கிராமத்து மரங்களும் நாமும் - செ. பாஸ்கரன்

.

நியூசவுத் வேல்ஸ் மானிலத்தின் வட எல்லைக் கோட்டுப்பகுதிகளான டுவீட் கெட்ஸ், பலினா கசீனோ போன்ற இடங்களுக்கு வேலையின் நிமித்தம் அண்மையில் சென்று வரவேண்டிய தேவை ஏற்பட்டதால். கோல்ட்கோஸட்; விமான நிலையத்தில் இறங்கி கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இந்தப்பகுதிகளுக்கு சென்றேன். சிட்னியில் குளிரால் நடுங்கிக்கொண்டிருந்த எனக்கு கதகதப்பான் வெய்யிலும் அழகிய பச்சைப்பசேல் என்று காட்சி தரும் நிலப்பரப்பும் இங்கிதமாக இருந்தது.


இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டே காரை ஓட்டிச்சென்றுகொண்டிருந்தேன். வாழைத்தோட்டங்கள் கரும்புத் தோட்டங்கள் மரக்கறித் தோட்டங்கள் என்று காட்சிகள் மாறிக்கொண்டிருந்தது. பெரும்பாலான பகுதிகளில் ஒரு பக்கம் தோட்டமிருக்கும் மறுபக்கம் ஆறு ஓடிக்கொண்டிருக்கும். வளம் நிறைந்த பகுதியாக தெரிந்தது. சில சில இடங்களில் செம்பாட்டு மண்னோடு தோட்டம் பொன்நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது. நீண்டும் வளைந்தும் சென்றுகொண்டிருக்கும் வீதியில் செல்வதே மனதில் மகிழ்வை தந்துகொண்டிருந்தது. இருந்தாலும் இந்த வேளையில் மனைவி பிள்ளைகளும் வந்திருந்தால் இந்த இயற்கை காட்சிகளைப் பற்றி பேசி ரசித்துக்கொண்டு போயிருக்கலாமே என்ற எண்ணமும் முளைவிடத்தான் செய்தது.





கிராமங்களுக்கூடாக சென்று நகரத்தை அடையும்போது வியாபார நிலையங்கள் மக்கள் குடியிருப்புக்கள் பள்ளிக்கூடங்கள் தேவாலயங்கள் என்று நாம் தினம்தினம் பார்த்து சலித்துக்கொள்ளும் காட்சிகள் வந்துவிடும். நான் போகவேண்டிய மருத்துவ மனைக்கு சென்று எனது வேலையை முடித்துவிட்டு மீண்டும் அடுத்த நகரத்தை நோக்கி புறப்படும்போது ஒரு உற்சாகம் மீண்டும் வந்து ஒட்டிக்கொள்ளும்.  இயற்கை அழகு ஒருமனிதனுக்கு எவ்வளவு சுகத்தைத் தருகிறது என்ற எண்ணம் என்மனதில் தோன்றி மறைந்தது மட்டுமல்லாமல் எமது நாட்டில் நாங்கள் திரிந்த தோட்டவெளிகளும் செம்பாட்டு காணிகளும் தென்னம் தோட்டங்களும் ஆற்றங்கரைகளும் நினைவில்வந்து மனதில் சுருக்கென்ற ஒரு மெல்லிய வலியை தந்தது.


அந்த வலியோடும் புதிய ரசனையோடும் சென்றுகொண்டிருக்கும் போது பழைமை வாய்ந்த மிகப்பெரிய மரங்கள் தோட்டங்களின் நடுவிலும் வீதி ஒரத்திலும் குடைபரப்பிக் கொண்டு கம்பீரமாக நிற்கும் அந்த அழகை பார்த்தபோது என் எண்ணத்தில் நம் நாட்டு நடப்பொன்று பொறிதட்டியது. இரண்டு சிறு நகரங்களுக்கு இடையில் இருக்கும் இந்தக் கிராமத்தில் எந்தத் தேவாலயத்தையும் காணவில்லை ஆனால் அந்த மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கின்றார்கள். என்போன்ற தெரியாத ஒரு மனிதனைக்கண்டாலும் சிரித்து விட்டு சுகம் விசரித்து விட்டு செல்கின்றார்கள்..


இங்கே எத்தனை பெரிய மரங்கள் அழகாக நிற்கின்றன. இவற்றில் குருவிகளும் புறாக்களும் கொஞ்சிக் குலாவுகின்றன. இதே எமது நாடாக இருந்தால் இந்தமரங்கள் ஒவ்வொன்றின் கீழும்; ஒரு பிள்ளையாரோ ஒரு வைரவர் சூலமோ இல்லை ஒரு புத்தர் சிலையோ நிறுவப்பட்டுவிடும் அதற்கு வளிபாடு நடக்கின்றதோ இல்லையோ நிட்சயம் சண்டை நடந்து கொண்டிருக்கும். அது இனச்சண்டையாகவோ இல்லை மதச்சண்டையாகவோ அதுகூட இல்லாவிட்டால் காணிச் சண்டையாகவோ இருந்து பல தலைகளை உருட்டிக்கொண்டிருக்கும் என்ற எண்ணம் என்னுள் தவிர்க முடியாமல் வந்து தொலைத்தது. இதுவரை பார்த்து ரசித்துக்கொண்டிருந்த இன்ப வலி துன்பவலியாக உருமாறிக்கொண்டிருக்க நான் அடுத்தநகரத்தின் மருத்துவ மனைக்குள் நுளைகிறேன் அங்கே என்னைக்கண்டதும் நிறைந்த புன்னகையோடு வரவேற்கின்றாள் வரவேற்பு மேசையில் அமர்ந்திருந்த பெண்மணி.




No comments: