மெல்பேர்ன் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகர் கோவிலில் சிறப்புடன் நடந்து நிறைவு பெற்ற மகோற்சவத் திருவிழா - 2013.
மெல்பேர்னில் மலையும,; மலை சார்ந்த பிரதேசமாக இருக்கும் அழகிய கிராமம் தான் பேசின் என்ற கிராமம். அந்த அழகிய கிராமத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அற்புத விநாயகர் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகர். பேசின் ஸ்ரீவக்கிரதுண்ட விநாயகர் ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெறும் மகோற்சவத் திருவிழா நிகழும் விஜய வருடம் சித்திரை மாதம் 19ம் திகதி வெள்ளிக்கிழமையன்று காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தினமும் காலை, மாலை சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் கொடித்தம்ப பூசை, வசந்த மண்டமப்பூசை, யாக தரிசனம் நடைபெற்று விநாயப்பெருமான் உள்வீதி, வெளிவீதி உலாவந்து அருள்பாலித்தார். விநாயகப் பெருமானை 32 கணபதி உருவங்களில் வழிபாடு செய்யப்படுவது வழக்கம். அது போல் ஒவ்வொரு தினமும் விநாயகப்பெருமான் பாலகணபதி, சித்திபுத்தி கணபதி, வீரகணபதி, லஷ்சுமி கணபதி, நடனகணபதி, மகாகணபதி, ராஜகணபதி என்ற அலங்காரங்களில் எழுந்தருளப்பெற்றார். மற்றும் சப்பறம், இரதோற்சவம், தீர்த்தோற்சவம், கொடியிறக்கம், வைரவர் பொங்கல், ஸ்ரீ முருகப்பெருமானின் திருக்கல்யாணம் எனவும் நடந்தேறியன.
இறைவனின் ஜந்து தொழில்களை குறித்து நிற்பது தான் மகோற்சவத் திருவிழாவாகும். ஆலயத்தில் நித்தியபூசைகளில் ஏற்படுகின்ற அனைத்துக் குறை குற்றங்களையும் நீக்கி அவற்றை நிவர்த்தி செய்து முழுமை பெறுவது இந்த மகோற்சவத் திருவிழாவில் தான். மனிதப் பிறவியெடுத்த ஒவ்வொரு ஜீவனின் ஆன்ம ஈடேற்றம் வேண்டி நிகழுகின்றது. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள்pல் ஒன்றான ஆணவம் நீங்கப் பெறுகின்றதை விளக்கி நிற்கின்றது. அதாவது அழித்தல் தொழிலைக் குறித்து நிற்கும் தேர்த்திருவிழா சகல ஆலயங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
மெல்பேர்ன் ஸ்ரீ வக்கிரதுண்ட விநாயகர் ஆலயத்தில் இரதோற்சவம் 27ம் திகதி சனிக்கிழமை பெருந்திரளான அடியார்களின் பக்திமய மத்தியில் நடந்தேறியது எனலாம். இதில் குறிப்பிடக்கூடிய ஒரு விசயம் இருக்கின்றது. அதாவது வழமையாகக் கட்டுத் தேர்தான் இழுக்கப்படுகின்றது. ஆனால் மா பெரும் பசுபிக் சமுத்திர பகுதியில் அவுஸ்திரேலிய கண்டத்தில் முதன் முறையாக சித்திரத்தேர் சிற்பாசிரியர்களால் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தேரில் பஞ்சமுக விநாயப் பெருமான் எழுந்தருளப் பெற்றமையே ஆகும். இந்த சித்திரத்தேர் யாழ்ப்பாணத்தில் நவாலியில் உள்ள சிற்ப விற்பன்னர்களான பிரபல சிற்பாசிரயர்களால் ஒன்று கூடி பல சிற்பங்களை செதுக்கி உருவாக்கப்பட்டது. எனவே சகல இந்துமதக் கலைகளையும், பெருமை மிக்க சிற்பங்களையும் வெளிக்காட்டுகின்ற சகல அமைப்புகளையும் ஒருங்கே கொண்டுள்ள ஒரு அற்புதமான தேர் என்று கூறலாம். சகல சிறப்புக்களையும் கொண்ட இந்த சித்திரத்தேர் உருவாக்கத்தில் அக்கறையுடன் செயற்பட்ட ஆலயநிர்வாகத்திற்கு நன்றி கூறவேண்டும்.
ஊர் மக்கள் அதாவது ஆண்கள், பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து சித்திரத்தேரின் வடம் பிடித்து அரோகரா என்ற கரகோஷத்துடன் தேரினை அசைத்து ஊரினைச் சுற்றி நகர்ந்து வருவதால் அந்த ஊர்மக்களுக்கு ஒரு சுபீட்சம் கிடைக்கும் என்பது ஜதீகம். அது போல் மெல்பேர்ன் விநாயக்பபெருமானின் பக்த கோடிகள் பெருந்திரளாக வருகை தந்து அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்த்திருவிழாவில் பங்கு பற்றியமை வரவேற்க வேண்டிய விடயமாகும். அன்றைய தினம் சூரிய பகவான் பிரகாசமான ஒளிக்கீற்றுக்கள் மூலம் நல்லதொரு வெப்ப சுவாத்தியத்தைக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். சித்திரத்தேர் ஆலயத்தில் இருந்து பறப்பட்டு மூன்று மெல்பேர்ன் பிரதான வீதிகளூடாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தின் பின் வீதியூடாக தேரின் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தது. சகல அடியார்களும் ஒன்று திரண்டு தேர் இழுத்தமையைக் கண் கூடாகப் பார்க்கக்கூடியதாக இருந்தது. பேசின் நகர நகர்காவலர்கள் (பொலிஸ் உத்தியோகத்தர்கள்) வீதி ஒழுங்குகளில் மிகவும் ஒற்றுமையாகச் செயற்பட்டனர். வெள்ளையினத்தவர்களும் வந்திருந்தமையைக் காணக்கூடியதா இருந்தது. வழமைபோல் பஞ்சமுக விநாயகப் பெருமானுக்கு பச்சை சாத்தி விநாயகப்பெருமான் ஆலயத்திற்குள் வருகை தந்து சகல அடியார்களுக்கும் அருள்பாலித்தருளினார். இந்த இரதோற்சவத் திருவிழாவிற்கு வருகைதர முடியாதவர்களுக்காகவும், மற்றய மாநில அடியார்களுக்காகவும் அன்றைய திருவிழாவினை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புச் சேவை தனது நேரடி அஞ்சல் மூலம் சகல அடியார் இல்லங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. வானொலி ஒலிபரப்பாளர் திருமதி.சாந்தினி புவனேந்திரராஜா அவர்கள் தலைமையில் நேரடி அஞ்சல் நடைபெற்றது.
தேர்த்திருவிழாவில் சகல விசேஷ பூசைகள் யாவும் ஆலயப் பிரதம குருக்கள் சிவஸ்ரீ.கௌரீஸ்வரக்குருக்கள், அவருடைய சகோதரரான சிட்னியில் இருந்து வருகை தந்து சிறப்பித்த சிவஸ்ரீ.நிர்மலேஸ்வரக்குருக்கள் உட்பட பல சிவாச்சாரியார்களால் வேதசிவாக முறைப்படி நடைபெற்றன. இதில் ஒரு சிறப்பும் இருக்கின்றது. அதாவது சிவஸ்ரீ.கௌரீஸ்வரக்குருக்கள் தனது குருத்துவப் பட்டாபிஷேகம் பெற்றதிலிருந்து இன்று வரை மிகவும் சிறப்பாக தனது பணியைச் செய்து வருகின்றார். சகல வேத, சிவாகமங்களையும், சமஸ்கிருத மொழியில் யாழ்ப்பாணத்தில் பிரபல வித்துவசிரோண்மணி சாஸ்திரிமார்களிடம் முறையே பயின்றவர் என்பதுவும், குருத்துவ வாழ்நாளில் இன்று வரை ஜம்பதுவுக்கும் மேற்பட்ட கொடியேற்ற மகோற்சவத் திருவிழாக்களை தனது தலைமையில் நடாத்தியுள்ளார் என்பதுவும் இங்கு குறிப்பிடப்பட வேண்டியவையாகும். அவருடைய மகத்தான பணிக்கு விநாயப் பெருமானின் கிருபையுடன் கூடிய சிறப்பான வாழ்த்துக்கள் பல.
தேர்த்திருவிழா அன்னதானத்துடன் நிறைவு பெற்றது. மறுநாள் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை அருளல் தொழிலைக் குறித்து நிற்கும் தீர்த்தோற்சவம் நடைபெற்று, புனித தீர்த்தத்தில் நீராடினால் எமது வினைகள் யாவும் தீர்ந்து நல்லதொரு சுபீட்ச வாழ்வு கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. வினைகளை அறுத்து இறையருள் பெறுவது தீர்த்தத் திருவிழாவாகும். அன்று மாலை கொடியிறக்கம் நடைபெற்றது.
பக்த கோடிகள் அனைவரும் திரண்டு வந்து எம்பெருமான் விநாயக் பெருமானின் பேரருளைப் பெற்றுச் சென்றனர். வேழ முகத்து விநாயகனைத் தொழுதால் எமது வாழ்வு மிகுந்து வரும். சகல விக்கினங்கள் நீக்கி வெற்றிகள் பல தரும் விநாயகர் தாள் பாதம் போற்றி!
நவரத்தினம் அல்லமதேவன்.
மெல்பேர்ன்.