இலங்கைச் செய்திகள்


வவுனியா நகர சபையின் ஆவணங்கள் சில தீக்கிரை

வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரர் பலி

மாணவர்கள் வேடிக்கை பார்க்க அதிபரும் ஆசிரியரும் மோதல் : சங்கானையில் சம்பவம்

அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

இலங்கையர்களை ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் கும்பல் கைது

‘உதயன்’ பத்திரிகையின் பிந்தியதொரு விசமத்தனம்!

அசாத் சாலிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை

அசாத் சாலியை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

''முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அசாத் சாலியை விடுதலை செய்'': அக்குறணையில் ஆர்ப்பாட்டம்

 அசாத் சாலியை பார்வையிட மனைவி, மகள், எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு

=====================================================================
வவுனியா நகர சபையின் ஆவணங்கள் சில தீக்கிரை


 30/04/2013 வவுனியா நகர சபையினரால் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் சில தீயில் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா நகரசபை உறுப்பினர்கள் சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது கையொப்பம் இடப்படுகின்ற பதிவேட்டுப் புத்தகமே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது. தீயில் எரிந்த நிலையில் பதிவேட்டுப் புத்தகத்தின் சில பகுதிகள் மக்களால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நகரசபை உறுப்பினர் ஒருவரை நகரசபையில் இருந்து இடைநிறுத்துவதற்கான முயற்சிகள் நகரசபை நிர்வாகத்தாலும் சில நகரசபை உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில அவ் உறுப்பினர் ஒழுங்காக கூட்டங்களுக்கு வருவதில்லை என்பதை வெளிப்படுத்துவதற்கான கையொப்பம் இடப்படுகின்ற பதிவேட்டுப் புத்தக ஆவணமே எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா நகரசபைத் தலைவர் ஜ.கனகையா இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் நகரசபைச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் அவர்களிடம் கோட்டபோது, இது

இதேவேளை, உண்மையான ஆவணங்கள் தான் எரிக்கப்பட்டவை என்று கண்டு பிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர் சட்ட ரீதியான பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என நகரசபைச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி 






வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரர் பலி

29/04/2013 யாழ். அனலைத்தீவு நான்காம் வட்டாரத்தில் நேற்று மாலை இனந்தெரியாத நபர் ஒருவரின் வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்.

வாள் வெட்டில் படுகாயமடைந்த கடற்படை வீரர் அனலைத்தீவு கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், குறித்த கடற்படை வீரர் சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனலைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 நன்றி வீரகேசரி
 


மாணவர்கள் வேடிக்கை பார்க்க அதிபரும் ஆசிரியரும் மோதல் : சங்கானையில் சம்பவம்

02/05/2013 மாணவர்கள் மத்தியில் அதிபரும் ஆசிரியரும் சண்டையிட்ட சம்பவம் ஒன்று சங்கானை கல்விக் கோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
சங்கானை கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு இடையே இடம்பெற்ற மெய்வன்மைப்போட்டிகள் வட்டக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றன.
இந்தவேளையில் குறித்த அதிபரின் பையில் இருந்த ஒரு புத்தகத்தை அவரின் அனுமதியின்றி பையிலிருந்து எடுத்தமை சம்பந்தமாக எழுந்த வாக்குவாதம் இறுதியில் கைகலப்பில் முடிவடைந்துள்ளது.
இதனை வேறு ஆசிரியர்களும் மாணவர்களும் பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்கள். இரு சாராரும் தமக்கு சாதகமான விபரங்களை கூறுகின்ற போதிலும் ஆசியரும் அதிபரும் மாணவாகள் மத்தியில் இவ்வாறு சண்டையிட்டுக்கொண்டமை பெற்றோர்கள் மத்தியில் பெரும் விசனத்தை எற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக வலிகாமம் கல்வி வலயத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

நன்றி வீரகேசரி





அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்


02/05/2013 அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் இன்று அதிகாலை 1.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இலங்கையின்; சிரேஸ்ட அமைச்சர்களுடன் அமைச்சர் கோர்னர் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது. 
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவது தொடர்பில் இந்த விஜயத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்படுகிறது.  நன்றி வீரகேசரி








இலங்கையர்களை ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் கும்பல் கைது


02/05/2013 இலங்கையர்களை ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கும் இந்திய கும்பலை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை சட்டவிரோதமான முறையில் ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் குறித்த கும்பல் ஈடுபட்டிருந்தாகக் குறிப்பிடப்படுகிறது.

ராமநாதபுரம் பிரதேசத்தில் இந்த இருவர் அடங்கிய கும்பலை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போலியான இந்தியக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பி வைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து 71 போலிக் கடவுச் சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன.சந்தேக நபர்களிடமிருந்து 11.5 இலட்ச ரூபா இந்தியப் பணமும் மீட்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி





‘உதயன்’ பத்திரிகையின் பிந்தியதொரு விசமத்தனம்!
(சுன்னாகம் நிருபர்)
Udayan-News-Paperயாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகை காரியாலயம் தாக்கப்படுவதும், அதன் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த அளவுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வேறு எந்தப் பத்திரிகையும் தாக்கப்படவில்லை எனக் கூறலாம்.

இந்தப் பத்திரிகையின் உரிமையாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன். இவர் 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்டு, பொதுமக்கள் வைப்பிலிட்ட பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவான ‘சப்றா பினான்ஸ்’ என்ற நிதி நிறுவனத்தில் முக்கியமான நிர்வாகியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடி குறித்து பல வருடங்களாக மக்கள் பலரிடம் முறையிட்டும் இன்றுவரை எந்தவிதமான விசாரணையும் நடாத்தப்படாததுடன், பாதிக்கப்பட்வர்களுக்கு எவ்விதமான நிவாரணமும் வழங்கப்படவும் இல்லை. மிக அண்மையில்தான் இதுபற்றி அரசாங்கம் விசாரணை நடாத்த முன்வந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

உண்மையில் சரவணபவன் ‘உதயன்’ பத்திரிகையின் உரிமையாளராக இருந்தாலும், அவரது மைத்துனர் ந.வித்தியாதரன் தான் இந்தப் பத்திரிகையின் அச்சாணியாக இருந்து செயல்பட்டவர். ஆனால் கடந்த பொதுத் தேர்தலின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக நியமனம் கிடைக்கும் என வித்தியாதரன் எதிர்பார்த்திருந்த நிலையில், மைத்துனர் சரவணபவன் பின்கதவால் புகுந்து வேட்பாளர் நியமனம் பெற்று பாராளுமன்ற உறுப்பினராயும் ஆகிவிட்டதால், மைத்துனர்களுக்க்கிடையில் முரண்பாடு தோன்றி, ஒருவருடன் ஒருவர் பேச்சுவார்த்தைகூட வைக்காத அளவுக்கு நிலைமை முற்றியது. அதைத் தொடர்ந்து வித்தியாதரன் உதயன் பத்திரிகையிலிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் வித்தியாதரன் கொழும்பிலிரு;து ‘டெயிலி மிரர்’ ஆங்கில நாளிதழ் தமிழில் நடாத்தும் ‘தமிழ் மிரர்’ என்ற இணையப் பத்திகையில் பணியாற்றுகின்றார். (அதனால்தான் ‘தமிழ் மிரர்’ இன்னொரு உதயனாக வெளிவந்து கொண்டிருக்கிறது)
இந்த நிலைமையால் அவர்களது குடும்பங்களுக்கிடையில் விரிசல் ஏற்பட்டதால், அதை ஈடுகட்டுவதற்கு நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் தனது மைத்துனர் வித்தியாதரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக்கி பிராயச்சித்தம் தேடுவதற்கு சரவணபவன் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, உதயன் அடிக்கடி ‘இனம்தெரியாத’ (இந்தப் பெயரில் முன்பு புலிகள்தான் படுகொலைகளைச் செய்து வந்தனர். இப்பொழுது வேறு யாரோ புலிகளது வழியைப் பின்பற்றுகிறார்கள் போலும்!) நபர்கள் தாக்கி வருவது குறித்து அதன் உரிமையாளர் சரவணபவனும், அவருக்கு ஆதரவான உள்நாட்டு சர்வதேச சக்திகளும் அரசாங்கத்தின் மீது வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதில் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை.

ஆனால் மற்றப் பத்திரிகைகளை விட்டுவிட்டு உதயன் பத்திரிகை மட்டும் திரும்பத் திரும்பத் தாக்கப்படுவது ஏன், என்ற கேள்வி எழுகின்றது. இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அதாவது வித்தியாதரன் பொறுப்பாக இருந்த காலத்திலேயே, உதயன் பத்திரிகா தர்மத்தை மீறி பல தடவைகள் செயற்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளன. உதாரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் உதயன் பத்திரிகைக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்ட போது, தனக்கு இருந்த ஊடக பலத்தை வைத்துக்கொண்டு பொதுமக்களை பல்கலைக்கழகத்துக்கு எதிராகத் திருப்ப முயன்றனர்.

அதுமாத்திரமில்லாமல், யாழ்ப்பாணத்தில் உதயனைத் தவிர வேறு பத்திரிகைகள் வெளிவராக்கூடாது என்பதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல அச்சுறுத்தல் நடவடிக்கைகளை உதயன் மேற்கொண்டது.

உதயன் பத்திரிகை ஒருபோதும் ஊடக தர்மத்தின்படி நடந்தது கிடையாது. பொய் செய்திகளைப் பரப்புவது, அரசியல் ரீதியில் தமக்கு எதிரானவர்களுக்கு சேறு பூசுவது, மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்புவது போன்ற மாபியத்தனமான பாணியில்தான் உதயன் செயல்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்களில் கணிசமான ஒரு பகுதியினருக்கு உதயன் மீது கோபம் உண்டு. அது தவிர உதயன் உரிமையாளர் சரவணபவன் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த சப்றா பினான்ஸ் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்ததாலும், அதன் மீது பொதுமக்களுக்கு வெறுப்பும் உண்டு.

‘உதயன்’ செய்து வரும் விசமத்தனத்துக்கு தற்பொழுது அது செய்து வருகின்ற ஒரு செயல் நடைமுறை உதாரணமாக இருக்கிறது. அது என்னவெனப் பார்த்தால் உதயன் செய்து வரும் பத்திரிகா தர்மம் என்ன என்பது தெரிந்து விடும்.
saravanabavan
வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நேரடியாக மோத உள்ளன.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பிரதான கட்சியான தமிழரசுக் கட்சிக்கும், ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால், அதன் தேர்தல் நோக்கம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மறுபக்கத்தில் கடந்த காலங்களில் பொதுத் தேர்தல் உட்பட வடக்கில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அரசாங்கத்தின் ஒரு பங்காளிக் கட்சியான ஈ.பி.டி.பி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனேயே இணைந்து போட்டியிட்டு வந்துள்ளது. வட மாகாணசபைத் தேர்தலிலும் அந்த நிலைமைதான் தொடரப் போகின்றது. அதில் மாற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் இதுவரை தகவல் எதுவும் இல்லை.

அப்படியிருக்க சில நாட்களுக்கு முன்னர் உதயன் வெளியிட்ட ஒரு செய்தியில், ஈ.பி.டி.பி கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகித் தனியாக வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக நம்பிக்கையாகத் தெரிய வந்ததாக ஒரு பொய் செய்தியைக் கட்டவிழ்த்துவிட்டது. அதைத்தான் பத்திரிகைகள் வழமையாகச் செய்யும் ஒரு கயிறு திரிப்பு என்று விட்டுவிட்டாலும், அது பின்னர் செய்திருக்கிற ஒரு வேலை உதயன் பத்திhகையின் உச்ச கட்ட விசமத்தனத்தையும், கபடத்தனத்தையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.

வழமையாக உதயன் ஏதாவது தனக்குத் தேவையான ஒரு விடயம் குறித்துக் கருத்துக்கணிப்பு நடாத்துவதும், தானே தனக்குச் சாதகமாக அதன் முடிவுகளை அறிப்பதும் ஒரு நகைச்சுவையான நாடகம். அண்மையில் ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடந்தபோது, அது சம்பந்தமாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறிய ஒரு கருத்தை வைத்து, அவருக்கு எதிராக ஒரு கருத்துக் கணிப்பை நடாத்தியது. அதற்கு முதல் தனது சக பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கிரிக்கட் விளையாடியதை வைத்து அவருக்கு எதிராக சரவணபவன் உதயனில் ஒரு கருத்துக் கணிப்பை நடாத்தினார். (ஆனால் சரவணபவன் மட்டும் தனது மனைவி பிள்ளைகளுடன் ஜனாதிபதி அலரி மாளிகையில் நடாத்தும் விருந்துகளில் கலந்து கொண்டு கூடிக்குலாவி வருவார்)

இப்பொழுது அவர் அவர் நடாத்தும் விசமத்தனமான கருத்துக் கணிப்பு என்னவென்று பாருங்கள்!

வட மாகாணசபைத் தேர்தல் நடந்தால் அதில் வெற்றி பெறப் போவபர்கள் யார் என்று ஒரு கேள்வியைக் கேட்டு, பின்வரும் தெரிவுகளைக் கொடுத்துள்ளது உதயன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
ஈ.பி.டி.பி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
மேற்குறித்த எவரும் இல்லை

இந்தக் கேள்வி எடுத்துக் காட்டுவது என்ன? ஈ.பி.டி.பியும் அது அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தனித்தனியாகத் தேர்தலில் போட்டியிடுகின்றன என்பதுதானே? அந்த இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுவது என்ற முடிவு எடுக்கப்படவில்லை என்பது மட்டுமின்றி, அப்படி ஒரு கதைகூட அரசியல் அரங்கில் எங்கும் பேசப்படவுமில்லை.

அப்படி இருக்க உதயன் ஏன் இந்த விசமத்தனத்தைச் செய்துள்ளது? அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள பிளவை மூடி மறைப்பது அதன் பிரதான நோக்கம். அதை மறைப்பதற்கு ஈ.பி.டி.பிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் பிளவு என்று ஒரு பொய்ச் செய்தியை முதலில் பிரசுரித்தது. அதை மக்கள் நம்பமாட்டார்கள் என்பதால், மக்களை அந்தப் பொய்யில் பங்குபற்ற வைப்பதற்காக, ஒரு பொய் கருத்துக் கணிப்பையும் நடாத்துகின்றது. அத்துடன் தனது வழமையான பாணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக ஆதரவு இருக்கின்றது என்று காட்டவும் முற்படுகின்றது.

இப்படியான விசமத்தனங்களைச் செய்யும் உதயன் மறுபக்கத்தில் தான் ஊடக தர்மப்படி செயல்படுவதால்தான், தன்மீது தாக்குதல் நடாத்தப்படுகிறது என ஒப்பாரியும் வைக்கிறது. அதை நம்பி அமெரிக்க அரசாங்கம் முதல் உள்ளுhர் கந்தையா அண்ணை வரை உதயனுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகின்றனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்மீது உதயன் செய்த அவதூறுகளுக்காக 1000 கோடி ரூபா நஸ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்ததாகவும், அதற்கு அஞ்சி உதயன் நிர்வாகம் சமரசத்துக்கு வந்ததாகவும் அண்மையில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் எத்தனை வழக்குகள் போட்டாலும், சப்றா புகழ் சரவணபவன் போன்ற ‘அஞ்சா நெஞ்சர்களை’ அசைக்க முடியாது. மக்களாக முன்வந்து ஏதாவது தீர்ப்பு வழங்கினால் மட்டும்தான் உதயனையும் அதன் உரிமையாளரையும் வழிக்குக் கொண்டுவர இயலும் போல் தோன்றுகிறது. நன்றி தேனீ 






அசாத் சாலிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை


03/05/2013 அசாத் சாலிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்களுக்கு அமைவாக அசாத் சாலிக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. அல்லது அசாத் சாலியை புலனாய்வுப் பிரிவினர் விடுதலை செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
அசாத் சாலி பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிடுவோர் தண்டிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை வாழ் சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அசாத் சாலி குரல் கொடுத்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய வலய பிரதிப் பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் தெரிவித்துள்ளார்
.
மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்பில் பொதுநலவாய உறுப்பு நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    நன்றி வீரகேசரி


அசாத் சாலியை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்



03/05/2013 கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை விடுதலை செய்யக்கோரி இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. 
Pics By:J.Sujeewakumar

தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னாலிருந்து ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி கொள்ளுப்பிட்டி பாதை வழியாக மாநகர சபை சுற்று வளைவின் ஊடக பயணித்து மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மேல்மாகாண சபையின் ஐ.தே.க.உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான், விக்ரமபாகு கருணாரத்ன, கொழும்பு மா நகர சபை மேயர் ஏ.ஜே.எம்.முசம்மில், சுமந்திரன் எம்.பி. உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அசாத் சாலியை உடனடியாக விடுதலை செய், பாதுகாப்பு செயலாளரே உரிய விளக்கத்தினை தா உள்ளிட்ட அரசுக்கு எதிரான பல சுலோகங்களும் கோஷங்களும் ஆரப்பாட்டத்தில் பயன்படுத்தப்பட்டது.
   நன்றி வீரகேசரி



 

''முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அசாத் சாலியை விடுதலை செய்'': அக்குறணையில் ஆர்ப்பாட்டம்



03/05/2013 கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் அசாத் சாலியை விடுதலை செய்யக்கோரி அக்குறணையில் இன்று அமைதியான ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் 'முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அசாத் சாலியை விடுதலை செய்" என கோஷம் எழுப்பினர்.

நன்றி வீரகேசரி




அசாத் சாலியை பார்வையிட மனைவி, மகள், எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு


03/05/2013 குற்றப்புலனாய்வு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியை பார்வையிட அவரது மனைவி மகள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று இரவு மனைவி மகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு தரப்பு அசாத் சாலியை பார்க்க அனுமதிக்காத நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதனை தொடர்ந்து அங்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, டாக்டர்.ஜயலத் ஜெயவர்த்தன மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிராஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
அத்துடன் அசாத் சாலி அனுமதிக்கப்பட்டுள்ள 55 வார்ட் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி