யாழ்ப்பாணம் கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றப்பட்டது
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!
யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும் - விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா
பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு
சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து
யாழ்ப்பாணம் கந்தரோடை விகாரை பெயர் பலகை அகற்றப்பட்டது
08 Jan, 2026 | 02:24 PM
யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, "கந்தரோடை விகாரை" என நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில் , தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் "கந்தரோடை விகாரை" என திசை காட்டும் பெயர் பலகை நடாத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் கந்தரோடை விகாரைகள் அமையப்பெற்றுள்ளதாக கூறப்படும் , புராதன இடத்தினை , " தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என பிரதேச சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை அடுத்து வீதிகளில் "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றும் செயற்பாட்டை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் சுன்னாகம் பகுதியில் நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.
அதேவேளை , குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை!
Published By: Digital Desk 1
09 Jan, 2026 | 02:23 PM
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் விடுதலை செய்யுமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் சீலானி பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி, டக்ளஸ் தேவானந்தா தலா 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் மார்ச் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளி மாகந்துரே மதுஷின் விசாரணையின் போது, 2019 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவருக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்கமைய முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும் - விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா
Published By: Digital Desk 3
07 Jan, 2026 | 04:30 PM
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
உருவாகியுள்ள தாழ்வுமண்டலமானது, நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரவுள்ளது. இது மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகரவுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21 ஆவது தாழ்வுமண்டலமாக அமைகின்றது.
ஆனாலும் கடந்து சென்ற தாழ்வுமண்டலங்களை விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது இதன் நகரும் பாதை கடல் பகுதியாக இருந்தாலும், வடக்கு நோக்கி நகரும் போது தரையையும் ஊடறுத்துச் செல்லவுள்ளது.
அத்துடன் மிக குறைந்தளவு வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் கிழக்கு மாகாணம் பாரியளவு மழைவீழ்ச்சியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
அத்துடன் 9,10 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் தாக்கம் டித்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்க முடிகின்றது.
அத்துடன் இந்த பாதிப்பால் விவாசாயிகள் பாரிய பயிரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்த அவர் துறைசார் அதிகாரிகள் இது தொடர்பில் துரித முன்னேற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது என்றும் தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார். நன்றி வீரகேசரி
பாதுகாப்பு பிரதி அமைச்சருடன் இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு
Published By: Digital Desk 1
08 Jan, 2026 | 06:49 PM
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவ்வேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, கொழும்பிலுள்ள பாதுகாப்பு பிரதி அமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இந்திய இராணுவத் தளபதி மற்றும் குழுவினரின் தலைமையில், நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்தனர்.
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவ்வேதியை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அன்புடன் வரவேற்றதுடன், இரு தரப்பினருக்கும் இடையே சுமுகமான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
அண்டை நாடுகளான இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாறு, கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளை இரு தரப்பினரும் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நன்றி வீரகேசரி
சீதையம்மன் ஆலயத்திற்கு வருகை தரவிருந்த இந்திய இராணுவ தளபதியின் விஜயம் இரத்து
08 Jan, 2026 | 04:17 PM
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் அவருடைய பாரியார் திருமதி சுனிதா திவேதி இருவரும் சீதையம்மன் ஆலயத்திற்கு வியாழக்கிழமை (08) விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்ள இருந்த நிலையில் நுவரெலியாவில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த விஜயம் இரத்து செய்யப்பட்டது.
இந்திய இராணுவத் தளபதி உலங்கு வானூர்தி மூலமாக நுவரெலியா நகர சபை மைதானத்திற்கு வருகை தந்து அங்கிருந்து விசேட வாகனம் ஊடாக சீத்தாஎலிய செல்வதற்கான ஏற்பாடுகள்; செய்யப்பட்டீரந்த நிலையில் காலநிலை சீர்கேடு காரணமாகவும் குறிப்பாக முகில் கூட்டங்கள் அதிகமாக காணப்பட்டதால் உலங்கு வானூர்தி தறை இறங்குவதற்கான அனுமதியை இலங்கையின் ஆகாயப்படை தரப்பினர் வழங்க மறுத்தமை காரணமாக இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டது.
இந்திய இராணுவ தளபதி சார்பாக வருகை தந்திருந்து ஏ.வி.குருமூர்த்தி இந்த பூஜை வழிபாடுகளில் பங்கு பற்றியதுடன் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட உட்சவ மூர்த்தி திருவுருவச் சிலையும் மற்றும் இந்தியாவின் அயோத்தி நகரின் சரயு நிதியில் பெறப்பட்ட புனித நீரும் ஆலய நிர்வாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையிலான நிர்வாக சபையினரிடம் கொழும்பு இந்திய தூதவராலயத்தின் அதிகாரி ஏ.வி.குருமூர்த்தனால் கையளிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்.
இந்திய இராணுவத்தளபதியின் வருகை காலநிலை காரணமாக சாத்தியப்படாமல் போய்விட்டது.ஆனாலும் நாங்கள் திட்டமிட்ட அடிப்படையில் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்தோம்.
அதேபோன்று இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கை வழங்கி வருகின்ற ஒத்துழைப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட்ட இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் விசேட பேரிடரின் பின்பு இந்திய இராணுவ வீரர்கள் உடனடியாக இலங்கைக்கு வருகை தந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாதைகளை மீள கட்டியெழுப்புவதற்கும் மேலும் நிவாரண பணிகளில் ஈடுபட்டமைக்கும் உயிரிழந்தவர்களை கண்டு பிடிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்து செய்த சேவைக்காகவும் யஎங்களுடைய நாட்டின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் எங்களுடைய நாட்டை கட்டியெழுப்புவதற்கு தங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும்.விசேடமாக பாரிய பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள இரயில்வே பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவி செய்ய முடியுமாக இருந்தால் அதன் மூலமாக எங்களுடைய உல்லாச பயணத்துறை வளர்ச்சியடைவதன் மூலமாக எங்களுடைய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்பு முடியும் எனவும் குறிப்பிட்டார்.
ஆலய நிர்வாக சபையினரால் இந்திய இராணுவ தளபதிக்கு அவருடைய வருகையை முன்னிட்டு வழங்கப்படவிருந்த விசேட நினைவுச் சின்னத்தை இந்திய தூதரக அதிகாரியிடம் கையளித்தனர். நன்றி வீரகேசரி





No comments:
Post a Comment