சீனா வர்த்தகமும் விமானத் துறையும்: அமெரிக்கா–கனடா உறவுகளில் புதிய நெருக்கடி
வெனிசுவேலாவுக்கு மீண்டும் விமான சேவை : அமெரிக்கா அதிரடி
சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்குடன் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் வரலாற்றுச் சந்திப்பு!
இந்தியாவில் விமான விபத்து ; மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் உயிரிழப்பு
பிரித்தானியாவை உலுக்கும் சாண்ட்ரா புயல் : 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு அபாயம் - அவசர நிலை பிரகடனம்!
சீனா வர்த்தகமும் விமானத் துறையும்: அமெரிக்கா–கனடா உறவுகளில் புதிய நெருக்கடி
31 Jan, 2026 | 01:48 PM
அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், கனடா விமானங்களுக்கு எதிராக கடும் வரி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால், அந்த நாட்டின் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என ஏற்கனவே எச்சரித்திருந்த டிரம்ப், தற்போது அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கனடா தயாரிப்பு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த Gulfstream Aerospace நிறுவனத்தின் ஜெட் விமானங்களுக்கு சான்றளிக்க கனடா மறுத்ததற்குப் பதிலடியாகவே இந்த வரி நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து கனடா விமானங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்களை அமெரிக்கா முழுமையாக ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதற்கிடையே, மேற்கு கனடாவில் எண்ணெய் வளம் மிக்க ஆல்பர்ட்டா மாகாணத்தில் செயல்படும் பிரிவினைவாத குழுவிற்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் கனடா அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கனடா பிரதமர் மார்க் கார்னி கருத்து தெரிவிக்கையில், “கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தக உறவுகள், விமானத் தொழில், எண்ணெய் வளங்கள் மற்றும் சீனாவுடனான கனடாவின் வர்த்தக தொடர்புகள் காரணமாக மேலும் சிக்கலான நிலைக்கு சென்றுள்ளன. இந்த வரி நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் பாதிக்கக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நன்றி வீரகேசரி
வெனிசுவேலாவுக்கு மீண்டும் விமான சேவை : அமெரிக்கா அதிரடி
Published By: Digital Desk 3
30 Jan, 2026 | 12:07 PM
அமெரிக்காவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையே சுமார் ஆறு ஆண்டுகளாகத் தடைப்பட்டிருந்த நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (American Airlines) நிறுவனம் வியாழக்கிழமை (ஜன 29 ) அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்கப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் ஷான் டஃபி, 2019 முதல் நடைமுறையில் இருந்த விமானத் தடையை உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ளார்.
வெனிசுவேலலாவின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸுடன் (Delcy Rodríguez) நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். "அமெரிக்க குடிமக்கள் மிக விரைவில் வெனிசுவேலாவுக்குச் செல்ல முடியும், அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்" என அவர் உறுதியளித்துள்ளார்.
1987 முதல் வெனிசுவேலாவில் இயங்கி வந்த இந்த நிறுவனம், அரசு ஒப்புதல்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்குப் பின்னர் தினசரி விமான சேவைகளை ஆரம்பிக்கும். இது வணிகம், சுற்றுலா மற்றும் மனிதாபிமானப் பயணங்களுக்கு உதவும்.
இந்த மாத தொடக்கத்தில் (ஜன 03), அமெரிக்க இராணுவம் நடத்திய 'ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்' (Operation Absolute Resolve) என்ற அதிரடித் தாக்குதலில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து வெனிசுவேலாவின் அரசியல் சூழலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகள் உடனடியாகத் தொடங்காது. எஃப்.ஏ.ஏ (FAA) மற்றும் டி.எஸ்.ஏ (TSA) ஆகிய அமைப்புகள் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே விமானங்கள் இயக்கப்படும். இதற்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்.
மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளின் வான்பரப்பில் பறக்க விதிக்கப்பட்டிருந்த எச்சரிக்கைகளையும் அமெரிக்கா தற்போது விலக்கியுள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தனது திட்டத்தை அறிவித்துள்ள நிலையில், யுனைடெட் ஏர்லைன்ஸ் இது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நன்றி வீரகேசரி
சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்குடன் பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் வரலாற்றுச் சந்திப்பு!
Published By: Digital Desk 3
29 Jan, 2026 | 05:00 PM
கடந்த எட்டு ஆண்டுகளில் பிரித்தானியப் பிரதமர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் உலகளாவிய பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிரித்தானியாவின் இந்தப் பயணம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பீஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் த பீப்பிள்' மண்டபத்தில் 80 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே "ஆரோக்கியமான மற்றும் நிலையான" உறவை வளர்க்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
பிரித்தானியாவின் புகழ்பெற்ற 'விஸ்கி' மதுபானம் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க சீனா இணங்கியுள்ளது. இது பிரித்தானிய ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் வாய்ப்பாக அமையும்.
பிரித்தானியப் பிரஜைகளுக்கு சீனாவுக்குச் செல்ல 'விசா இல்லா பயணச் சலுகை' வழங்குவது குறித்து சீனா தீவிரமாகப் பரிசீலிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங் உறுதியளித்துள்ளார்.
ஆள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக இணைந்து செயல்படவும், குறிப்பாக சிறிய படகுகளில் பயன்படுத்தப்படும் சீனத் தயாரிப்பு எஞ்சின்களைக் கட்டுப்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
"சீனா உலக அரங்கில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்காக நாம் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" எனப் பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்தார். ஷேக்ஸ்பியர் மற்றும் கால்பந்து குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இந்தியாவில் விமான விபத்து ; மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் உயிரிழப்பு
Published By: Digital Desk 3
28 Jan, 2026 | 10:23 AM
இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
புனே மாவட்டம் பாராமதி பகுதியில் இன்று புதன்கிழமை (ஜன 28) காலை 8.45 மணிக்கு தரையிறங்க முயன்றபோது அஜித் பவார் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது.
அந்த விமானத்தில் அஜித் பவார் மற்றும் அவரது பாதுகாவலர்கள் உட்பட மொத்தம் 4 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய விமானம் முழுவதுமாக தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்நிலையில், விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
விமானத்தில் பயணித்த அனைவரும் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பிரித்தானியாவை உலுக்கும் சாண்ட்ரா புயல் : 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு அபாயம் - அவசர நிலை பிரகடனம்!
Published By: Digital Desk 3
28 Jan, 2026 | 08:47 AM
பிரித்தானியாவைத் தாக்கி வரும் 'சாண்ட்ரா' புயல் காரணமாக பல பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.
சமர்செட் பகுதியில் மிக மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அங்கு 'பாரிய பேரழிவுச் சம்பவம்' என அறிவிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இங்கிலாந்து முழுவதும் 95-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கையும், 250-க்கும் மேற்பட்ட இடங்களில் அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெவன் பகுதியில் 'ஆட்டர்' ஆறு வரலாற்றில் இல்லாத அளவு மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.
வடக்கு அயர்லாந்தில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளன. சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
பெல்பாஸ்ட், லண்டன், மான்செஸ்டர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து புறப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அயர்லாந்து கடற்பரப்பில் பலத்த காற்று வீசுவதால் படகு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், தண்டவாளங்களில் வெள்ளம் சூழ்ந்ததாலும் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment