வானொலி மாமா நா.மகேசனின் குறளில் குறும்பு 38 – நூல்மறப்பர்



ஞானா:        அப்பா,
       
  “ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
            காவலன் காவா னெனின்”

       
        எண்ட குறளக்கு உரிய பொருள்களைப் பாத்தனாங்கள் தானே. கொடுங்கோன்மை  எண்ட 56 வது அதிகாரத்திலை உள்ள 560 தாவது குறள். இந்தக் குறளிலை எவ்வளவோ கருத்துகள் பொதிஞ்சிருக்கு இல்லையே அப்பா?

அப்பா:        வேறை என்ன? அதுதானே இந்தக் குறளை வைச்சு இப்ப மூண்டு நாளாய்   உரையாடிக் கொண்டிருக்கிறம் ஞானா.

சுந்தரி:        குறளிலை குறம்புவிட வெளிக்கிட்ட இவள் பிள்ளை ஞானா இப்ப குறளிலை நல்லாய் மாட்டுப்பட்டுப் போனாள். இல்லையே அப்பா?

அப்பா:     அவள் மட்டுமில்லைச் சுந்தரி. நீரும், நானும் சேர்ந்துதான் சிக்கியிருக்கிறம்.

ஞானா:        இதிலை ஒரு சிக்கலும் இல்லை அப்பா. நல்ல விஷயங்களை அலசிறது நல்லது தானே. இந்தக் குறளிலை ஆபயன் குன்றிறதைப் பற்றிப் பாத்தாச்சு. அறுதொழிலோர்  ஆர் எண்டும் பாத்தாச்சு, இனி அவர்கள் நு}ல் மறப்பர் எண்டதைப் பற்றிச்  சொல்லுங்கோவன் பாப்பம்.

அப்பா:        இதிலை வந்து ஞானா இந்த அறுதொழிலேர் ஆர் எண்டதை நாங்கள் விளங்கிக் கொண்டம்தானே?

ஞானா:        ஓமப்பா. அறவழியிலை வாழ்க்கைக்கை நடத்திப் பொதுநலனுக்காகத் தன்னலமற்ற சேவை செய்யிற பெருமக்கள்.

அப்பா:        இவையள் செய்யிற தற்காலத்துக்குப் பொருந்தமான ஆறு தொழில்களும் எவை எண்டு போனமுறை பாத்தனாங்கள் எண்டதைச் சொல்லுங்கோ பாப்பம்.


சுந்தரி:        நான் சொல்லிறன் அப்பா.


அப்பா:        சரி, சொல்லும் பாப்பம் சுந்தரி.


சுந்தரி:        அதாவது வந்ப்பா, கல்விகற்றல், கற்பித்தல், பொதுநலன்களுக்காகப் பெரு முயற்சி  எடுத்தல், அந்த காரியங்களுக்கு உதவி செய்தல், அந்தப் பொதுநலனுக்காக  நன்கொடை கொடுத்தல், அதே குறிக்கோளுக்காக நன்கொடை வசூலித்தல். சரிதானே ஞானா?


ஞானா:        அம்மா, பழையகாலத்திலை இதுகளை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,  ஈதல், ஏற்றல் எண்டு சொல்லியிருக்கினம். ஆனால் இந்தக்தாலத்திலை நீங்கள் சொன்ன கருத்துத்தான் சிறப்பு.

அப்பா:        ஆனால் ஒண்டு ஞானா இந்த ஈதல் எண்டது பிச்சை கொடுப்பதல்ல, அதே போல இரத்தல் எண்டதும் பிச்சை எடுக்கிறதல்ல எண்டதை நாங்கள் நினைவிலை வைச்சிருக்க வேணும்.

ஞானா:        சரி அப்பா. இந்த ஆறுதொழில்களையும் செய்யிற, அறவாழ்வு வாழ்கிற மக்கள் எப்பிடி நூல் மறப்பர்?


அப்பா:        ஞானா, இந்த அறவாணர்கள் மக்களுக்காக நல்ல அறநு}ல்களை இயற்றுவார்கள்.  அந்த நூல்களை மக்கள் படித்து, அதில் உள்ள அறங்களைப் பின்பற்றுவார்கள்.  அது எங்கை நடக்கும்? செங்கோன்மை நிலவுகிற நாட்டிலைதான் நடக்கும். இந்த உண்மையை வள்ளுவப் பெருந்தகை இதுக்கு முந்தின செங்கோன்மை எண்ட அதிகாரத்திலை சொல்லியிருக்கிறார்.

சுந்தரி:        விளங்குது அப்பா. இந்தக் கொடுங்கோன்மை எண்ட அதிகாரத்திலை அதுக்கு  நேர்மாறான கருத்தைச் சொல்லிறார். அதாவது நாட்டிலை கொடுங்கோன்மை  ஆட்சி நடக்குமெண்டால் இந் அறவோர்களுடைய நூல்களையும் அதுகளிலை உள்ள தருமங்களையும் ஒருத்தரும் கவனிக்க மாட்டினம் மறந்து போயிடுவினம் எண்டதுதான் கருத்து.



அப்பா:        சரியாய்ச் சொன்னீர் சுந்தரி. நு}ல்கள் எண்டதுக்கு வேதங்கள் எண்டும் பொருள்  சொல்லுவார்கள். “நான் மறை அறங்கள் ஓங்க” எண்டு கச்சியப்ப சிவாச்சாரியார்  சொன்னபடி நான்கு வேதங்களும் அறங்களைத்தானே சொல்லுகின்றன.

ஞானா:        அப்பா உப்பிடிப் பாத்தால், கொடுங்கோல் ஆட்சி நடக்கிற நாடுகளிலை ஒரு நல்ல காரியமும் நடக்காது எண்டு சொல்லுறியள்.

அப்பா:        எப்பிடி நடக்கும் ஞானா? கொடுங்கோன்மை உள்ள நாட்டிலை, கொலை, களவு, மரணபயம், ஒடுக்குமுறை இதுகள் எல்லாம் தாண்டவம் ஆடும். இதுகளுக்கிடையிலை  நல்ல காரியங்களை நினைக்கிற ஆக்கள் பயந்து, ஒதுங்கிப்போய் செயல் இழந்து மனம் வாடி இருப்பினம். அறத்தைப்பற்றிப் பேசவும் மாட்டினம், அறநூல்களைப் படிச்சு
மற்றவைக்கு விளக்குவும் மாட்டினம்.

சுந்தரி:        உதைத்தான் அப்பா திருவள்ளுவப் பெருந்தகை, அறுதொழிலோர் நூல் மறப்பர்        எண்டு சொல்லியிருக்கிறார்.

அப்பா:        ஓம் சுந்தரி. ஞானா குறும்புவிட எடுத்த குறள் எங்கள் எல்லாரையும் குலுக்கித் தள்ளிப் போட்டுது பாத்தீரே?

                “அபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
                காவலன் காவா னெனின்”

        நாடுகளை ஆழகின்ற ஆட்சியாளருக்கு அருமையான அறிவுறுத்தல், நீதியாய், நேர்மையாய், சமாதானமாய் நாட்டின் ஆட்சியை நடத்துங்கோ. இல்லா விட்டால் நாட்டிலை ஒரு நல்ல காரியமும் நடக்க வாய்ப்புக் கிட்டாது எண்டு செங்கோன்மை  கொடுங்கோன்மை எண்டு இரண்டு அதிகாரம் எழுதிவைச்சிருக்கிறார்.


(இசை)

No comments: