மெல்பனில் தமிழ் - சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை நிகழ்வு எஸ்.கிருஷ்ணமூர்த்தி






அவுஸ்திரேலியா ஒரு பல்கலாசார நாடு. குடியேற்றநாடாக விளங்குவதனால் பலதேச பல்லின மக்களும் இங்கு வாழ்கின்றனர். அண்மையில் மெல்பனில் கிரகிபேர்ண் என்னுமிடத்தில் அமைந்துள்ள பொது நூலக மண்டபத்தில், இங்கு நீண்டகாலமாக வாழும்   இலங்கைத்தமிழர்கள் இருவருடைய தாய்மொழி இலக்கியப்படைப்புகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டன.
இந்த நூலகம் அமைந்துள்ள பிரதேசத்திலும் அதற்கு அண்மித்த நகரங்களிலும் சுமார் 120 மொழி பேசுகின்றவர்கள் வாழ்கின்றார்கள் என்பது அதிசயம். ஆனால் அதுதான் உண்மை.


கிரகிபேர்ன் நகரத்தில் இலங்கைச்சிங்கள சமூகத்தினர் செறிந்துவாழ்கின்றனர். அதனால் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும்  மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்களுக்கு இங்கு பரவலான அறிமுகம் கிட்டியது மிகவும் பொருத்தமானதுதான்.
இந்த நகரம் ஹியூம் மாநகரசபைக்குள் வருகிறது. இந்த மாநகர சபையின் அங்கத்தவராக தெரிவாகியிருப்பவர் சந்திரா பமுனுசிங்க என்ற சிங்கள அன்பர். அவர் இனநல்லிணக்கத்தை மதிப்பவர். அத்துடன் சமூக ஒன்று கூடல்களின் ஊடாக புரிந்துணர்வை சமூகங்களுக்கிடையில் தொடர்ச்சியாகப்பேணுவதற்காக  உழைத்துவருபவர்.
அவரது முன்முயற்சியினால் நடந்த இந்த தமிழ் - சிங்கள – ஆங்கில பரிவர்த்தனை இலக்கிய நிகழ்ச்சியில்   ஹியூம் மாநகர மேயர், கவுன்ஸிலர் ஜீயோஃப் போர்டர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியதுடன் குறிப்பிட்ட நூல்களையும் பெற்றுக்கொண்டு வெளியிட்டுவைத்தார்.

வெளியிடப்பட்ட நூல்கள்: நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு சமணலவௌ. உனையே மயல்கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு டுழளவ in லழர. முருகபூபதியின் தமிழ்ச்சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு மதகசெவனெலி.
கவுன்ஸிலர் சந்திரா பமுனுசிங்க தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில்  எஸ். பி. எஸ். சிங்கள ஒலிபரப்பு மெல்பன் ஊடகவியலாளர் திரு. விஜய கருணாசேன வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேயர் தமது உரையில், “ மக்கள் நூலகங்களை முடிந்தவரையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். முதல் தடவையாக இந்த நூலகத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பது ஏனைய மாநகரசபைகளுக்கும் முன்மாதிரியாகத்திகழும். மொழிபெயர்ப்புகள் இனங்களை தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் உதவும். இன்று இங்கு வாழும் இரண்டு இலங்கைத்தமிழர்களான நொயல் நடேசன், முருகபூபதி ஆகியோருடைய நூல்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அறிமுகமாகின்றன. ஏனைய மாநகர நூலகங்களிலும் இதுபோன்ற இன நல்லிணக்கத்தை உருவாக்கும் கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவேண்டும். இந்தப்பிரதேசத்தில் இலங்கை மக்களான தமிழ் சிங்கள முஸ்லிம் பறங்கி இனத்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து நான் கவனம் செலுத்துவேன். அவர்களுக்கென சமூக மண்டபம் ஒன்று தேவைப்படுவதை உணருகின்றேன். இதுபோன்ற சந்திப்புகள் எதிர்காலத்திலும் தொடரவேண்டும்.” என்று தெரிவித்தார்.