மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
மார்கழி மாதம் மாண்புடை மாதம்
மாதவன் சிவனை வாழ்த்திடும் மாதம்
கோதைத் தமிழும் வாசகர் தமிழும்
இறையின் தத்துவம் இயம்பிடும் மாதம்
இறையின் தத்துவம் இயம்பிடும் வகையில்
மாதங்கள் அனைத்தையும் வைத்தனர் முன்னோர்
தையில் தொடங்கி மார்கழி வரைக்கும்
தத்துவம் சமயம் வைத்தனர் முன்னோர்
மார்கழி மகத்துவம் தொடரும் வகையில்
தையில் பொங்கல் தைப்பூசத் திருநாள்
ஆன்மீகம் அறிவியல் அனைத்தும் அளிக்கும்
அற்புத நாளாய் அமைவது சிறப்பே
உலக சிருஷ்டி தொடங்கிய நாளாய்
அமைவதே தைப் பூசத் திருநாள்
சக்தியும் சிவனும் ஐக்கிய மாகும்
நீரும் சிவனே நெருப்பும் சிவனே
மண்ணும் சிவனே விண்ணும் சிவனே
சிவனின் நினைப்பால் வந்தவன் கந்தன்
கந்தனைத் தந்ததும் தைப்பூச நன்னாள்
கந்தனின் கையில் வேலினைக் கொடுத்து
வந்திடு வினைகளைப் போக்கிடும் வகையில்
செந் திருவான சக்தியின் செயலும்
அமைந்த நன்னாளே தைப்பூசத் திருநாள்
காவடி எடுப்பார் கந்தனின் சன்னதி
கந்தனை எண்ணியே சன்னதி குவிவார்
தைப்பூசத் திருநாள் கந்தனின் பெருநாள்
எண்ணியே எண்ணியே அடியவர் பரவுவார்
நல்லன அனைத்தும் தொடங்கிடும் நாளாய்
தைப்பூசத் திருநாள் அமைவதே முக்கியம்
ஏடு தொடக்குவார் காதும் குத்துவார்
இறை நினைப்புடனே எல்லாம் தொடங்குவார்
பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்
பொங்கலை அடுத்து வந்திடும் பெருநாள்
பக்தியை விதைக்கும் பக்குவத் திருநாள்
இத்தரை சிறக்க மலர்ந்திடும் பெருநாள்
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment