தமிழ் சினிமா

MailPrint
முகமூடி

இதுவரை ஹாலிவுட் சூப்பர் கதாநாயகர்களை பார்த்து வந்த தமிழக மக்களுக்கு, தமிழக சூப்பர் கதாநாயகனை அறிமுகப்படுத்தும் விதத்தில் மிஷ்கின் இயக்கியிருக்கும் படம் முகமூடி.
இந்தியாவில் பல மாநிலங்களில் பெரிய பெரிய பணக்கார வீடுகளில் கொள்ளையடிக்கும் முகமூடி கும்பல் ஒன்று சென்னையிலும் தங்களது கைவரிசையை காட்டுகிறார்கள்.
இந்த நிலையில் குங்பூ கற்று வரும் இளைஞன் லீ, தனது குருவுக்கு உதவி செய்வதற்காக குங்பூ பயிற்சிக்கு ஆட்களை தேடி அலைகிறான். மீனவர்களிடம் சென்று குங்பூ பயிற்சி கற்றுக் கொள்ள வருமாறு அழைக்கிறான்.
ஆனால் அவர்கள் தங்களுக்கு குங்பூ பயிற்சி தேவை இல்லை. எங்களுடைய ஆயுதமே எங்களுக்கு பாதுகாப்பு என்று கூறுகிறார்கள். அதற்கு லீ அந்த ஆயுதத்தால் என்னிடம் சண்டை போட்டு நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுக்கு பயிற்சி தேவை இல்லை. நான் வெற்றி பெற்றால் கட்டணம் செலுத்தி நீங்கள் பயிற்சி பெறவேண்டும் என்று அவர்களிடம் கூறுகிறான்.
இந்த சவாலை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் அவனுடன் மோதுகிறார்கள். இறுதியில் தோல்வியடைந்து தப்பி செல்லும் ஒருவனை லீ விரட்டிச் செல்கிறான். அப்போது அங்கு வரும் உதவி கமிஷனரின் மகள் சக்தி, லீயின் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேயை அடித்து அவனை பொலிசில் பிடித்துக் கொடுக்கிறாள்.
பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும் லீ, தன்னை பிடித்துக் கொடுத்த சக்தியை பழிவாங்குவதற்காக அவளது வீட்டுக்குச் செல்கிறான். அவளைப் பார்த்த பிறகு மனம் மாறி அவள் மீது காதல் வயப்படுகிறான். ஒருநாள் சக்தியை பார்ப்பதற்காக இரவில் முகமூடி அணிந்து அவளுடைய வீட்டுக்குச் செல்கிறான்.
திரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக திருடன் ஒருவனை பொலிசாரிடம் பிடித்துக் கொடுக்கிறான். இதனால் முகமூடி மனிதன் மீது மக்களுக்கு ஒரு தனி மரியாதை வருகிறது.
மற்றொரு நாள் முகமூடி அணியாமல் சக்தியின் வீட்டுக்குச் தனது காதலை சொல்ல லீ செல்கிறான். அப்போது கமிஷனரை கொலை செய்ய வரும் ஒருவன் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விடுகிறான்.
அவர் மீது குண்டு பாய்கிறது. இதை பார்த்துவிடும் லீ அவனை பிடிக்க முயற்சி செய்கிறான். ஆனால் துப்பாக்கியை லீயின் கையில் விட்டுவிட்டு கொலைகாரன் தப்பிவிடுகிறான்.
சத்தம் கேட்டு அங்கு வரும் பொலிசார் லீயின் கையில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு இவன்தான் கமிஷனரை சுட்டான் என்று முடிவு செய்கிறார்கள். லீயை பிடிக்க பொலிசார் வரும்போது தப்பித்து ஓடி தலைமறைவாகி விடுகிறான்.
பின்னர் தன் மீது விழுந்த பழியை போக்குவதற்காகவும், கொள்ளைக் கும்பலை பிடிப்பதற்காகவும், தன் காதலை காதலிக்கு உணர்த்துவதற்காகவும் லீ என்ன செய்கிறான் என்பதே மீதிக்கதை.
படத்தின் ஆரம்பத்திலே நம்மை சீட் நுணியில் அமரவைக்கும் மிஷ்கின், ஒவ்வொரு காட்சியையும் உற்றுநொக்க வைத்திருக்கிறார்.
முதலில் கொள்ளை கும்பலை அறிமுகப்படுத்தி விட்டு அவர்கள் யார், எப்படிபட்டவர்கள் என்பதை பொலிஸின் மூலம் தெரியப்படுத்தி விட்டு அடுத்ததாக கதாநாயகன் யார் அவர் எப்படி பட்டவர் என்பதை காட்டும் திரைக்கதை, ஜீவா சூப்பர் கதாநாயகன் ஆவது என பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் முதல் பாதியை பயணிக்க வைக்கிறது.
பெரும் ஆவலோடு இடைவேளை முடிந்து அதே சுவாரஸ்யத்தோடு சீட் நுனியில் அமந்த ரசிகர்களை படத்தின் இரண்டாம் பாதி சற்று சலிப்படைய செய்கிறது.
கொள்ளையர்கள் யார் என்பதை ஜீவாவும், ஜீவா யார் என்பதை வில்லனும் சுலபமாக தெரிந்து கொள்வதால் முதல் பாதியில் பரபரப்பாக நகர்ந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஜீவா இந்த படத்திற்காக ரொம்பவே உழைத்திருக்கிறார். குங்பூ மாணவன் என்பதை ஜீவா தனது அறிமுக காட்சியிலேயே நிரூபித்து விடுகிறார்.
வெட்டியாக ஊர் சுற்றும் இளைஞனாக இருந்து சூப்பர் கதாநாயகனாக மாறும் ஜீவா இரண்டு கதாபாத்திரத்திற்கும் கஞ்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
புதுமுகம் பூஜா ஹெக்டேவுக்கு அழகான தோற்றத்தில் பளிச்சிடுகிறார். நாசர் எப்போதும் போல தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்.
நரேனின் தோற்றம் வில்லன் கதாபாத்திரத்திற்கு கஞ்சிதமாக பொருந்தியிருக்கிறது. முதன்முதலாக வில்லன் வேடம் ஏற்றிருக்கும் நரேன் அதற்கு பொருத்தமானவர் என்பதை காட்சிக்கு காட்சி மெய்ப்பித்திருக்கிறார். அழகான வில்லனாக வலம் வரும் அவர் அங்குச்சாமி என்ற கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளார்.
கே இசையில் "வாயை மூடி சும்மா இருடா..." பாடல் இந்த ஆண்டு அதிகப் பேர் முனுமுனுத்த பாடலாக இருக்கும். பார் ஆன்தமும் பட்டையை கிளப்ப போகும் பாடலாக அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சத்யாவின் உழைப்பு அறுமை. ஒவ்வொரு காட்சியும் மிரட்டும் வகையில் படமாக்கியிருக்கிறார்.
பட்ஜெட் ரீதியாக படத்தில் பிரமாண்டம் இல்லை என்றாலும், காட்சி ரீதியாக படத்தை பிரமாண்டமாக மிஷ்கின் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமையும் மிஸ் பண்ணாம பார்க்கனும் என்று ரசிகர்கள் எண்ணும் அளவுக்கு காட்சிகளை நகர்த்தியிருக்கும் மிஷ்கின், தனது முந்தையப் படங்களைப் போலவே இதிலும் கால்களை காட்டி சில ஷாட்களை வைத்திருந்தாலும், காட்சிகளுக்கு சற்று வேகத்தை கொடுத்திருக்கிறார்.
வில்லன் யார், அவனுடைய பின்புலம் என்ன என்பதை கதாநாயகன் கண்டுபிடிப்பதற்கு முன்பே பொலிஸ் ரொம்ப சுலபமாக கண்டுபிடித்து விடுகிறது.
அதற்குப் பிறகு வில்லனின் செயல்பாடுகள் பயங்கராமாக இருக்கும் என்றால், அங்கேயும் இயக்குநர் சற்று தடுமாறியிருப்பதால் படமும் சற்று தடுமாறியிருக்கிறது.
என்னதான் சூப்பர் கதாநாயகன் படமாக இருந்தாலும், இதிலும் தனது எதார்த்த பாணியை பின்பற்றியிருக்கும் மிஷ்கின், இதன் மூலம் சில இடங்களில் ஜீவா போட்டுகொண்டிருந்த முகமூடியை அவர் போட்டுகொண்டது போல இருக்கிறது.
"அதிகமான எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல் இந்த படத்தைப் பார்த்தால் முகமூடி உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும்." என்று நிகழ்ச்சி ஒன்றி முகமூடி படத்தைப் பற்றி மிஷ்கின் சொன்னார். அவர் கூறியதை ரசிகர்கள் மனதில் வைத்துகொண்டு படத்தைப் பார்த்தால் இந்த முகமூடி உண்மையிலே தமிழக சூப்பர் கதாநாயகன் தான்.

நன்றி விடுப்பு

No comments: