.
இலங்கையில்
இலக்கிய சந்திப்பாம் அதை நடத்த வேண்டுமாம் இல்லை அதை நடத்த கூடாதாம் .என்கின்ற
விவாதங்கள் முகபுத்தகங்களில் சூடு பறக்க
புகலிட
நாட்டுகாரர்களுக்கு வேறு வேலைகளில்லை என சலித்துக்கொண்டேன். அது மட்டுமல்ல அதை
இலங்கையில் நடத்த கோருபவர்கள் அரச சார்பானவர்களாம் அதை நடத்த கூடாது என்பவர்கள்
அரச எதிர்ப்புகாரர்களாம். தமிழ் சமூகம் இப்போ எதற்கு எடுத்தாலும் அரச சார்பு,
அரச எதிர்ப்பு என்று முத்திரை குத்துவதிலேயே தனது சக்தியை முழுக்க செலவழிக்கின்றது.
இலண்டனில் நடந்த40வது இலக்கிய சந்திப்பில் எப்படியோ பலத்த விவாதங்களையும் சூடான கருத்தாடல்களையும் தாண்டி
41வது இலக்கிய சந்திப்பு இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என பெரும்பான்மையோர்
வாக்களித்து முடிவுகாணப்பட்டது. அதன் படி கடந்த ஜூலை மாதம் 20, 21ம் திகதிகளில்
யாழ்ப்பாணத்தில் அந்த இலக்கிய சந்திப்பு இடம் பெற்றது. ஓரிருவர் உரையாற்ற நூறு
பேர் கேட்டுவிட்டு எழுந்து செல்லும் இலக்கிய கூட்டங்களை போலன்றி நீண்ட
உரையாடல்களும் பரஸ்பர விவாதங்களும் நிறைந்த கருத்து களமாக புதியதொரு அனுபவம்
இச்சந்திப்பில்கிடைத்தது.மூத்த எழுத்தாளர்கள், விரிவுரையாளர்கள, ,
பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வாசகர்கள் என்கின்ற எவ்வித ஏற்ற
இறக்கம் கொண்ட தோரணைகளுமின்றி சம உரிமையுடன் கருத்தாடுகின்ற ஒரு புதிய
கலாச்சாரத்தை இந்த இலக்கிய சந்திப்பு தொடக்கி வைத்திருக்கின்றது.
சுமார்
30 வருடகாலம் கருத்து சுதந்திர மறுப்பிற்குள் சிக்கி கிடந்த மனிதர்களுக்கு இந்த யாழ்ப்பாண இலக்கிய
சந்திப்பு ஒரு சுடரொளியை ஏற்றி சென்றிருக்கிறது என சொல்லலாம் .அது மட்டுமன்றி
பேச்சாளர்கள் சுதந்திரமாக சுய தணிக்கைகள்
ஏதுமின்றி தாம் கொண்ட கருத்துக்களை முன்வைப்பதற்குரிய ஒரு பூரண சுதந்திரத்தை இலக்கிய
சந்திப்பின் அந்த இருநாள் அமர்வுகளும் கொடுத்திருந்ததை அவதானிக்க
முடிந்தது.குறிப்பாக போர் செய்திகளும் மரண ஓலங்களும் மட்டுமே கேட்க வேண்டும்
என்பது எழுதாத நியதியாய் இருந்த நிலை மாறி இனி நாம் பேச முடியும் என்று மூன்று
தசாப்தகால மெளனத்தை கலைத்து சென்றிருக்கிறது இச்சந்திப்பு.
முதல்
நாள் அமர்வில் என் எழுத்து எனும் தலைப்பில் எழுத்தாளர் சாந்தன் முதலுரை
வழங்கினர். தொடர்ந்து பாரம்பரிய கலைகளும் பண்பாடும்
என்கின்ற தலைப்பில் நால்வகை கோணங்களில் பேச்சுக்கள் அமைந்திருந்தன.பெண்களின்,
முஸ்லிம்களின், மட்டகளப்பின் சரித்திரத்தின் என்று ஒவ்வொரு பார்வையிலும் ஒரே
தலைப்பில் நால்வர் உரையாற்றினர். தமிழ் நாவல் பற்றிய வரலாற்றெழுதலில் அசன்பே
சரித்திரம் போன்ற நாவல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்திருக்கின்றன. என்கின்ற
கவிஞர் நவாஸ் செளவியின் குற்றசாட்டு கூடிய கவனம் பெற்றது. மாறிவரும் முஸ்லிம்
பண்பாட்டு உருவாக்கங்கள் பற்றிய மிக சிறப்பானதொரு புரிதலை பெற்றுக்கொள்ள
எ.பி.எம்.இத்ரீஸ் வழங்கிய உரை நல்லதொரு வைப்பை வழங்கியது. எந்த முஸ்லிம்கள் இந்த
மண்ணில் இருக்க கூடாதென்று விரட்டப்பட்டனரோ அந்த முஸ்லிம்களின் குரலை அவர்களின்
வாழ்வை வரலாற்றை கலாசாரத்தை, மட்டகளப்பிலிருந்து
சுமந்து வந்து இந்த எழுத்தாளர்கள் சங்கிலியன் சிலையருகே அமைந்திருக்கும் அந்த
யூரோவில் மண்டபத்தில் வந்து கொட்டித்தீர்த்தபோது இலக்கிய சந்திப்பு ஏதோ ஒன்றை சாதித்துத்தான் உள்ளது என்பதை
உணர முடிந்தது. இந்த உரைகளுக்கு பத்திரிகையாளர் தேவ கெளரி நெறியாள்கை
செய்தார்.
ஒடுக்கப்படும்
பெண்களின் குரலாக விஜயலக்ஸ்மி " நான் ஏன் எழுதுகிறேன்" என்று தொடங்கிய
பேச்சு பலரது கவனத்தையும் பெற தவறவில்லை. இவர் மட்டகளப்பு சூரியா பெண்கள்
அமைப்பின் நீண்டகால செயல் பாட்டாளர் என்பதனால் பல சமூக வெட்டு முகங்களை அவரது
பேச்சின் ஊடாக அவதானிக்க முடிந்தது முன்வைத்த விதமும் இலக்கிய சந்திப்புக்கு மேலும்
வலுவூட்டியது.
சாதியம்
பற்றி மிகவும் பன்மைத்துவ நோக்கில் உரையாடல்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
மூத்த எழுத்தாளர் தெணியான் அனுபவங்களின் தொகுப்பாக உரையாற்ற மட்டகளப்பு சாதியம்
பற்றி சண்முகமும் தலித் பெண்கள் பற்றி அகல்யாவும் வழங்கிய பேச்சுகளை தொடர்ந்து
புகலிடத்தில் சாதியம் எனும் தலைப்பில் பிரான்சில் இருந்து வந்திருந்த தேவதாசன்
சொன்ன செய்திகள் பலருக்கு மலைப்பை தந்தது. கடல் கடந்தும் திருந்தாத எம்மவர்களை
என்னும் போது வெட்கம் தாங்கமுடியவில்லை .கல்வியில் சாதியம் என்று இதுவரை நாம்
காணாத சாதியத்தின் பக்கங்களை விலாவரியாக ஆதாரங்களுடன் முன்வைத்த ஜோர்ஜ் அவர்களது
கட்டுரையின் கனதி கருதி பிரசுர உரிமம் கோரி பல வெளியீட்டளர்கள் பேச்சு
முடிந்ததும் அவரை மொய்த்து கொண்டதை காண முடிந்தது.
இந்த
இலக்கிய சந்திப்பு நிகழ்வில் இடம்பெற்ற மிக முக்கிய அம்சம் திரு நங்கைகள் பற்றிய
அனுபவபகிர்வு ஆகும் இதற்காக தமிழ் நாட்டிலிருந்து திருநங்கை லிவிங் ஸ்மைல்
வித்யா அழைக்கப்பட்டிருந்தார்.அவரது நிகழ்வினை பிரான்சிலிருந்து இலக்கிய
சந்திப்புக்காக வருகைதந்திருந்த பெண்ணிய செயல் பாட்டாளர் விஜி அறிமுக குறிப்புகளுடன்
ஆரம்பித்து வைத்தார். வித்யாவின் உரை அவரது திருநங்கை வாழ்வு எதிர் கொண்ட
இன்னல்களை விளக்கியதோடு மட்டுமல்ல நாம் கட்டிகாத்துவரும் தமிழ் குடும்ப பாலியல்
மதிப்பீடுகளை குலைத்துபோட்டது.சபையோர் இதுவரை பார்த்திராத கேட்டிராத புதியதொரு
உலகை தரிசிக்கும் வாய்ப்பை தந்தது.அதுமட்டுமல்ல பின்நவினத்துவ சிந்தனைகள்
முக்கியத்துவம் தரும் மற்றதன் இருப்பை அங்கீகரித்தல் எனும் மனநிலைக்கு
அனைவரையும் கொண்டு செல்வதில் வித்யாவின் வருகையும் பேச்சும் வெற்றி ஈட்டியது என சொல்ல
முடியும் .இலங்கையில் இதுவரை பொது வெளிகளில் சொல்லபடாத திருநங்கைகளின்
உள்ளக்குமுறல்களை இலக்கிய சந்திப்பு வித்யா மூலம் முதன்முதலாக சொல்லியதன் ஊடாக
ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளது என சொன்னால் அது மிகையாகாது.
இலங்கையில்
முதல்முறையாக இலக்கிய சந்திப்பு நடத்தப்படுவதன் நினைவாக
"குவர்னிகா"என்கின்ற இலக்கிய தொகுப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது.இதனை
லண்டனில் இருந்து கலந்து கொண்ட இராகவன் வெளியிட்டு வைத்தார்.
நிகழ்வுகளின்
இடையிடையே குறும்படங்கள் வெளியிடப்பட்டன.இரண்டாம் நாள் அமர்வுகளுக்கு மூத்த
எழுத்தாளர் சோ.பத்மநாதன் வழிநடத்தலை
செய்தார் அண்மைக்கால கவிதைகள் பற்றி குனேஸ்வரன் உரையாற்ற கால் நூற்றாண்டு
கவிதைகளை முன்வைத்து பெண்கள் சொல்லும் சேதிகள் எனும் விரிவான ஒரு உரையை
சித்திரலேகா மெளனகுரு அவர்கள் தந்தார்.மலையக கவிதை செல்நெறி பற்றி மல்லிகைபூ
சாந்தி திலகர் மிகவும் சுவாரஸ்யமான அனுபவங்களை தொகுத்து தந்தார்.அக்கரைப்பற்றில்
இருந்து கலந்து கொண்ட கவிஞர் ரியாஸ் குரானாவின் உரை வித்தியாசமான பார்வைகளை
துண்டியது.எழுத்தியலின் அரசியல் அதில் மொழி பெயர்ப்பாளரின் பங்கு என்று ஒரு
கல்வியியல் பார்வையில் சுமதி ஆற்றிய உரை பலர் அறியாத செய்திகளை தந்தது.அதை
தொடர்ந்து புகலிட இலக்கியம் இஇலக்கிய சந்திப்பு.மாற்று கருத்துக்கள்இசபாலிங்கம்
கொலைஇஎன்று பல வரலாற்றுபுள்ளிகளை தொட்டு சென்றது பிரான்சிலிருந்து கலந்து கொண்ட
எழுத்தாளர் ஸ்டாலினுடைய உரை.
இந்த
இலக்கிய சந்திப்பின் முக்கிய பிரச்சனைக்குரியதாக பேசப்பட்ட இலங்கையில்
சுதந்திரமில்லை என்பதை முறியடிக்கும் எண்ணமோ என்னமோ அப்பட்டமான அரசியல்
தலைப்புகளும் வழங்கப்பட்டு மூத்த பத்திரிகையாளர் வழிநடத்த தேசிய இனங்களின்
பிரச்சனைகள் எனும் தலைப்பில் பலரும் உரையாற்றினர்.விசாரணையில் தேசியம் என்று
தொடங்கிய யசிந்திரா மலையக தேசியம் பற்றி லெனின் மதிவாணன் தேசிய விடுதலை போராட்ட
இயக்கங்களில் பெண்களின் நிலைமை என்று ஞானசக்தி நடராஜா என பலரது பேச்சுக்கள்
இலக்கிய சந்திப்பின் கனதியை மேலும் அதிகரித்தன எனலாம்.அத்தோடு தேசியவாத அரசியல்
சூழமைவில் முஸ்லிம் பரிமாணம் என்று சிராஜ்
மன்சூர் ஆற்றிய உரை தெளிவான நிதானமான பொறுப்புமிக்க உண்மையான கருத்துகளின்
சங்கமமாய் இருந்தது.
தேசிய
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தில் குழுக்களின் பங்களிப்பு பற்றி சமுக
பணியாளர் சுல்பிகா அவர்களது உரை அரசியல் வாதிகளுக்கு அப்பால் நடை பெறுகின்ற சமுக
பணிகளின் முக்கியத்துவத்தை உணர செய்தது.விடயதானம் மட்டுமல்ல அவரது அழகுதமிழ்
பலரது கவனத்தையும் ஈர்த்தது.சிங்கள தேசியவாதம் பற்றி கொழும்பிலிருந்து
வந்திருந்த நிர்மால் ரஞ்சித் தேவ சிறி நீண்ட உரையொன்றை தந்தார் இலங்கையரசுக்கு
உவப்பானதாக இல்லாதது அவர் இங்கே பேசியது மட்டுமல்ல அவரது செயல் பாடுகளும் என்பதை
நண்பர்கள் மூலம் அறிய முடிந்தது.
இலங்கைவாழ்
மக்கள் மீது செலுத்தப்படுகின்ற சமூக, கலாச்சார, அரசியல் அதிகாரங்கள் அனைத்தையும்
நோக்கி பன்மைத்துவ குரல்களை ஓங்கி ஒலித்ததன் ஊடாக "அதிகாரங்களை நோக்கி கேள்விகளை எழுப்புவோம்
"எனும் புகலிட இலக்கிய சந்திப்பின் 25 வருட கால தார்ப்பரியத்தை யாழ்ப்பாண
இலக்கிய சந்திப்பும் மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளது எனலாம்.
புகலிட
இலக்கிய சந்திப்பு தனது 41 வது நிகழ்வினை இலங்கையில்வெற்றிகரமாக நடாத்தி
முடித்திருக்கிறது.இவ்வாண்டுடன் இச்சந்திப்பு உருவாக்கப்பட்டு 25வருடங்கள் முடிவதாக
அறியும்போது பிரமிப்பாகவே இருக்கின்றது.தமிழ் சமுகத்தில் சுதந்திரமானதொரு
கருத்து களமாக ஒரு சந்திப்பு இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்குவதென்பது
மிகப்பெரிய சாதனைதான்.அதுவும் ஒரு தலைமையோ செயல் குழுவோ இன்றி ஒவ்வொரு
சந்திப்பும் ஒவ்வொரு குழுவிடம் கையளிக்கப்பட்டு ஒரு தொடர்ச்சி பேணப்படுவது
என்பது எண்ணி பார்க்க முடியாத ஆனால் நிதர்சனமான உண்மையாகும்.இறுதியாக அடுத்த
இலக்கிய சந்திப்பு ஜெர்மனியில் நடாத்தப்படுவதென
தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டுநகரிலிருந்து
எழுகதிரோன்
|
No comments:
Post a Comment