தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 13…..சங்கர சுப்பிரமணியன்.

பிரம்மாண்டமான தெற்கு வாயிலைத் தவிர அரண்மனைக்கு பல வாயில்கள் உள்ளன. அவற்றில் சிறப்பான இணக்க வாயில் உள்ளிட்ட தெய்வீக வாயில், புகழ்பெற்ற கிழக்கு வாயில் மற்றும் மேற்கு வாயில் என பல உள்ளன. ஒவ்வொரு மூலையிலும் சீனக் கலைநுட்பத்துடன் கூடிய கோபுரங்கள் வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ளன.


இவை தவிர பிரம்மாண்டமான அறைகளும் உள்ளன. குறிப்பாக மன அமைதிக்கான அறை மற்றும் இலக்கியப் பெருமைக்கான அறை, இராணுவச் சிறப்பைக்கூறும் அறை என்று பல அறைகள் இந்த அரண்மனையின் புகழுக்கு சான்றாக உள்ளன.

மேலும் தூய்மையான சொர்கம் போன்ற அரண்மனை, அமைதியான

நீண்ட ஆயுள் தரும் அரண்மனை என்ற அரண்மனைகளுடன்
தெற்கு அல்லது முற்பகுதி என்று அழைக்கப்படுகின்ற மூன்று கட்டிடங்கள் இதன் சிறப்பை எடுத்துக்ககூறுகின்றன. இந்த அரண்மனையில் இம்பீரியல் கார்டன் என்பதும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன.

சுருக்கமாகச் சொன்னால் சீனப் பேரரசர்கள் எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக அமைந்துள்ளது. அரண்மனைத் தோற்றம் அதன் நிலப்பரப்பு கலைநுட்பம் வாய்ந்த வேலும்பாடுகள் வாழ்வியல் முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளது. இந்த அரண்மனையை ஒரு நாளில் சுற்றிப் பார்க்க முடியாது.

மைசூர் மகாராஜா அரண்மனை போன்றிருந்தால் ஒரு நாளில் சுற்றிப் பார்க்கலாம். இதுவோ பல பேரரசர்கள் வாழ்ந்த அரண்மனைகளை கொண்டதோடு ஒரே இடத்தில் இருக்கின்றன. ஒரு வாரகாலம் கூட பகுதி பகுதியாய் அனுபவித்து சுற்றிப்பார்க்கலாம். நுழைவிடத்தில் இருந்து தொடரந்து பக்கவாட்டிலும் முன்புறமும் கட்டுமானங்கள் விரிந்து சென்றபடி தொடுவானம் போல் கட்டிடங்கள் நீள்கின்றன.


எதையும் முழுமையாக பாரத்துவிட முடியாது. நான் பிறந்து வளர்ந்த நெல்லையிலும் வாழ்ந்த பெங்களூரிலும் இப்போது வாழும் மெல்பனிலும் எல்லா இடங்களையும் முழுமையாகப் பார்த்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. அப்படி இருக்க சிலமணி நேரங்களில் இந்த அரண்மணையெ சுற்றிப் பார்க்கமுடியாது. ஆதலால் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களை மட்டும் பார்த்தோம்.

நாங்கள் மட்டுமல்ல பயணிகள் எல்லோருமே அப்படித்தான். பெரும்பாலான இடங்களுக்குள் நுழையவே முடியாது. சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் இருக்கும். மறுபுறமிருந்து பார்த்தபடி செல்ல வேண்டும். அதுவும் சரிதான். இல்லாவிடில் வருபவர்கள் தங்கள் பெயரைடன் வந்த தேதியையும் எழுதி நினைவுச் சின்னங்களில் தங்கள் நினைவுகளை பதித்துவிட்டு செல்வார்கள்.

ஏனென்றால் அங்கு வரும் கூட்டத்தை கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. முடிந்தவரை சுற்றிப்பார்த்தோம். கால்கள் ஒத்துழைக்க மறுத்தன. ஆங்காங்கே இளைப்பாறிய சிறுசிறு கூட்டங்களில் நாங்களும் ஐயப்பஜோதியில் ஐக்கியமானபடி ஐக்கியமானோம். சரி திரும்பலாம் என்று முடிவு செய்தபோதுதான் சோதனை வேதனையாக காத்திருந்து.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா என்பதைப் போன்ற சோதனை. முன்வைத்த காலை பின் வைக்க கூடாது என்பதே சோதனை. போரில் புறமுதுகு காட்டி ஓடாத இனத்தில் வந்தவன் என்பதை நினைவு படுத்தியது.என் இனத்தை எண்ணி பெருமை அடைந்தேன். இது தற்பெருமையல்ல இனப்பெருமை. எனது மலேசிய நண்பரைப் போல தற்பெருமையல்ல.

வாய்க்கால் வழியாக பாயும் நீர் புல்லுக்கும் பாயும் என்பதைப்போல்





எனது மலேசிய நண்பரை பற்றி இக்கட்டுரையில் சிறிது சொல்லிவிடுகிறேன். ஹிமாலயன் டாஸ்க் என்பார்களே அதைப்போல் தற்பெருமையில் சிகரம் தொட்டவர். அவரிடமே இவ்வளவு தற்பெருமை பேசுகிறாயே என்று கேட்பதுண்டு. அப்போது அவர் சிரித்தபடியே சொன்ன பதில் இப்படியெல்லாமா மனிதர்கள் இருப்பார்கள் என்றை என்னை எண்ணவைத்தது.

அவர் சொன்ன பதிலை நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டாமா? அவர் சொன்ன பதில், மற்றவர்கள் நம்மைப் பாராட்டாதபோது நம்மை நாமே ஏன் பாராட்டக்கூடாது என்றார். அத்தோடு விடவில்லை மனிதர், நம் பசிக்கு நாம் தானே சாப்பிடவேண்டும் என்றார்.

இப்போது கட்டுரைக்கு வருகிறேன்.
விளக்கமாக சொல்ல வேண்டுமானால் வந்த வழியாக திரும்பக்கூடாது. ஒரு வழிப்பாதை போன்று முன்னேதான் போக முடியும். முன்னால் சென்று வெளியேறும் பாதையில் செல்ல வேண்டும். அப்படித்தான் எல்லோரும் செல்ல வேண்டும். அரண்மனை நுழையுமிடத்திற்கு எதிராக டியானன்மன் ஸ்கொயர் உள்ளது.

டியனன்மன் ஸ்கொயர் ரயில் நிலையத்துக்கு அருகே சுரங்கப்பாதை வழியாக சென்றால் டியானன்மன் ஸ்கொயரை அடையலாம். அது ஒரு நினைவுத்தூண் மட்டுமே. ஆதலால் அனைவருமே முதலில் அரண்மனைக்குத்தான் செல்கிறார்கள். அப்படியே டியானன்மன் ஸ்கொயருக்கு முதலில் சென்றாலும் அரண்மனைக்கு வரும்போது வந்தவழியே திரும்ப முடியாது. மாற்று வழியாக சாலையைக் கடந்துதான் வந்த இடத்தை வந்தடைய முடியும்.

மாற்றுவழியாக பயணிக்க வேண்டுமானால் வெகு தூரம் நடந்துதான் செல்ல வேண்டும். எல்லோரும் நடந்து தான் செல்கிறார்கள். ஏனென்றால் ஃபோர்பிட்டட் சிட்டி என்பதற்கேற்ப வாகனங்கள் எதுவும் அங்கு செல்ல அனுமதியில்லை. ஆதலால் வாடகை வாகனங்கள் எதுவும் அங்கு இல்லை. வரவும் வராது. வாடகை வாகனங்களை மட்டும் அனுமதித்தால் வாடகை வாகனக்காரர்களைக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

வெகுதூரம் செல்ல வேண்டியிருந்ததால் நடந்து பழக்கமில்லாததால் எங்களால் நடக்கமுடியவில்லை. நான் முன்பே சொல்லியிருந்தபடி பயணிகளில் தொன்னூறு சதவீதத்துக்கும் மேற்பட்டோர் சீனர்களே. அவர்கள் வேகமாக நடந்து இயல்பாக செல்கிறார்கள். நாங்களும் ஒரு காலத்தில் வேகமாக நடந்வர்கள்தான். சூழ்நில் நடக்கமுடியாதபடி பண்ணிவிட்டது.

எங்களைப் போன்றோர் சிரமப்பட்டார்கள். கொஞ்சதூரம் நடப்பதும் ஓய்வெடுப்பதுமாக நடந்தனர். நாங்களும் அப்படியே நடக்கலாம் என்று முயன்றபோது அர்ச்சுணனுக்கு தேரோட்டியாக கண்ணன் வந்ததுபோல் ஒருவர் கண்ணதிரே தோன்றினார் கனிமுகத்தைக் காட்டினார். எங்களால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. அவர் ஒரு சைக்கிள் ரிக்க்ஷாகாரர்.

சீனாவில் வீதிகளில் சைக்கிளில் போவோரைப் பார்க்கலாம். ஸ்கூட்டரில் போவோரைப் பார்க்கலாம். சைக்கிள் ரிக்‌ஷாவையோ ஆட்டோ ரிக்க்ஷாவையோ பார்க்கமுடியாது. வீதிகளில் பேருந்து மற்றும் மகிழுந்துக்களை மட்டுமே பார்க்கமுடியும். விலையுயர்ந்த வாகனங்களும் வாடகை வாகனமாகவே உள்ளன. எல்லோரும் வாகனங்கள் வைத்திருக்குப்படி பொருளாதாரம் உள்ளதா எனத் தெரியவில்லை.

No comments: