இலங்கைச் செய்திகள்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கவனத்திற்கு...

இலங்கை எதிர்நோக்கும் உண்மையான சவால்


முற்றுமுழுதாக சர்வதேச சமூகத்தை நம்பி...


கூட்டமைப்பு முன்னாள் எம்.பி. சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிப்பு “கிறிஸ் பூதம் வழக்கு விசாரணை தொடர்பாக”
தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள் வெலிக்கடை சிறைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்


மீள்குடியேறும் மக்களுக்கான நிரந்தர வாழ்வாதார உதவிகளை அவுஸ்திரேலியா தொடர்ந்து வழங்கும் யாழ்.வந்துள்ள அந்நாட்டு தூதுவர் உறுதிகுடாநாட்டில் கடத்தல் உட்பட குற்றச் செயல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள் வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கைஉன்னிச்சை அணைக்கட்டின் கீழ் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கவனத்திற்கு...

Monday, 28 May 2012

தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கான வழிவகைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விடுத்திருந்த அறிக்கை நாட்டில் அரசியல் நிலைவரங்களைப் பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கிய கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதொன்று என்பதில் சந்தேகமில்லை.


அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தமை தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய செயன்முறைகளுக்கும் இன நெருக்கடிக்கு இலங்கையில் தீர்வொன்றைக் காண்பதற்கான வழிமுறைகளுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய பாரிய பின்னடைவு என்று வர்ணித்த எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செற்பாடுகளுடன் சமாந்தரமாகச் செல்லக்கூடிய வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவுக்குழுவில் எதிரணிக் கட்சிகள் பங்கேற்பதற்கு உகந்த சூழ்நிலையை அரசாங்கம் தோற்றுவிக்க வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டிருக்கிறார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை (அதிகாரப் பரவலாக்கல் உட்பட) நடைமுறைப்படுத்துதல், அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதுடன் அர்த்தபுஷ்டியான அதிகாரப் பரவலாக்கத்தைச் செய்வதை நோக்கி அந்தத் திருத்தத்திற்கும் அப்பால் செல்வது, அரசாங்கப் பாராளுமன்றக் குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்பட்ட ஆவணங்களை கருத்தில் எடுத்தல் ஆகிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதன் மூலமாகவே மேற்கூறப்பட்ட உகந்த சூழ்நிலையைத் தோற்றுவிப்பது சாத்தியமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

சகல பேச்சுவார்த்தைகளும் ஆலோசனை தரப்புகளும் இவ்வருட இறுதிக்குள் முடிவடைய வேண்டுமானால், குறைந்தபட்சம் அடுத்த மாதம் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று விக்கிரமசிங்க தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்காக சபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவுக்குழுவின் செயற்பாட்டுக் காலம் ஆறு மாதங்கள் என்று வரையறை செய்யப்பட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டே எதிர்க்கட்சித் தலைவர் இதைக் கூறியிருக்கிறார். அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தமைக்கான காரணங்கள் குறித்து “பிரேதப் பரிசோதனை‘ நடத்துவதை விடுத்து இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீள ஆரம்பிக்க வேண்டியதே அவசியமானதாகும் என்று கூறியிருக்கும் விக்கிரமசிங்க இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்படக்கூடிய சகல தீர்மானங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்குமென்று உறுதியளித்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் தரப்பில் பதிலளித்துப் பேசிய சபை முதல்வரான நீர்ப்பாசன அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான செயன்முறைகளை விரைந்து முன்னெடுப்பதற்கு தாங்கள் எதிர்க்கட்சியுடன் இணங்குவதாக அறிவித்தாரே தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு விருப்பத்தை வெளிக்காட்டக்கூடிய எந்தச் சமிக்ஞையையும் காண்பிக்கவில்லை என்பதே கவனிக்கத்தக்கது. கடந்த வருடம் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒரு இடைக்கட்டத்திலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் பங்கேற்க மறுத்த காரணத்தினால் பேச்சுவார்த்தைகள் முறிவடையவில்லை. தெரிவுக்குழுவின் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும் தொடருவதில் அரசாங்கத்திற்கு எந்தப் பிரச்சினையுமே இல்லையென்று வேறுயாருமல்ல ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பகிரங்கமாகக் கூறியிருந்தார். இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் காணப்படக்கூடிய இணக்கப்பாட்டைத் தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கத் தயாராயிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசாங்கத் தரப்பினரால் உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இத்தகைய உறுதிமொழி எந்தச் சந்தர்ப்பத்திலுமே அவர்களுக்கு அளிக்கப்படவில்லையென்று அரசாங்கத் தரப்பில் எவருமே இதுவரை மறுதலிக்கவில்லை.

எந்தவிதமான முன்னேற்றமுமின்றி தொடர்ந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளையும் கூட தாங்களாக முறித்துக்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் விரும்பவில்லை. அவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான அடிப்படை அம்சங்களில் உருப்படியான உறுதிமொழிகளை அளிக்க வேண்டிய கட்டம் வந்ததும் அதில் இருந்து நழுவிக் கொள்வதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்த அரசாங்கம் தெரிவுக்குழுவில் பங்கேற்கும் பட்சத்திலேயே இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளைத் தொடரக்கூடியதாக இருக்குமென்ற நிபந்தனையை முன்வைத்தது. இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்து அதில் காணப்படக்கூடிய இணக்கப்பாட்டைத் தெரிவுக்குழுவில் அரசாங்கம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அக்கட்டத்தில் இருந்து தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்குத் தயாரென்றே கூட்டமைப்பின் தலைவர்கள் கூறிவந்திருக்கிறார்கள்.

இத்தகைய நிலையில் பிரதான எதிர்க்கட்சி தெரிவுக்குழுவின் செயற்பாடுகளுடன் சமாந்தரமானதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கம் மீள ஆரம்பிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அத்துடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் மேற்கொள்ளப்படக்கூடிய சகல தீர்மானங்களையும் ஆதரிக்கத் தயாராயிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உறுதியளித்திருக்கிறார். இச்சந்தர்ப்பத்தை எவ்வாறு பயன்படுத்துவதென்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கைகளிலேயே உள்ளது. விக்கிரமசிங்கவின் அறிவிப்பு தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை பகிரங்கமாகக் கூட்டமைப்பின் தலைவர்கள் அறிவிக்க வேண்டும். சர்வதேச சமூகம் இலங்கை நெருக்கடி தொடர்பில் தீவிரமாக அவதானித்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கேற்ப நிதானத்துடனும் அரசியல் வேகத்துடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். இந்த விவகாரத்திலாவது இந்தத் தலைவர்கள் ஒருமித்த குரலில் ஒரு நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்!
nantri thinakkural


இலங்கை எதிர்நோக்கும் உண்மையான சவால்


Monday, 28 May 2012

புலம்பெயர்ந்த தமிழர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் செயற்பாடுகள் இலங்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறுகின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் காட்டுகின்ற அக்கறைக்கும் புலம்பெயர் தமிழர்களின் பிரசாரங்களே பின்புலமாக இருப்பதாக குறைகூறுகிறது. இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய பொருளாதார அபிவிருத்திப் பணிகளை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்படுவதாக புலம்பெயர் தமிழர்களைக் குற்றஞ்சாட்டும் அரசாங்கம் அவர்கள் மத்தியிலுள்ள அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்ற இலங்கைக்கெதிரான பிரசாரங்களை முறியடிப்பதையே அதன் பிரதானமான இராஜதந்திர செயற்பாடாக மாற்றி இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவமயத்தைக் குறைப்பதற்கு இயலாமல் இருப்பதற்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருக்கக்கூடிய ஈழம்வாதிகளின் அச்சுறுத்தலையே அரசாங்கம் காரணம் காட்டுகிறது.

உள்நாட்டுப் போரில் தங்கள் இரத்த பந்தங்கள் இலங்கையில் அனுபவிக்க வேண்டியிருந்த அவலங்களுக்கெதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் குரல்கொடுத்து வந்திருக்கிறார்கள். இவர்களில் சகலருமே இலங்கையில் தமிழரின் அரசியல் உரிமைப் போராட்டங்கள் வழிநடத்தப்பட்ட முறையை முற்றுமுழுதாக ஆதரித்தவர்கள் என்று கூறிவிட முடியாது. சகல சமூகங்கள் மத்தியிலும் காணப்படுவதைப் போன்று வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் பல்வேறுபட்ட அரசியல் கருத்துக்களும் சிந்தனைகளும் நிலவவே செய்கின்றன. போர் முடிவடைந்துவிட்ட போதிலும் அந்தப் போருக்கான அடிப்படைக் காரணியான இன நெருக்கடியின் விளைவாக சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் இலங்கையில் அரசியல் நிகழ்வுப் போக்குகள் தொடர்பில் தங்கள் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவது இயல்பானதேயாகும். இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு நோக்கிய செயன்முறைகளில் உருப்படியான நகர்வு எதனையும் காண முடியாததால் புலம்பெயர் தமிழர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவே அவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் செயற்பாடுகளை நோக்க வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களை ஒட்டுமொத்தமாக துரோகிகளாக நோக்கும் அணுகுமுறையை அரசாங்கம் கடைப்பிடிக்கக்கூடாது என்பதே எமது அபிப்பிராயமாகும்.

இலங்கை நெருக்கடியை மையமாக வைத்து புலம்பெயர்ந்த தமிழர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற சகல அரசியல் செயற்பாடுகளையும் இலங்கைக்கு விரோதமானவையாக நோக்கவும் கூடாது. தமிழர்களின் அரசியல் உரிமைக்கான கடந்த காலப் போராட்டங்களில் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய தவறுகளை இலங்கையிலுள்ள தமிழர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பதைப் போன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. விடுதலைப் புலிகளை அரசாங்கம் எவ்வாறு நோக்கியதோ அதேபோன்று புலம்பெயர்ந்த தமிழர்களைப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் நோக்குவது தேசிய நல்லிணக்கத்திற்கான சூழ்நிலையை இதுவரை ஏற்படுத்துவதற்கு உதவவில்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான செயன்முறைகளில் அரசாங்கத்திற்கு ஓரளவுக்கேனும் அக்கறையிருக்கிறது என்று தமிழ்மக்கள் நம்பக்கூடியதான உருப்படியான எந்தவொரு அரசியல் சமிக்ஞையையும் அரசாங்கம் காட்டுவதற்குத் தயங்குகிறது. வெறுமனே மேலோட்டமான அறிவிப்புகளினால் தமிழ்மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துவிட முடியாது. தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அரசியல் பிரதிநிதிகளின் குறைந்தபட்சக் கோரிக்கைகளுக்காவது இணங்குவதன் மூலமாக சமிக்ஞையைக் காட்டுவதற்கான வாய்ப்பிருக்கின்ற போதிலும் அதைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அக்கறையில்லை. சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தைப் பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்திற்கான செயன்முறைகளில் பயனுறுதியுடைய முறையில் முன்னேற்றத்தைக் காண்பதற்கான வாய்ப்புக்களை அரசாங்கம் தொடர்ந்து தவறவிட்டுக்கொண்டே இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் இலங்கைச் சமுதாயம் எதிர்நோக்குகின்ற மெய்யான சவால் போருக்குக் காரணமாய் அமைந்த இன நெருக்கடியைப் பயன்படுத்தி மீண்டும் எந்த வழியிலும் அமைதியின்மை தோன்றாதிருப்பதை உறுதி செய்வதற்கான தொலைநோக்குடனான அணுகுமுறைகளைக் கையாளுவதற்கான அரசியல் துணிச்சலைக் காட்டவேண்டியதேயாகும். அதை இதுவரை நாட்டின் அரசியல் தலைமைத்துவம் செய்யவில்லை. தமிழ் பேசும் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு பெரும்பான்மை சிங்கள மக்களைத் தயார்ப்படுத்துவதற்குப் பதிலாக போர்க்கால மனோ நிலையில் அவர்களை வைத்திருப்பதற்கே அரசாங்கம் இன்னமும் விரும்புகின்ற துரதிர்ஷ்டவசமான நிலையைக் காண்கிறோம். உள்நாட்டுத் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதில் அரசாங்கம் மானசீகமாக அக்கறை காட்டுமேயானால், அவர்களினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான செயன்முறைகளைத் துரிதமாக முன்னெடுப்பதில் அக்கறை காட்டுமேயானால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இலங்கையை மையமாகக்கொண்ட செயற்பாடுகளுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். இதைச் செய்வதற்கு தங்களைச் தயார்படுத்த வேண்டியதே இன்றைய அரசாங்கத் தலைவர்களுக்கு முன்னால் உள்ள மிகப் பெரிய பொறுப்பாகும். ஒட்டுமொத்தத்தில் இதுவே உள்நாட்டுப் போரில் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கைச் சமுதாயம் எதிர்நோக்கி வருகின்ற பிரதான சவாலுமாகும்!
nantri thinakkural

முற்றுமுழுதாக சர்வதேச சமூகத்தை நம்பி...

Tuesday, 29 May 2012
கிழக்கில் மட்டுநகரில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் நிறைவு நாளான நேற்று முன்தினம் அதன் தலைவரான இரா.சம்பந்தன் அவர்கள் நிகழ்த்திய நீண்ட உரை உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பிறகு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், தமிழர் அரசியலை வழிநடத்துவதற்கு அந்தக் கட்சி கடைப்பிடிக்கத் தீர்மானித்திருக்கும் அணுகு முறைகளை விளக்கும் கொள்கைப் பிரகடனமாக அமைந்திருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழர்கள் எல்லோருக்குமான தலைமைச் சக்தி என்றும் அந்தத் தலைமைச் சக்தியின் தலைமைக் கட்சி தமிழரசுக் கட்சியே என்றும் வரைவிலக்கணம் ஒன்றை வகுத்தவாறு உரையை நிகழ்த்திய சம்பந்தன் அவர்கள் இதுவரையில் தங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கக்கூடிய அரசியல் அணுகுமுறைகளின் காரணமாக அதிகூடிய இராஜதந்திர அங்கீகாரம் சர்வதேச சமூகத்தினால் தமிழரசுக் கட்சிக்கே வழங்கப்படுகின்றது என்றும் அதன் வழியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அந்த இராஜதந்திர அங்கீகாரம் ஏற்புடையதாகவும் உரித்துடையதாகவும் கைவரப்பெற்றிருக்கிறது என்றும் ஒரு வியாக்கியானத்தைச் செய்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான காலகட்டத்தில் முதல் மூன்று தசாப்தங்களுக்கு தமிழ் மிதவாத அரசியல் தலைவர்களினால் வழிநடத்தப்பட்ட அமைதிவழிப் போராட்டங்களில் இருந்தும் அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாத இயக்கங்களின் வழிநடத்துதலின் கீழான வன்முறைப் போராட்டங்களில் இருந்தும் முறையான பாடங்களைப் பெற்றுக்கொண்டு உள்நாட்டிலும் சர்வதேச சமூகத்திலும் மாற்றம் கண்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகள் வேண்டி நிற்பதற்கு இசைவான முறையில் கொள்கைகளையும் தந்திரோபாயங்களையும் வகுத்துச் செயற்பட வேண்டியதே இன்று இருக்கக்கூடிய தமிழ் அரசியல் சக்திகள் சகலதினதும் தலையாய பணியாகும். இந்த வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த பணியை நோக்கிய திசையில் பயணம் செய்வதற்கு சம்பந்தன் அவர்கள் தலைமையிலான இன்றைய தமிழரசுக்கட்சி தன்னை எந்தளவுக்கு பயனுறுதியுடைய முறையில் தயார்படுத்தியிருக்கிறது என்ற கேள்விக்கு சந்தேகத்திற்கிடமின்றியஇரு பொருள்படுதலுக்கு அப்பாற்பட்ட பதில்களை அவரின் உரை திருப்திகரமான முறையில் வழங்கவில்லையென்பது எமது அபிப்பிராயமாகும்.

முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில் புதியதோர் அத்தியாயத்திற்குள் பிரவேசித்திருக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை தலைமையேற்று வழிநடத்திச் செல்லும் கட்சியாக தமிழரசுக் கட்சியை முன்னிறுத்தி வர்ணிக்கும் சம்பந்தன் அவர்கள் “எவ்வளவு தான் பலம்வாய்ந்ததாக இருந்தாலும், எவ்வளவுதான் தர்மத்தின்பாற்பட்டதாக இருந்தாலும் தமிழர்கள் இலங்கைத் தீவில் வன்முறை அரசியல் செய்வது என்றென்றைக்குமே நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கப்போவதில்லை என்பதும் இராணுவ பலத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு, உலகப் போக்கிற்கு ஒத்திசைவில்லாத அரசியல் கோட்பாட்டின் ஊடாகக் கட்டியெழுப்பப்படும் எந்தவொரு போராட்டமுமே நின்று நிலைக்காது என்பதுவுமே இதுவரையான போராட்ட வரலாறு உணர்த்தி நிற்கும் உண்மையாகும்’ என்று பிரகடனம் செய்திருக்கிறார்.

தங்களது தேச நலன்களை மாத்திரமே மையப்படுத்தி உலக ஒழுங்கை வகுத்துச் செல்லும் வல்லாதிக்க நாடுகளின் வியூகங்களைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற முறையில் மாத்திரம் தந்திரோபாயங்களை வகுத்துச் செயற்படுவதே விவேகமான மார்க்கம் என்பது சம்பந்தன் அவர்களின் இன்றைய நிலைப்பாடாக இருக்கிறது. அத்துடன், இந்தியாவின் தேசிய நலன்களுக்கு ஒத்திசைவாக அமையாத எந்தவொரு அரசியல் தீர்வையும் இலங்கையில் தமிழர்கள் பெறுவதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது என்பதே இந்தியத் தலையீடு தங்களுக்கு உணர்த்திய கட்டாய பாடம் என்கின்ற சம்பந்தன் அவர்களின் விளக்கம் இலங்கைத் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வின் எல்லைவரையறை எவ்வளவு தான் விரிவானதாக இருந்தாலும் இந்தியாவின் அபிலாசைகளுக்கு இசைவான தீர்வை ஏற்றுக்கொண்டு வாழ்வதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியே இல்லை என்ற அர்த்தத்தில் அமைவதாக இருக்கிறது. இந்தியாவையும் சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகளையும் அந்நியப்படுத்தவோ அல்லது சங்கடப்படுத்தவோ கூடாது என்ற அவரின் அக்கறையின் எல்லை எதுவென்பது தான் உண்மையில் விளங்கவில்லை.

"ஒற்றையாட்சி இலங்கை' என்ற கட்டமைப்பிற்கு வெளியே “ஐக்கிய இலங்கை’ என்ற வரையறைக்குள் தமிழர்கள் சுயமரியாதையுடனும் தன்னிறைவுடனும் வாழ்வதற்குத் தேவையான கூடுதல் பட்ச அரசியல் அதிகாரங்களை உறுதிப்படுத்தக்கூடிய ஆட்சியலகையே தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மைப் பிரச்சினைக்கான தீர்வாக எதிர்பார்ப்பதாகவும் அதன் மூலமாகவே தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையைப் பூர்த்தி செய்ய முடியுமென்றும் கூறுகின்ற சம்பந்தன் அவர்கள் புதிய அரசியல் சூழ்நிலைகளின் கீழ் அத்தகைய தீர்வைக் காண்பதற்கான வழிவகைகளைப் பொறுத்தவரை தனது அரசியல் அணி உள்நாட்டில் எத்தகைய செயன்முறைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்திருக்கிறது என்பதை தெளிவாக விளக்கவில்லை. "ஒன்றுபட்ட இலங்கை' என்ற அமைப்பிற்குள் தமிழர்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க பேரினவாத ஆட்சியாளர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள் என்பதைத் தாங்கள் சொல்லாமலேயே சர்வதேச சமூகம் அதன் அனுபவத்தின் மூலமாக உணருவதற்கு இடமளிக்க வேண்டுமென்று மாத்திரம் கூறிவிட்டு எதற்கும் தமிழ் மக்கள் பொறுமை காக்க வேண்டுமென்று சம்பந்தன் அவர்கள் அடிக்கொரு தடவை வேண்டுகோள் விடுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களும் பொறுமை காத்து, இலங்கை ஆட்சியாளர் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்க மாட்டார்கள்என்பதைச் சர்வதேச சமூகமும் அனுபவ வாயிலாக உணர்ந்த பிறகு பொறுமை எல்லையை கடக்கும் போது அமைதிவழி போராட்டம்... இது தமிழர்களுக்கு மீண்டும் கண்ணாடியில் காட்டப்படுகின்ற நிலவு.

இலங்கை நெருக்கடி மீது சர்வதேச சமூகத்தின் வல்லாதிக்க நாடுகள் பிரதானமாக அவற்றின் மேலாதிக்க நலன்கள் சார்ந்த காரணங்களின் நிமித்தம் தீவிர அக்கறை காட்டுவதன் விளைவாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எதிர்நோக்குகின்ற இராஜதந்திர ரீதியான நெருக்குதல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தங்களது சகல அணுகுமுறைகளையும் வகுப்பதிலேயே சம்பந்தன் அவர்கள் அக்கறை கொண்டுள்ளார் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது. அத்தகைய அணுகுமுறையை சம்பந்தனை பாராளுமன்றக் குழுத் தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளுவதில் முனைப்புக்காட்டிய சந்தர்ப்பங்களில் அதுகுறித்து நினைவுறுத்தப்பட்டபோது அரசாங்கத்தின் மீதான சர்வதேச நெருக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு முழுமையாக தங்களது தந்திரோபாயங்களை வகுப்பது மீண்டும் ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை அவரும் அவரது சகாக்களும் பல தடவைகள் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்கள். ஆனால், தமிழரசுக் கட்சியின் மகாநாட்டில் அவர் ஆற்றிய உரை அந்த ஒப்புதலுக்கு மறுதலையாகவே அமைந்திருக்கிறது. தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாத ஒரு சஞ்சலமான சூழ்நிலையில் தமிழ் அரசியல் சமுதாயம் இருக்கிறது என்பதை சம்பந்தன் அவர்களின் உரையில் பல இடங்களில் இழையோடியிருக்கக் காணப்படுகின்ற உறுதியின்மை தெளிவாக வெளிக்காட்டுகிறது.
nantri thinakkural

கூட்டமைப்பு முன்னாள் எம்.பி. சந்திரகாந்தன் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிப்பு “கிறிஸ் பூதம் வழக்கு விசாரணை தொடர்பாக”

Wednesday, 30 May 2012

பட்டிருப்பு நிருபர்


திருக்கோவில் பகுதியில் கடந்த வருடம் பரபரப்பாயிருந்த “கிறிஸ் மனிதன்” (மர்ம மனிதன்) விடயம் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. சந்திரநேரு சந்திரகாந்தன் திங்கட்கிழமை பொத்துவில் நீதிவான் நீதிமன்றில் மூன்று மணிநேரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீதிமன்றுக்கு வந்திருந்த சந்திரகாந்தன் நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்று மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் திருக்கோவில் பகுதியில் (12.08.2011) மூன்று மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் பொலிஸார் இந்த மர்ம மனிதர்களை (கிறிஸ் மனிதன்) விடுவிக்க முயற்சியெடுப்பதாக சந்தேகித்து பொது மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையங்களைச் சுற்றி பொல்லுகள், தடிகள் சகிதம் திரண்ட பொது மக்கள் மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் பொது மக்களைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுப் பிரயோகத்தையும் மேற்கொண்டதுடன் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர்.

இவ்வேளையில் அங்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு இப்பிரச்சினையை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பொது மக்கள் சார்பில் பொலிஸாருடன் பேசினார்.

இச் சம்பவத்தில் மக்களைத் திரட்டிக் கலகத்தில் ஈடுபட்டதாக அவர்மீது திருக்கோயில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாறு சந்திர நேருவை அழைத்திருந்தது நீதிமன்று. ஆனால் அவர் லண்டன் சென்றிருந்ததால் ஆவரால் நீதிமன்றுக்கு சமுகமளிக்க முடியவில்லை. இதனால் அவர்மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திங்கட்கிழமை இவர் பொத்துவில் நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதி அவரை மூன்று மணித்தியாலங்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் சாட்சிகள் வரவழைக்கப்பட்டு சந்திரகாந்தனை பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

மீண்டும் அடுத்த மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
nantri thinakkuralதமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள் வெலிக்கடை சிறைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Wednesday, 30 May 2012

 ரொஷான் நாகலிங்கம்


prison_protest_1யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வெலிக்கடை சிறைக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நண்பகல் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.

prison_protest_2ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரும் கைதிகளின் மனைவியரும் தமது பிள்ளைகளினதும் கணவன்மார்களதும் படங்களை தாங்கியிருந்ததுடன் தமது உறவுகள் சிறையிலிருப்பதால் தங்கள் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஊடகங்களுக்கு கண்ணீருடன் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன், நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் விக்ரமபாகு கருணாரட்ண, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ந.குமரகுருபரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் எஸ்.கஜேந்திரன், அடக்கு முறைக்கான மக்கள் இயக்கத்தின் வண.எஸ்.சக்திவேல் ஆகி÷ய்õர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
nantri thinakkural

மீள்குடியேறும் மக்களுக்கான நிரந்தர வாழ்வாதார உதவிகளை அவுஸ்திரேலியா தொடர்ந்து வழங்கும் யாழ்.வந்துள்ள அந்நாட்டு தூதுவர் உறுதி

Wednesday, 30 May 2012 13:57 Hits: 41

யாழ்நகர் நிருபர்


யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களுடைய நிரந்தரமான வாழ்வாதாரத்தினைக் கட்டியெழுப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ச்சியாக உதவிகளை செய்யும் என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் றோபின் உறுதியளித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய தூதுவர் றோபின், புதன்கிழமை மாலை யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்து யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை ச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட தூதுவர்;

யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திகள் திருப்தி அளிப்பவையாக உள்ளன. யாழ்.மாவட்ட மக்களுடைய நிலையான வாழ்வாதாரம் பேணப்படுகின்றதா என்னும் விடயத்தில் எமது அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதனடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் விசேடமான மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்வாதாரங்கள் துரிதமாக மேம்படுத்தப்பட வேண்டும்.

இதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொள்ள முன்வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக எமது அரசாங்கம் கூடிய கவனம் செலுத்திவருகிறது. எமது அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிலையான வாழ்வாதார உதவிகள் இனிவரும் காலங்களில் அதிகரிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது அரசாங்கம் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களினால் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படவுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டு இருக்கின்ற வேலைத்திட்டங்களில் இன்னும் கூடுதலான எவ்வாறான உதவிகள் தேவைப்படுகின்றன என்பது தொடர்பாகவும் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக தமது அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் யாழ்.அரச அதிபருடன் தூதுவர் விரிவாகக் கலந்துரையாடினார்.
nantri thinakkural

Jaffna குடாநாட்டில் கடத்தல் உட்பட குற்றச் செயல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள் வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை


குடாநாட்டில் கடத்தல் உட்பட குற்றச் செயல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்துங்கள் வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை

Wednesday, 30 May 2012

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் சிறுவர் கடத்தல், காணாமல் போதல்கள், கொள்ளைகள் உட்பட குற்றச் செயல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேராவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டில் தற்போதைய நிலைவரத்தை தெளிவுபடுத்துவதற்காக சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான குழுவினால் கடந்த வியாழக்கிழமை வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் மேலும் சுட்டிக்காட்டப்பட்டதாவது;

இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள், வாகனங்கள் திருடப்படுகின்றன. சேதப்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஆலயச் சூழலின் புனிதத்துக்குக் கெடுதல் ஏற்படுத்தும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

வீடு வீடாகச் சென்று நடமாடும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களில் சிலர் வீட்டிலுள்ளவர்களுடன் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இரும்பு சேகரிப்பில் ஈடுபடுபவர்களும் வீட்டிலுள்ளவர்களுடன் அநாகரிகமாக நடந்துகொள்கின்றனர்.

காப்புறுதி நிறுவனங்கள் நிதி நிறுவனங்கள், லீசிங் நிறுவனங்கள் வீடு வீடாகச் சென்று மக்களைத் தமது திட்டத்தில் இணைந்துக் கொள்ளுமாறு நிர்ப்பந்தித்து வருகின்றனர். இது வறுமை நிலையிலுள்ள மக்களை மேலும் பாதிப்பதாக உள்ளது.

பொது இடங்களில் மதுபானம் பாவித்தல், புகைத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கசூரினா கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் மதுபோதையில் ரகளையில் ஈடுபடும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

ஒரு சில போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு பொலிஸாரால் வாகன சாரதிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். வீதி விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரம் அல்லது தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் பொலிஸாரால் பறிக்கப்படுகின்றன. பின்னர் பொலிஸ் நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றனர். பொலிஸ் நிலையத்துக்குச் சென்றால் அங்கு அவர்கள் அலைக் கழிக்கப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இச்சந்திப்பில் சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான குழுவைச் சேர்ந்த பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, சு.பரமநாதன், ஆர்.ஜெயசேகரன், வணபிதா ஜெயசேகரம் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
nantri thinakkural

உன்னிச்சை அணைக்கட்டின் கீழ் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு30/5/2012

மட்டக்களப்பு - உன்னிச்சைக் குளத்தின் அணைக்கட்டின் கீழிருந்து நேற்று மாலை 5 மணியளவில் பெருந்தொகை ஆயுதங்கள் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டன.

விமானத்தைச் சுடும் துப்பாக்கி 1, ரீ56 ரக துப்பாக்கிகள் 9, ரீ 81 மகஸின்கள் 29, ரீ 56 மகஸின்கள் 2, எம் 16 மகஸின்கள் 6, 9 எம்எம் மகஸின் 1, மோட்டார் பியுஸ் 2, லிங்க் 21, உட்பட 18 வகையான ஆயுத உதிரிப்பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன.

மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் பாலத்திற்குக் கீழே உரப்பைகளில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஆயித்தியமலைப் பொலிஸாருக்குக் கொடுத்த தகவலின் பேரிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்டெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் அபேசிரி குணவர்தனவின் உத்தரவின்பேரில் ஆயித்தியமலைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். பண்டார மற்றும் வவுணதீவு விசேட அதிரடிப்படை இரண்டாவது கட்டளையதிகாரி எஸ். எம். பிரேமச்சந்திர, விசேட அதிரடிப்படை குண்டு செயலிழப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். பொதேஜு மற்றும் ஆயுத மீட்பு அணியினர் இந்த ஆயுதங்களை உன்னிச்சைக் குளப்பகுதியிலிருந்து மீட்டெடுத்தனர்.

சில ஆயுதங்கள் நீர் உட்புகாத கொள்கலன்களில் பொதி செய்யப்பட்டிருந்தன.

nantri வீரகேசரி இணையம்

 

No comments: