தமிழ் சினிமா


உருமி
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் பிரித்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, வித்யா பாலன், ஜெனிலியா, நித்யா மேனன் என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ள உருமி இந்திய வரலாற்றின் திரைக்கதை ஆகும்.

நாயகன் பிரித்விராஜ் ஒரு பப் ஒன்றை நடத்தி வருகின்றனர். அவரது நண்பராக வருகிறார் பிரபுதேவா.

கடனில் இருக்கும் பிரித்விராஜிற்கு கேரளாவில் சொந்தமாக ஒரு இடம் இருக்கிறது. இதனை வெளிநாட்டைச் சேர்ந்த கொர்ப்பரேட் நிறுவனம் விலைக்கு வாங்க வருகிறது.

கடன் பிரச்சினையில் அதை விற்று விடும் எண்ணத்தில் இருக்கும் பிருதிவிராஜ், கேரளாவில் அவருக்கு சொந்தமாக உள்ள கண்ணாடிக்காடு என்ற இடத்திற்கு வருகிறார்.

அந்த இடத்தில் வித்யாபாலன் அப்பகுதி மக்களுக்காக பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த இடத்தை விற்க வேண்டுமெனில் இங்குள்ள ஆதிவாசி மக்களுக்கு பதில் சொல்லிவிட்டு, இடத்தை விற்றுக் கொள்ளுங்கள் என்கிறார்.

ஆதிவாசிகளிடம் செல்லும் பிரித்விராஜிடம் குகைகால மனிதனாக வரும் ஆர்யா, பிரித்விராஜின் மூதாதையர்கள் யார்? அந்த இடத்தின் பெருமை என்ன? என்பதை அவருக்கு விளக்குகிறார். அப்போது தொடங்குகிறது 15-ம் நூற்றாண்டுக் கதை.

போர்ச்சுகீசியர்கள் வருகை: இந்தியாவை கண்டு பிடிக்க வரும் வாஸ்கோடகாமா, அரைபடி மிளகை வாங்க வந்து இந்திய நாட்டை அடிமை படுத்துகிறான். நாட்டை மீட்கும் முயற்சியில் பிரித்விராஜின் தந்தையாக வரும் ஆர்யா முதலாவது ஆளாக உயிரை விடுகிறார்.

வாஸ்கோடகாமா கடல்பகுதியில் வரும்போது ஹஜ் பயணம் செய்துவிட்டு நாடு திரும்பும் 400 முஸ்லீம்களை கொன்று விடுகிறான். இவர்களில் ஒரு பெண்மணி அவர்களிடம் உள்ள நகைகளை சிறுவனாக இருக்கும் பிரித்விராஜின் கையில் கொடுத்து விட்டு நாட்டை காப்பாற்றும் படி சொல்லி விட்டு இறந்து போகிறார்.

அனாதையாக நிற்கும் சிறுவன் பிரித்விராஜ், சிறுவயது பிரபுதேவாவின் வீட்டில் வளர்கிறார். அந்நகைகளை உருக்கி உருமி என்ற ஆயுதத்தை செய்கிறார். (தமிழில் 'சுருள் வாள்' எனப்படும் இந்த ஆயுதம் முஸ்லீம்கள் பயன்படுத்திய ஆயுதமாகும். அவர்கள் அந்த ஆயுதத்திற்கு வைத்திருக்கும் பெயர் உருமி.)

காலச்சக்கரம் சுழல, 22 வருடங்களுக்கு பிறகு வீரனாக வளர்ந்து நிற்கிறார் பிரித்விராஜ். அப்போது வாஸ்கோடகாமாவும், அவரது மகனும் சேரநாட்டில் அட்டகாசம் செய்கின்றனர். சிரக்கல் மன்னனின் மகளான நித்யா மேனனை வாஸ்கோடகாமாவின் கூட்டம் சுற்றி வளைக்க, பிரித்விராஜும் பிரபுதேவாவும் காப்பாற்றுகிறார்கள்.

வாஸ்கோடகாமா கூட்டத்தை நாட்டை விட்டு விரட்டும் முயற்சியில் சிரக்கல் மன்னன் முயற்சிக்கிறார். ஆனால் அவரது அமைச்சனாக வரும் தளபதி சேனாச்சேரியும், மன்னின் மகனான பானுவிக்கிரமனும் வாஸ்கோடகாமாவிற்கு ரகசியமாக உதவி செய்கின்றனர்.

தன்மகளை கைப்பற்ற நினைத்த வாஸ்கோடகாமாவின் மகனை சிறைப்பிடித்து கொண்டு வரும் பொறுப்பை பிரித்விராஜிடம் கொடுக்கிறார் சிரக்கல் மன்னன். கூடவே அவரது படையினரில் 5 பேரையும் அனுப்புகிறார்.

பிரித்விராஜும் பிரபுதேவாவும் தங்களது திறமையால் வாஸ்கோடகாமாவின் மகனை சிறைபிடித்து வருகின்றனர். கூட வந்தோர் அரக்கலில் இருக்கும் முஸ்லிம் பெண்களான ஜெனிலியா கூட்டத்தை சிறைபிடித்து வருகின்றனர்.

பிரித்விராஜின் திறைமையை பாராட்டும் அரசர், அவருக்கும் பிரபுதேவாவிற்கும் தளபதி பொறுப்பை அளித்து வாஸ்கோடகாமாவை அழிக்க சொல்கிறார். இதனிடையே நித்யா மேனனுக்கும் பிரபுதேவாவிற்கும் காதல் மலர்கிறது. பிரித்விராஜிற்கும் ஜெனிலியாவிற்கும் காதல் மலர்கிறது.

சிரக்கல் அரசனின் மகனும், அமைச்சனும் செய்கின்ற சதியால் வாஸ்கோடகாமாவின் மகன் தப்பிச் செல்கிறான். சிரக்கல் மன்னன் கொல்லப்படுகிறார். அரசனின் ஆதரவற்று இருக்கும் பிரித்விராஜும், பிரபுதேவாவும் வாஸ்கோடகாமா கூட்டத்தை விரட்டி அடித்தார்களா இல்லையா என்பதை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் சிவன்.

15-ம் நூற்றாண்டின் உறைவாள் எனப்படும் உருமியின் கதைக்களத்தை எடுத்து அதை திறம்பட கையாண்ட இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு பலத்த கைத்தட்டல்களைக் கொடுக்கலாம்.

நிகழ் காலத்தில் வரும் பிருத்விராஜ், நித்யா மேனன், பிரபுதேவா, ஜெனிலியா, வித்யா பாலன் ஆகியோர்களில் வித்யா பாலன் தனித்து தெரிகிறார். ஆனால் வரலாற்று காலத்தில் மற்ற நால்வரும் ஜொலிக்கிறார்கள்.

சேரநாட்டு தளபதி சேதிராயனாக வரும் ஆர்யா நடிப்பிலும், வீரத்திலும் மிரட்டி இருக்கிறார். தனது மகனுக்கு ஒரு வீரத்தந்தையாக மிளிர்கிறார். குகை கால மனிதன் தண்டப்பனாக வரும் ஆர்யாவின் சங்கத் தமிழ் இனிக்கிறது.

சேதிராயன் மகன் கேளுராயனாக வரும் பிருதிவிராஜ்தான் இப்படத்தின் நாயகன். வீரனுக்கேற்ற உடல்வாகு, தேர்ந்த போர் பயிற்சி, தந்தையின் வாக்கை காக்கும் தனயன், தாய் நாட்டை காக்கும் வீரன் என நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார்.

இவரது நண்பன் வவாலியாக வரும் பிரபுதேவா சில இடங்களில் சிரிப்பு காட்ட உதவினாலும், கதையோட்டத்தில் தன் பங்கை திறம்பட செய்திருக்கிறார். தீ துப்பி என்பதை துப்பாக்கி என்று திருத்தி சொல்லும் காட்சியில் கலகலப்பூட்டுகிறார். இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு இருவரும் இலக்கணமாய் இருக்கின்றனர்.

அரக்கல் ஆயிஷாவாக வரும் ஜெனிலியா நடிப்பில் மட்டுமின்றி களறி மற்றும் சண்டை காட்சிகளில் சூப்பராக நடித்திருக்கிறார் என்பதை விட, ஆயிஷாவாகவே வாழ்ந்திருக்கிறார். சிரக்கல் பாலாவாக வரும் நித்யா மேனன் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

அரவாணி அமைச்சர் சேனாச்சேரியாக வரும் ஜெகதீஷ் ஸ்ரீகுமாரின் நடிப்பில் வில்லனுக்கேற்ற நரித்தனம் தெரிகிறது. பானு விக்கிரமனாக வரும் அன்கூரின் நடிப்பு கச்சிதம். வாஸ்கோடகாமாவாக வரும் ராபினை விட, அவரது மகன் எஸ்தாலியோ காமாவாக வரும் அலெக்ஸின் நடிப்பு அசத்தல் ரகம்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும், தீபக் தேவின் இசையும், ஸ்ரீகர் பிரசாத்தின் நேர்த்தியான படத்தொகுப்பும் நம் கண்முன்னே அக்காலகட்டத்தை உயிரோடு உலவ விட்டிருக்கிறது. வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் நிறைவாக இருக்கின்றன.

இப்படத்தில் சொல்லப்பட வேண்டிய முக்கிய விடயம் தமிழில் கூர்தீட்டப்பட்டுள்ள வசனங்கள். ''தாயின் மார்பில் குத்தி நிற்கும் தூக்கு மேடைகளை தகர்த்தெறிவோம்'' என்று பிரித்விராஜ் சொல்லும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார் வசனகர்த்தா சசிகுமரன்.

போருக்கு செல்லும் பிரித்விராஜ், ஜெனிலியாவை அங்கேயே இருக்கும் படி சொல்லும் போது, ''பலமற்றவள் பெண் அப்படித்தானே'' என்பார் ஜெனிலியா. ''பலம் கொடுப்பதே பெண்தான். இன்று உன் வயிற்றிலிருக்கும் என் மகனை நீ காத்தால், நாளை ஆயிரம் போராளிகளை உருவாக்கும் தாய்மார்களுக்கு என் மகன் காவலிருப்பான். அதனால்தான் உனை இங்கே இருக்கச் சொல்கிறேன்'' என்று சொல்லும் இடத்தில் நம்மையும் அறியாமல் கைத்தட்டி விடுவோம்.

''போருக்கு சென்று திரும்பி வருவீர்களா'' என்று ஜெனிலியா கேட்கும் போது ''என் உயிருக்குள் உயிராய் இரு பெண்ணே... எனக்காக உன் உயிரோடு திரும்பி வருவேன்'' என்று பிரிதிவிராஜ் சொல்லும் இடத்தில் வீரத்தினூடே காதலும் கலந்துறவாடும் என்பதை கத்தி பிடித்தாற் போல் காட்டியிருக்கும் வசனம் அசத்தல்.

படத்தில் அத்தனை கேரக்டர்களும் சங்கத் தமிழில் உரையாடும் காட்சிகள் கண்ணுக்கும் காதுக்கும் விருந்து படைத்திருக்கிறது. இப்படி ஒரு வரலாற்று காலப் படத்தை கொடுத்தமைக்காக சந்தோஷ் சிவனுக்கு பல விருதுகள் கொடுத்து பாராட்ட வேண்டும்.

பதினைந்தாம் நூற்றாண்டு உறைவாளான உருமி... ரசிகர்களை உறைய வைத்து அசரவைக்கும் என்பதில் ஐயமில்லை.

நடிகர்கள்: பிரித்விராஜ், ஆர்யா, பிரபுதேவா
நடிகைகள்: ஜெனிலியா, வித்யா பாலன், நித்யா மேனன்,
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
இசை: தீபக் தேவ்
இயக்கம்: சந்தோஷ் சிவன்
nantri viduppu




No comments: