.
திருமதி புவனேஸ்வரி அருணாசலம்
சிட்னி மாநகரில் காண்பதற்கு கேட்பதற்கு அபூர்வமான வீணை அரங்கேற்றம் ஒன்று செப்டம்பர் நான்காம் திகதி சனிக்கிழமை மாலை New South Walesபல்கலைக் கழக அரங்கொன்றில் சிறப்பாக நடந்தேறியது. பல மேடை கண்ட வீணை வித்தகி திருமதி வரலக்ஷ்மி ஸ்ரீதரன் அவர்களின் மாணவியான செல்வி கௌசல்யா செல்வகுமார் அன்றைய அரங்கேற்ற நாயகி ஆவார்.
ஆய கலைகள் ஈந்திடும் வாணித் தாய் ஏந்திடும் அற்புதமான அழகான இசைக்கருவி வீணை ஆகும். தமிழ் இலக்கியங்களில் 'யாழ்' ஆகப் பிறந்தது. கால ஓட்டத்தில் பல்வேறு உருவெடுத்து, இன்று உருத்திர வீணை என அழைக்கப் படுகின்றது. இந்த வாத்தியத்தை முறையாகக் கற்று சுருதி தாளம் இணைத்து மீட்டுவது எழிதில் கறக்கக் கூடியதொன்றல்ல இசைக் கலை வல்லார் கருத்தாகும். அந்த வகையில் அன்றைய அரங்கேற்றம் ஒரு சாதனை தான்.
அளவான அலங்காரத்துடன் அன்னை கலைவாணியின் சித்திரத் தோற்றத்தின் முன்னே சிவப்புப் பட்டு போர்த்திய மேடை அருகிலே சங்கத்தமிழ் மூன்றும் தந்திடும் தந்திமுகனின் அழகிய திருவுருவம்; அறிமுக உரையாளர், வீணை ஆசிரியை முதலாக பக்க வாத்தியக் கலைஞர், அரங்கேற்றச் செல்வி ஆகியோரை அறிமுகம் செய்திட ஒவ்வொருவராக வந்து விநாயகப் பெருமான் அருள்நாடி அவையோருக்கு வணக்கம் செலுத்திய வகை பக்தி பூர்வமாகஇருந்தது.
அதனைத் தொடர்ந்து செல்வி கௌசல்யாவின் சகோதரர் இருவர்,தமிழிலும் ஆங்கிலத்திலும் வெகு சுருக்கமாக வரவேற்புரை நிகழ்த்தியதும் அரங்கேற்றம் ஆரம்பமானது. கதன குதூகல இராகத்தில் அமைந்த வர்ணத்துடன், கௌசல்யா தன அரங்கேற்றத்தைத் தொடங்கியதும், எங்கும் ஓர் குதூகல உணர்வு பரவியது. அடுத்து ஹம்சத்வனி ராக 'வாதாபி கணபதிம்'கீர்த்தனை இசைத்த போது அரங்கேற்றச் செல்வியின் திறமை சாயல் காட்டத் தொடங்கியது. மாணவியின் ஆற்றல்,பயிற்சி தகமை ஆய்ந்து அரங்கேற்றதிற்குரிய கீர்த்தனைகளை, பாடல்களை தேர்ந்து எடுத்திருந்தமை, வீணை இசை கற்பித்தலில் ஆசிரியை வரலக்ஷ்மியின் பல நாள் அனுபவத்தை உணர்த்தியது. ஆங்கு வந்திருந்த இசை வல்லார் மட்டுமல்ல, கர்நாடக இசை கற்போர்,ரசிப்போருக்குப் பரிச்சயமான ஆக்கங்களாக அவை அமைந்திருந்தமை வரவேற்க்கத்தக்கது. முதற் பாகத்தில் நளின காந்தி, ஸ்ரீராகம் ஹிந்தோளம், சகானா, பூர்ண சந்திரிகா ராகங்களில் அமைந்த தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனங்களும், பாபநாசம் சிவன் ஆக்கிய 'தேவி நீயே' என்ற கீரவாணி ராகக் கீர்த்தனையும் விதவித விருப்பினர்க்கு, நிறைவளிக்கும் விருந்தாக அமைந்தன. நிதானத்துடன் சுருதி, தாளம் தவறாது தொடர்ந்தார் கௌசல்யா.
நாட்டிய அரங்கேற்றத்தில் 'வர்ணம்' போல, இசை அரங்கேற்றங்களில், ஒருவரின் திறமையின் தரத்தைத் தொட்டுக் காட்டுவது ராகம் - தாளம் - பல்லவி எனும் அம்சமாகும். நிகழ்ச்சிக்குத் தெரிந்தெடுத்த இராகத்தின் நுணுக்கங்களை சாயலை துணிந்து இசைக்க கேள்வி ஞானமும், நீண்ட காலத்தீவிர பயிற்சியும் வேண்டும். செல்வி கௌசல்யா கல்யாணியில் இராகம்-தாளம்-பல்லவி தொடங்கியபோது இராக வாசிப்பில் போதிய பயிற்சி இல்லாதிருந்ததைக் கவனிக்க முடிந்தது.
தாளம் பல்லவி மீட்டுகையில், சுருதி, தாளக் கட்டுப்பாடு தளர்வின்றி விறுவிறுப்பாக இருந்தன. அரங்கேற்றச் செல்வியின் ஆற்றலையும், ஆசிரியையின் நெறியாள்கையில் அவர் மேற்கொண்ட ஆக்கபூர்வமான பயிற்சியையும் வெளிப்படுத்தின எனலாம். இந்த இடத்தில் சிறப்பாகக் குறிப்பிட வேண்டியது - பிரபல மிருதங்க வித்துவான் பாலஸ்ரீ இராசையா அவர்களின் நேர்த்தியான வழி காட்டலுடன் அன்று பக்கவாத்தியங்கள் இசைத்த இளம் கலைஞர்களான ஹரிஹரன் பாலஸ்ரீ (கஞ்சிரா) நக்தேஷ் சிவராஜா (கடம்) பிரசன்னா ரத்னகாந்தன் (மோர்சிங்) ஆகியோரின் பங்களிப்பாகும். கௌசல்யா வீணை இசையில் ஸ்வரக் கோர்வைகள் தாள வேறு பாடுகளுடன் மீட்டிய போதெலாம் பக்க வாத்தியக் கலைஞர் தாள உறுதியுடன் தத்தம் வாத்தியங்களை ஆர்வமுடனும் ஆனந்தத்துடனும் இசைத்து அவையோரின் பாராட்டை ஈட்டிக் கொண்டனர். ஆஸ்திரேலியாவில் நீண்ட ஆண்டுகளாக பல்வேறு கலை அரங்குகளில், இசை, நாட்டிய நிகழ்சிகள் சிறக்க, தனது மிருதங்க இசை வித்தகத்தால் தனித்துவத்தால் புகழ் ஈட்டி பணிவுணர்வுடன் அரும்பணி ஆற்றி வருபவர் திரு பாலஸ்ரீ இராசையா அவர்கள். அன்றைய வீணாகான அரங்கேற்றத்திற்கு அவரது தகுந்த பங்களிப்பு ஆசிரியைக்கு உறுதுணையாக அரங்கேற்றச் செல்விக்கு உற்சாகம் கொடுக்கும் உயிரோட்டமாக அமைந்ததை உணர முடிந்தது.
தொடர்ந்து பிரதம விருந்தினர் திரு திருநந்தகுமாரின் உரை இடம் பெற்றது. அவர் குறிப்பிட்டது போல் திறமை மிக்க பொருத்தமான ஆசிரியர் வாய்க்கும் போது கலை-கல்வி கற்கும் மாணவரின் ஆர்வம் ஆற்றல் உறுதி பெற்று ஆக்கபூர்வமான ஊக்கம் வளர்ந்து உயர்ந்த தகைமை
வந்தமைகிறது என்பதற்கு அன்றைய அரங்கேற்றம் அரியதொரு எடுத்துக்காட்டு. வளரும் இளங்கலைஞரை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்தது, அரங்கேற்றம். தமிழ்க் கலை, கல்வி பண்பாட்டினை வளர்திட, கௌசல்யாவின் பெற்றோர் திரு திருமதி செல்வகுமார் ஆற்றிடும் நற்பணியையும் பிரதம விருந்தினர் குறிப்பிட்டது பொருத்தமாக இருந்தது.
இடைவேளையின் பின் இடம் பெற்ற இனனமுதக் கீர்த்தனங்கள் - பாடல்கள் - எந்த வயதினரும், இசை கல்லாதவரும் இரசிக்கக் கூடியவை. நாதத்திற்கு ஆதாரமாய் விளங்குவது சுருதி. வீணை நாதம் சுருதியோடு இணைந்து ஒலிக்க, ஜனரஞ்சகமான ராகங்களில் அமைந்த சாகித்தியங்களை இனங்கண்டு ரசிக்கமுடிந்தது. சிறப்பாக “நின்னுவன்னா”, “நகுமோமு” போன்ற கிருதிகள் தாளவாத்தியங்களுடன் மிக விறுவிறுப்பாக அமைந்தன. எங்கெல்லாம் எத்தனை முறை கேட்டாலும், சுவை குன்றாத மிகவும் பிரசித்தமான பாபநாசம் சிவன் ஆக்கிய ‘கல்விய வரதன்’ கானடா ராகத்தில் அமைந்த “அலைபாயுதே” (ஊத்துக்காடு வேங்கடஅப்பையர் ஆக்கியது) கவிக்குயில் பாரதியின் தீராத விளையாட்டுப் பிள்ளை” போன்ற பாடல்களை செல்வி கௌசல்யா வீணையில் இசைத்த போது நாதமே மொழியாக வந்து, அவையோருக்கு அற்புதமான விருந்து படைத்தது. கலைஞர் கௌரவிப்பு, கௌசல்யாவின் நன்றியுரை நேரத்திற்கு ஏற்ப சுருக்கமாக அமைந்தன. சுவரதிக் திருநாளின் துடிப்பான “தில்லான”வுடன் விணை அரங்கேற்றம் வெற்றிகரமாக – யாவரும் பாராட்டும் வகையில் நிறைவேறியது.
வீணை ஆசிரியை வரலஷ்மி ஸ்ரீதரiனைப் பற்றி சிறப்பாக சிறிது குறிப்பிட வேண்டும். அவர் பலகலை வித்தகி என்பதைப் பலர் அறிவர். அவர் வீணை இசையில் வித்வத்துவம் ஈட்டிட ஆரம்ப கால அத்திவாரமாக அமைந்தது. தன் தாயாரிடம் கற்ற இசை அறிவாகும். அவரது தாயார் திருமதி ராஜேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் “இலங்கை வானொலி” தொடக்க கால தரம்மிக்க கலைஞர் எனப் பேர் ஈட்டியவர். நிகழ்ச்சிகளின் போது வீணை மீட்டிய வண்ணம் குரலிசை இணைத்து, கலைரசிகரைக் கவர்ந்தவர். அரங்கேற்ற நாளன்று, தன்மகள் உருவாக்கிய மாணவியின் பாராட்டத்தக்க தரம் கண்டு நிட்சயம் பூரிப்பு அடைந்திருப்பார்.
இத்தகைய ‘அரங்கேற்றங்கள்’ பல ஆண்டுப் பயிற்சியின் பின் இடம் பெறுபவை. இவை சிறப்பாக அமைந்திட உரிய ஒலி ஒளியுடன் அரங்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அவையும் நிறைந்திருக்க வேண்டும். கலைவிருந்து படைக்கும் இளையோரை ஊக்குவித்து, புத்துணர்ச்சி ஊட்டிட சபையோரின் கரகோஷம் நல்லதொரு மருந்தாகிறது. அந்த விதத்தில் குளிர் காற்று மழை எனப்பாராது, பெற்றோர், ஆசிரியை உறவினர் அழைப்பை ஏற்று திரளாக வந்திருந்தோர் அரங்கேற்றம் நிறைவாக அமைய உதவினர் என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்திற்கு அரங்கேற்ற நிகழ்ச்சி தொடங்காதது பலரின் பொறுமையைச் சோதித்தது. எனினும் இடைவேளையின் போது பரிமாறிய கொத்து ரொட்டிப் பெட்டி, இன்னமுதப் பொதி, கோப்பி நீராகாரம், எல்லோரது பசி தாககத்தை தீர்த்து பின்னர் நிகழ்ந்த இன்னிசை ஆக்கங்களை வெகுவாக அனுபவிக்க உதவின.
இளையோருக்காக ஒரு விடயம் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எமது பண்பாட்டோடு இணைந்த குருவணக்கம், சபையோர் பாராட்டை மதித்து கரம் கூப்புதல்போன்ற பண்புகளை அரங்கேற்றச் செல்வி தவறவிட்டமை தவிர்த்திருக்கலாம்.
நிறைவாக கூறின் பெற்றோர், உற்றார், ஆசிரியை, பெருமிதம் மகிழ்ச்சி கொண்டிருக்கக் கூடிய “திருநாள்” – செல்வி கௌசல்யா செல்வகுமாரின் அரங்கேற்ற அழைப்பை ஏற்று வந்தோர் இளங்கலைஞர் ஒருவரின் அருமையான வீணை இசை விருந்தை அனுபவித்த மனநிறைவுடன் மண்டபத்திலிருந்து திரும்பியிருப்பர்.
3 comments:
உள்ளுர் நிகழ்வுகளை தருகின்ற முரசு பாராட்டப்பட வேண்டியதே ஒரே ஒரு குறை இந்த படப்பிடிப்பாளர் ஒரு நாளும் எனது திருமுகத்தை எடுக்கவே மாட்டேங்குறாரே யாரய்யா அந்த படப்பிடிப்பாளன் 10 கசையடி கொடுங்கள்
திருமதி புவனேஸ்வரியை எனக்குத் தெரியாது. இந்த நிகழ்வை அவர் எழுதிய விதம் மிக அருமையாக உள்ளது.விமர்சனம் எழுதுபவர்கள் இந்த நடையை பிற்பற்றுவது நன்றாக இருக்கும். திரு பாலசிறியின் மிருதங்கம் பேசியதென்றே கூறவேண்டும். வீணை அரங்கேற்றம் ஒரு முதிர்ந்த கலைஞரின் கச்சேரி கேட்டது போல் இருந்தது. பாரதியின் தீராத விளையாட்டுப்பிள்ளை என்னை கவர்ந்திருந்தது. எழுத்து நடை மிக்கவர்கள் அனேகம் பேர் இருப.பார்கள் அவர்களை இனம் கண்டு சந்தர்ப்பம் கொடுத்து எழுதவைப்பதும் தமிழ் முரசின் கடமையாக இருக்கட்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி துளசி. நீங்களும் நன்றாக எழுதுபவர் போல் இருகின்றதே. நீங்கள் எழுதியிருக்கும் கருத்தை வைத்து கூறுகின்றேன். நீங்களும் முரசுக்கு எழுதலாம். மற்றும் எழுதும் ஆற்றல் உள்ளவர்களைத் தெரிந்தால் அவர்களை எழுதும் படி கூறலாம். நாங்கள் எங்களுக்குத் தெரிந்தவர்களை அணுகி கேட்கின்றோம். இலை மறை காயாக எந்தனையோ பேர் இருகின்றார்கள் அவர்கள் முன்வந்து எழுதினால் மிகவும் நன்றாக இருக்கும்.
நன்றி
மதுரா
Post a Comment