சினிமாவுக்கு அத்திவாரம் கதை. ஒரு கட்டிடம் பல கற்களின் சேர்க்கையினால் உருவாகும் அத்திவாரத்தில் எழுவது போன்று, சினிமாவும் பல சம்பவங்களை உள்ளடக்கிய கதைக் கோர்வையினால் உருவாகின்றது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில்
பல சிறுகதைகள், நாவல்கள் திரைப்படமாகியிருக்கின்றன. பாலுமகேந்திரா சிறந்த சில சிறுகதைகளை, கதை நேரம்
என்ற வெப்சீரியல் தொடராக வரவாக்கினார். அதன்
தொடக்கத்தில் வரும் எழுத்தோட்டத்தில் மூலக்கதையை எழுதியவரின் பெயரையும் காண்பிப்பார்.
கமல், தனது குருதிப்புனல் திரைப்படத்தின் எழுத்தோட்டத்தில்,
அக்கதைக்கே சம்பந்தமில்லாத எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலின் பெயரை எடுத்தாண்டமைக்காக நன்றி தெரிவித்திருப்பார்.
இ. பா. வின் குருதிப்புனலை
தழுவித்தான் ஶ்ரீதர்ராஜன் ( ஜெமினிகணேசனின்
மருமகன் ) கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார் என்ற புகாரும் அப்போது சொல்லப்பட்டது.
தனது நந்தன் கதை
நாடகத்தையும் ஶ்ரீதர்ராஜன் அந்தத்திரைப்படத்தில்
பயன்படுத்திவிட்டார் என இ. பா. வும் புகார் சொன்னார்.
குருதிப்புனல், தஞ்சை கீழ்வெண்மணியில் அடிநிலை விவசாய மக்களுக்கு நடந்த கொடுமையை சித்திரித்த
கதை. அந்த உண்மைச் சம்பவம் பற்றி எழுத்தாளர்
பொன்னீலனும் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.
இராமையாவின்
குடிசை என்ற பெயரில் கீழ்வெண்மணி
கொடுமை குறித்து ஆவணப்படம் ஒன்றும் வெளிவந்துள்ளது.
ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான், சிலநேரங்களில் சில மனிதர்கள்,
காவல் தெய்வம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,
ஊருக்கு நூறுபேர் என்பன திரைப்படமாகின. ஜெயகாந்தனின் கிழக்கும் மேற்கும் , பாரிசுக்குப்போ என்பன தொலைக்காட்சி நாடகமாகியது.
யாருக்காக அழுதான் திரைப்படமான காலப்பகுதியில் இயக்குநர் கே. பாலச்சந்தரின்
எதிர்நீச்சல் நாடகம் மேடைகளில் அரங்கேறிக்கொண்டிருந்தது.
ஜெயகாந்தன், இந்த எதிர்நீச்சலை தழுவித்தான் யாருக்காக அழுதான்
எழுதிவிட்டார் என்ற புகார் அப்பொழுது வெளியானது.
எதிர்நீச்சல் நாடகத்தில்
நடித்த நடிகர் நாகேஸ், ஜெயகாந்தனிடமே வந்து,
அந்த நாடகம் மேடையேறும்போது வந்து பார்க்கச் சொன்னார். அந்த நாடகத்திற்கும் தனது யாருக்காக அழுதான் கதைக்கும்
எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜெயகாந்தன் விளக்கியதையடுத்து, கே. பாலச்சந்தர் அவரது
கருத்தை ஏற்றுக்கொண்டார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நடிகர் நாகேஸ்தான் பின்னர் எதிர்நீச்சல் நாடகம் திரைப்படமானபோதும்,
யாருக்காக அழுதான் திரைப்படமானபோதும் அவற்றில் நாயகனாகத் தோன்றி நடித்தார்.
எதிர்நீச்சல் ஒரு வங்க நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பது ஜெயகாந்தனின் வாதம். இதுபற்றி அவர் தனது ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் நூலில் விரிவாகச் சொல்லியுள்ளார்.