எனது பார்வையில்.‘பொப்இசைப் பொழுது’ - .

.
                                             சிட்னியிலிருந்து ஞானா அசோகன்.

வசந்தத்தின் முதல்  சனிக்கிழமையன்று மாலை 6:30 மணியளவில் சில்வர்வோட்டறில் (Silverwater)  அமைந்துள்ள C3  அரங்கத்தில் மக்கள் கூடியவண்ணம் இருந்தனர். ஆம் பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E மனோகரனும் அவர் குழுவினரும் இணைந்து வழங்கிய ‘பொப்பிசைப் பொழுது’ எனும் இசை நிகழ்ச்சிக்காக மக்கள் குழுமியிருந்தனர். அரங்கம் நிறைந்த கூட்டம்
இல்லையென்றாலும், இசையார்வம்



மிக்க ரசிகர்களின் கூட்டம் உற்சாகத்துடன் கூடியிருந்தது. நிகழ்ச்சி சற்று தாமதமாக ஆரம்பித்தாலும் மலேசிய மண்ணின் முன்னணிப் பாடகர் திரு ராஜ ராஜ சோழனின் ‘தேவன் கோவில் மணியோசை...’ என்ற திரைப்படப் பாடல் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. சீர்காழியின் குரலை அப்படியே பிரதிபலித்தது.“once more”  என கூவவேண்டும் போல ஆர்வம் எழுந்தாலும் அடக்கிக் கொண்டு கைகள் வலிக்கும் வரை நான் தட்டினேன். ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் ‘அத்திந்தோம்..” என்ற பாடலும் பிரமாதம். இவருடன் இணைந்து வ T. K.கலா அவர்கள் “போய் வா நதி அலையே” என்ற பாடலை மிகவும் அற்புதமாகப் பாடினார்கள். கலா அவர்கள் தனது 14வது வயதில் தன் முதல் பாடலாக “அகத்தியர்” எனும் திரைப்படத்தில் ‘தாயிற் சிறந்த கோயிலும் இல்லை..” என்ற பாடலைப் பாடியிருந்தார். அதே பாடலை மிகவும் அற்புதமாக அன்று மேடையில்ப் பாடினார். “ஆடாமல் ஆடுகிறேன்.. போன்ற பல பிரபலமான, இனிய பாடல்களைப் பாடி மேலும் எம்மை அசத்தினார்.

நிகழ்ச்சியின் சிறப்பிற்கு மேலும் சிறப்பைக் கொடுத்தது. எம் உள்ளுர்க் கலைஞர்களின் பங்களிப்பு. செல்வி கேஷகா அமிர்தலிங்கம், திரு றஞ்சன், மலையாளத்து இளங்குயில் . இலங்கையின் மஞ்சுளா போன்றோரும் தம் இசை வெள்ளத்தால் மக்களை மகிழ்வித்தனர். “தர்ம யுத்தத்தின்’ “ஆகாய கங்கை”, “தேனிலவின்” “நிலவும் மலரும் பாடுது” , “வசீகரா”, “கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு” போன்ற பல அசத்தல்ப் பாடல்களை ‘நாம் ஒன்றும் சளைத்தவர்களில்லை’ என நிரூபித்துப் பாடினார்கள்.

இறுதியில் யாழ் மண்ணில் பிறந்து, மூன்று தலைமுறைகளாக மங்காத புகழுடன் பொப் இசைவானில் கொடிகட்டிப் பறக்கும் பொப்பிசைச் சக்கரவர்த்தி திரு ய A.E மனோகரன் மேடையில் தோன்ற ரசிகர்களின் உற்சாகக் கைதட்டல்களும், விசிலடிகளும் ரசிகர்களின் இதயத்தில் அவருக்கிருந்த  அமோக வரவேற்பைக் காட்டியது. “மால் மருகா எனில்,,” எனும் அவரின் முத்திரை பதித்த முதற் பாடல், மற்றும் ‘வடை வடையாய் விற்று வந்தாள்..’ போன்றன சக்கைப் போடு போட்டன. இலங்கைக் காகம் அவுஸ்திரேலிய ‘மக்பை’ (Mackpie ) யாக மாறியது அவரின் கற்பனைத் திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ‘சுறாங்கனி’ பாடத் தொடங்க ரசிகர்களின் உற்சாக நடனம் உச்சியைத் தொட்டதில் வியப்பேதும் இல்லை. ஆண்களும் பெண்களுமாக ஆடிய அந்த ஆனந்த நடனம் கண்ணுக்கு இனிய விருந்துதான். உருவத்தில் மாற்றம் , சிகையலங்காரத்தில் மாற்றம் ஆனால் குரலில் மட்டும் மாறாத அதே இனிமை , கம்பீரம் .ஒலித்தது. தன் பிறந்த மண்ணின் பெருமையை மறக்காது, மறைக்காது பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார். பாடல் பிரதிகள் எதுவும் இன்றி அத்தனை பாடல்களையும் வரி பிழையின்றிப் பாடியது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிகழ்ச்சியை உயிரூட்டியவர்களில் முதன்மையானவர்கள் சென்னையின் வாத்திய இசைக்குழுவினர். அவர்களுக்கு ஒரு பெரிய சபாஷ் கூறத்தான் வேண்டும். எதுவித ஆர்ப்பாட்டமுமின்றி மிகவும் திறமையாக அனைவரும் தத்தம் பங்களிப்பைச் செய்தார்கள். நிகழ்வை எதுவித தொய்வுமின்றி தன் சிம்மக்குரலில் அருமையாக, நகைச்சுவை ததும்பத் தொகுத்து வழங்கினார் திரு கணேசன் மேகநாதன். மொத்தத்தில் ‘பொப்பிசைப் பொழுது’ இசைப் பிரியர்களை ஏமாற்றாத ஓர் இனிய மாலைப் பொழுதாக அமைந்தது. வெளிநாட்டுக் காற்று இனிய தமிழ் பேசுவது தமிழர்களின் சுவாசத்தில் நுகரப்படும். இலங்கை, இந்திய, மலேசிய மண்களின் கலப்புக் கச்சேரியில், நண்பர்களுடன் கலகலத்த சிரிப்பொலியில் கவலைகளுக்கு அன்று ஓர் கட்டாய விடுமுறைதான். கலைஞர்களுடன் புகைபடம் பிடித்தது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க மனநிறைவுடன் வீடு நோக்கிப் பயணித்தேன்.

1 comment:

kirrukan said...

[quote]கலைஞர்களுடன் புகைபடம் பிடித்தது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க மனநிறைவுடன் வீடு நோக்கிப் பயணித்தேன். [/quote]

அடேயப்பா கலைஞர்களுடன் படம் எடுப்பதில் அப்படி ஒரு கிக் ,திரில் இருக்கோ?...