இலங்கைச் செய்திகள்

. 
திருமுறிகண்டியில் வேறு இடங்களில் குடியேற மறுத்த பொதுமக்கள் மீது நேற்றிரவு கடுமையான தாக்குதல் லொறிகளில் ஏற்றப்பட்டு மெனிக்பாம் அனுப்பப்பட்டனர்

அலட்சியப்படுத்தப்படும் சட்ட ஆட்சி

"வெளியேறு,வெளியேறு இராணுவமே வெளியேறு"

 “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’ “வீட்டுக்கு செல்லவிடு  இராணுவமே வெளியேறு’ பதாகைகள் கோஷங்களுடன் திருமுறிகண்டியில் ஆர்ப்பாட்டம்

1380 பட்டதாரிகளுகளுக்கு வெள்ளியன்று நியமனம்

வவுனியா சிறைச்சாலையில் கைதிகளிடம் பணம் கேட்டுத் தாக்குதல்

சௌத்பார் கிராமத்தில் நிலப்பரப்பை தன்வசப்படுத்த இராணுவம் முயற்சி

ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டும்வரை நில மீட்பு போராட்டம் தொடரும் திருமுறிகண்டியில் மாவை சூளுரை

வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்த இருவர் கைது ஒருவர் இராணுவ வீரர் 
  
இராணுவம் முகாம் அமைக்கும் காணி குறித்து பொலிஸ் விசாரணை

 வட மாகாண சபை ஊதாரிப் பிள்ளையா? திருமுறிகண்டியில் வேறு இடங்களில் குடியேற மறுத்த பொதுமக்கள் மீது நேற்றிரவு கடுமையான தாக்குதல் லொறிகளில் ஏற்றப்பட்டு மெனிக்பாம் அனுப்பப்பட்டனர்

யாழ்நகர் நிருபர்

திருமுறிகண்டியில் இராணுவத்தினர் நிர்ணயித்த இடங்களில் மீள்குடியேற மறுத்த பொது மக்களை படையினர் விரட்டி விரட்டித் தாக்கியதுடன், அம்மக்களை பலவந்தமாக லொறிகளில் ஏற்றி நேற்றிரவு மெனிக்பாம் முகாமுக்கு மீண்டும் அனுப்பி வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என்ற பேதமின்றி கொட்டன்கள், பொல்லுகள் கொண்டு கடும் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார்.
படையினரின் இந்தத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தப்பி ஓடிய மக்களையும் விரட்டி விரட்டித் தாக்கியதுடன், அவர்களை இழுத்துச் சென்று பலவந்தமாக லொறிகளில் ஏற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை உயிருக்கு அஞ்சி தப்பியோடியவர்களில் சிலர் அயலிலுள்ள வீடுகள் மற்றும் காடுகளுக்குள் ஒளிந்துகொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு அங்கு குவிக்கப்பட்ட பெருமளவு படையினர் ஆயுதங்கள், கொட்டன்கள், பொல்லுகள் சகிதம் இரவிரவாக வீடு வீடாகப் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் சுற்றாடல் பகுதிகளிலும் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் முகாமிலிருந்து மீள்குடியேற்றம் என்ற பேரில் அழைத்து வரப்பட்டு திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் திருமுறிகண்டியில் மீளக்குடியமர்விற்காக காத்திருந்த பொது மக்களை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான தடைகள் வந்தாலும் தமிழர் தாயக பூமியை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக நாளைய தினம் (இன்று) திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் முறிகண்டியில் நடைபெறுமெனவும் அவர் தெரிவித்தார்.
திருமுறிகண்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இன்று நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் கலந்து கொள்வதைத் தடுக்கும் நோக்குடனேயே, மக்கள் மீது தாக்குதல் நடத்தி அந்த மக்கள் பலவந்தமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
மெனிக்பாம் அகதிகள் முகாமிலுள்ள திருமுறிகண்டியைச் சொந்த இடமாகக் கொண்ட 47 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்துக்கென கடந்த 22 ஆம் திகதி ஏற்றிவரப்பட்டு திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பலர் இராணுவம் நிர்ணயித்த இடங்களில் அவர்களின் விருப்பத்துக்கு மாறாகக் குடியேற்றப்பட்டனர். கடந்த 23 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர் குழுக்களின் பிரசன்னத்துடன் இராணுவத்தினர் நிர்ணயித்த இடங்களில் கால் ஏக்கர் காணி வீதம் இவர்களுக்கு வழங்கப்பட்டு பலர் குடியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் அழைத்து வரப்பட்டோரில் 19 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை தமது சொந்த நிலத்தில் மீள்குடியேற்றுமாறும் இராணுவத்தினர் நிர்ணயித்த இடங்களில் மீள்குடியேற முடியாது எனவும் மறுப்புத் தெரிவித்து திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தொடர்ந்து தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு இந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலையை திடீரெனச் சுற்றிவளைத்த நூற்றுக்கணக்கான படையினர், அவர்களைத் தாக்கி பலவந்தமாக லொறிகளில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் மெனிக்பாம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
பெண்கள், குழந்தைகள் என்ற பேதமின்றி அனைவர் மீதும் கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சில குழந்தைகள் கூட பலவந்தமாக இழுத்துவரப்பட்டு கதறியழ வாகனங்களில் தூக்கி வீசப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.
திருமுறிகண்டியில் நில அபகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஏற்பாடு செய்துள்ள நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களாக இருந்த மக்களில் பெரும்பான்மையானோர் 1972 ஆம் ஆண்டு இப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டு காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டனர்.
பெரும் காடாக இருந்த இந்தப் பகுதியை இந்த மக்கள் தமது சொந்த முயற்சியினால் வளமிக்க பூமியாக மாற்றி அங்கு குடியிருந்தனர். இந்த நிலையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த இந்த மக்களின் நிலங்கள் தற்போது படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
தமது நிலங்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்த மக்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டம் அரசுக்கும் அதுசார்ந்தவர்களுக்கும் தொடர்ச்சியாக பெரும்  தலைவலியாக உள்ளது.
இம்மக்களைச் சமாளித்து வேறு இடங்களில் குடியேற்றி அவர்களது நிலங்களை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் முயற்சியில் படைத்தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். படையினரின் இந்த முயற்சிக்கு அரசின் ஆதரவும் பூரணமாக கிடைத்து வருகிறது.
எதிர்ப்பைச் சமாளித்து வாழத் தகுதியற்றதாகக் கருதப்படும் இடங்களில் பலவந்தமாக இந்த மக்களைக் குடியேற்றும் முயற்சியில் படைத்தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு கால் ஏக்கர் காணி வீதம் வழங்கப்பட்டுள்ளதுடன், வீடுகளை அமைக்க தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படுமெனவும் ஆசை காட்டியே இந்த மக்களை மீள்குடியேற்றும் முயற்சி இடம்பெற்றுவருகிறது.
இந்நிலையிலேயே படையினரின் இந்த பேரத்துக்கு இணங்கி மீள்குடியேற மறுத்த மக்கள் மீது படையினர் நேற்றிரவு கடும் தாக்குதல் நடத்தி பலவந்தமாக அவர்களை லொறிகளில் ஏற்றி மீண்டும் மெனிக்பாம் முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நன்றி தினக்குரல்


 அலட்சியப்படுத்தப்படும் சட்ட ஆட்சி
யுத்தத்துக்கு முடிவு கட்டியதன் மூலம் வன்முறைக் கலாசாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டதாகவும் இனிமேல் எல்லாமே பிரகாசம் தான் என்றும் மக்களின் கருத்து வெளிப்பாட்டு, நடமாட்ட சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளை அனுபவிக்க தடைகள் எதுவும் இல்லையென அரசாங்கம் வெற்றி முழக்கமிட்டு ஆண்டுகள் மூன்று உருண்டோடிவிட்ட நிலையில் நாட்டில் சட்ட ஆட்சி முழுமையாக சீர்குலைந்து பலவீனமடைந்திருப்பதற்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மாத்திரமன்றி சிவில் அமைப்புகளும் கடும் கண்டனத்தையும் விசனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்திருந்த யுத்தமே சகல பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமென்றும் அதற்கு முடிவு கட்டியதன் மூலம் சுபீட்சமான எதிர்காலத்தை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக அரச தரப்பினர் சுயபாராட்டுகளை கனமழையாக பொழிந்து கொண்டிருப்பது ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்கையில் மறுபுறத்திலோ, வன்முறை அரசியல் கலாசாரம் நாட்டில் தலைவிரித்தாடுவதையும் மத, சமூக, கலாசாரப் பெறுமானங்கள் ஓரம் கட்டப்படுவதையும் “பிரைடே போரம்’ போன்ற சிவில் அமைப்புகள் விசனத்துடனும் கவலையுடனும்  சுட்டிக்காட்டியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
பொதுமக்களின் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் மதிப்பளிப்பதானது சட்ட ஆட்சியென்ற கோட்பாட்டிற்கு மிக மிக அத்தியாவசியமான விடயம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்ததுடன் ஆட்களின் ஆட்சியிலும் பார்க்க சட்டத்தின் ஆட்சியின் கீழ் நீதியான முறைமையில் நிர்வாகம் இருப்பதை ஜனநாயக நாடானது உறுதிப்படுத்துவது அவசியமென்று அந்த ஆணைக்குழு இடித்துரைத்திருந்தது. பல்லின சமூகங்கள் வாழும் இந்த நாட்டில் சமூகத்தின் பன்முகத்தன்மையை முற்றிலும் நிலை குலையச் செய்வதற்கான செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதையும் “பெரும்பான்மை வாத’ சக்திகள் அதற்கு தீனிபோட்டு வலுப்படுத்துவதையும் சகல சமூகங்களையும் சேர்ந்த நியாயமான முறையில் சிந்திப்போர் கவலையுடன் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். இனங்களுக்கிடையில், மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை வலுவாக கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் தலைவர்களும் சொற்ப அளவில் இருந்துவரும் நல்லிணக்கத்தைத் தகர்த்துவிடும் கைங்கரியத்துடனான நிகழ்ச்சி நிரலையே மறைமுகமாக முன்னெடுக்கின்றனர் என்பது தெளிவாகத் தென்படுகிறது. தம்புள்ள பள்ளிவாசல் தகர்ப்பு உள்ளடங்கலாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தொன்று தொட்டு இருந்து வரும் இந்து மதஸ்தலங்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் விதத்தில் நில ஆக்கிரமிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
தற்போது நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்திருப்பது தொடர்ந்தும் கவலையளிக்கும் விடயமாகக் காணப்படுவதாக இந்த விடயத்தில் அரசாங்கம் மௌனம் காத்து வருகின்றது அல்லது குழப்பகரமான செய்திகளை விடுத்து வருகின்றது என்று “பிரைடே போரம்’ குறிப்பிட்டிருக்கிறது. நீதியான சட்டத்திலிருந்தே பொதுமக்களுக்குரிய அடிப்படைச் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். இந்த சட்ட ஆட்சியை சுயாதீனமான அரச  அதிகாரிகளே உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கையின் பொதுச் சேவையானது 1972 அரசியலமைப்பு மூலம் ஓரம் கட்டப்பட்டது. அந்த அரசியலமைப்பானது சிவில் சேவை ஆணைக்குழுவை இல்லாதொழித்து விட்டிருந்ததுடன் நிரந்தர செயலாளர்கள் என்ற நிறுவனமயப்பட்ட அமைப்பின் முதுகெலும்பையும் முறித்து விட்டிருந்தது. எஞ்சியிருந்த வலுவான கட்டமைப்புகளும் 1978 அரசியலமைப்பினால் வலுவிழந்துவிட்டன. 1983 இல் தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கலவரம் கட்டவிழ்த்துவிடப்பட்ட போது அதிகார மட்டம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல்  பார்த்துக்கொண்டிருந்ததும் அதன் பின்னரான  மூன்று தசாப்த காலத்தில் எதிர்கொண்ட இழப்புகளும் அழிவுகளும் கணிப்பிட முடியாத அளவு பரிமாணங்களைக் கொண்டவையாகும்.
அரசியல் தாபரிப்பை கொண்டிருக்கும் அதிக எண்ணிக்கையான நபர்கள் குற்றச் செயல்களை இழைத்திருந்ததாக நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்ததும்  இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயமாகும். சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட அரசியல் ரீதியான அழுத்தத்தால் குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் இலகுவாக தப்பிவரும் நிலைமை தொடர்கிறது. சேவைகள்,  பொது வசதிகளை  பெற்றுக்கொள்வதில் அரசியல்வாதிகளையே நம்பியிருக்கும் விதத்தில் இந்நாட்டின் அரசியல் கலாசாரம் உருவாகியிருப்பதால் பொதுமக்கள் எந்தவொரு அதிகாரமும் இல்லாமல் நிராதரவான நிலைமையிலே உண்மையில் உள்ளனர். பொதுமக்களின் உரிமைகளை புறந்தள்ளிவிடும் அதிகளவிலான ஊழல் மோசடிகள் இறுதியில் சிறுபான்மை சமூகங்களுக்கே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் இறுதியில் நல்லிணக்கம் என்பதும் வெறும் கானல் நீராகவே காணப்படும் நிலைமை உருவாகியுள்ளது.
நாட்டில் சட்ட ஆட்சியை வலுப்படுத்த சுயாதீன பொலிஸ் குழுவின் அவசியம் பற்றி நல்லிணக்க ஆணைக்குழு வலியுறுத்தியிருந்தது. பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப நிரந்தரமான சுயாதீன ஆணைக்குழுவின் அவசியம் பற்றியும் நல்லிணக்க ஆணைக்குழு வலியுறுத்தியிருந்தது. நல்லாட்சி, சட்ட ஆட்சிக்கு மதிப்பளித்தல், ஜனநாயகத்துடன்  கூடிய சமாதானம், பன்முகத் தன்மையை பேணுதல் என்பனவே முன்னுரிமை கொடுத்து மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள். ஆனால், இந்த விடயங்களில் முன்னேற்றத்தைக் காண்பதற்கு மிக அவசரமாகத் தேவைப்படும் பொறுப்புணர்வை அரசாங்கம் இதய சுத்தியுடன் கொண்டிருக்கிறதா என்பது இங்கு சிந்திக்க வேண்டிய விடயம்.
நன்றி தினக்குரல்


"வெளியேறு,வெளியேறு இராணுவமே வெளியேறு"(பட இணைப்பு) 

26/6/2012


வடக்கு,கிழக்கில் காணி சுவீகரிப்பில் இராணுவமும் அரசாங்கமும் ஈடுபடுவதாகத் தெரிவித்தும் அவ்வாறான நடவடிக்கைகளைக் கண்டித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் முன்றிலில் ஆர்ப்பாட்டமொன்று இன்று பகல் இடம்பெற்றது.

'எமது இடங்களையும் பொது நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம்'என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எங்கள் நிலம் எமக்கு வேண்டும், எங்களுடைய வீட்டுக்குச் செல்ல விடு, வெளியெறு வெளியேறு இராணுவமே வெளியேறு, முறிகண்டி மக்களுக்கு என்ன நடந்தது?, முறிகண்டி மக்கள் எங்கே?, யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் இன்னும் எம் முற்றத்தில் இராணுவம், ஆடாதே ஆடாதே, இராணுவ ஆக்கிரமிப்பு நிலைக்காது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நின்றனர்.

இதன்போது ஏராளமான பொலிஸார் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் முன்றிலில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை முறிகண்டிப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் கடந்த சில தினங்களாக திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தங்க வைக்கப்ட்டிருந்த நிலையில் இம் மக்களை மீண்டும் இராணுவத்தினர் நேற்று இரவு வாகனங்களில் ஏற்றி மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். இதன் காரணமாக இன்று ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் சிறு பதற்ற நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், சிறிதரன், சரவணபவன், சுமந்திரன் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் மனோகணேசன், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் அக்கட்சியின் ஊடக செயலாளருமான பாஸ்கரா, இடதுசாரிக் கட்சி பிரதிநிதி சிறிதுங்க ஜெயசூரிய, தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, வவுனியா நகர சபையின் உபதலைவர் எம்.எம். ரதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
நன்றி வீரகேசரி 


Local “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’ “வீட்டுக்கு செல்லவிடு, இராணுவமே வெளியேறு’ பதாகைகள், கோஷங்களுடன் திருமுறிகண்டியில் ஆர்ப்பாட்டம்
 “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’ “வீட்டுக்கு செல்லவிடு  இராணுவமே வெளியேறு’ பதாகைகள் கோஷங்களுடன் திருமுறிகண்டியில் ஆர்ப்பாட்டம்
P1070338hfவவுனியா நிருபர்

வடக்கு, கிழக்கில் இராணுவமும் அரசாங்கமும் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாகக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் முன்றிலில் செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. “எமது இடங்களையும் பொது நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான கவனயீர்ப்புப் போராட்டம்’ என்ற கோஷத்துடன் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’, எங்களுடைய வீட்டுக்கு செல்லவிடு, வெளியேறு , வெளியேறு இராணுவமே வெளியேறு முறிகண்டி மக்களுக்கு என்ன நடந்தது, முறிகண்டி மக்கள் எங்கே?, யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் இன்னும் எம் முற்றத்தில் இராணுவம் ஆடாதே, ஆடாதே, இராணுவ ஆக்கிரமிப்பு நிலைக்காது என்பன போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளைத் தாங்கியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நின்றன.
இதன்போது ஏராளமான பொலிஸார் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தின் முன்றிலில் குவிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை முறிகண்டி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் கடந்த சில தினங்களாக திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில் இம் மக்களை மீண்டும் இராணுவத்தினர் திங்கட்கிழமை இரவு வாகனங்களில் ஏற்றி மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
P1070314hhhhh
இதன் காரணமாக இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இங்கு பதற்றம் காணப்பட்டாலும் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், எஸ்.சிறிதரன், ஈ.சரவணபவன். எம்.சுமந்திரன் ஆகியோரும் ஜனநாயக  மக்கள் முன்னணியின் சார்பில் மனோகணேசன்  கட்சியின் செயலாளர் நல்லையா குமரகுருபரன் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாஸ்க்கரா, இடதுசாரிக்கட்சி பிரதிநிதி சிறிதுங்க ஜெயசூரிய, தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி, வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
P1070316nnnn
P1070317nn
P1070321mm
P1070331m
P1070334b

P1070345ll P1070345ll 
 
 நன்றி தினக்குரல் 


1380 பட்டதாரிகளுகளுக்கு வெள்ளியன்று நியமனம் 


26/06/2012


  மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 1380 பட்டதாரிகளுக்கு எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை அரசாங்க நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் தெரிவித்தார். 2004ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் பல்கலைகழகங்களிலிருந்து வெளியேறிய மாணவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெறவுள்ள வைபவத்தில் பிதம அதிதிகளாக பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வி.முரளீதரன், பஷீர் சேகு தாவூத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வின் போது பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரனின் முயற்சியின்பேரில் 2004ஆம் ஆண்டிற்கு முன்னர் வெளியான 39 பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 நன்றி வீரகேசரி


வவுனியா சிறைச்சாலையில் கைதிகளிடம் பணம் கேட்டுத் தாக்குதல் 
26/06/2012


  வவுனியா சிறைச்சாலையில் மன்னார் கைதிகளிடம் தொடர்ந்தும் பணம் கேட்டு தாக்கப்படுவதாகவும் இதற்கு சிறைக்காவலர்களும் உடந்தையாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

'வவுனியா சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் விடுதிகள் காணப்படுகின்றது. அதில் கீழ் விடுதியில் சுமார் 30 அரசியல் கைதிகள் உள்ளனர். மேல் விடுதியில் ஏணைய கைதிகள் 190 பேர் உள்ளனர். மேல் விடுதியில் கைதிகள் உரங்குவதற்கான படுக்கை வசதிகள் உள்ளது.

புதிதாக வரும் கைதிகளை கீழ் விடுதியில் உள்ள கைதிகள் சிலர் குழுவாக இணைந்து அவர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பணத்தை பெற்ற பின் மேலே செல்ல அனுமதிக்கின்றனர்.

கீழ் விடுதியில் உள்ள கைதிகளில் மன்னார் நொச்சிக்குளம்,சாவகச்சேரி,மன்னார் பரயநாளன் குளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த மூன்று பேரும் தலைமை தாங்கி குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் போது கீழ் விடுதியில் இருந்தவர்கள் வந்து பணம் கொடுக்காமையினால் கடுமையாகத்தாக்கியுள்ளனர்.

அண்மையில் மன்னாரைச் சேர்ந்த 7 பேர் கடுமையாக தாக்கப்பட்டனர். இதன் போது 3 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கு சிறைக்காவலர்களும் உடந்தையாக உள்ளனர். மன்னார் கைதிகளை குறிப்பிட்ட இடங்களில் அவர்கள் இருக்கக்கூட விடுவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
   நன்றி வீரகேசரி

சௌத்பார் கிராமத்தில் நிலப்பரப்பை தன்வசப்படுத்த இராணுவம் முயற்சி 
26/06/2012


  மன்னார் சௌத்பார் கிராமத்தில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் இராணுவத்தினர் அத்துமீறி நுளைந்து முகாம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் இவ்விடையம் தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளரினால் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இவ்விடையம் தொடர்பில் நான் உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

-மன்னார் சௌத்பார் கிராமத்தில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான 45 ஏக்கர் வெற்றுக்காணியில் அத்து மீறி நுளைந்த இராணுவத்தினர் கடந்த 10 தினங்களுக்கு மேலாக குறித்த காணியினுள் நுளைந்து காவலரன் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த காணியின் உரிமையாளரை அக்காணிக்குள் செல்ல இராணுவம் அனுமதி மறுத்துள்ளது. காணிக்குள் சென்று பற்றைகளை துப்பரவு செய்யவும் விடுகின்றார்கள் இல்லை.

இராணுவத்தின் அத்துமீறிய செயல் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காணியின் உரிமையாளர் சகல ஆவணங்களுடன் தன்னிடம் வந்து இவ்விடையம் தொடர்பில் முறையிட்டமையினைத் தொடர்ந்தே இவ்விடையம் தொடர்பில் தான் உடனடியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 
 நன்றி வீரகேசரி


 ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டும்வரை நில மீட்பு போராட்டம் தொடரும் திருமுறிகண்டியில் மாவை சூளுரை

mavai_senathirajah_வவுனியா, யாழ்நகர் நிருபர்கள்

வடக்கில் இராணுவத்தினதும் பௌத்த பிக்குகளினதும் ஆக்கிரமிப்புகள் முடிவுக்கு வரும் வரையில் தமிழர்களின் நிலமீட்புப் போராட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்குமெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, விரைவில் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினைக் கூட்டி எமது உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டுமென  சர்வதேசத்தைக் கோரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடக்கில் சிங்கள குடியேற்றம் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து நேற்றுக் காலை முறிகண்டியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் அவர் கூறியதாவது;
பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்தை விட்டு விட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து சென்றிருந்த மக்கள், யுத்தத்தின் பின்னரும் தமது சொந்த இடங்களில் வாழ முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், மக்கள் குடியேற்றப்பட்டு விட்டதாக அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நாங்கள் சர்வதேசத்திற்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் உண்மைகைளைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
பெருமளவு விவசாய நிலமும் கரையோரப் பிரதேசங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், பல இலட்சம் மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இராணுவ முகாம்களுக்காகவும் பௌத்த விகாரைகளை அமைப்பதற்காகவும் பாரம்பரியமாகவும் இனச்செறிவுடனும் சுயநிர்ணய உரிமை தத்துவத்திற்கு உரித்தான வகையிலும் வாழ்ந்து வந்த மக்களை சிதைத்துவிடவே இராணுவமும் பௌத்த பிக்குகளும் இணைந்து எமது சுயத்தை அழித்துக்கொண்டிருக்கின்றனர்.
நேற்று முன்தினமும் மீள்குடியேற்றத்திற்கென அழைத்துவரப்பட்ட திருமுறிகண்டி மக்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் உள்ளது. இது மட்டுமில்லை. இதுபோல இராணுவம் எங்கள் மக்களுக்குக் கொடுக்கின்ற துன்பங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. ஏன் கொண்டு சென்றார்கள் என்று கூட தெரியாத நிலையில் கொண்டு செல்லப்படுகின்றார்கள். அந்த உரிமையினை இராணுவத்தினருக்கு யார் கொடுத்தது என்பதை கேட்க விரும்புகின்றோம்.
இவை அனைத்தையும் எதிர்த்து விரைவில் வாழ்வுரிமை மாநாட்டை அனைத்துக் கட்சிகள் சார்பானவர்களையும் இணைத்து மிகவிரைவில் எங்கள் நிலத்திற்குச் செல்லவும் ஆளவும் இராணுவம் வெளியேறவும் சர்வதேசத்தைக் கோரவுள்ளோம். இதேபோல் இந்தப் போராட்டம் முறிகண்டியுடன் நிறைவடையப் போவதில்லை, அடுத்து மன்னாரில் இடம்பெறும். அது மட்டுமல்ல வட, கிழக்கில் இராணுவ ஆதிக்கம் ஒழிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்.
நாம் தனித்துப் போனவர்கள் கிடையாது. எமக்குப் பக்கபலமாக பல இலட்சக்கணக்கில் வெளிநாடுகளில் நின்று எமது மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். நாம் தொடர்ந்து போராடுவோம். இன்னுமொரு முறை நாம் அடக்கப்பட்டுவிடாமலிருப்பதற்காக இதற்கு ஆதரவாக வெளிநாட்டு உறவுகளும் போராட வேண்டும். எங்கள் அடிப்படை உரிமையினை அங்கீகரிக்க சர்வதேசம் தயாராகும் வரை போராடிக் கொண்டிருப்போம் என்றார்.
 நன்றி தினக்குரல்


 வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்த இருவர் கைது ஒருவர் இராணுவ வீரர்
மட்டக்களப்பு நிருபர்

மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் இந்துக் கல்லூரிக்கு முன்பாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் இரு பவுண் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்து அறுத்துச் சென்ற இராணுவ வீரர் உட்பட இருவரை வெலிக்கந்தைப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
சம்பவ தினம் காலை 11 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் வசிக்கும் பவானி மயில்வாகனம் என்பவர் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் இறங்கிவந்து அவர் அணிந்திருந்த 2 பவுண் சங்கிலியை  அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
எனினும் சங்கிலியை அறுத்தவரின் கையடக்கத் தொலைபேசி கீழே வீழ்ந்துள்ளது. அதனைக் கவனியாது அவர் சென்றுவிட்டார்.
சங்கிலியைப் பறிகொடுத்த பெண் அத்தொலைபேசியுடன் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று நடத்தவற்றைக் கூறி கைடயக்கத்தொலைபேசியையும் ஒப்படைத்தார். அதனை பரீட்சித்த பொலிஸார் அதிலிருந்த குறித்த நபரின் வீட்டு தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களது மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை அறிந்து கொண்டனர்.
இதனையடுத்து அம்பாறையிலிருந்து பொலன்னறுவை வரையான வீதிகளில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபடும் சகல பொலிஸாருக்கும் அந்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை வழங்கி கண்காணிக்குமாறு பணிக்கப்பட்டது.
இதற்கமைய வெலிக்கந்தையில் இந்த மோட்டார் சைக்கிளை இடைமறித்த வெலிக்கந்தைப் பொலிஸார் அதில் வந்த இருவரையும் கைது செய்து மட்டக்களப்புப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணைகளை மேற்கொண்ட போது, திருகோணமலை கல்லோயாச் சந்தி கந்தரஸ்கொட்டுவ என்ற இடத்தைச் சேர்ந்த பட்ட பந்திகே சுமித்சமர என்ற 25 வயதுடைய இராணுவ வீரரும் 27 வயதுடைய கே.ரி.வி. சுமிக்குமார என்பவருமே அவர்கள் என்பது தெரியவந்தது.
இவர்கள் காத்தான்குடியிலும் ஒருவரின் 5 1/2  பவுண் தங்கச் சங்கிலியை அபகரித்துக் கொண்டு வந்த பின்பே மட்டக்களப்பிலும் பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர். இரண்டு சங்கிலிகளையும் அவர்களிடமிருந்து மீட்ட பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.
இவர்கள் ஏற்கனவே வாழைச்சேனை, ஹபரணை, கந்தளாய், கெக்கிராவை போன்ற இடங்களிலும் இத்தகைய நகை அபகரிப்பில் ஈடுபட்டுள்ளமையும் பொலிஸாரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
  நன்றி தினக்குரல்

 இராணுவம் முகாம் அமைக்கும் காணி குறித்து பொலிஸ் விசாரணை
  Thursday, 28 June 2012 

மன்னார் சௌத்பார் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் இராணுவத்தினர் முகாம் அமைப்பது தொடர்பில் அந்தக் காணிக்கு உரிமை கோரியவருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; மன்னார் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சௌத்பார் பகுதியில் கடந்த சில தினங்களாக இராணுவத்தினர் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இராணுவத்தினர் துப்புரவு பணிகள் மேற்கொள்ளும் காணி தன்னுடையதென உரிமை கோரியுள்ள ஒருவர் தனக்கு அப்பகுதியில் சுமார் 45 ஏக்கர் விஸ்தீரணத்தில் காணியுள்ள நிலையில் அப்பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைக்கும் நோக்கில் மேற்கொள்ளும் துப்புரவு பணிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த திங்கட்கிழமை மன்னார் பொலிஸ் நிலையத்தில் காணிக்கு உரிமை கோரியவருக்கு எதிராக இராணுவத்தினர் முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் காணிக்கு உரிமை கோரியவரும் முறைப்பாட்டை மேற்கொண்டவரும் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவத்தினர் சார்பில் முறைப்பாட்டை மேற்கொண்ட மேஜர் தர அதிகாரியொருவர் பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமானார்.
இந்நிலையில் தாம் துப்புரவு செய்யும் காணி முற்று முழுதாக அரச காணியெனவும் மன்னார் பிதேச செயலாளர் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக இந்தக் காணியை தங்களுக்கு வழங்கியதாகவும் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த இராணுவ அதிகாரி விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும் காணிக்கு உரிமை கோரியவர் இந்த காணி தனது காணி எனவும் வலிதான உறுதி மூலம் தனது மகளுக்கு இந்த 45 ஏக்கர் காணியை நான் உரிமை  மாற்றம் செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வவுனியாவில் உள்ள நில அளவைத் திணைக்களத்திலிருந்து வரைபடங்களை தருவித்து பிரஸ்தாப காணி தனியாருக்கு சொந்தமானதா, அரச காணியா என்பது தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படுமென இரு தரப்பிற்கும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துப்புரவு செய்த அந்தக் காணியில் கூடாரம் அமைத்து இராணுவம் தங்கியுள்ளது.
  நன்றி தினக்குரல்

 வட மாகாண சபை ஊதாரிப் பிள்ளையா?
யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் முடிந்து விட்ட நிலையில் வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்தும் விவகாரம் இழுபட்டுக் கொண்டே செல்லும் நிலையில் இன்னமும் ஒரு வருடத்திற்கு ஆயுட்காலம் இருக்கும் நிலையில் கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகள் புதன்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்பட்டிருக்கின்றன. இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வாக 1987 ஜூலை இந்தியஇலங்கை உடன்படிக்கையின் பிரகாரம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் வடக்கு, கிழக்கை இணைத்துக்கொண்டு 8 மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு நிர்வாகம் அந்தந்த மாகாண சபைகளுக்கு கையளிக்கப்பட்டதும் பின்னர் வட, கிழக்கு மாகாண சபை நீதிமன்ற உத்தரவின் பேரில் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு 2008 இல் கிழக்கு மாகாண சபைக்கு தனியாக தேர்தல் நடத்தப்பட்டுமிருந்த நிலையில் வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்தும் விடயம் தட்டிக் கழிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.
வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்தி அரசியல் நிர்வாகத்தை அப்பகுதி தமிழ் மக்களிடம் ஒப்படைத்து நல்லிணக்கத்தை வலுப்படுத்துமாறு இந்தியா, அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்ற போதிலும் அது தொடர்பாக அக்கறை காட்டாத தன்மையையே கொழும்பு வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வட மாகாண சபைக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற வெளிநாட்டு நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்திருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாடளாவிய ரீதியில் குடிசன மதிப்பீடு இடம்பெற்று வருவதாகவும் அது நிறைவுபெற்றதும் புதிய வாக்காளர் இடாப்புகள் தயாரிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தப்படுமெனவும் தெரிவித்திருந்தார். ஆனால், மார்ச்சில் குடிசனமதிப்பீடு இடம்பெற்று  அதன் ஆரம்பகட்ட அறிக்கை நேற்று முன்தினம் புதன்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகளை கலைத்து புதிய தேர்தல்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறதே தவிர தேர்தல் நடத்துவதற்கான அவசியத் தேவையாக உள்ள வட மாகாண சபைக்கான தேர்தல் பற்றி அரசாங்கத் தரப்பிலிருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவரவில்லை. 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட முக்கிய அதிகாரங்களை பகிர்ந்தளிக்கப் போவதில்லையென்ற கடும் தொனியுடனான கருத்துகள் அரச தரப்பினரால் தொடர்ந்தும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
கால் நூற்றாண்டு காலமாக அரசியலமைப்பில் இருந்து வரும் மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாத  நிலையில் கூட வட மாகாண சபைக்கு தேர்தலை நடத்துவதில் அக்கறையோ, விருப்பமோ இல்லாத தன்மையே வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் உரிய காலத்துக்கு முன்பாக தற்போது மூன்று மாகாண சபைகளை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த உத்தேசித்திருப்பது ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் செல்வாக்கை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்தைக் கொண்டது என்று அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை சர்வதேச சமூகத்துக்கு காண்பிக்கும் நோக்கம் கொண்டதே இந்தக் காய் நகர்த்தல் என்று அவர்கள் கூறுகின்றனர். இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பதிவுகள், யுத்தத்துக்குப் பின்னரான கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான உலக காலக்கிரம மீளாய்வு இடம்பெறவுள்ள நிலையில், உள்நாட்டில் மக்கள் மத்தியில் உறுதியான செல்வாக்கு இருக்கின்றது என்பதை நிரூபிப்பதற்கான முயற்சியாகவும் இந்தக் குட்டித் தேர்தல்கள் காணப்படுகின்றன.
வட மாகாண சபைக்கு தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுவது தேர்தல் இடம்பெற்றால் அந்த மாகாண சபையின் நிர்வாகம், வட மாகாணத்தில் தமிழ் மக்களின் ஒரேயொரு நம்பகரமான பிரதிநிதிகளாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் சென்று விடும் என்று அரசு அஞ்சுவதனாலேயே என்று கூட்டமைப்பின் எம்.பி.யான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துகள் களநிலை யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன.
வட பகுதியில் பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல்களை அரசாங்கத்தினால் நடத்தக்கூடியதாக இருந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலை மட்டும் ஏன் நடத்த முடியாது என்ற கேள்விக்கு நியாயமான, நீதியான  பதில் அரசிடம் இல்லை என்பதே தெளிவான  உண்மையாகும். அதிலும் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட அந்த மாகாணத்திற்கு தேர்தலை நடத்த தயங்குகின்றமை அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் பாரபட்சமாகச் செயற்படுகின்றது என்று அர்த்தம் கொள்வதே தவிர இதில் வேறொன்றும் கிடையாது. இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இதய சுத்தியுடன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக  உலகிற்கு கூறிக்கொண்டு அதேசமயம், ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் மறு கண்ணுக்கு சுண்ணாம்பும் தடவும் கைங்கரியமே முன்னெடுக்கப்படுகின்றதென்ற பரவலான சந்தேகங்களை  களைவதற்கு இனிமேலாவது காலம் தாழ்த்தாது ஜனாதிபதியும் அரசாங்கமும் முன்வர வேண்டும் என்பது நியாயமாகச் சிந்திப்போரின் எதிர்பார்ப்பு. இதுவரை காலமும் கொழும்பின் கண்ணோட்டத்தில் வட மாகாண சபை ஒரு ஊதாரிப் பிள்ளையாகவே இருப்பதாக தோன்றுகிறது.
   நன்றி தினக்குரல்

No comments: