தமிழ் அரங்கு வெளியிடும் உடல் - ஓர் அறிமுகம் முருகபூபதி






சிட்னியில் கடந்த மாதம் நடந்த  13 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவுக்குசென்றிருந்தவேளையில் நண்பர் கருணாகரன் எனக்குத்தந்த உடல் என்னும் காலாண்டிதழ் கனதியான உள்ளடக்கத்துடன் அமைந்திருந்ததை கண்ணுற்றேன். இந்த இதழையும் விழாவில் அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றியது.
அவுஸ்திரேலியாவில் பல கலைஞர்கள் கூத்து, இசைநாடகம், நாடகம் என்பனவற்றுடன் ஈடுபாடுள்ளவர்கள். இனிவரும் விழாக்களில் குறிப்பிட்ட துறைசார்ந்தும் இதழ்களை நூல்களை வெளியிட்டு இந்தக்கலைத்துறைகள் தொடர்பாக கருத்தரங்குகள் நடத்தலாம் என்று பரிந்துரைக்கவிரும்புகின்றேன்.
‘கூத்து பாரம்பரியமிக்க எமது கலை, அதைப்பேணிக்காப்பது மிக அவசியம். தமிழில் புதிய கலைவடிவங்களைத் தோற்றுவிப்பதற்கான ஒரு முன்னெடுப்பு. கலைகளினூடாக தமிழ்த்தேசியத்தை வளர்க்கவும் எமது உரிமைகளை மீட்டெடுக்கவும் முடியும்’ என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் காலாண்டுக்கு ஒரு முறை வெளியாகிறது உடல் இதழ்.
பிரான்ஸில் வதியும் கலைஞர் எம். அரியநாயகம் இந்த இதழின் ஆசிரியர். பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே, அவுஸ்திரேலியா முதலான நாடுகளில் உடல் இதழுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறார்கள்.
2013 தை-மாசி-பங்குனி இதழ் ஈழத்து கூத்துக்கலைஞர் மறைந்த வி.வி.வைரமுத்து அவர்களுக்கான சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது.
வைரமுத்து அவர்களைப்பற்றி இதழ் ஆசிரியர் தமது ஆசிரியதலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:-
‘வீறு , கனிவு, கவர்;ச்சி மூன்றும் ஒருங்கிணைந்து மலரும் ஒரு கலைமுகம். ஆயிரம் ஆயிரமாய் மக்களுள் ஒருவனாக அவரது இசையோடு இணைந்த நடிப்பைக்கண்டு, கேட்டு கண்கள் பனிக்க சுவைத்த எனக்கு அவரைப்பக்கமாய் நின்று பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட அந்த இனிய உணர்வை வெளிப்படுத்துவதற்கு அப்போது மட்டுமல்ல, எப்போதும் என்னிடம் சொற்கள் இல்லை.’

‘பாடலை நடிப்பாக்கிய மகா கலைஞன்’ என்ற தலைப்பில் பேராசிரியர் மௌனகுருவும், ஈழத்து இசை நாடக அரங்கின் நந்தாவிளக்கு: நடிகமணியின் இசை ஆளுமை என்ற தலைப்பில் கலாநிதி த. கலாமணியும், ‘நான் ரசித்த நடிகமணி’ என்ற தலைப்பில் அப்புக்குட்டி ராஜகோபாலனும், நடிகமணியின் ஆளுமையை சிறப்பாக பதிவுசெய்துள்ளனர். நடிகமணி குறித்த திறனாய்வு அறிமுகத்தை இந்த ஆக்கங்களில் காண முடிகிறது.
கனடாவில் வதியும் கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரனின் கலை உலக வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கிறது சட்டத்தரணி மனுவேல் ஜேசுதாசன் எழுதியிருக்கும் கட்டுரை. மேடை நாடகம், வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகம், திரைப்படம் என்று ஆழமாகத்தடம்பதித்த கலைஞர் பாலச்சந்திரன். அத்துடன் கரையைத்தேடும் கட்டுமரங்கள் என்ற நாவலையும் அவர் படைத்தவர்.
சங்கரதாஸ் சுவாமிகள் ஊட்டிய தமிழ் நாடக இசை நாடகத்துக்கு மட்டும் இனிமை சேர்க்கவில்லை, தமிழுக்கும்தான் என்று சொல்கிறது, அவர்பற்றிய முனைவர் க. இரவீந்திரனின் கட்டுரை.
மெல்பனில் மாவைநித்தியானந்தனின் மூன்று சிறுவர்நாடக நூல்களின் வெளியீட்டரங்கில் அண்ணாவியார் இளையபத்மநாதன் சமர்ப்பித்த சிறுவர் அரங்கு என்னும் கட்டுரை, க. ஆதவன் எழுதிய சிறுவர் அரங்கும் சவால்களும் சில தேடல்கள், முல்லை அமுதனின் சுஜித்.ஜி. எனும் அற்புதக்கலைஞன், முதலான கட்டுரைகளுடன் ஜெர்மனியில் வதியும் கலைஞி கிருஷாந்தி பாலசுப்பிரமணியம், தமிழகக்கலைஞி லட்சுமி அம்மாள் ஆகியோரின் நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன.
உடல் ஏப்ரில் - மே- ஜூன் மாதங்களுக்கான இதழில் அரவிந்த் அப்பாத்துரை, பேராசிரியர் மௌனகுரு, முனைவர் பா. இரவிக்குமார், முனைவர் கரு. ஆழ. குணசேகரன், மணிபல்லவன், பிரியசிவா, வாசுகி நல்லையா, யமுனா ராஜேந்திரன், சுபாஷ், சிவா, குழந்தை சண்முகலிங்கம், ஜே.எஸ். அனார்க்கலி ஆகியோரின் படைப்புகளும் பதிவாகியுள்ளன.
நாடகம், நாட்டுக்கூத்து முதலான துறைகளைப்பற்றியும் குறும்படம் திரைப்படம் தொடர்பாகவும் உடல் உள்ளடக்கம் இருப்பதனால் இந்தத்துறைகளில் ஈடுபடும் - பயிலும் எம்மவர்களுக்கு இந்த காலாண்டிதழ் பயன்மிக்கது.
மேலதிக விபரங்களுக்கு மின்னஞ்சல்: