உருவகக்கதை ஞானம் முருகபூபதிஅரசமரத்தடிப்பிள்ளையாருக்கு கோயில் கட்டி எழுப்புவதற்கு ஊர்ப்பொதுமக்கள் தீர்மானித்து அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார்கள்.
அரசமரத்துக்கு அருகில் கோயில் நிர்மாணத்துக்காக செங்கற்கள் மற்றும் மரங்கள் கட்டிடப்பொருட்கள் வந்து குவியத்தொடங்கின.

கோயில் நிர்மாணப்பணிகளில் ஈடுபடும் ஸ்தபதிகளும் கூலிவேலையாட்களும் மும்முரமாக வேலைகளை ஆரம்பித்தார்கள்.

கோயிலுக்கான அத்திவாரவேலைகள், விசேட பூசை ஆராதனைகளுடன் ஆரம்பமானது.
அத்திவாரத்துக்கான உறுதியான கற்களை ஸ்தபதிகளின் பணிப்பின் பிரகாரம் கூலியாட்கள் வேறாக தரம்பிரித்து அடுக்கிவைத்தனர்.
அதேசமயம் கோபுரக்கலசத்தை தாங்குவதற்கென விசேட கவனிப்புடன் தருவிக்கப்பட்ட கற்கள்பிரத்தியேகமாக ஒருபுறத்தில் அடுக்கிவைக்கப்பட்டன.
கோபுரக்கலசத்தை தாங்கவிருக்கும் அந்தக்கற்கள் மிகவும் இறுமாப்புடன், அத்திவாரத்துக்கு எடுத்துச்செல்லப்படும் கற்களைப்பார்த்து  ஏளனத்துடன் சிரித்தன.
“ என்ன...சிரிக்கிறீர்கள்...நாம் இந்த அத்திவாரக்கிடங்குகளுக்குள் சமாதியாகின்றோம்....அதைப்பார்க்க உங்களுக்கு சிரிப்பு வருகிறதோ?” – ஒரு அத்திவாரக்கல் கோபத்துடன் கேட்டது.“ எமது இனத்தவர்களான உங்களைப்பார்க்க தற்பொழுது...எமக்கு சிரிப்பு மட்டுமல்ல, பரிதாபமும் தோன்றுகிறது.” என்றன கோபுரக்கலசக்கற்கள்.
“  போதும் உங்கள் அனுதாப வார்த்தைகள். ஆடு நனைவதைப்பார்த்து ஓநாய் அழுதகதைதான். நாம் வலிமையானவர்கள். எமது பலத்தில் தங்கித்தான் இந்தக்கோயிலே எழும்பவிருக்கிறது. ஆனால் நீங்களோ பலவீனமானவர்கள். எம்மீது எழுப்பப்படும் கோபுரத்தில் சின்னஞ்சிறு கலசம் தாங்கும் கல்லாக மேலேறி அமரப்போகிறீர்கள். உம்மையும் நாம்தான் தாங்கப்போகின்றோம். என்பதை மறவாதீர்கள்” அத்திவாரக்கற்கள் கோஷமெழுப்பின.
அதனைக்கேட்டு, கோபுரக்கலசக்கற்களுக்கு கோபம் பீறிட்டது.
“ கீழே...மண்ணில் வீழ்ந்தாலும், மண்ணுள் புதையுண்டுபோனாலும் உங்கள் அகம்பாவம் உங்களை விட்டு அகலமாட்டாது. மண்ணுக்குள்ளே நீங்கள் அனைவரும் அத்திவாரமாகப் புதைந்துபோவீர்கள்.  அதன் பின்பு கோயில் கட்டிடம் உங்களுக்கு மேலே எழுந்துவிடும். அப்பொழுது மக்களின் கண்களுக்கும் தென்படாமல் மறைந்துபோய்விடுவீர்கள். ஆனால்...என்றென்றும் மக்களின் கண்களுக்கு காட்சிதரும் கற்களாக கோபுரக்கலசத்தை தாங்கும் கற்களாக நிமிர்ந்து நிற்கப்போவது நாங்கள்தான்” – கலசக்கற்கள் பெருமிதம் பேசின.
அத்திவாரக்கற்களுக்கு இந்தப்பேச்சு மிகவும் அற்பத்தனமாகப்பட்டது.
ஆயினும், அற்பத்தனத்தை அம்பலப்படுத்தாதுவிடின்...அற்பத்தனமே அற்புதமாகிவிடும் அபாயம் தோன்றலாம் என்று சிந்தித்தன அத்திவாரக்கற்கள்.
அவற்றின் சிந்தனையை தவறாகப்புரிந்துகொண்டு “ என்ன...மௌனமாகிவிட்டீர்கள்...உங்கள் மீது சிமேந்து சாந்து பூசி உங்கள் வாய்களை அடைத்துவிட்டார்களா இந்தத்தொழிலாளர்கள்?” ஒரு கோபுரக்கலசக்கல் நக்கலாகக்கேட்டது.
“ எம்மினத்தில் தோன்றி...வௌ;வேறு இடங்களில் வாழத்தலைப்பட்டாலும்...நாம் ஓரினம் என்ற உன்னத குணம் வேண்டும். எம்மை அத்திவாரக்கற்கள்...கோபுரக்கலசக்கற்கள் என தரம் பிரித்தவர்கள் இந்த மனிதர்கள். அவர்களின் தேவைக்காக எம்மைத்தரம் பிரித்தார்கள். அந்தப்பிள்ளையாரும் எமது இனம்தான். அவர் கருங்கல். நாம் செங்கல். நாம் நிலத்தில் புதைக்கவும் கட்டிடம் எழுப்பவும் பயன்படுகின்றோம். அவர் உருவாகிய கல்  வணங்கப்பயன்படுகிறது. அவ்வளவுதான் வித்தியாசம்” தத்துவமழை பொழிந்துவிட்டதாக கருதியது ஒரு அத்திவாரக்கல்.
“  முட்டாள்தனமாகப்பேசாதே...உனது விதிப்பயன்...அத்திவாரத்துக்குள் முடங்கப்போகிறாய். அந்தக்கருங்கல்லின் பயன்...பிள்ளையார் உருவம். அதனால் இந்தக்கோயிலுக்குள் செல்கிறது. நாமோ கோபுரக்கலசத்தை தாங்கப்போகின்றமையினால் உயரத்தில் அமரப்போகின்றோம். சும்மா அலட்டிக்கொள்ளாதீர்கள். எதற்கும் பலன் வேண்டும். உங்கள் பலன் நிலத்துக்கு அடியில்தான்...” எனச்சொன்னது ஒரு கோபுரக்கலசக்கல்.
இரண்டுதரப்பிலும் வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தன.  அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது நிழல்தரும் அரசமரம்.
எனினும் தனது நிழலில் வீற்றிருக்கும் பிள்ளையார் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததுதான் அரசமரத்துக்கு ஆச்சரியம்.
அவரது அமைதியை குலைக்க விரும்பியது அரசமரம்.
“ என்ன பிள்ளையாரே...பேசாமல் இருக்கிறீர்கள்? அந்தக்கற்களின் விதாண்டாவாதங்கள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா?” அரசமரக்கிளை அசைந்து காற்றை படரவிட்டவாறு கேட்டது.
பிள்ளையார் அப்பொழுதும் எதுவும் பேசாமல் மௌனம் காத்தார்.
‘ஓ...அந்தக்கற்கள் சொன்னதுபோல் இவரும் ஒரு கல்தானே... யாரோ ஒரு சிற்பியினால் இன்று சிலையாகிவிட்டீர்...என்று இந்தக்கற்கள் கேட்டுவிடுமோ?’ என்ற தயக்கத்தில்தான் மௌனித்துப்போனாரோ என்று அரசமரம் நினைத்தது.
அத்திவாரக்கற்களுக்கும் கோபுரக்கலசக்கற்களுக்கும் இடையே உக்கிரமான வாக்குவாதம் தொடர்ந்தது. அவற்றை தனது கிளைகளை அசைத்து காற்றினால் வருடி சாந்தப்படுத்த விரும்பிய அரசமரம் அசைந்து சலசலத்தது.
இரண்டு தரப்புக்கற்களையும் மிருதுவாகத்தீண்டியது அந்தக்காற்று. பிள்ளையாரைப்போன்று தானும் மௌனித்து அமைதிகாக்காமல், வாயைத்திறந்தது அரசமரம்.
“ எனதருமைக்கற்களே...ஏன் உங்களுக்கிடையில் இப்படி ஒரு பேதம்? பேதமை? இந்த மனிதர்கள் கோயிலின் தேவை கருதி உங்களை இங்கே அழைத்துவந்தார்கள். இதுவரைகாலமும் எனது நிழலில் வாழ்ந்த பிள்ளையாருக்கு கோயில் அமைப்பதற்கு நீங்கள் அனைவருமே பயன்படப்போகிறீர்கள்... அதற்காக முதலில் பெருமைப்படுங்கள்...மகிழ்ச்சியடையுங்கள்.” என்றது அரசமரம்.
“ ஆமாம்...பெருமைதான். ஆனால் அந்தப்பெருமை அனைத்தும் எம்மையே சார்ந்துள்ளது” என்றன கோபுரக்கலசக்கற்கள்.
“ ஏன் அப்படி சிந்திக்கிறீர்கள்...?” எனக்கேட்டது அரசமரம்.
“ உண்மைதானே...நாம்தானே இந்த உலகின் கண்களுக்குத்தெரியப்போகின்றோம். ஆனால் இந்த அத்திவாரக்கற்கள் மக்களின் கண்களுக்குத் தெரியாமல் பூமிக்குள் புதையுண்டு போய்விடும்தானே...?” என்றன கோபுரக்கலசக்கற்கள்.
அரசமரம் சிலகணங்கள் மௌனம் அனுட்டித்துவிட்டு சென்னது: “ நான்  விருட்சமாக இங்கு எழுந்துநிற்கின்றேன். நிழல் பரப்புகின்றேன். காற்றைத்தருகின்றேன். ஆனால் என்னைத்தாங்கியவாறு இந்த நிலத்துக்கு அடியில் வேர்கள் இருக்கின்றன. மக்களின் பார்வைக்கு நான் தென்பட்டாலும் மக்களுடைய கண்களுக்குத்தெரியாமல் நிலத்துக்கடியில் மறைந்திருக்கும் எனது வேர்கள் இல்லையேல்... நானும் இல்லை....எனது நிழலும் இல்லை. அதுபோன்றதுதான் இந்த அத்திவாரக்கற்கள். இந்த உண்மையை இயற்கையின் அற்புதத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். கோபுரக்கலசக்கற்களே... ஒரு உண்மை உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். உங்களால் அந்தரத்தில் மேலே உயரத்தில் நிற்கமுடியாது. உங்களையும் கலசத்தையும் கோயிலையும் கோபுரத்தையும் முழுமையாகத் தாங்கிக்கொண்டு நிலத்துக்கு அடியில் மௌனமாக இருப்பவை அத்திவாரக்கற்கள். இந்த அத்திவாரம் இல்லையேல் கோயிலும் இல்லை, கோபுரமும் இல்லை. கலசமும் இல்லை. எதற்கும் அத்திவாரம் இல்லையேல் எதுவுமே இல்லை.”
அனைத்துக்கற்களும் அரசமரத்தின் குரலை அமைதியாகக்கேட்டன.
அரசமரம் சில கணங்களில் மீண்டும் வாய் திறந்தது.
“ வேரில் தங்கியிருப்பது மரம்...அத்திவாரத்தில் தங்கியிருப்பது கட்டிடம்”
அரசமரத்தின் இந்தத்தெளிவான பதிலைக்கேட்டு பிள்ளையார் தனது மௌனம் கலைத்தார்
“  அரசமரமே .. நீ...வெறும் மரம் அல்ல... ஞானம் நிரம்பிய மரம். உனது நிழலில் வாழ்ந்ததை பெருமையாக கருதுகின்றேன். நீ... வாழ்க..” என்றார் பிள்ளையார்.
                      ----0---

பிற்குறிப்பு:-
‘ஞானம்’ உருவகக் கதை முருகபூபதியின் பாட்டி சொன்ன கதைகள் நூலில் இடம்பெற்றது. இந்நூல் தமிழ் நாட்டில் நூலகசேவைகள் திணைக்களத்தினால் தமிழக ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்காக சிறுவர் இலக்கிய வரிசையில் பரிந்துரைக்கப்பட்டு 1500 பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டது. 
                        ---0---No comments: