உலகச் செய்திகள்

.
நவநீதம்பிள்ளையின் இரண்டாவது பதவிக்காலம்

சிரிய இராணுவத்தின் வெறியாட்டம்: குழந்தைகள் உட்பட 92 பேர் பலி

இத்தாலியில் நிலநடுக்கம்


கொன்சர் வேட்டிவ் கட்சி தலைமையகத்துக்கு பார்சலில் வந்த மனிதக் கால்

நைஜீரியாவில் வன்முறை: 45 பேர் பலி


கட்டாரில் இடம்பெற்ற தீ விபத்தில் 19 பேர் பலி

போர்க்குற்றவாளி சார்ள்ஸ் டெய்லருக்கு 50 வருட சிறை

நவநீதம்பிள்ளையின் இரண்டாவது பதவிக்காலம்

Monday, 28 May 2012 20:05

ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு இரண்டாவது பதவிக்கால நீடிப்பு அரைமனதுடன் வழங்கப்பட்டிருப்பதாக தென்படுகிறது. தென்னாபிரிக்காவின் முன்னாள் நீதிபதியாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் பணிபுரிந்த நவநீதம்பிள்ளை 2008 செப்டெம்பரில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டிருந்த அவரின் முதலாவது பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மேலும் இரு ஆண்டுகளுக்கு அவரின் சேவைக்காலத்தை நீடிக்க ஐ.நா. பொதுச் சபை அங்கீகரித்துள்ளது.


இரண்டாவது பதவிக்காலமாக நான்கு வருடங்களுக்கு பணிபுரிய நவநீதம்பிள்ளை கோரியிருந்தபோதிலும் அதனை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிராகரித்து விட்டதாக ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேவேளை அவர் இருவருடங்களுக்கு மட்டுமே பணிபுரிய விருப்பம் தெரிவித்திருந்ததாக மற்றொரு தரப்பினர் கூறியுள்ளனர். ஆனால், நவநீதத்தின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அமெரிக்கா கடும் ஆட்சேபனையை தெரிவித்திருந்ததாகவும் ஆயினும் பிள்ளையின் சொந்த நாடான தென்னாபிரிக்காவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் மனதை மாற்றி இருவருட பதவிக்கால நீடிப்புக்கு இணங்கச் செய்ததாகவும் அறிய வருகிறது. சீனா, சிரியா மற்றும் மனித உரிமைகளை மீறுவோர் மீது நவநீதம்பிள்ளை கடுமையாக நடந்துகொள்ளவில்லையெனவும் அதேசமயம் இஸ்ரேல் அரசாங்கத்துக்கு எதிராக திரும்பத்திரும்ப பக்கச்சார்பான தன்மையை அவர் வெளிப்படுத்தியிருந்ததாகவும் தெரிவித்தே ஒபாமா நிர்வாகம் நவநீதம்பிள்ளையின் இரண்டாவது பதவிக்கால நீடிப்புக்கு பகிரங்கமாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இருவருடங்களுக்கு நவநீதத்தின் பதவியை நீடிக்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் மேற்கொண்டிருந்த சிபார்சை ஐ.நா. பொதுச் சபை அங்கீகரிப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் விசனத்துடனான கடிதம் ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் ரைஸின் கரத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வழமையாக இருந்துவரும் நடைமுறையைப் பின்பற்றி நவநீதம்பிள்ளைக்கு பதவிக்காலத்தை இருவருடங்களுக்கு நீடிப்பதாக காட்டிக்கொண்டாலும் இந்த நியமனம் தொடர்பாக ஏனைய வேட்பாளர்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டுமென்ற எண்ணப்பாட்டை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கொண்டிருப்பதாக நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் அங்கீகரிக்கப்பட்ட செய்திச் சேவையான இன்னர் சிற்றி பிரஸ் குறிப்பிட்டிருக்கிறது. நவநீதம்பிள்ளைக்கு இருவருட கால பதவி நீடிப்பை வழங்கும் ஐ.நா. செயலாளரின் பிரேரணை தொடர்பாக ஆராய்ந்து அங்கீகரிப்பதற்காக வியாழன் மாலை ஐ.நா. பொதுச் சபை கூடிய போது அக்கூட்டத்தில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் தரத்தில் இல்லாத சிரியாவின் பிரதிநிதி மட்டுமே உரையாற்றியுள்ளார். அத்துடன் அக்கூட்டத்திற்கு பான் கீ மூனோ அல்லது அவரின் பிரதி அதிகாரியான ஆஷா ரோஸ்மைக்கிரோபோ பிரசன்னமாகியிருக்கவில்லையென்று கூறப்படுகிறது.

தென்னாபிரிக்காவில் இந்திய வம்சாவளி தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நவநீதம்பிள்ளை பலபடிகளைத் தாண்டியே ஐ.நா. வில் உயர் பதவியை பெற்றுக்கொண்டவராகும். உலகளாவிய ரீதியில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அளப்பரிய பணிகளை முன்னெடுத்தவரெனவும் தற்போதும் தீவிரமாக முயற்சிக்கப்படுவபரெனவும் நியாயமான சிந்தனை கொண்டவர்களால் கருதப்படுபவர். மனச்சாட்சிக்கு விரோதமின்றி அதேசமயம் தான் வகிக்கும் பதவிக்கான விதிமுறை வரம்பை மீறாமலும் செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை மனித உரிமைகளை உதாசீனம் செய்துவரும் அரசாங்கங்களின் கண்டனத்துக்கும் விசனத்துக்கும் உள்ளாகியமை எதிர்பார்க்கப்பட்ட விடயமேயாகும். வாஷிங்டனிலுள்ள இஸ்ரேல் ஆதரவாளர்களினால் அவர் எதிர்ப்புக்குள்ளாகியிருந்த போதிலும் ஐரோப்பிய அரசாங்கங்கள் பல அவரை வெகுவாகப் பாராட்டியிருக்கின்றன. பிரிட்டனின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் ஜெரமி பிரவுணியிடமிருந்து பிள்ளைக்கு இரண்டாவது பதவிக்கால நீடிப்பு கிடைத்ததும் உடனடியாகவே பாராட்டுத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நவநீதம்பிள்ளையென்ற தனி மனிதருக்கு அப்பால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரென்ற ரீதியில் அவருக்குள்ள பொறுப்புகளை அவர் சிறப்பாக இதுவரை காலமும் நிறைவேற்றியிருக்கிறாரா என்பதைப் பார்ப்பதே முக்கியமானதாகும். ஐவரி கோஸ்ட், அரபு வசந்தம், ஏன் இலங்கை விவகாரங்களில் கூட மனித உரிமைகள் விவகாரத்தில் தனது வரையறைக்குள் அவர் சிறப்பான பணிகளை முன்னெடுத்து வந்துள்ளார். ஆனால், அரை மனதுடனேயே அவருக்கு இரண்டாவது பதவிக்கால நீடிப்பு வழங்கப்பட்டிருக்கமானால் உலகநாடுகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் ஐ.நா. முறைமையில் குறைபாடு இருக்கின்றது என்ற சந்தேகமே பரவலாக ஏற்படும். மனித உரிமைகள் உலகின் எந்தப் பகுதியில் இடம்பெற்றாலும் அவற்றைத் தடுத்து நிறுத்துமாறு உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய சக்தியாக அடுத்த இரு வருடங்களுக்காவது நவநீதம்பிள்ளை விளங்குவார் என்பது நியாயமான சிந்தனையாளருக்கு நிச்சயமாக சிறிதளவு ஆறுதலளிக்கும் செய்திதான்.
nantri thinakkural
 
சிரிய இராணுவத்தின் வெறியாட்டம்: குழந்தைகள் உட்பட 92 பேர் பலி


27/5/2012
சிரிய ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை ஒடுக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 32 குழந்தைகள் உட்பட 92 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் பதவி விலக வேண்டும் என்பதற்காக கடந்த 14 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹெளலாவில் நேற்று இராணுவம் நடத்திய தாக்குதலில் இளம் பிஞ்சுகள் அகோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். சிலரது மண்டை ஓடுகள் பிளந்து இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கிற காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சிரிய ராணுவத்தின் கோரத் தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், பொதுமக்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை சிரியா இராணுவம் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

nantri virakesari

 இத்தாலியில் நிலநடுக்கம்

Wednesday, 30 May 2012

ரோம்: வடஇத்தாலியின் எமிபியா பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் italy_quake_16 பேர் பலியாகியுள்ளதுடன் சிலர் கட்டிட இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செவ்வாய்க்கிழமை 5.8 மக்னிரியூட் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பும் அதே பிராந்தியத்தில் இடம்பெற்றிருந்த நிலநடுக்கத்தில் 7 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அதேவேளை பல கட்டிடங்கள் இடிந்து அழிவடைந்துள்ளன.

மிலான் மற்றும் போலாங்னா நகர்களிலும் நில நடுக்கம் இடம்பெற்றுள்ளது.

போலோங்னா நகரில் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலநடுக்கத்தின் போது பல நூற்றாண்டு பழைமை வாய்ந்ததும், பெறுமதியானதுமான கட்டிடங்கள் பல அழிவடைந்துள்ளன.
italy_quake_2










nantri thinakkural

கொன்சர் வேட்டிவ் கட்சி தலைமையகத்துக்கு பார்சலில் வந்த மனிதக் கால்

Wednesday, 30 May 2012

canada_leg_1டொரன்டோ: கனடாவின் ஒட்டோவா நகரிலுள்ள கொன்சவேடிங் கட்சியின் தலைமையகத்திற்கு மனித காலொன்று பார்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ள அதேவேளை மொன்ரியலில் அக்காலுக்குரிய உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித காலுள்ள பார்சல் கிடைத்து சில நேர இடைவெளியில் மொன்ரியலில் இன்னொரு பார்சலும் கிடைத்துள்ளதாக மொன்ரியல் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் எங்கு, அல்லது எந்த முகவரியில் அப்பார்சல் கிடைத்தது என்பது தொடர்பில் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.


கட்சியின் தலைமையகத்திற்கு வந்திருந்த இரத்தம் தோய்ந்த பார்சலைக் கண்டு அதிர்ச்சியடைந்திருந்த அதிகாரிகள் அபாயகரமான பொருட்களை பரிசோதிக்கும் விஷேட அதிகாரிகளை அழைத்து திறந்து பார்த்துள்ளனர். அப்பார்சலில் காலொன்று இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கனடாவிலுள்ள கொன்சர்வேட்டிங் கட்சியின் விலாசம் அப்பார்சலில் குறிப்பிட்டிருந்த போதும், தனிப்பட்ட நபரின் பெயர் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இரு நகர்களிலும் கிடைக்கப்பட்ட உடல் பாகங்கள் குறிப்பிட்ட ஒருவருடையதாகவே இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
nantri thinakkural

நைஜீரியாவில் வன்முறை: 45 பேர் பலி


30/ 5/2012

நைஜீரியாவில் இரு பிரிவினரிடையே நேற்று நடந்த வன்முறையில் 45 பேருக்கு ‌மேல் கொல்லப்பட்டனர்.

இதில் கிராம தலைவர் மற்றும் ‌நான்கு பொலிஸாரும் பலியானதாக அந்நாட்டு செய்தி ‌குறிப்பு தெரிவிக்கிறது.

நைஜீரியாவின் தென்கிழக்குபகுதியில் நிதன் ஓபு மற்றும் இக்பன்யா இரு பிரிவினர்களிடையே வன்முறை ஏற்பட்டதில் வீடுகள் மற்றும் தேவாலயங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

மேலும் அங்குள்ள தலைமை காவல் நிலையமும் ‌இடிக்கப்பட்டது.‌

தரைமட்டமான வீடுகளில் 2 ஆயிரம் பேருக்கு மேல் வசித்து வந்தனர்.கலவரத்திற்கு முக்கிய காரணம் இரு மாகாணங்களின் எல்லை பிரச்சினையே என்பது குறிப்பிடத்தக்கது.
nantri வீரகேசரி


கட்டாரில் இடம்பெற்ற தீ விபத்தில் 19 பேர் பலி


29/5/2012

கட்டாரின் தலைநகர் டோஹாவில் இடம்பெற்ற தீ விபத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பலர் சிறுவர் சிறுமியர் என்பது குறிப்பிடத்தக்கது.

விலேஜியோ சென்டர் என்னும் கட்டிடத்தில் இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஸ்பெய்ன், நியூசிலாந்து, பிரான்ஸ் நாட்டு சிறுவர் சிறுமியர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர் பூங்கா பகுதியில் தீ பற்றிக் கொண்டதாகவும், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புப் படையினர் பாரிய போராட்டம் நடத்தியதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் சேக் அப்துல்லா பின் நாசர் தானி தெரிவித்துள்ளார்.

இத் தீ விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தீயணைப்புப் படை வீரர்களும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டடம் உரிய முறையில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்படாத காரணத்தினால் தீ பரவுவதைத் தடுக்க முடியவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியாளர்களும் உரிய முறையில் தமது கடமைகளை செய்யத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட விதம் திருப்தி அடையக் கூடிய வகையில் அமையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வீரகேசரி இணையம்

போர்க்குற்றவாளி சார்ள்ஸ் டெய்லருக்கு 50 வருட சிறை


 31/5/2012

லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு ஐ.நா ஆதரவுடனான போர்க்குற்ற நீதிமன்றம் 50 வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த 1991ஆம் ஆண்டுக்கும், 2002ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் சியாரா லியோனில் இடம்பெற்ற போரின் போது கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்து, அவற்றுக்குப் பதிலாக இரத்தினங்களை ( Blood Diamond) பெற்றுக் கொண்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அத்துடன், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைப் படுகொலை செய்யப் கிளர்ச்சியாளர்களுக்கு உதவி புரிந்தார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

தீவிரவாதம், படுகொலை, பாலியல் வல்லுறவு ஆகியவற்றுக்குத் துணை போனார் என உட்பட 11 குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. சியேரா லியோனியில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 120,000 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக ஐ.நாவின் விசேட போர்க்குற்ற நீதிமன்றம் நெதர்லாந்தின் தலைநகரான ஹேக்கில் ஐந்து வருட காலமாக விசாரணைகளை மேற்கொண்டு, அவர் ஒரு போர்க்குற்றவாளி என கடந்த மாதம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், சார்ள்ஸ் டெய்லருக்கு ஐ.நா ஆதரவுடனான போர்க்குற்ற நீதிமன்றம் இன்று 50 வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

டெய்லருக்கு 80 வருடகால சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என வழக்குத் தொடுநர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், நீதிபதி ரிச்சர்ட் லூசிக் 50 வருட சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார்.

இத்தீர்ப்புக்கு எதிராக சார்ள்ஸ் டெய்லர் மேன்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை நெதர்லாந்தின் தலைநகரான ஹேக்கில் உள்ள விசேட போர்க்குற்ற நீதிமன்றத்தில் நடைபெற்ற முன்னாள் பொஸ்னிய சேர்ப்ஸ் இராணுவ ஜெனரல் ரெட்கோ மிளடிக்( 70) மீதான போர்க்குற்ற வழக்கு அண்மையில் காலவரையறையின்றி இடைநிறுத்திவைக்கப்பட்டது.

மிளடிக்கின் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களால் ஆதாரத்தை உரியமுறையில் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தவறுதல்களாலேயே இவ்வழக்கு இடைநிறுத்தப்பட்டது.

'Butcher of Bosnia' என வர்ணிக்கப்படும் ரெட்கோ மிளடிக் பொஸ்னிய சிவில் யுத்தத்தின் போது சுமார் 8,000 முஸ்லிம்களை படுகொலை செய்ததுடன், பொஸ்னிய தலைநகர் சரஜிவோ நகரில் சுமார் 10,000 பேர் படுகொலை செய்யப்பட்டமைக்கு இவர் காரணமாக இருந்தார் என இவர் மீது வழக்குத்தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி







No comments: