சிட்னி முருகன் ஆலயச் சிறப்பும் 2013 மகோற்சவச் சிறப்பும் இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்ஆலயங்கள் தொன்றுதொட்டு நமது கலை, பண்பாடு, மற்றும் இறைவழிவாழ்விற்கு உரமூட்டி வருபவை.  அங்கு ஒலிக்கும் மணி ஓசை உயிரினங்களின் உயிரோடுகலந்து உணர்வூட்டுபவை.  ஓதப்படும்மந்திரங்கள் உள்ளுணர்வின் மாசுக்களை அகற்றி ஒலியாலேயே தூய்மைசேர்ப்பவை.  எந்தமொழித்துதியாயினும் பக்திரஸத்தில் முகிழ்த்தவை ஆயின் அவை இறை உணர்வும் இறைகாட்சியும்பெற உரமூட்டுபவையே.  மனத்தை ஒருவழிப்படுத்தவும், கீழ்ப்படிவு, நீதிவழிநிற்றல், இரக்கம், தன்னலமறுப்பு, பணிவு ஆகிய பலசிறந்த பண்பாடுகளை உண்டாக்கிவளர்க்கவும் இறுதியாக மோட்சத்துக்கு வழிகாட்டவும் திருக்கோயில் வழிபாட்டைத்தவிர வேறு  சிறந்தமார்க்கம் இல்லை.  “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றார் ஒளவையார்.  சாலவும் நன்று என்றால் மன அழுக்கை முற்றிலுமாகத் துடைக்க உதவும் என்றேபொருள்.  முறையான ஆலயதரிசனம் தெளிவான ஞானத்தை நிச்சயம் ஊட்டும்.

ஆகமவிதிப்படி அமைந்த ஆலயங்களில் விக்கிரகவழிபாடு மிகமுக்கியத்துவம் பெறுகின்றது.  விக்ரஹம் என்றால் உலகத்தின் சக்திகள்யாவும் உறையும் இடம்;என்பது பொருள். 
“விஸேஷேண க்ருஹ்யதே ஸக்தி ஸமூஹ:
அஸ்மின் இதி விக்ரஹ:”
என்று ஆகமங்கள் கூறுகின்றன.  அதாவது பல்வேறு மந்திரதந்திர வழிபாட்டுமுறைகளினால் ஆராதிக்கப்டும்போது விசேசமான சிறப்பான இறைத்தன்மையை ஈர்த்துத்தன்னுள் தேக்கிவைத்துககொண்டு தன்னைவணங்குவோருக்கு அருள்புரியும் வல்லமை உள்ளபொருள் விக்ரஹம் எனப்படும்.

இறைவனை அடையும் வழிகள் ஒன்பது என்பர்.
1.  ச்ரவணம் - கேட்டல்.
2.  கீர்த்தனம் - பாடுதல் - நாத உபாசனை.
3.  ஸ்மரணம் - நினைத்தல் - நின்றும், இருந்தும், கிடந்தும் இறைவனையே நினைப்பது.
4.  பாதசேவனம் - சேவித்தல்
5.  அர்ச்சனம் - பூஜித்தல்
6.  வந்தனம் - நமஸ்கரித்தல்
7.  தாஸ்யம் - தொண்டு புரிதல்
8.  ஸகியம் - ஸ்நேகபாவம்
9.  ஆத்மநிவேதனம் - தன்னையே அர்ப்பணித்தல்

இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றை உறுதியாகப்பற்றுவதே இறைவனை அடைவதற்குப் போதுமானது.  இவற்றுள் கடைசி இரண்டையும்தவிர மற்றைய ஏழு முறைகளிலும் வழிபட ஆலயங்களே வகைசெய்கின்றன.  இவற்றையே சைவசித்தாந்தம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வழிகளாக வகுத்துக்கூறுகின்றது.

நீறில்லா நெற்றி பாழ், சிவாலயம் இல்லா ஊர் பாழ்;,  சிவ பூசை இல்லா ஜன்மம் பாழ,;;   சிவனை அடையா வித்தை பாழ், என்று ஆகமங்கள் கூறுகின்றன.  தூய இறைநெறி வாழ்விற்கு எம்மைத்தூண்டுபவை ஆன்மீகப்பனுவல்கள்.  இறைவனோடு எம்மை இணைக்க வகைசெய்வன ஆலயங்கள்.  இறைவன் நம்முள் உறைகின்றான் என்ற உணர்வு உறுதிபெற உறுதிபெற நமது சுயத்தன்மையை மறைக்கும் அஞ்ஞானம் மறைந்துவிடும்.  இதற்கு ஒரே வழி ஆலயவழிபாடுதான்.

இந்தவகையில் சிட்னிமுருகன்ஆலயம் சிட்னியில்வாழும் இந்துசமயத்தவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.  இவ் ஆலயம் முற்றுமுழுதாக சைவ ஆகமவிதிகளுக்கு அமையக்கட்டப்பட்டதோர் ஆலயமாகும்.  இவ் ஆலயத் திருப்பணிகளைச்செய்தவர் இந்தியாவைச்சேர்ந்த மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியிற் பட்டம்பெற்ற, இ;ந்தியாவிலும் பிற நாடுகளிலும் பல ஆலயத்திருப்பணிகளைச் செய்த, சிற்ப கட்டடக் கலைஞர் ஸ்தபதி திரு. ச. நாகராஜன் அவர்கள். இவர் சிட்னிமுருகன் ஆலயச்சிறப்புப்பற்றிக் கூறும்போது ஆதி மூலமாகப் பாலமுருகனும், வலப்புறத்திற் சிவனும், இடப்புறத்தில் அம்மனும், மூலவருக்கு வலதுமூலையில் (நைரதமூலை) விநாயகரும், இடதுமூலையில் (வாயு மூலை) வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியரும் ஐந்து பிரதான, ஆலயங்களாக அமைக்கப்பட்டுள்ளன.  சண்டிகேஸ்வரர், நவக்கிரகம், பைரவர் சந்நிதிகள் உப ஆலயங்களாக பரிவார ஆலயங்களாக அமைக்கப்பட்டுள்ளன.  அத்துடன் இங்குமுக்கியமாக ஆறுபடைவீடுகளும், இலங்கையில் உள்ள முருகன்திருத்தலங்களுள் நல்லூர், கதிர்காமம், செல்லச்சந்நிதி, வெருக்கலம்பதி ஆகிய ஆலயங்களையும்  விக்ரகங்களாகக் கருங்கல்லில்வடித்து ஒவ்வொருதூணிலும் நிறுவியிருப்பது எம்மை மெய்சிலிர்க்கவைக்கிறது.  இந்த ஆறுபடைத்திருத்தலங்களையும் இலங்கையில் பிரசித்திபெற்ற மற்றைய நான்கு திருத்தலங்களையும் ஒரு தலத்திலேயே தரிசிக்கும் வாய்ப்புக்கிடைத்தற்கு அரியது.  அந்த அரும்பெரும் பாக்கியத்தை சிட்னிமுருகன் ஆலயத்திற்பெறமுடிவது சிட்னிவாழ் இந்துக்கள்செய்த பெரும்புண்ணியம். 

மேலும் எந்த ஆலயத்திலும் காணமுடியாத முருகனின் சோமஸ்கந்தவடிவம் இந்த ஆலயத்தின் மூலதாரமாக அமைந்தமை இந்த ஆலயத்திற்கு ஒரு தனிச்சிறப்பாகும்.  சிவன் வலதுபுறமும், அம்மன் இடதுபுறமும், நடுவில் முருகன் கையில்மலருடன் நடனமாடும் பாவனையில் அமைந்ததே சோமஸ்கந்தவடிவமாகும்.  இந்தவடிவத்தைக் கோயில்கள் நிறைந்த இந்தியாவிற்காண்பதே அரிது.  இங்;கே சிவன், அம்மன் சந்நிதிகள் ஒருதள விமானத்துடனும் மூலவராக இருக்கும் முருகன் இருதள விமானத்துடனும் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றார்.

ஆகமவிதிப்படி கட்டப்பட்ட ஆலயங்களில் அர்ச்சகரின் இடமும்தகுதியும் மிகமேலானவை என்று சாஸ்திரங்கள்கூறுகின்றன.  இதற்கு அமையச்சிட்னிமுருகன் ஆலய அர்ச்சகர்களாகிய சிவஸ்ரீ தியாகராஜசரவணக்குருக்கள், சிவஸ்ரீ குகதாஸமதிவதனக்குருக்கள், சிவஸ்ரீ பாலசுப்ரமணியஇந்திரக்குருக்கள், சிவஸ்ரீ குகசாமிலவக்குருக்கள் ஆகியநால்வரும் ஆகம சாஸ்திரங்கள் கூறும்
“காரஸ்த் வாகமாப்யாஸி காரஸர்வ சாஸ்திரவித்ட
 காரோமந்த்ர பாடீஸ் யாதர்ச்சகஸ்து வித்யதேடட

என்ற இலக்கணத்திற்கு அமைய ஆகமசாஸ்திரங்களையும், வேதசாஸ்திரங்களையும், மந்திரங்களையும் கற்றுணர்ந்துள்ளார்கள்.  சிவஸ்ரீ தியாகராஜசரவணக்குருக்கள் திருவண்ணாமலை தேவஸ்தானமரபில் வந்தவர்.  பிள்ளையார்பட்டிகுருகுலத்தில் வேத, ஆகம சாஸ்திரங்களையும் மந்திரங்களையும் முறைப்படிகற்றவர்.  சிவஸ்ரீ குகதாஸமதிவதனக் குருக்கள், சிவஸ்ரீ பாலசுப்பிரமணிய இந்திரககுருக்கள், சிவஸ்ரீ குகசாமிலவக்குருக்கள் ஆகிய மூவரும் இணுவில் “காயத்திரிபீடம்” (தர்மஸாஸ்தா) குருகுலத்தில் சிவஸ்ரீ தா. மகாதேவக் குருக்களிடம் வேத, ஆகம சாஸ்திரங்களையும் மந்திரங்களையும் முறைப்படி கற்றுள்ளனர்.  இவர்களின் தந்தையர்களும் பேரர்மார்களும் வேத, ஆகம சாஸ்திர விற்பன்னர்கள்.  ஈழத்தில் மிகப்பெரிய ஆலயங்களில் நைமித்தியகிரியைகளைச்செய்த அனுபவம்மிக்கவர்கள்.  ஆகவே சிட்னிமுருகன் ஆலய அர்ச்சகர்கள் நால்வரும் சிறந்த அந்தணமரபில்வந்த திறமைமிக்க அர்ச்சகர்களாகக் காணப்படுகின்றனர்.

இத்தகைய சிறப்புப்பொருந்திய சிட்னிமுருகன் ஆலயத்தில் நந்தனவருடம் உத்தராயண பங்குனித்திங்கள் ஐந்தாம்நாள் 18. 03. 2013 திங்கட்கிழமை பூர்வபக்ஷ சப்தமியும் ரோகினி நடசத்திரமும் சித்தயோகமும்கூடிய சுபதினத்தில் பகல் 12 மணிக்கு வேதகோசங்கள் விண்ணைமுட்ட, பண்கள் ஓதப்பட்டு, மங்களவாத்திய இசைகள்முழங்க, மணிகளின்நாதம் ஒலிக்க, முப்பத்துமுக்கோடிதேவர்களும் ஆலயச்சூழலில்வந்து மறைந்திருந்து ஆசீர்வதிக்க சைவ ஆகமவிதியிலிருந்து சிறிதும்வழுவாது சிவஸ்ரீ பாலசுப்பிரமணிய இந்திரக்குருக்கள் பிரதமகுருக்களாக இருந்து கொடியேற்றிப்பிரம்மோற்சவத்தை ஆரம்பித்துவைத்தார்.  17.03.2013 தொடக்கம் 29.03.2013 வரை உள்ளபன்னிரண்டுநாட்களும் சிட்னிமுருகன் ஆலயம் விழாக் கோலம்பூண்டு பக்தர்கள்புடைசூழ பூரணபொலிவுடன் இந்திரலோகம்போன்று காட்சி அளித்தது.


சிட்னிமுருகன் ஆலயமகோற்சவம் ஆகமங்களிற் சொல்லப்பட்ட விதிமுறைகளின்படி விக்னேஸ்வரபூசை (கணபதிஹோமம்), அனுக்ஞை கிராமசாந்தி, பிரவேசபலி, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், ரக்ஷபந்தனம், பிரதிஷ்டை, ஸ்பரிசாகுதி, பேரிதாடனம், முதலிய கிரியைகளை முறைப்படிசெய்து கொடியேற்றியபின் மகா ஆசீர்வாதம் இடம்பெற்று சுவாமி வீதிவலம்வந்து யாகதரிசனமும் பெற்றோம்.  தினம்தோறும் இருவேளைகளிலும் யாக பூசையும் கொடித்தம்பத்திற்கு அபிஷேகம், பூசை, பலியும், திக்குகளின் பலியும் நிகழ்ந்து உற்சவமூர்த்திக்கு அலங்காரமும், விசேட தீபாராதனையும், அதைத்தொடர்ந்து  கொடி, குடை, ஆலவட்டம் முதலிய விருதுகளுடனும், வேதகோசம், திருமுறை ஓதுதல், மங்களவாத்தியம் இசைத்தல், முதலியவற்றுடன் திருஉலாவும் நடைபெற்றது.  ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொருவகை அலங்காரமும் இடம்பெற்று முருகப்பெருமான் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.  சப்பறத்திருவிழா, தேர்த்திருவிழா, தீர்த்தத்திருவிழா, கொடியிறக்கம், சண்டேஸ்வரர் உற்சவம், ஆசாரியார் உற்சவம், திருக்கல்யாணம், வைரவர் பொங்கல், பிராயச்சித்த அபிஷேகம் ஆகியனவும் வெகுவிமரிசையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றன.

எங்கும் வியாபித்து உள்ள இறைவன் தயிரில் வெண்ணெய்போல் ஆலயத்தில் எழுந்தருளி உள்ளார்.  அவரை உற்சவகாலங்களில் கொடிமரத்திலும், உற்சவமூர்த்திகளிலும், கும்பத்திலும் எழுந்தருளச்செய்வதற்கு யாகங்கள், பூசைகள் செய்வர்.  ஸ்தம்பம், விம்பம், கும்பம் ஆகியமூன்று இடங்களில் இறைவனை எழுந்தருளச்செய்து வழிபாடுசெய்தல் முறைமையாகும்.  இதனாற்தான் மகோற்சவத்தில் கொடிமரப்பூசை, வசந்தமண்டபப்பூசை, யாகசாலைப்பூசை என்பன மிகமுக்கியமாக அமைகின்றன.  மகோற்சவ காலங்களில் கொடிமரம் சிவமாக நிற்பதால் அதற்குப் பகலிலும் இரவிலும் விசேடமாகப் பூசைகள் செய்கின்றனர்.  அப்பூசையைப் பார்ப்பதால் நாம் நம்மை வெகுவாகச் சுத்திகரித்துக் கொள்கிறோம்.

கொடிமரத்தை துவஜஸ்Pதம்பம் என்றும், வீணாதண்டம் என்றும், மேருதண்டம் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன.  கொடிமரம் மூலஸ்தானத்திற்கும் தேவவிம்பத்திற்கும் நேராக நிறுத்தப்பெற்றுள்ளது.  கொடிமரத்தின் தத்துவம் மிகப்பெரிது.  அதில் உள்ள முப்பத்து மூன்றுகணுக்கள் நமது சரீரத்தின் முள்ளந்தண்டின் முப்பத்துமூன்று என்புக்கோவைகளைக் குறிப்பன.  கொடிமரம் மூன்று பெரும் பிரிவுகளை உடையது. அவையாவன பிரம்மபாகம், விஷ்ணுபாகம், உருத்திரபாகம் என்பனவாகும்.  கீழே உள்ள பிரம்மபாகம் சதுரவடிவாகவும் நடுவில் உள்ள விஷ்ணுபாகம் எண்கோணவடிவாகவும் மேலே உள்ள உருத்திரபாகம் நீளமாய் விருத்தமாகவும் அமைந்துள்ளது.

கருவறையில் உள்ள மூலலிங்கத்திற்கு எதிரே நேராக நிமிர்ந்துநிற்பது கொடிமரம்.  இதைப் போன்று உடலையும் நேராக இருத்தி இடை, பிங்கலை என்னும் இரு நாடிகள்  வழியே பிராணவாயுவை நடு நாடியில் இருத்தித் தியானம் செய்யும்பொழுது பிராணவாயு அசைவின்றி நிற்கும்.  இது யோகநூல்களில் கும்பகம் எனப்பெயர்பெறும்.  இவ்வாறு நிறுத்தும்பொழுது மனம், ஐம்பொறிகள், அவற்றின் விடயங்கள் படிப்படியாக ஒடுங்கும்.  அவை ஒடுங்க மனம் ஒருவழிப்பட்டு இறைதரிசனம் ஏற்படும்.  இவ்வாறு கொடிமரதத்துவத்தை நூல்கள் விளக்கி உள்ளன.

திருக்கோயில்களில் கொடிமரம், பலிபீடம், நந்தி, என்னும் மூன்றும் முறையே மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம் ஆகிய ஆதாரங்களின் இருப்பிடங்களைக்குறிப்பனவாகும்.  கொடிமரத்தில் இருந்து உள்ளே கர்பக்கிருகம்வரையுள்ள இடப்பரப்பு புனிதத்துள் புனிதமானதாகும்.  அந்த இடத்திலே நாம் கண்டபடி உலாவுதலாகாது.  குறுக்கே போகலாகாது. இறைவனை வீழ்ந்து வணங்குதலாகாது.

கொடிமரம் - பதியாகிய இறைவன்
கொடிச்சீலை - பசுவாகிய ஆன்மா
கொடிமரத்திற் சுற்றப்படும் தர்ப்பக்கயிறு - பாசம் (ஆணவம், கன்மம், மாயை)
கொடிச்சீலை ஏற்றப்பயன்படுத்தப்படும் கயிறு - திருவருட் சக்தி

ஆன்மா மலநீக்கம்பெற்று பரமாத்மாவாகிய இறைவனுடன் இரண்டறக்கலக்கும் தத்துவத்தையே கொடியேற்றம் உணர்த்துகின்றது என்பது சைவசித்தாந்தக்கருத்து.

கொடியேற்றநாள்முதல் பத்துநாள்வரைநிகமும் திருவிழாக்களும் தனித்தனி தத்துவங்களை உணர்த்துகின்றன.  முதலாம்நாள்விழா தூலஉடம்பை நீக்குவதற்காகவும்;  இரண்டாம்நாள் விழா தத்துவமயமான உடம்பைநீக்குவதற்காகவும.;  மூன்றாம்நாள்விழா - மூவினை, முக்குற்றம், முக்குணம், மும்மணம், முப்பிறப்பு, முப்பற்று முதலியன நீங்குவதற்கும்;  நான்காம்நாள்விழா - நாற்கரணம், நால்வகைத் தோற்றம் நீங்குவதற்காகவும்;  ஐந்தாம்நாள் விழா- ஐம்பொறிகள், ஐந்தவத்தை, ஐந்துமலங்கள் நீங்குவதற்கும்; ஆறாம்நாள்விழா - உட்பகை ஆறும், கலையாதி ஆறும், கன்மமலகுணம் ஆறும், பதமுத்தி ஆறும் நீங்குவதற்கும்;  ஏழாம்நாள்விழா - ஏழ்வகைப்பிறப்பும், ஏழுவகைத் தத்துவங்களுமாகிய மலகுணம் ஏழும்நீங்குவதற்கும்;  எட்டாம்நாள்விழா – எண்குணங்கள் விளங்குவதற்கும்;  ஒன்பதாம்நாள்விழா - மூவடிவம், முக்கிருத்தியம், மூவிடத்துறைதல் பொருட்டும்;  பத்தாம்நாள் விழா சிந்தையும் மொழியும் புலன்வழிச்செல்லாது அந்தமில் இன்பத்து அழிவில் வீடான பரமானந்தக்கடலில் மூழ்குதற்பொருட்டும் செய்யப்படுவன.

இதுதவிர அங்குரார்ப்பணம், கொடி ஏற்றம், திருக்கல்யாணம், ரகஷ்hபந்தனம், ஆகியவை படைத்தலையும்;  வாகனங்களில் அலங்காரமாக உற்சவமூர்த்தி உலாவருதல் , ஹோமம், பலி என்பன காத்தலையும்;  சூர்ணோற்சவம், வேட்டைத் திருவிழா, தேர்த்திருவிழா  அழித்தலையும்;  தீர்த்தத்திருவிழா, ஊடற்திருவிழா அருளலையும்;  கொடி இறக்கம், மௌன உற்சவம் மறைத்தலையும் குறிக்கும் எனக்கிரியை நூல்கள் கூறுகின்றன.

2013 இந்தவருடம் சிட்னிமுருகன் ஆலயமகோற்சவத்தில் முன்னர் எப்போதும் நடைபெறாத மாம்பழத்திருவிழாவும், வேட்டைத்திருவிழாவும் வெகுவிமரிசையாக நடைபெற்றன.  ஆறாம் நாள் மாம்பழத்திருவிழா அன்று விநாயகர், முருகன், சிவன் பார்வதி ஆகிய உற்சவ மூர்த்திகள் மிக்க அலங்காரத்துடன் வெளிவீதிக்கு வந்தன.  சிவஸ்ரீ இந்திரக்குருக்கள் தேவலோகக்காட்சியை விபரித்தார்.  கைலாயத்தில் நாரதர் ஒரு மாங்கனியைக்கொண்டுபோய் சிவனிடம்கொடுத்தார்.  அந்த மாம்பழத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விநாயகரும் முருகனும்  தமக்குள் சண்டையிட்டுக்கொள்கின்றனர்.  அதற்கு உரியவர் யார் என்பதைத்தீர்;மானிப்பதற்கு சிவன் ஒரு பரீட்சைவைக்கின்றார்.  யார் முதலில் இவ் உலகைச் சுற்றி வருகின்றார்களோ அவர்களுக்கே இக்கனி சொந்தம் என்கிறார்.  முருகன் மயில்மீது ஏறி இதோ நான் ஒரு நொடியில் உலகைச்சுற்றி வருகின்றேன் எனப்புறப்பட்டுவிட்டார்.  பாவம் விநாயகர் தொந்தி வயிற்றுடனும் எலிவாகனத்துடனும் என்ன செய்வார்?  சிவனைப்பார்த்துக்கேட்கிறார் விநாயகர்.  அப்பா உலகம் என்றால் என்ன?  குழந்தைகளுக்கு தாயும் தந்தையும் தான் உலகம் என்று சிவன் பதில் கூறுகின்றார்.  விநாயகர் தனது தாய் தந்தையராகிய பார்வதி பரமேஸ்வரரை மும்முறை வலம்வந்து மாங்கனியைப்பெற்றுவிடுகின்றார்.  கதைகூறிமுடிந்ததும் முருகப் பெருமானைத்தூக்கிக்கொண்டு வீதி உலாவந்தனர் ஒருசாரார்.  வுpநாயகரைத்தூக்கிக்கொண்டு மிக மிக மெதுவாக பார்வதி பரமேஸ்வரரைச் சுற்றிவந்தனர் இன்னொருசாரார்.  மிக அற்புதமான காட்சி.  கைலாயத்திலேயே சிறிதுநேரம் சஞ்சரித்ததுபோல ஓர் இனியஉணர்வு அது.  மாம்பழத்தை விநாயகர்பெற்றுக்கொண்டதை  அறிந்தமுருகன் பெரியவர்கள் எல்லோரும் சேர்;ந்து நடத்தியநாடகம் மிக நன்றாக இருக்கின்றது என்றுசொல்லி மிக்ககோபத்துடன் எல்லாவற்றையும் துறந்து ஆண்டிக்கோலத்துடன் பழனிமலைக்கு  செல்கின்றார்.  அந்தக் காட்சியும் இடம் பெற்றது.

காளிதாஸர் தன் ரகுவம்ஸமகாகாவியத்தில் “வாக்கும் அதன் அர்த்தமும் தாய்தந்தையரான பார்வதிபரமேஸ்வரரைப் போன்றது” என்று கூறுகின்றார்.  பேச்சு எப்போதும் சத்தியத்தை உணர்த்துவதாக இருக்கவேண்டும்.  இதற்கு வழிகாட்டுபவர்கள் பெற்றோர்களே.  தாயிற் சிறந்த கோயிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்துவதாக அமைந்தது இந்த மாம்பழத்திருவிழா.

ஏழாம்நாள் நடைபெற்ற வேட்டைத்திருவிழாவில் ஒரு காடும் அங்குள்ள மிருகங்களும் காட்டப்பட்டன.  சிவபக்தர்கள் வேடுவராகவும் மிருகங்களாகவும் வேடம்தாங்கி வந்தனர்.  மனிதருள் உறைந்திருக்கும் விலங்குத்தன்மையும் குணங்களும் உலகில் உள்ள தீய சக்திகளும், தீய எண்ணங்களும் விலங்குகளுக்கு ஒப்பிடப்பட்டு அவை வேட்டையாடப்பட்டன. அதாவது வீடுபேறு என்பது எங்கோ உள்ள ஓர் வெற்றிடமல்ல.  அது மனத்தின் உன்னத நிலையில் செருக்கொழிந்த தூய்மையில், ஜீவன் அனுபவிக்கும் புலன் கடந்த ஆனந்த நிலை.  இந்தத்தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது வேட்டைத்திருவிழா.
சிட்னிமுருகன் ஆலய மகோற்சவவரலாற்றில் தீர்த்தோற்சவம் ஆகமவிதிகளுக்கு அமையப் பூரணத்துவம்பெற்றது இம்முறைதான்.  பொற்சுண்ணம் இடித்துச் சூர்ணிகை சாத்தப்பட்டபின் வசந்தமண்டபப்பூசை இடம்பெற்றது.  இதன்பின் உற்சவமூர்த்தி எழுந்து வலமாகத்திரும்பி வந்து யாகத்தைப்பார்த்துநிற்க பூர்ணாகுதி, லாஜபுஷ்பம் செய்யப்பட்டு யாகரக்ஷை உற்சவ மூர்த்திக்குச்சாத்தப்பட்டது.  இதன்பின் தீபாராதனை, வேதம் ஓதுதல், திருமுறை ஓதுதல், இடம்பெற்றபின் சுவாமி மங்களவாத்திய கோசத்துடன் தீர்த்தக்கரையை அடைந்து தீர்த்தம் ஆடினார்.  தீர்த்தம் ஆடியபின் சுவாமி வெளிவீதி வலம்வந்து பின் உள்வீதி வலம்வந்து மீண்டும் யாகசாலைவாசலுக்கு வந்தார்.  அங்கு மீண்டும் பூர்ணாகுதி, தீபாராதனை, வேதம் ஓதுதல் முதலியவற்றை முறைப்படிசெய்து பலி, தட்சணை என்பன கொடுக்கப்பட்டது.  இதன் பின் உற்சவமூர்த்தியை மூலவருக்குமுன் கொண்டுவந்து நிறுத்தித் தம்பப்பிள்ளையாருக்கு ஆரத்தி காட்டி பஞ்சாரத்தியுடன் கும்பம் மூலஸ்தானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுக் கும்ப அபிஷேகம் இனிதே நிறைவடைந்தது.


சிவஸ்ரீ இந்திரக்குருக்கள், சிவஸ்ரீ லவக்குருக்கள், சிவஸ்ரீ மதிவதனக்குருக்கள், சிவஸ்ரீ சரவணக் குருக்கள்  ஆகிய ஆலய அர்ச்சகர்கள் நால்வரும் யாருடைய கட்டளைக்காகவும் காத்திருக்காது மிகச்சுதந்திரமாக தத்தமக்குரிய கடமைகளை மிக்க ஒழுங்குடன் வகுத்துக் கொண்டு நிதானமாகவும் நிறைந்த அமைதியுடனும் மனம் ஒன்றிய பக்தியுடனும் செயற்பட்டமையே இம்மகோற்சவ வெற்றிக்குக் காரணமாகும்.  இவர்களுக்கு மிக்க அனுசரணையாகப் பாலுஐயா சிவஸ்ரீ  ஞானசேகரக்குருக்கள், சிவஸ்ரீ மகெஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ சுப்பிரமணியக்குருக்கள், சிவஸ்ரீ ரஞ்சித்குருக்கள், ஆகியோர் செயற்பட்டு உள்ளனர்.  பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றிச்சுதந்திரமாக வழிபடவும், அர்ச்சனை செய்யவும், தமது விருப்பப்படி அந்தணர்களுக்குத் தானம், தட்சணை போன்றவற்றை வழங்கி ஆசிபெறக்கூடிய  ஆரோக்கியமானசூழல் காணப்பட்டது.  மாலைகட்டுவோர், அன்னதானம்சமைப்போர், பரிமாறுவோர், சுவாமியை அலங்காரம்செய்வோர், சுவாமி உலாவரும் வாகனம், தண்டிகை, ரதம் ஆகியவற்றைத் தயார்செய்வோர், கோலம்போடுவோர், தண்ணீர்பந்தல் வைப்போர், வாகனத்தரிப்பிட ஒழுங்குகளை கவனிப்போர், ஆலயத்தின் உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்வோர், முதல் உதவிகளைச்செய்வோர், ஒலி, ஒளி அமைப்புகளைக்கவனிப்போர் அனைவரும் மகோற்சவம் சிறக்கத்தங்கள்பூரண ஒத்துழைப்பை முடிந்தவரை வழங்கி இருந்தனர்.

இவர்கள் எல்லோருடைய செயற்திறன்களையும், உழைப்பையும், கருத்துக்களையும் உணர்வுகளையும் மதித்து ஒருங்கிணைத்து செயற்பட வைத்த பெருமை சிட்னிமுருகன் ஆலய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் உரியது.  அவர்களுக்கு சிட்னிவாழ் இந்துக்கள் அனைவரும் நன்றிகூறக்கடமைப்பட்டுள்ளனர்.

அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்                  --திருக்குறள்

பொருள்:-  பொறாமை, புலன்கள் வழிச் செல்லும் பேராசை, இவை தடைப்படும்போது வரும் கோபம், கோபத்திற் பிறக்கும் தீய சொல், இந் நான்கு குற்றங்களையும் விலக்கி ஒழுகுபவனே அறவழிப்பட்ட மனிதன்.
     
அன்பே சிவம்
   
இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்
No comments: