….சங்கர சுப்பிரமணியன்.
ஒரு மொழி ஒரு இடத்தில் மட்டும் பேசப்பட்டால் பேச்சு வழக்கு ஒரே மாதிரியாக இருக்கும். ஒரு மொழியை ஒரு நாட்டிலேயே பல வட்டாரங்களில் பேசப்படும் போது மொழியின் தன்மை மாறுபடும். இருப்பினும் பொருளைப் புரிந்து கொள்வர். சான்றாக சிலவற்றைப் பார்ப்போம். ஒன்ர தம்பிய கேளுங்கோ. இது கோயம்புத்தூர் பேச்சு வழக்கு. ஒரு தம்பி என்றால் சரி. ஒன்றரை தம்பியில் அரை தம்பியை எப்படி தேடுவது?
கேளுங்கள் என்பதை கேளுங்க என்றால் சரி. கோ என்ற அரசன் இதில் எப்படி புகுந்தான். முதலில் இதன் பொருளைப் பார்ப்போம். உன்னுடைய தம்பியை கேளுங்கள் என்பதே இதன் பொருள். இந்த பொருள் தமிழ்நாட்டில் எல்லா வட்டாரங்களில் வாழும் தமிழர்களுக்கும் புரியும். அது திரைப்படம் கொடுத்த கொடை. ஆனால் வேறு நாடுகளில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு எந்த அளவுக்கு புரியும் என்பது ஐயப்பாடே.
இன்னொரு சான்றைப் பார்ப்போம். “மாலையில் தொலைபேசியில் அழைத்தார்” என்பதை இப்படியும் சொல்லலாம். அந்திக்கு அடிச்சு கதைச்சவர் என்றும் வேறுவிதமாக சொல்லலாம். இப்படி சொல்வது அந்த வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு புரியும். மற்றவர்களுக்கு யார் யாரை அடித்தார்கள் என்று நினைக்கவே தோன்றும்.
பெங்களூரில் உள்ள ஒரு காய்கறி கடைக்காரரிடம் ஒரு கிலோ தடியங்காய் கொடுங்கள் என்றால் அவர் கண் முன்னால் தடியங்காயை வைத்துக் கொண்டே அது எங்களிடம் இல்லையே என்பார். ஏனென்றால் அங்கு வெள்ளைப் பூசணிக்காய் என்று சொன்னால்தான் தெரியும்.
தென்காசியில் ஒரு காய்கறிக் கடைக்காரரிடம் ஒரு கிலோ வெள்ளைப் பூசணிக்காய் கொடுங்கள் என்றால் தடியங்காய் இருக்கிறது பூசணிக்காய் இருக்கிறது நீங்கள் கேட்கும் வெள்ளைப் பூசணிக்காய் இல்லையே என்பார். ஏனென்றால் அவருக்கு பூசணிக்காய் என்றால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்றுதான் தெரியும்.
கண்டிப்பாக தடியங்காய் என்பது வெள்ளைப் பூசணிக்காய் என்று தெரியாது. இதேபோல் சேனைக் கிழங்குக்கும் கருணைக் கிழங்குக்கும் இடையே குளறுபடி உள்ளது. அதுதான் குழப்பம் உள்ளது. எனவே அந்தந்த இடத்தில் இருப்பவர்களுக்கு அதனதன் பொருள் புரியும். எல்லாம் சரிதான். வட்டாரத்தால் வரும் வேறுபாடுதான் வேறுபாடாய்த் தோற்றமளிக்கிறது.
இதை நான் இங்கு சொல்வதற்கு காரணம் ஒரு கருத்து பற்றிய விவாதம்தான். விக்டோரிய மாநிலத்தில் தமிழைப் பாடமாக எடுத்து அதிக மதிப்பெண்களை பெற்றவர்களை மதித்து கௌரவிப்பதை எப்படிச் சொல்லலாம் என்பதே. ஒரு சாரார் மதிப்பளிக்கும் விழா என்கிறார்கள். அப்படியானால் மதிப்பெண் பெற்ற மற்றவர்கள் எல்லாம் மதிப்பில்லாதவர்களா? என்கின்றனர் இன்னொரு சாரார்.
இன்னொரு சாராரின் வாதம் அதிக மதிப்பெண்களைப் பெற்றவர்களை கௌரவிக்கும் விழா என்பதே சரி என்கின்றனர். அதற்கு மற்றவர்கள், கௌரவிக்கும் விழா என்றால் அதிகம் மதிப்பெண் பெற்ற மற்றவர்கள் எல்லாம் கௌரவமற்றவர்களா என்கின்றனர். இதில் மதிப்பா கௌரவமா என்பதே இங்கு பிரச்சனை. கௌரவமிருந்தால் மதிப்பும் மதிப்பிருந்தால் கௌரவமும் கிடைக்கும் என்றே என் சிற்றறிவு சொல்கிறது.
தமிழில் அரிச்சுவடியைப் படித்த சாமானியன்தான் நான். ஆனால் தமிழைக் கசடறக் கற்றவர்கள் யார்? ஆய்ந்தறிந்த தமிழ் சான்றோர் பெருமக்கள் யார்? என்று தேடுகிறேன். யார் யார் யார் அவர் யாரோ? ஊர் பேர்தான் தெரியாதோ? கண்களிலே தமிழ் ஒளியாக பேச்சினிலே தமிழ் ஒலியாக ஐயம் தீர்த்து வைப்பாரோ?
இங்கே இருப்பதா? அங்கே வருவதா? மங்கள நாயகி நீயே சொல்லம்மா என்று ஒரு பிச்சைக்காரன் வழக்கமாக உணவளிக்கும் இரண்டு வீட்டுப் பெண்கள் ஒரே நேரத்தில் அழைக்கவும் எங்கு செல்வது என்று தடுமாறினான். இப்போது என் நிலையும் அப்படித்தான். இரண்டு சாராரில் யார் சொல்வது சரி?
துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே, சோகம் பொல்லாதே. அலையும் காற்றினில் அகல் விளக்கேற்றி மறைப்பதில் பயனுண்டோ? கையால் மறைப்பதில் பயனுண்டோ? என்ற பாடல் வரிகளில் எத்தனை பொருள் உள்ளது. இங்கே ஆக்கிய செயல்தான் பொருள். ஆக்கிய செயலாக நிற்பது வாங்கிய அதிக மதிப்பெண்கள்.
ஒரு தரப்பினர் இவர்கள் ஆற்றிய செயலுக்காக பாராட்டி மதித்து மரியாதை செய்கிறோம் என்கின்றனர். இன்னோர் தரப்பினர் ஆக்கிய செயலுக்காக கௌரவப்படுத்துகிறோம் என்கின்றனர். மதித்து மரியாதை செய்வதும் கௌரவப்படுத்துவதும் ஒன்றா? அல்லது வெவ்வேறா?
பூமாலை அணிவித்து பொன்னாடை போர்த்தினால் மதித்து மரியாதை செய்வதா? அல்லது கௌரவப்படுத்துவதா? சரி முட்டையில் இருந்து கோழி வந்ததா அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா என்ற விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தமிழாய்ந்த பெருமக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
கௌரவம் என்பது தமிழ்ச்சொல்லே இல்லையாம். என்னடா? இது மதுரைக்கு வந்த சோதனை? சங்ககாலப் புலவர் இறையனாரின் குறுந்தொகையில் வரும் குறிஞ்சித்திணைப் பாடலான கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்ற பாடல் போலன்றோ சந்தேகம் வலுக்கிறது.
கௌரவம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்றால் அது என்ன சொல்? அது வடமொழிச் சொல்லாம். என்ன இது கிணறு வெட்ட பூதமல்லவோ கிளம்புகிறது? இப்போது அந்த பூதத்தைப் பார்ப்போம். வடமொழியில் “க” என்ற எழுத்துக்கு நான்கு எழுத்துக்கள் உள்ளன. அவை Ka, Kha, Ga மற்றும் Gha ஆகும். ஆதலால் கௌரவம் அல்ல அது Kauravam. வடமொழிச் சொல்லான “கௌரவ்(गौरव) என்பதன் திரிபு அல்லது அதன் தமிழாக்கமே இந்த கௌரவம்.
ஒரு சொல்லை தமிழ்ச்சொல்லா அல்ல வடமொழிச்சொல்லா என்பதை எப்படி அறிவது என்று என் தமிழ் ஆசான் திரு. சுந்நரம் பிள்ளை சொல்லித் தந்தது பசுமரத்தாணியாய் நெஞ்சில் பதிந்துள்ளது. அதை இங்கு சொல்கிறேன். ஒரு சொல்லின் முன் “அ”சேர்த்தால் எதிர்மறைச் சொல் வரும். அப்படி வரும் சொற்கள் யாவும் வடமொழிச் சொற்களே என்று சொல்லித் தந்தார்.
சான்றுகளைப் பார்ப்போம். அசுத்தம், அசௌகரியம், அகௌரவம், அதர்மம், அநீதி என்று சொல்லிக் கொண்டேபோகலாம். சுத்தம் தமிழ்ச்சொல் அல்ல. அதற்கு தமிழ்ச்சொல் தூய்மை. அதற்கு எதிர்மறைச் சொல் அதூய்மை அல்ல. தூய்மையற்ற என்பதே எதிர்மறைச்சொல். அதேபோல் கௌரவத்துக்கு எதிர்ச்சொல் அகௌரவம். கௌரவத்துக்கு தமிழ்ச்சொல் மதிப்பு.
மதிப்பு என்ற சொல்லுக்கு எதிர்மறைச் சொல் அமதிப்பு அல்ல. அது அவமதிப்பு என்பதாகும். இப்போது சாமானியனான எனக்கு மதிப்பளிக்கும் விழா என்பது சரியாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பேரறிவாளர்கள் நான் சொல்வது தப்பென்றால் என் தவறை உணர்ந்து திருத்திக் கொள்கிறேன். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலுனும் கெடும் அல்லவா?
இந்த கௌரவத்துக்கு ஆங்கிலத்தில் Dignity, Respect and Honour என்று பொருள் படும். அதுவே தமிழில் மரியாதை மற்றும் மதிப்பு ஆகும். ஒருவேளை தூயதமிழைப் பயன்படித்தி ஒரு தரப்பினர் மதிப்பளிக்கும் விழா என்றிருப்பார்களோ? இன்னொரு தரப்பினர் கௌரவம் என்பதை தூயதமிழ் என்று எண்ணி கௌரவப்படுத்தும் விழா என்றிருப்பார்களோ?
நமக்கு ஏன வீண் வம்பு?
பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் எழுதிய சில நூல்களை வாசித்திருக்கிறேன். வாழ்க்கையில் பெரும்பாலான நேரத்தை வாசிப்பு அனுபவித்தில் பொழுது போக்குக்காக செலவிடுவதை சிறுது நேரமே செலவிட்டாலும் அதில் பெறும் அனுபவம் விழிப்புணர்வையோ அல்லது நமது அறிவுத்திறனை மேம்படுத்துவதாகவோ அமைய வேண்டும் என்பது பொதுவான கருத்து.
அப்படியான வாசிப்பு அனுபவத்தில் ஏற்பட்ட அனுபவத்தால் நுனிப்புல் மேய்ந்து ஏதோ சொற்ப அறிவை வைத்துக் கொண்டு திரியும் என்னைப் போன்றவர்களால் இதையெல்லாம் எப்படி புரிந்து கொள்ளமுடியும்?
இதற்கெல்லாம் தமிழாய்ந்த அறிஞர் பெருமக்கள்தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரை துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே சோகம் பொல்லாதே என்று நினைத்து எது சரியென சொல்மனமே என்று காத்திருப்போம்.
-சங்கர சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment