Laughing' ko Laughing 5 - என் பார்வையில் செ.பாஸ்கரன்

சென்ற வாரம் சிட்னியில் இடம்பெற்ற நாடக விழா Shobhanam Drama Creations பெருமையுடன் வழங்கிய ஜந்து நாடகங்கள். 29.10 2011 அன்று The Hill Centre Castlehill இல் இடம் பெற்றது. இயந்திரமயமான வாழ்க்கையில இந்த மனிசனுக்கு எப்படி ஜந்து நாடகங்களை தயாரித்து மேடையேற்ற முடிகிறது என்ற கேள்வி எப்போதும் எனக்குள் இருக்கின்ற ஒரு கேள்வி அது மட்டுமல்ல டாக்டர் ஜெயமோகன்  சாமினி ஸ்ரோரர் ஆகியோரின் நாடகத்திற்கென்றே சனம் ரிக்கற் எடுத்து பார்ப்பது என்பது கடந்த ஜந்து வருடங்களாக இடம் பெற்று வருகின்ற ஒன்று. நாடகம் தரமா தரமில்லையா நல்லதா நல்லதில்லையா என்ற கேள்விகளுக்கு அப்பால் அவர் எடுத்த முயற்சியால் அவர் நினைத்த விடயத்தை சாதித்துக்கொண்டு சென்றிருக்கிறார் இந்த நாடகங்களினால். அல்லல் படுகின்ற மக்களின் துயரங்களைத் துடைப்பதற்கான உதவும் முயற்சியில் அவர் வெற்றியடைந்திருக்கிறார். ஜெயமோகனின் நாடகம் பார்ப்பதற்காக ரிக்கற் எடுத்திருக்கின்றோம் என்பதுதான் பலரின் கருத்து. ஒரு சில மணித்துளிகள் சிரித்து விட்டு வருகின்ற வழமை இதற்கு இருந்திருக்கிறது.



இனி நிகழ்விற்கு வருகின்றேன். சரியாக 6 மணிக்கு சாமினி ஸ்ரோரரின் குரலோடு நிகழ்வு ஆரம்பமானது. முதலில் அன்பே சிவம் என்ற சோபனத்தின் பாடல் இசைக்கப்பட்டது. யார் பாடியது என்று அறிக்காமலே அந்தப்பாடல் இசைக்கப்பட்டது. 






மனதை உருகச் செய்யும் பாடலும் குரலும் எனது கணிப்பு அந்தக் குரல் சோபனாவின் குரலாக இருக்கலாம் என்பது. (தவறாக இருந்தால் இடுகையில் யாராவது திருத்தலாம்.) 
அதனைத் தொடந்து எலி மோட்சம் போனது நாடகம் இரண்டு பிள்ளைகள் கணபதி பாடல் மூசிக வாகன என்று பாடுவதும் அவ்வேளையில் எலிவந்து படைதிருந்த மோதகத்தை எடுப்பதும் அதை பிள்ளைகளும் வீட்டாரும் அடித்து கொல்வதும் வயிறு குலுங்க சிரிக்கவைத்தார்கள் ஆர்த்திகன் நிர்மலேந்திரன் சிவேஸ் ஜெயமோகன் சரவணன் சிவகுமார் ஆகிய சிறார்கள் மிக நன்றாக நடித்தார்கள். தமிழையும் சோற்றையும் தேடி அலைந்த ஒளவையாராக வந்த சாரதா ஸ்ரீரங்கநாத ஜயரின் நடிப்பு இயல்பான நடிப்பு. சிறந்த நடிகை என்பதை மீண்டுமொருமுறை நிருபித்திருக்கிறார். ஒளவையார் மனிதரை தேடியபோது குடிகார ஆணாக வந்த சாமினி ஸ்ரோரர் தன் பாத்திரத்தை செய்திருந்தார் ஆனால் அந்த பாத்திரப் படைப்பை தவிர்த்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். தொடர்தும் ஒளவையாரை அலையவிட்டது பாத்திரப் பொருத்தம் இல்லாதிருந்து. 








அடுத்து வந்தது சோக்கான பாப்பாக்கள் இரண்டு. உண்மையில் இந்த இரண்டு பாப்பாக்களுக்கும் பாராட்டுதல்கள். குழந்தைகள் சொல்லத் துடிக்கும் ஆனால் சொல்லாத விடயங்களை இந்த பாத்திரங்கள் சிரிப்போடு சொல்லிச்  சென்றன. அதிலும் அந்த பெண்குழந்தையாக வந்த சாமினி ஸ்ரோரர் அசத்திவிட்டார். ஆண் பாப்பாவை அழைத்துவந்த அம்மம்மா மதுரா மகாதேவ் சிட்னியில் உள்ள பல அம்மம்மாக்களை உரித்து வைத்துவிட்டார். நடிப்பில் அனுபவத்தின் முத்திரை தெரிந்தது. நன்றாக சிரிக்கவைத்த அசல் ஊhர் அம்மம்மா. பெண் பாப்பாவின் தாத்தா செல்வா சந்திரகாசனும் தன் பங்கிற்கு நன்றாக செய்திருந்தார் அவரை குழந்தைகளுக்காக ஒரு முறை பாடச்சொல்லி கேட்கவேண்டும். அது சரி ஜெயமோகனிடம் இருந்து போச்சியில் பால் குடிக்கும் முறையை கற்றுக்கொள்ள வேண்டும் அப்படி ஒரு அழகு. உண்மையில் சோக்கான பாப்பாக்கள் சோக்காதான் இருந்தது. குழந்தைகளுக்கு பாட்டு பாடமுன் சற்று யோசித்து விட்டு பாடுகின்றேன்.








அடுத்து வந்தது அம்மாக்கு சும்மா. கன கச்சிதமான பாத்திரப் பொருத்தங்கள். சமூகத்தில் நடக்கின்றவிடயங்களை அப்படியே பேசிவிட்hர்கள் அவ்வளவுதான். பலர் தங்களைத்தான் என்று தெரியாமல் சிரித்தார்கள். சிலர் தெரிந்து கொண்டு சிரித்தார்கள். மொத்தத்தில் சமுதாயத்தைப் பார்த்து எல்லோரும் சிரித்தோம். கண்ணாடிச் சட்டத்திற்குள் இறந்துவிட்ட அம்மாவாக இருந்து சாமினி ஸ்ரோரர் போட்டபோடு ஆணி கொண்டு அடித்ததுபோல் இருந்தது. வந்த அத்தனை பேரும் அந்த ஆணிகளை புடுங்கியெடுக்க பல காலம் எடுக்கும். சுகந்தி நிமலன் சிரித்துதான் பார்த்திருக்கிறோம் இதில் இவ்வளவு சோகமாக அழுது பார்த்தோம். அந்தச் சோகத்திலும் கிளவி லட்டை எடுத்து சாப்பிடுவது பொறுக்காமல் தட்டை தள்ளிவைப்பது அருமையான நடிப்பு நன்றாக சிரிக்கவைத்தார். . மகனாக வந்த ஜெயமோகன் என்ன ஒரு பத்தினி தாசனாக நடித்தார் பாலூட்டி வளர்த்த தாய்க்கே பலகாரம் கொடுக்கும் மகன்களை தோலுரித்து நின்ற பாத்திரம். கணவரை ஆட்டிவைத்த மனைவியான கிளவியின் மருமகள் தேவயானி பசுபதி இயல்பான நடிப்பு முகபாவம் அற்புதம். துயரம் ஆணவம் பாசாங்கு பெருமை என்று அத்தனையையும் பாவங்களாக செய்து நடித்தார் துயரத்திலும் சிரிக்கவைத்தவர். பின் அந்த இரண்டு சிறுவர்கள்  ஆர்த்திகன் நிர்மலேந்திரன் சிவேஸ் ஜெயமோகன் தாய்க்கேற்ற பிளிளைகளாக நடித்தார்கள். வளுரும் பயிர்கள். சங்கத்திற்கு தானே தலைவர் என்று கூறி வந்த நடராஜா கருணாகரன் சங்கத்தின் எல்லாப் பதவியிலும் தான்தான் இருப்பதாக கூறி அது சோலியுமில்லை கேள்வியுமில்லை என்று கூறியதும் சபை அதிர சிரிப்பொலிதான். இனி இப்படி சங்கங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. இப்பவே கணவன் மனைவி இரண்டு பிள்ளைகளோடு தமிழர் சங்கம் நடக்கிறது. இப்போ புதிய யுக்தியை கருணா காட்டியிருக்கிறார் பலபேருக்கு பிரச்சின தீர்ந்தமாரி. மீண்டும் பேச்சாளராக உருவம் மாறி வந்த ஜெயமோகனின் பாத்திரம் நன்றாக சிரிக்கவைத்தார். அந்தப் பாத்திரம்போன்ற சொந்தப் புகழ்பாடுற கனபேரை நினைவு படுத்தக் கூடியதாக இருந்தது. சிரிக்க கூடிய நாடகமாக இருந்தது. அதைப்பார்த்து எவனாவது திருந்துவான் என்று நினைத்தால் அது தப்புக்கணக்காகத்தான் இருக்கும். ஜெயமோகனிடம் கேட்க யோசித்தது ஜயா அந்த தலை முடியை எங்கே வாங்கினீர்கள்  இளமை திரும்பிய வாலிபனாக தோற்றமளித்தீர்கள். சொன்னால் நாங்களும் வாங்கி அணிந்து கொள்வோம்.






அடுத்து மாஸ்ரர் குஸ்னி 2011 என்ன சொல்ல வந்தார் நெறியாளர் என்ற கேள்வியோடு ஏன் நான் சிரிக்கவில்லை என்ற கேள்வியும் என்னுள் இருக்கிறது. நடிகர்களான தேவயானி கருணாகரன் ஆகியோர் தங்கள் பாத்திரத்தை நன்றாக செய்தார்கள். ஜெயமோகனும் தன்னுடைய பாத்திரத்தை நன்றாகவே செய்திருந்தார். ( கவனம் தொலைக்காட்சியினர் கேட்டாலும் கேட்பார்கள்) நெறியாளர் வசனகர்த்தா இருவரும் கொஞ்சம் முயன்றிருக்கலாம். இது என் கருத்து மட்டுமே.

அடுத்தது கஸ்ரம்சில் கஸ்டம் சோர்ந்திருந்த நமக்கு மீண்டும் உற்சாக குளிசை கொடுத்ததுபோல் இருந்தது. ஜெயமோகன் சாமினி combination
 அருமையாக பொருந்தி இருந்தது. இதே ஜோடியை பல முறை பார்த்திருந்தாலும் பார்த்த இடம் கஸ்டம் என்ற காரணத்தால் சற்று வித்தியாசமாக இருந்தது. மீண்டும் தேவயாணி மிக நன்றாக செய்திருந்தார் அவர் அலுத்துக் கொண்ட விதம் நம் எல்லோருக்கும் வேலையில் ஏற்படும் செயலை நினைவு படுத்தியது. கோவத்திலும் வாடிக்கையாளர்களோடு சிரித்து பேச வேண்டும் என்ற வேலைத்தல தாரக மந்திரத்தை மிக அழகாக செய்து காட்டினார். கலகலப்பாகவும் அதிக பிரசங்கியாகவும் வந்த கருணாகரன் நன்றாக சிரிக்வைத்தார். கஸ்டம் ஆபீசர் நிர்மலேந்திரன் நன்றாக நடித்தார் கிளவனையும் கிளவியையும் கண்ட பயத்தில் சற்று அதிகமாகவே ஒடித்திரிந்து விட்டார். அலன் என்ற தலைமை கஸ்டம் ஆபீசர் ஏன் தலைமை ஆபீசர் என்ற நிலையை மறந்துவிட்டு நடித்தது போல் இருந்தது. சாமினியைப் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. அத்தனை பேருக்கும் தனி ஒருவராக மறுமொழி சொல்லும் பாங்கே தனிஅழகு. சிரிக்கவைத்த குறைவில்லா நடிப்பு.
நிறைவாக குட்டி முருகனாக வந்து ஒளவைக் கிளவிக்கு காட்சி கொடுத்து அழகு வசனம் பேசிய அழகான குட்டிச் சிறுமி விஜயாள் விஜேய் பாராட்டுக்குரியவர். ஒவ்வொரு நாடகங்களுக்கிடையிலும் வந்து அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை வித்தியாசமான முறையில் எடுத்துச் சொன்ன மோட்சம்போன எலியார் அஞ்சலியா நடித்த சரவணன் சிவக்குமார் தனக்கே உரிய பாணியில் நடித்து சொன்னது வித்தியாசமாக இருந்தது. 

பின்னணிக் கலைஞர்களின் பங்களிப்பை மெச்சவேண்டும். ஒலி அமைப்பு எந்த தடங்கலும் இல்லாது நன்றாக இருந்தது. பலபேருடைய உழைப்பில் சோபனம் அமைப்பு சேகரித்தபணத்தை மேடையிலேயே திருமதி ஜெயசிங்கம் அவர்களது கரத்தால் அவுஸ்ரேலியன் மெடிக்கலெயிட்டின் தலைவர் திரு மனமோகனிடம் கையளித்ததும் பாராட்டுதலுக்குரியதே.

டாக்டர் ஜெயமோகன் சாமினி ஸ்ரோரர் ஆகியோரின் பணியில் 5 வருடங்களாக இடம் பெற்ற இந்த நாடக நிகழ்வு இது கடைசிநிகழ்வு என்று ஜெயமோகனால் அறிவிக்கப்பட்டதும் எல்லோர் மனங்களிலும் திக் என்றிருந்தது. சிரிப்புக்கு நாடகத்திற்கு என்று வருடத்தில் ஒரு முறை வந்து போகும் இந்த விழா நிற்கப்போகின்றதா என்ற மன ஏக்கத்துடன் மண்டபத்தை விட்டு அகன்றபோது முகத்தில் சிரிப்பைக் காணவில்லை. அதை அறிவிக்காமல் விட்டுவிட்டு பின்பு ஒரு சந்தர்ப்பத்தில் கூறியிருக்கலாமோ என்ற எண்ணம் மேலிட நடக்கிறேன் மண்டபத்தை விட்டு.

அன்பு வாசகர்களே இது என்னுடைய பார்வைதான் உங்களுக்கும் ஒரு பார்வை இருக்கும். தயவு செய்து பின்னூட்டத்தில் உங்கள் பார்வை அல்லது உங்கள் குறிப்புக்களை பதியுங்கள்.










































2 comments:

kirrukan said...

நடராஜா கோபி யும் நன்றாக நடித்தார்,இளம் கலைஞன் தொடர்ந்து தனது நடிப்பால் இந்த நாடகங்களை எமது சமுகத்துக்கு (ஈழத்தமிழனுக்கு) எடுத்து செல்ல வேண்டும்...

C.Paskaran said...

நன்றி கிறுக்கன். கோபி உண்மையில நல்லா நடித்திருந்தவர். தவறுதலாக அவரை குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். இயல்பான நடிப்பு. பல மேடைகளில் நன்றாக நடித்த அனுபவம் உள்ள கலைஞர். சுட்டிக் காட்டியதற்கு நன்றி கிறுக்கன்.