குளக்கரை நேசம்

.

குளக்கரை நேசம்


Inline image 1

பச்சைப்பட்டு விரித்தாற்போல்
எங்கும் புல்வெளி

யாருமில்லாப் புல்வெளி
கண்கள் கொள்ளை கொள்ள
இவற்றின் நடுவே
கயல் துள்ளும் நீர்வெளியாக
ஊரோரக் குளம்!!

அன்றாடம் நாட்தவறாது

மாலை ஆறுமணிக்கு

குளக்கரையில் ஓட்டப்பயிற்சி – அங்கே

ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையொருத்தி
இடவலமாய்ப் போய்க்கொண்டிருக்க
வலமிருந்து இடமாய்ப் போகும்
காக்கேசன் மங்கையவள்!
மூன்றாவதாய்ச் செல்லும் இவனது
ஓட்டத்தின் பாதையினூடாய் 
எதிராய்க் கடக்கையில் 
சிந்தும் குறுஞ்சிரிப்பு மாத்திரமே
அவளுக்கும் இவனுக்குமான உறவு!!

கோடையின் தாக்கத்தில்



வெம்மை வாட்டியெடுக்க

தடைபட்ட ஓட்டப்பயிற்சியை
மீட்டெடுக்கும் பொருட்டு
திங்கள் பல உருண்டோடிவிட்ட
இன்றைய பொழுதில் சென்றான் 
ஓடுவதற்காய் ஊரோரக் குளக்கரைக்கு!!
காக்கேசக் குறுஞ்சிரிப்பின்றி
வெறுமை வாட்டியெடுக்க
ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையை நாட
அவள் காட்டிய அவளோ
வாய்ப்புற்றின் வதைப்பில்
படுக்கையில் படுகிடையாய்!!

கண்டு விரிந்த கண்கள் பேச

வாஞ்சையாய் அவளது இடக்கை 

இவனது வலக்கையைப் பற்றிக் கொள்ள
மெளனத்தினூடே ஓரிரு கணங்கள்
அமைதியாய்க் கடக்க
விடைபெறும் தருணமதில்
தட்டுத்தடுமாறி எழுந்து
நூலொன்றைக் கொடுத்து
முடிந்தும் முடியாமல் உதிர்த்தாள்
குறுஞ்சிரிப்பொன்று – அது அவளுடைய
கடைசியானதாகவும் இருக்கலாம்!
வீடு வந்ததும்தான் பார்த்தானிவன்
நூலின் தலைப்பு
Gandhi: His Life and Message for the World

Nantri:பழமைபேசி


No comments: