உலகச் செய்திகள்

சீனாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மற்றும் சிசுவான் எல்லைப் பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 4 பேர் பலியானார்கள், 100 பேர் காயம் அடைந்தனர்.
மலைப்பகுதி என்பதால் வீடுகள் இடிந்து சரிந்தன, தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன.
கட்டிட இடிபாடுகளுள் சிக்கி பலர் தவித்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினரும், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
நன்றி தினக்குரல்


 சிரிய இராணுவத்தினரின் தாக்குதலில் கடந்த வாரத்தில் மட்டும் 660 பேர் பலி
டமாஸ்கஸ்:  சிரியாவில் கடந்தவாரம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாத்திரம் 660 பேர் பலியாகியுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் கூறியுள்ளன. சிரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 660 பேர் பலியானதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத் பதவி விலகக் கோரி கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஐ.நா. சபை சமரச முயற்சியில் ஈடுபட்ட போதிலும் பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அலப்போ மாகாணத்தின் தரா அசா மற்றும் அல்அடாரிப் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக ஞாயிறன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களை ஒடுக்குவதற்காக இராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இது குறித்து அப்துல் ரஹ்மான் கூறியதாவது;
அண்டை நாடுகளுடன் போர் நடைபெற்ற காலத்தில் கூட, சராசரியாக ஒரு நாளைக்கு 20 பேர் கூட கொல்லப்படவில்லை. ஆனால், உள்நாட்டுப் போரில் தினமும் 100 ற்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர்.
கடந்த வாரத்தில் மட்டும் இராணுவத் தாக்குதலில் மொத்தம் 660 பேர் பலியாகி உள்ளனர். இது மிகவும் மோசமான வாரம் ஆகும். சிரியாவில் நிகழும் மனிதப் படுகொலையைச் சர்வதேச நாடுகளால் தடுக்க முடியவில்லை.
ஐ.நா. பார்வையாளர்களும் சமரச முயற்சியைக் கைவிட்டுவிட்டனர். இதனால் நிலைமை மோசமாகி வருகிறது. இவ்வாறு ரஹ்மான் தெரிவித்தார்.
சிரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை 15 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் ஆவர்.
நன்றி தினக்குரல்



சிரியா அரசிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இராணுவ ஜெனரல் ஒருவர் உட்பட பலர் வெளியேற்றம் 
26/06/2012
  சிரியா அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டு அநேக உயர் மட்ட இராணுவ முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டு வெளி யேறி துருக்கிக்கு வந்துள்ளதாக துருக்கிய ஊடகங்கள் அறிக்கை இட்டுள்ளன.

ஒரு இராணுவ ஜெனரல் இரு கேர்ணங்கள்,இரு மேஜர்கள் மற்றும் சுமார் 10 படை வீரர்கள் சிரியா எல்லையைக் கடந்து ஞாயிற்றுக் கிழமை இரவு ஹடே மாகாணத்தை வந்தடைந்துள்ளனர்.

சிரியா எல்லையைக் கடந்து ஞாயிற்றுக் கிழமை இரவு முதல் திங்கட் கிழமை வரை சுமார் 200 பேர் துருக்கியில் பிரவேசித்துள்ளதாக அன டோலியா செய்தி முகவர் நிலையம் தெரிவிக்கிறது.

சிரியா கடற்கரைக்கு அப்பால் வானில் பயணித்த துருக்கிய போர் விமானம் சிரியாப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதை அடுத்து இரு விமானிகள் காணாமல் போயுள்ளனர். இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து துருக்கிய அமைச்சரவையில் திங்கட்கிழமை கலந்துரையாடப்பட்டது.

அதே சமயம் சிரியா தொடர்பில் நேட்டோ நாடுகளின் தூதுவர்கள் புரு ஸல்ஸில் கூடி கலந்துரையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் மார்ச் மாதம் சிரியாவில் வன் முறைகள் ஆரம்பமானது முதற்கொண்டு அந் நாட்டிலிருந்து 33, 000 பேருக்கும் அதிகமானோர் துருக்கியை வந்தடைந்துள்ளனர்.

சிரியா அரசாங்கத்திலிருந்து வெளியேறியவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சிரியா விடுதலை இராணுவத்துக்கு துருக்கி பகிரங்கமாக ஆதரவளித்து வருகிறது. ஏற்கனவே சிரியா அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 12 இராணுவ ஜெனரல்கள் வெளியேறியுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு சிரியாவிலிருந்து வெளியேறியவர்கள் அபேடின் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 
 நன்றி வீரகேசரி

 கொபி அனானின் தீர்வுத் திட்டத்துக்கு ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு
_Kofi-Annan_2149424bடமாஸ்கஸ்:  சிரியாவில் அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும் தேசிய ஐக்கிய அரசாங்கமொன்றை  அமைப்பதற்கான  ஐ.நா.  சிறப்புத் தூதுவர் கொபி அனானின்  அமைதித் திட்டத்திற்கு ரஷ்யாவும்  ஏனைய வல்லரசு  நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
புதிய அமைச்சரவையில் அரச தரப்பு  மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கும்  மேற்குலக நாடுகள், புதிய அமைச்சரவையின் நம்பகத் தன்மையை சீர்குலைக்கும் எந்தவொரு  நபரையும் அமைச்சரவைக்குள் உள்வாங்க வேண்டிய தேவையில்லை எனவும் வலியுறுத்தியுள்ளன.
சனிக்கிழமை சிரியாவில் இடம்பெறவுள்ள  ஐ.நா.  செயற்குழு சந்திப்பில்  இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சிரியாவில் யுத்தம் இடம்பெறுவதாக  ஜனாதிபதி பஷார் அல் அசாட் கூறியுள்ளார்.
நிலையான காலவரையறை மற்றும் தெளிவான ஆட்சிமாற்ற  நடைமுறைகளுடனான  தீர்வுத் திட்டங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை என அனான் கூறியுள்ளார்.
ஆட்சி மாற்றத்தை நியாயமான முறையில் நடத்துவதற்குரிய ஆட்சிமாற்றத்துக்கான தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றையும்  அமைக்க  வேண்டியிருப்பதாக அனான்  கூறியுள்ளார்.
இந்த  தேசிய அரசில் தற்போதைய அரச உறுப்பினர்கள், எதிரணியினர்  ஏனையோர் உள்ளடக்கப்படுவதுடன், ஆட்சி மாற்றத்தின் நம்பகத் தன்மையை சீர்குலைக்கும் விதத்தில் நடந்து கொள்பவர்கள்   நியமிக்கப்படமாட்டார்கள் எனவும் கொபி அனான் கூறியுள்ளார்.
இந்நிலையிலும் சிரியாவின் சில பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 நன்றி தினக்குரல்

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மீதான வழக்கினை விசாரணை செய்வது  தொடர்பாக எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு புதிய பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பிடம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள அஷ்ரப்புக்கு பதவியேற்ற நாள் முதலிலேயே நீதிமன்றினால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு  வருகின்றார்.
முந்தைய இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் அதிபராக இருந்த போது ஏராளமான அரசியல் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொது மன்னிப்பு அளித்து அவர்களை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்தார். அதில் சர்தாரியும் ஒருவர்.
ஆனால், ஆசிப் அலி சர்தாரி மீதான வழக்கை மேற்கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது நல வழக்கு தொடரப்பட்டது. அதை பரிசீலித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனடிப்படையில் சர்தாரி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு முந்தைய பிரதமர் யூசுப் ரஸா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதை அவர் கேட்கவில்லை. ஜனாதிபதி மீது விசாரணை நடத்தக் கோருவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறினார். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு காரணமாக அவரை தகுதி நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து புதிய பிரதமராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் கடந்த 22 ஆம் திகதி பதவியேற்றார். எந்தப் பிரச்சினைக்காக யூசுப் கிலானி பதவி பறிபோனதோ, அதே பிரச்சினை இப்போது ராஜா பர்வேஸ் அஷ்ரப் எதிர்கொண்டுள்ளார்.
இந்த விவகாரம் நீதிபதி நாசிர் உல் முல்க் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜனாதிபதி மீது விசாரணை நடத்துவது தொடர்பாக அரசின் நிலைப்பாடு குறித்து ஜூலை 12 ஆம் திகதி தெரிவிக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் உத்தரவிட்டார்.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்ற உடனேயே ஜனாதிபதி மீதான வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக சுவிஸ் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதப் போவதில்லை என்று அஷ்ரப் உறுதிப்பட தெரிவித்திருந்தார். இந்த விடயத்தில் தான் கிலானியின் கருத்தையே கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தனது அரசு எந்த ஒரு அரசுத் துறையுடனும் மோதல் போக்கை மேற்கொள்ள விரும்பவில்லை என்றும் அரசியலமைப்பின் படியும் சட்டப் படியும் தான் பணியாற்றப் போவதாக அவர் தெரிவித்தார்.
சர்தாரி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சுவிஸ் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதுமாறு 2009 ஆம் ஆண்டிலிருந்தே உயர் நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது.
இதனிøடையே  அரசியல்வாதிகள் மட்டுமன்றி நீதிமன்றத்தைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்கையும் விசாரிப்பதில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி.) தீவிரமாக உள்ளது.
வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்காக உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி மகனுக்குக் கட்டுமான தொழிலதிபர் மாலிக் ரியாஸ் ஹுசேன் ரூ.34 கோடி இலஞ்சம் அளித்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆளும் கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
  நன்றி தினக்குரல்


ருரேக் போராளிகள் வசமிருந்த காயோ நகர் இஸ்லாமிய படையினர் வசம்
பம்கோ:  மாலியில் ருரேக் தலைமையிலான போராளிகளுடனான மோதல்களின் பின் கயோ நகரினை இஸ்லாமியப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இம்மோதல்களில் 20 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை ருரேக் போராளிகளின் அரசியல் தலைவரொருவனும் காயமடைந்துள்ளார்.
நகரிலுள்ள ருரேக் தலைமையகம் உட்பட அவர்களுடைய கட்டிடங்களை அல்ஹைடாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய போராளிகள் கைப்பற்றியுள்ளதாக அந்நகர வாசிகள் தெரிவிக்கின்றனர்.
வடமாலியை ருரேக் மற்றும் இஸ்லாமியர் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளமை அங்கு பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
கடந்த செவ்வாய் இடம்பெற்ற மோதல்களில் அரசியல் தலைவர் பிலால் அக் சேரிப் காயமடைந்துள்ளதாக அப்போராளிகளின் போச்சாளர் பி.பி.சி. சேவைக்கு தெரிவித்தார்.
உள்ளூர் அதிகாரியொருவர் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டமையை அடுத்தே கயோ நகரில் மோதல்கள் நடைபெற ஆரம்பித்தன.
இம் மோதல்களில் பாரிய யுத்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நகரவாசிகள் தெரிவித்தனர்.
மார்ச் 22 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் போராளிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை தொடர்ந்து 300,000 இற்கு மேற்பட்ட பொது மக்கள் தஞ்சம் கோரி வட மாலிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 நன்றி தினக்குரல்

No comments: