எட்டாவது சிகரம் - அ .முத்துலிங்கம்


இரண்டு நாட்கள் முன்பு அமர்நாத் குகைக்கு சென்றுவிட்டு வந்த அமெரிக்க பெண் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தலையிலே கறுப்புக் கண்ணாடி குத்திய, கை நகங்களில் பச்சை நிறம் பூசிய பெண். என்னைக் கண்டதும் இதற்காகவே காத்திருந்ததுபோல தான் அமர்நாத் குகைக்கு போய் வந்த சாதனையை சொன்னார். 29 ஜூலை அவர் திரும்பியிருந்ததால் அந்தப் பயணத்தின் அனுபவங்களினால் நிறைந்து போயிருந்தார். என்னிடம் நான் போயிருக்கிறேனா என விசாரித்தார். நான் இல்லை என்றதும் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்பட்டார். இந்தியராகவோ இலங்கையராகவோ பிறந்திருந்தால் அந்தக் குகையை பார்த்திருக்கவேண்டும் என அவர் அபிப்பிராயப்பட்டார்.


‘ஏன் அங்கே போனீர்கள்?’ என்று கேட்டேன். முட்டாள்தனமான கேள்வி. எவரெஸ்டை வெற்றிகொண்ட எட்மண்ட் ஹிலாரியிடமும் இப்படி கேட்டார்கள். அவர் ‘ஏனென்றால் அது அங்கே இருக்கிறது’ என்றாராம். இந்தப் பெண்மணி அப்படியெல்லாம் சொல்லவில்லை. அவர் ஜம்மு காஷ்மீருக்கு போயிருக்கிறார். அது யாத்திரை நேரம். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் அமர்நாத்துக்கு புறப்பட்டபோது அவரால் ஆர்வத்தை அடக்கமுடியவில்லை. அவரும் யாத்திரை குழுவில் சேர்ந்துகொண்டார். கால்நடையாகவும், பல்லக்குகளிலும் பலர் புறப்பட்டனர். வசதியானவர்கள் ஹெலிகொப்டர்களில் நேராக மலை உச்சிக்கு போய் அங்கே இறங்கி குகையை பார்த்தார்கள்.

நிறைய யாத்ரீகர்கள் வருவார்களா?
’போன வருடம் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் குகைக்கு போயிருந்தார்கள். நான் மலை உச்சியை அடைந்த அன்று மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் வருகை தந்திருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டார்கள். குகை பிரம்மாண்டமாக இருந்தது. 130 அடி உயரம். அத்தனை பெரிய குகையை நான் பார்த்ததில்லை. அதன் உள்ளே stalagmite formation இருப்பதாக படித்துள்ளேன். பனி லிங்கம் என்று வழிபட்டார்கள். ஆனால் அதன் உயரம் அமாவாசையின்போது குறைந்தும் பௌர்ணமி அன்று 16 அடி உயரமாவதும் ஒரு மர்மம் என்றே நினைக்கிறேன். 500 வருடங்களுக்கு முன்னர் இந்தக் குகையை ஓர் ஆட்டிடையன் கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். இந்தக் குகையில்தான் பார்வதிக்கு சிவன் படைப்பின் ரகஸ்யத்தை உபதேசித்தார் என்று வழிபடுகிறார்கள்.

உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?
’நான் பயணம் தொடங்கியபோது குளிருக்கு தக்க ஆடைகள், கையுறை, காலுறை, பூட்ஸ்கள், கம்பளிப்போர்வை, நித்திரைப்பை, தைலம் போன்றவற்றை ஒரு தோல்பையிலே அடைத்துக் காவிக்கொண்டு போனேன். மலை ஏற ஏற அதைக் தூக்கிக்கொண்டு ஏறுவது சிரமமாகிவிட்டது. மலையின் உயரம் 17,000 அடி. மேலே போகப்போக பிராணவாயு குறைந்துவிடும். நான் சிறுவயதில் இருந்தே குதிரை ஏற்றம் பழகியவள். சிலர் வாடகைக் குதிரையில் ஏறி வரச்சொல்லி அறிவுரை தந்தார்கள். நான் நடந்தே மலை உச்சிக்கு போவது என்பதில் தீர்மானமாக இருந்தேன். முதல் நாள் நாங்கள் கடந்தது 16 கி.மீட்டர் தூரம். எனக்கு மலை ஏறிப் பழக்கமில்லாததால் மூச்சுவாங்கியது. அந்தச் சிரமத்திலும் சுற்றிலும் உள்ள மலைச் சிகரங்களையும், லிட்டர் ஆற்றில் ஓடிய பளிங்கு நீரையும் பார்த்தபோது களைப்பு மறைந்துபோனது. அன்று மாலை தங்கியபோது பெரிய தவறு செய்தேன். அடுத்தநாள் ஏறப்போகும் 12 கி.மீட்டர் தூரம் செங்குத்தாக இருக்கும், ஏறுவது சிரமமென  பயமுறுத்தினார்கள். ஆகவே ஒரு மூட்டைதூக்கியை ஒழுங்குசெய்து முன்பணமும் கொடுத்தேன். அடுத்தநாள் காலை என் மூட்டையை காணவில்லை. மூட்டை தூக்கியையும் காணவில்லை.  மலை ஏறுவதற்கு அத்தியாவசியமான அத்தனை உபகரணங்களும் அந்த மூட்டையில் இருந்தன.

எப்படி சமாளித்தீர்கள்?
’படித்தவர் போல தோற்றமளித்த ஒருவர் எங்களுடன் பயணம் செய்தார். அவருடைய மனைவி பல்லக்கில் ’ஆசு ஆசு’ என்று பெரிதாக மூச்சுவிட்டபடியே வந்துகொண்டிருந்தார். நான் அந்த மனிதரை அணுகி என் சாமான்கள் தொலைந்ததை சொல்லி உதவும்படி கேட்டேன். நான் ஏதோ அவருடைய ஏடிஎம் ரகஸ்ய எண்ணைக் கேட்டதுபோல அவர் திடுக்கிட்டு என்னைப் பார்த்தார். பின்னர் பல்லக்கை நிறைத்திருந்த அம்மாளைப் பார்த்தார். ஒரு நொடியில் அவர்களுக்குள் ஏதோ சைகை பரிமாறப்பட்டது. அந்த மனிதர் கையிலே சுடுதண்ணீர் பட்டதுபோல இரண்டு கைகளையும் உதறி என்னை துரத்திவிட்டார்.

’இரண்டு சாதுக்கள் எங்களுடனே நீண்டதூரம் வந்துகொண்டிருந்தார்கள். வேக வேகமாக மலை உச்சியை முதலில் அடையவேண்டும் என்பதுபோல ஏறினார்கள். அவர்களுக்கு 40 வயது மதிக்கலாம். இந்த வயதிலேயே உலகத்தை துறந்து சாமியாராகிவிட்டார்கள். ஒருத்தர் கறுப்பு தலைப்பா அணிந்து, கழுத்திலே பலவிதமான மாலைகளை பலப்பல  நிறங்களில் அணிந்திருந்தார். கையிலே உயரமான சூலாயுதத்தையும், பளபளக்கும் லோட்டா ஒன்றையும் காவினார். அவர் முகத்திலே வெள்ளை மா பூசி முகம் வெளுப்பாக இருந்தது. அடுத்தவர் பார்க்க சிநேகமானவர்போல தோற்றமளித்தார். உயரமான மஞ்சள் தலைப்பா கட்டியிருந்தார். இவரும் கழுத்திலே நிறைய மணி மாலைகளை சுமந்தார். தலைவர்போல தோற்றமளித்த கறுப்பு தலைப்பாக்காரரிடம் என் பிரச்சினையை சொன்னேன். அவர் உதடுகள் ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்ததால் ஒன்றுமே பேசாமல் ஒரு விரலை நேராகப் பிடித்துக் காட்டினார்.

’நான் பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் சைகைளுக்கு வேறு வேறு அர்த்தங்கள் உண்டு. ஒரு விரலை நேராகப் பிடித்ததால் ஆகாயத்தை பார்க்கச் சொல்கிறாரா? அல்லது மலை உச்சியை முதலில் தொட்டது நான்தான் என்று சொல்கிறாரா? அல்லது என்னை எச்சரிக்கை செய்கிறாரா? அல்லது ஒன்றுக்குப் போகவேண்டும் என்று சொல்கிறாரா? லட்சக்கணக்கான மக்கள் தினமும் செய்வதுபோல இமயமலை சிகரம் பக்கம் திரும்பி அதை நிறைவேற்றப் போகிறாரா? ஒன்றுமே புரியவில்லை. இன்னொன்றை நினைத்தபோது எனக்கு கிலி பிடித்தது. அமெரிக்காவில் ஒற்றை விரலுக்கு ஆபாசமான அர்த்தம் ஒன்று உண்டு. அப்படி ஏதாவது இந்தியாவிலும் இருக்குமோ என பயந்து போனேன். ஆனால் அவர் ’பொறு’ என்று சைகை காட்டியிருக்கிறார் என்பது சிறிது நேரத்தில் எனக்கு  புரிந்தது.

’என்ன வேண்டும்?’ என சைகையில் கேட்டார். நல்ல அமெரிக்க ஆங்கிலத்தை உடைத்து நாலு வார்த்தைகளில் நான் என் பிரச்சினையை சொன்னேன். அவர் ’நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்’ என்று கூறி இரண்டு கம்பளிப் போர்வைகளைத் தந்தார். அவர்களுடைய தயவினால் நான் குளிரிலிருந்து தப்பமுடிந்தது. அந்தக் கம்பளிகளைப்போல ஒன்றை நான் என் வாழ்நாளில் முன்னர் பார்த்தது கிடையாது. இரண்டு மஞ்சள் கம்பளிகளும் கத்தரிக்காய் நிறத்துக்கு மாறிவிட்டன. இருபது வருடங்களாக தண்ணீரைக் காணாத கம்பளிகள். நூற்றுக்கணக்கான ஆட்களின் வியர்வையும், பனிச்சேறும் பட்டு கம்பளி முரட்டுத்துணி ஆகியிருந்தது. நாலாக மடித்து நிறுத்திவிட்டால் கம்பளி அப்படியே நிற்கும் என்று பட்டது. 

’நான் இந்த பயணத்தில் பார்த்த இடங்களில் வர்ணிக்கமுடியாத அழகு கொண்டது சேஷாங் என்ற  இடம்தான். இமயமலைத் தொடரின் ஏழு சிகரங்கள் காணக் கிடைத்தன. ஏழு தலை நாகம் என வர்ணிக்கப்பட்ட இடத்தை நோக்கி யாத்ரீகர்கள் வணங்கினார்கள். குளம் நீல நிறத்தில் காட்சியளித்தது. ஆகாய நிறத்தால் குளம் அப்படியானதா அல்லது குளத்தின் நிறத்தால் ஆகாயம்  அப்படியானதா என்பது தெரியவில்லை. தேவதாரு மரங்களின் அபூர்வ மணம் ஒரு மயக்க நிலையை தந்தது. சாமியார்கள் தந்த இரண்டு தடித்த போர்வைகளும் போதாமல் உடம்பு  உதறியது. அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் 250 வருடங்களுக்கு முன்னர் பதவியேற்பு விழாவில் மேலங்கி அணியாமல் கலந்துகொண்டதால் குளிரில் விறைத்து ஒரு மாத காலத்துக்குள் இறந்துபோனது நினைவுக்கு வந்தது. நடுக்கம் இன்னும் அதிகமாகியது. ஆனால் வெள்ளைப்பூச்சு அப்பிய சாமியார்கள் குழந்தைகள் போல தூங்கினார்கள்.

’இந்த இரண்டு சாமியார்களும் எனக்குப் பக்கத்தில் காவலர்கள் போல வந்தார்கள். என்னைக் காவல் காத்தார்களா அல்லது அவர்களுடைய கம்பளிப்போர்வைகளை பாதுகாத்தார்களா என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்ல. எதற்காக அவர்கள் சாமியார் ஆனார்கள் என்று கேட்டேன். 16 வயதில் ஓடி வந்து விட்டதாக ஒரு சாமியார் சொன்னார். பல வருடங்களாக அவர் அமர்நாத் வந்து போகிறார். மற்றவர் மணமுடித்து வாழ்க்கை நடத்தியவர். ஓர் இரவு அமர்நாத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்ததும் தான் கட்டிய மனைவியையும் பிள்ளையையும் விட்டுவிட்டு உடனே புறப்பட்டதாகச் சொன்னார். (அழைப்பு செல்பேசியில் வந்ததா என்பதை கேட்க நான் மறந்துவிட்டேன்.) சிலநாட்கள் ஒன்றாகப் பழகியதில் சாமியார்கள் எனக்கு  நெருக்கமாகிவிட்டார்கள். மூன்று நாட்கள் கழித்து அவர்களை விட்டு பிரிந்தபோது, நடு இரவில் மனைவியை துறந்து புறப்பட்ட கறுப்பு தலைப்பா சாமியாரின் கண்கள் கலங்கியது எனக்கு ஆச்சரியத்தை தந்தது..
 
மூன்றாவது நாள்தான் பயணத்தின் மிக மோசமான நாள். ஒரு பக்கம் செங்குத்தாக ஏறிய பின்னர் மறுபக்கம் கடகடவென்று இறங்கவேண்டும். முதல்நாள் அந்த இறக்கத்தில் ஒருவர் சறுக்கி விழுந்து மரணம் அடைந்துவிட்டார் என்று பேசிக்கொண்டார்கள். அன்றிரவு என்னால் உறங்க முடியவில்லை. காற்று போதியது இல்லாததால் மூச்சுத் திணறி சுவாசிப்பது கடினமானது. சிலர் இரவிரவாக வாந்தி எடுத்தனர். என் சொண்டுகள் வெடித்து பேசமுடியால் ஆகிவிட்டது. கன்னத்தை தொட்டால் தொட்ட உணர்வே கிடையாது. வாயை திறந்து பேச முயன்றபோது வேறு வார்த்தைகள் வேறு மொழியில் வந்தன. நான் குளிருக்கு பூசவென்று கொண்டுவந்த தைலம், உடுக்கவேண்டிய குளிர் ஆடைகள்  எல்லாம் திருட்டுப்போன என்  பையில் இருந்தன. அந்த திருடனையே இரவு முழுவதும் எண்ணினேன்.

உணவுக்கு என்ன செய்தீர்கள்?
’நான் தங்கிய அத்தனை நாட்களும் ரொட்டியும் பருப்பும் இலவசமாகக் கிடைத்தன. எனக்கு மாத்திரமல்ல, யாத்ரீகர்கள் அத்தனை பேருக்கும். நிறைய தொண்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அங்கே உழைத்தன. ஆனால் கழிவறை வசதிகள் பற்றி ஒருவரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஆண்களும் பெண்களும் திறந்த வெளியையே உபயோகித்தார்கள். குளிரில், இருண்ட பின்னர், திறந்த வெளியை நோக்கி சென்றபோது நான் பில்கேட்ஸ் சொன்னதை நினைத்துப் பார்த்தேன். ’மனிதர்களுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அத்தனை முக்கியம் கழிவறைகளும்.’ அவர் நிறுவிய அறக்கட்டளை தண்ணிரிலும் பார்க்க கழிவறைகளுக்குத்தான் முதலிடம் கொடுத்தது. உலகில் 2.8 பில்லியன் மக்களுக்கு கழிப்பிடம் கிடையாது. தண்ணீரில்லாமல் சூரிய ஒளியில் இயங்கும் கழிவறை ஆராய்ச்சிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை  நிதியுதவி வழங்கியிருக்கிறது.


‘அமர்நாத் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் ஜூன் 25 இலிருந்து ஆகஸ்டு 2 மட்டுமே. நாற்பதுக்கும் குறைவான நாட்கள். போன வருடம்போல இந்த வருடமும் 6 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள்  குகைக்கு போயிருப்பார்கள். எல்லோருடைய கைகளிலும் பிளாஸ்டிக் தண்ணீர் குடுவைகளைக் காணக்கூடியதாக இருந்தது. அமர்நாத் மலைப்பிரதேசத்தின் வனப்பு சொல்ல முடியாது. யாத்திரை முடிவுக்கு வரும்போது 5 மில்லியன் போத்தல்கள் அங்கே வீசப்பட்டுக் கிடக்கும். அற்புதமான இயற்கை அழகு பிளாஸ்டிக் போத்தல்களால் மேலும் வருடா வருடம் அழகூட்டப்படும்.

அமெரிக்கப் பெண்மணி விடைபெற்று போகமுன்னர் சொன்ன கடைசி வாசகம் என்னை சிந்திக்கவைத்தது. ‘மறுடியும் போவீர்களா?’ என்று கேட்டேன். நீண்ட நேரம் பேசாமல் இருந்துவிட்டு, செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும்போது ’உஸ்’  என்று சத்தம் வருமே அப்படி ஒரு பெருமூச்சு விட்டார். ‘நான் சிறுவயதில் அம்மாவின் பழைய உடுப்பை போட்டு எடுத்த படம் ஒன்று வீட்டில் இருக்கிறது. அதைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதே சமயம் அடிமனதில் இனம் தெரியாத சோகமும் சூழ்ந்து கொள்ளும். அமர்நாத் குகையை நினைக்கும்போது எனக்கு மகிழ்ச்சியுடன் சேர்ந்து ஒரு வலியும் வந்துவிடுகிறது. இனிமேல் என்னால் அங்கே போகமுடியாது’ சூழலியல் விஞ்ஞானி ஒருவர் ஆப்பிரிக்காவில் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு ஆலோசகராக இருக்கிறார். அங்கே ஒரு கிராமத்தில் ஆழ்கிணறு தோண்டுவதற்கு விண்ணப்பம் வரும்போது அவர்கள் முதலில் நிறுவுவது கழிப்பிடம்தான். அதற்கு பின்னர்தான் கிணறு. கிராமம் இதற்கு சம்மதிக்காவிட்டால் அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது. இது ஓர் அருமையான உத்தி என்றுதான் எனக்கு பட்டது.

படைப்பின் ரகஸ்யம் அமர்நாத் குகைக்குள் இருக்கிறது. அதை மனிதன் அறிய முடியாது என்று சொல்கிறார்கள். ஆனால் அழிவுக்கு ரகஸ்யம் கிடையாது. பிளாஸ்டிக் 400 வருடங்களுக்கு அழியாது. வருடத்துக்கு 5 மில்லியன் பிளாஸ்டிக் குடுவைகள் அங்கே குவிகின்றன. மனிதக் கழிவுகள் இன்னொரு பக்கம். அமெரிக்கப் பெண்ணின் மகளின், மகளின், மகளின் - இப்படியே பத்தாவது தலைமுறை மகள் அமர்நாத்துக்கு பயணம் செய்தால் அங்கே அந்த அமெரிக்கப் பெண் எறிந்துவிட்டு வந்திருக்கக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்l ஒன்றை கண்டு பிடிக்கலாம். பிளாஸ்டிக் மலைக்குவியல் இமைய மலைத்தொடரின் எட்டாவது சிகரமாக மாறலாம். அமர்நாத் யாத்ரீகர்கள் ‘எட்டுத்தலை நாகம், எட்டுத்தலை நாகம்’ என அதிசயம் மேலிட வணங்குவார்கள்.  

நன்றி http://amuttu.net/


No comments: