-சங்கர சுப்பிரமணியன்
துன்பம் வருகையில் யாழை மீட்டி நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
வலுவில்லா பொழுதில் தமிழில் பாடிநீ
வலிமை சேர்க்க மாட்டாயா?- கண்ணே
வலிமை சேர்க்க மாட்டாயா?
(துன்பம்)
அன்பும் அறனும் சூழும் நாட்டிலே
பண்பும் பயனும் சேர்க்க - நல்
பண்பும் பயனும் சேர்க்க - நீ
அன்னை செந்தமிழ்ப் பாட்டின் வழியினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? -கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?
(துன்பம்)
வாழ்வதென்றும் யாம் வீழ்வதென்றுமே
தெளிந்திடாத போது - யாம்
தெளிந்திடாத போது - தெய்வ
புலவரவரின் அருங்குறளில் ஒன்றினால்
வழியைச் சொல்ல மாட்டாயா? - நீ
வழியைச் சொல்ல மாட்டாயா?
(துன்பம்)
நற்றினையென்றும் குறுந்தொகையென்றும்
புலவர் கண்ட நூலின் - அரும்
புலவர் கண்ட நூலின் - உன்
திறமை காட்டி வாழுந் தமிழின் சிறப்பைச்
சொல்லிக் காட்ட மாட்டாயா? அதனைச்
சொல்லிக் காட்ட மாட்டாயா?
(துன்பம்)
.

No comments:
Post a Comment