து சுவாரசியமாக்க முயற்சி செய்திருக்கிறார் விஷ்ணுவர்தன். |
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் ’தல’ தீபாவளி என்று கொண்டாடக் காத்திருந்த ஆரம்பம் படம் உண்மையிலேயே தீபாவளிக் கொண்டாட்டத்தை வழங்கியிருக்கிறதா? சென்னையிலிருந்து மும்பைக்கு வரும் சாப்ட்வேர் இன்ஜினியரான ஆர்யாவை கடத்துகிறார் அஜித். ஆர்யாவின் கல்லூரித் தோழியும், அஜித்தின் கூட்டாளியுமான நயன்தாரா இதற்கு உதவுகிறார். இதில் ஆர்யாவின் காதலி டாப்சியையும் நம்பவைத்து தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறார் அஜித். மேலும் அவரை வைத்து ஹேக்கிங்கில் தேர்ந்தவரான ஆர்யாவை மிரட்டி காரியம் சாதித்துக்கொள்கிறார். இந்நிலையில் ஆர்யாவின் மூலம் செய்தி அலைவரிசை உரிமையாளர் ஒருவருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்துகிறார். பிறகு அவரைக் கடத்திக் கொல்லும் முயற்சியில் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுகிறார். அஜித் ஏன் இவற்றையெல்லாம் செய்கிறார் என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு இடைவேளைக்கு பின்பு தான் தெளிவு கிடைக்கிறது. உள்துறை அமைச்சர், காவல்துறை உயரதிகாரி மற்றும் செய்தி அலைவரிசை உரிமையாளர் ஆகியோர் இணைந்து செய்யும் ஒரு மாபெரும் ஊழலால் தனது நண்பர் ராணா டகுபதியை இழக்கிறார் அஜித். தன் நண்பனின் மரணத்துக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்துவதோடு பணத்துக்காக பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் அவர்களின் மற்றொரு திட்டத்தையும் தகர்ப்பதே மீதிக்கதை. அஜித் ஒரு நேர்மையான அஸிஸ்டண்ட் கமிஷ்னர். படத்திற்கு மையபலம் அஜித் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் ஒன் மேன் ஆர்மியாக கலக்கியிருக்கிறார். படத்தில் அஜித்துக்கு வசனங்கள் அதிகமாக கிடையாது. அனைத்தும் ஆக்சன் தான். ஆனால் மொத்தமாக கிளைமாக்சில் கேப்டன் மாதிரி ஊழல், லஞ்சம், அரசியல் என சமகாலப் பிரச்சனைகளைப் ‘பன்ச்’ களாக அடித்து பின்னியெடுக்கிறார். ராணாவின் தங்கச்சியாக நயன்தாரா வருகிறார். படம் முழுவதும் அஜித் கூடவே இருக்கிறார். நடிப்பிலும் குறை சொல்ல ஒன்றும் இல்லை, கவர்ச்சிக்கும் இடமிருக்கிறது. சாப்ட்வேர் இன்ஜினியராக வருகிறார் ஆர்யா. துறு துறு நடிப்பில் ஈர்க்கிறார். இவரின் காதலியாக வரும் டாப்ஸி அழகாக இருக்கிறார். சில காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் முகபாவங்கள் நச்சென்று இருக்கின்றன. கடமையைச் செய்யும்போது உயிரிழக்கும் காவல் அதிகாரியாக வரும் ராணா டகுபதி சிறிய பாத்திரம் என்றாலும் மனதில் பதியும் வகையில் செய்திருக்கிறார். மற்றொரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக கிஷோர் தனக்கேயுரிய மிடுக்கான தோற்றத்தில் வந்து தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். வில்லனான மகேஷ் மஞ்ஜுரேக்கர் பேசும் வசனங்கள் நகைச்சுவைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. விஷ்ணுவர்தன் இந்தப் படத்திலும் அஜித்தை மிகவும் ஸ்டைலிஷ்ஷாக காட்டியிருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை. அந்தக் குறையை பின்னணி இசையில் சமன் செய்துவிட்டார். ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு மும்பையை அதன் இயல்பு மாறாமல் பதிவு செய்திருக்கிறது. துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளும் கண்களுக்கு அலுப்பூட்டாத வகையில் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன. ஹாலிவுட் படத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப விறுவிறுப்பாக செல்கிறது ஆரம்பம். ஹாலிவுட் படத்தை அணு அணுவாக ரசித்தவர்களுக்கு வேண்டுமானால் இந்தப்படம் திருப்தியளிக்காமல் போகலாம். ஆனால் சாராசரி தமிழ் ரசிகனுக்கு, முக்கியமாக தல ரசிகர்களுக்கு இந்தப்படம் செமத்தியான தீபாவளி விருந்து. நடிகர்கள்: அஜித், ஆர்யா நடிகைகள்: நயன்தாரா, டாப்ஸி ஒளிப்பதிவு: ஓம்பிரகாஷ் இசை: யுவன்ஷங்கர் ராஜா இயக்கம்: விஷ்ணுவர்தன் தயாரிப்பு: ஏ.எம்.ரத்னம், ஏ.ரகுராம் நன்றி விடுப்பு தமிழ் சினிமா |
தமிழ் சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment