கவிதைகள்

.
 மகா கவி  ( பாரதி நினைவு தின கவிதை 11 09 2010)
வனச்சிறுவனின் அந்தகன் - எம்.ரிஷான் ஷெரீப்
நாளை விடியல் -
             மகாகவி                                                                                        செ.பாஸ்கரன்
 கவிதை பல நான் புனைந்தேன்
நான் பாரதியாய் மாறவில்லை
மாறவும் முடியாது
அதுதான் பாரதி
அவன் கவிதை எழுதியதால் மட்டும்
பாரதியல்ல
பாரதி கவிதை மட்டும் பாடவில்லை
கண்ணீர் விட்டு அழுதிருக்கிறான்
ஏழை மக்கள் வாடுதல் கண்டு

கவி என்றால் பாரதி
தமிழென்றால் பாரதி
கோபக் கனலென்றால் பாரதி
கொட்டும் முரசென்றால் பாரதி
பாரதி பாடிய பாட்டுக்கள் மட்டுமல்ல
அவன் பார்த்த பார்வைகளும்
தீயவற்றை சுட்டெரிக்கும்
நெருப்பின் கனல்
சேரிக் குழந்தைகள்
அவன் சொந்தக் குழந்தைகள்
தீண்டத்தகாதவரென சமூகம் சொன்னவரை
தீண்டி மட்டும் பார்க்கவில்லை
தொட்டுத் தூக்கி எடுத்து
தோள்களிலே வைத்தவன்
இவன் பிறந்த எட்டைய புரத்தை
வேண்டுமானால்
எட்டிப்பார்த்து விடலாம்
இவன் எண்ணங்களின் உயரத்தை
தொட்டுக்கூட பார்க்க முடியாது
வாழ்ந்தது கொஞ்சக்காலம் தான்
அவன் வாழ்தலோ தொடர்கிறது
கவியாகி
பாட்டாகி
பேச்சாகி
தமிழ் மூச்சாகி
இன்றும் வாழ்கிறான்
உணர்வோடும் உயிரோடும்
கலந்தோடி வாழ்கிறான்

( பாரதி நினைவு தின கவிதை 11 09 2010)


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


வனச்சிறுவனின் அந்தகன்
.


சூழ்ந்த நீருக்குள் மீனென அறியப்பட்டதை
செவிட்டூமை அந்தகனுக்குணர்த்திடும் படி
மிகக்கடின பணியொன்று
வனச்சிறுவனுக்கிடப்பட்டது

எந்தக் கொம்பிலும்

ஏறித் தேனெடுப்பவன்
கொடிய விலங்கினையும் தனியே வேட்டையாடி
ராசாவுக்குத் தோல்/ள் கொடுப்பவன்
வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும்
அமாவாசை நிசியிலும்
அச்சமின்றிப் போய்வருபவன்
முதன்முதலில் அயர்ந்து நின்றான்
கட்டளையை மறுக்க வழியற்றும்
மேற்கொண்டு ஏதும் செய்யும் நிலையற்றும்
விதிர்த்து நின்றான்

செய்வதறியாச் சிறுவன்
நடுங்குமந்தகனின் விரல்கள் பிடித்து
வனத்தின் மத்திக்கு வழிகூட்டிப் போனான்
அல்லிப் பெருங்குளத்தினுள்ளவன்
கரங்களை நுழையச் செய்திவன் 'தண்ணீர்' என்றான்
காலங்காலமாய்க் கடந்துவந்த வாழ்வின் சோர்வு தீரவெனவோ
வற்றாத் தேகத்தின் எல்லாத்தாகங்களுந் தீரவெனவோ
கரங்களைக் குழிவாக்கி உள்ளங்கையில் நீரேந்தி
அள்ளியள்ளிக் குடித்தான் அந்தகன்
சிறுவனின் பார்வைக்கு மட்டுமென
நீரின் எல்லாச் சுழிகளிலும் நழுவி நீந்தின
வண்ண வண்ண மீன்கள்

கற்றுக் கொடுக்கவேண்டிய
கால எல்லை முடிந்ததெனச் சொல்லி
அரச பரிவாரங்கள் சேதியனுப்பிய நாளில்
விடியலின் கீற்றுக்கள்
மலைகளின் கீழால் புதையுண்டு போக
விருட்ச இலைகள் நீரைச் சிதறிட
மழை தூவிற்று

வீற்றிருந்த அரசனை முன்னிருத்தி
செவிட்டூமைக் குருடனை
மீன்கள் பற்றிக் கேள்விகள் கேட்டான் மந்திரி
தாமரைக்குளத்துத் தண்ணீரில் எண்ணங்கள்
மிதக்குமவனது மொழிபெயர்ப்பாளனாகி
எல்லாக் கேள்விகளுக்கும்
மிகச் சரியாய்ப் பதில் சொன்னான் வனச்சிறுவன்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

                        நாளை விடியல்
நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று“இந்தி”ராணியிடம்
உத்தரவு கேட்டு ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள்என் தாய்.

பள்ளிகளின்வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்டஆங்கிலச் சீமாட்டியிடம்
அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள்என் தாய்.

ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும்
என்னைஉள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள்என் தாய்.

இசை மன்றங்களின் குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள் நுளையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள்என் தாய்.

டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி

என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட என் தாய்
அடைக்கப்பட்ட சிறையின் பெயர்டெல்லி!

தேசியக் கொடியாட்சிஎன்ற பெயரில் –
இந்தியத்தேசங்களின் மீதுகொடிய ஆட்சி

ஆளும் கொடிகள் வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை
சற்றே திரும்பிப்பார்க்கிறேன்என் –
சரித்திரச் சாலையை

அன்று நான்சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

அன்று நான்சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

நான்

பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!

இன்று நான்

இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

நான்சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!

ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்

அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாகஏற்கப்படவில்லை நான்

அரசியல் சட்டத்தில்என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை

தமிழ் நாட்டில் என் அடையாளம்வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதிஎன்று எத்தனையோ சாதி

செட்டியார் இனம் ரெட்டியார் இனம் என்பது போல்
சாதி தான் இனம் என்று
எனக்குத்தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……

Nanri: wettipedia.blogspot.com

4 comments:

kirrukan said...

நானும் பாரதியாக மாறமுடியாது
என்னால்

அட்லீஸ் கவிஞன் பாஸ்கரனாக கூட
மாறமுடியல்லயே...ஒ வட் எ சேம்


பாரதி நினைவுக்கவிதை நன்றாகவுள்ளது

Ramesh said...

சைவனாக இருந்தேன் வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!
மனிதனாக இல்லை என்றும் போட்டிருக்கலாம்
ஜயா கவிஞரின் பெயரையும் போட்டிருக்கலாமே நல்ல கவிதை


இவன் பிறந்த எட்டைய புரத்தை
வேண்டுமானால்
எட்டிப்பார்த்து விடலாம்
இவன் எண்ணங்களின் உயரத்தை
தொட்டுக்கூட பார்க்க முடியாது

அருமையான கவிதை வரிகள் பின்னீற்ரிங்க கவிஞரே. அதென்ன இம்முறை மூன்று கவிதைகள் நன்றி முரசே
கவிதை கொட்டு முரசே

நானும் ஒரு பாரதிதான் ஈஈஈஈஈஈஈஈஈஈ

C.Paskaran said...

நன்றி கிறுக்கன் சார். முரசில் நீங்களும் கவிதை எழுதுங்கள் இப்ப உள்ள கவிஞர்களெல்லாம் தூள்தான். முரசு உங்கள் எழுத்தை எதிர் பார்க்கிறது.

நன்றி ரமேஸ் 3 கவிதையென்ன உங்களைப்போல வாசகர்கள் இருந்தால் எத்தனையும் தரலாம்.

Ravi Canada said...

'தீண்டத்தகாதவரென சமூகம் சொன்னவரை
தீண்டி மட்டும் பார்க்கவில்லை
தொட்டுத் தூக்கி எடுத்து
தோள்களிலே வைத்தவன்'
பாஸ்கரனின் இந்த கவிதை வரிகள் பிடித்திருக்கிறது. இந்த வரிகள் எதனாலோ கவிஞர் ஒளவையை நினைவிற்கு கொண்டு வந்தது. எந்த கவிதை என்று ஞாபகத்திற்கு வரவில்லை. தொடருங்கள்