நம் முன் வாழ்ந்தோர் செய்த செயலைத்தான் பின்பற்றினோம். மயில் மீதேறி உலகைச் சுற்றினால் என்ன பெற்றோரைச் சுற்றினால் என்ன? ஆதலால் டவர் வரை சென்று திரும்பினோம். எங்கள் வழியை பலர் பின்பற்றினர். அதில் எனக்கு விருது கிடைத்தது போன்ற பெருமை. விருது எல்லோருக்கும்தான் கிடைக்கிறது. இதிலென்ன பெருமை என்று மாடசாமி அண்ணாச்சி என்றோ சொன்னது என் தலையில் நறுக்கென குட்டுவது போல் இருந்தது.
சீனப் பெருஞ்சுவரை அவரவர்களின் உடல் ஒத்துழைப்புக்கு ஏற்ப நடந்துசென்று பார்த்து மகிழ்ந்தனர். எல்லாம் மனம்தான் காரணம். கோவிலில் ஆண்டவனை கையெடுத்து கும்பிடுபவர்களும் இருக்கிறார்கள். தரையில் விழுந்து கும்பிடுபவர்களும் இருக்கிறார்கள். தரையில் விழுந்ததோடு மட்டுமின்றி சிலர் தண்ணீரில் நீச்சல் அடிப்பதுபோல் கைகளை மாற்றி மாற்று தலைக்கு முன் நீட்டி கும்பிடுபவர்களும் இருக்கிறார்கள். கும்பிடுவதற்கு ஏற்ப சொர்க்கத்தில் முன்னுரிமை கிடைக்குமோ என்னவோ?
யாரையும் குறை சொல்ல முடியாது. ஒருவன் கஞ்சி குடிக்கிறான்.
ஒருவன் கறி கூட்டு குழம்புடன் உண்கிறான். மற்றொருவன் வடை பாயாசத்துடன் விருந்து சாப்பிடுகிறான் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். சீனப் பெருஞ்சுவர் பார்க்கவேண்டிய ஒன்று. நடந்து முடித்த களைப்புடன் இறங்கினோம். வெயிலின் கொடுமை தாங்கமுடியவில்லை. யாரோ ஒருவர் தன் மகள் தீகார் சிறையில் இருப்பத்தப் பார்த்து ஒரு ரோஜாமலர் வாடித் துவண்டதுபோல் இருக்கிறாள் என்று சொன்னது நினைவில் வந்தது.
ஒருவன் கறி கூட்டு குழம்புடன் உண்கிறான். மற்றொருவன் வடை பாயாசத்துடன் விருந்து சாப்பிடுகிறான் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். சீனப் பெருஞ்சுவர் பார்க்கவேண்டிய ஒன்று. நடந்து முடித்த களைப்புடன் இறங்கினோம். வெயிலின் கொடுமை தாங்கமுடியவில்லை. யாரோ ஒருவர் தன் மகள் தீகார் சிறையில் இருப்பத்தப் பார்த்து ஒரு ரோஜாமலர் வாடித் துவண்டதுபோல் இருக்கிறாள் என்று சொன்னது நினைவில் வந்தது.
அங்கு வந்தவர்கள் அனைவருக்கும் அதே நிலைதான். ஒருவழியாக சீனப் பெருஞ்சுவரில் இருந்து இறங்கி பேருந்தில் வந்து அமர்ந்தபின் சிறிது நேரத்தில் கால்களில் வலி தெரிந்தது. ஓட்டலுக்கு வந்து வென்னீர் குளியல் எடுத்தபின் ஓரளவு களைப்பும் கால்வலியும் குறைந்தது. இரவு உணவுக்குப் பிறகு மறுநாள் பயணத்துக்குண்டான ஏற்பாடுகளைச் செய்தோம்.
மேற்கு சாங்க்அன் தெரு என்பது மிகவும் பிரம்மாண்டமான சாலை. இந்த சாலையின் ஒருபுறம் டியானன்மன் ஸ்கொயரும் மறுபுறம் ஃபோர்பிட்டன் சிடியும் எதரெதிரே அமைந்துள்ளன. இந்த சாலையில்தானே இருக்கிறது அதுவும் எதிரெதிரே இருக்கிறது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கதையாக இரண்டையும் அவ்வளவு எளிதில் பார்த்துவிட முடியாது.
ஆதலால் காரில் சென்று அந்த சுற்றுலாத் தளங்களுக்கு அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம் என்பது நடக்கமுடியாத ஒன்று. நான் எதிர்பார்த்தபடியே நடந்தது. ஓட்டலில் இருந்து அந்த இரண்டு இடங்களையும் பார்ப்பதற்காக வாடகை வாகனத்தில் சென்றோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் இதற்குமேல் போக அனுமதியில்லை என்று சொல்லி இறக்கி விட்டான்.
அப்போதுதான் தெரிந்தது எந்த வாடகைவாகனமும் அதற்குமேல் செல்வதில்லை என்று. அந்த இடத்தில் வாடகை வாகனங்கள் ஆட்களை இறக்கிவிட்டு சென்றன. அப்படி இறங்கியவர்களில் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தமாதிரி இரண்டு வெள்ளையர்கள் இருந்தனர். காளிதாசனுக்கு காளியின் அருளால் நாவில் தமிழ் வந்ததுபோல் எனக்கும் ஆங்கிலம் வந்தது.
மொழிதெரியாத இடத்தில் நம்மொழி பேசத் தெரிந்த ஒருவரை காணும்போது உண்டாகும் மகிழ்ச்சி எங்களுக்கு உண்டானது. தமிழ்மொழி போல் அப்போது எனக்கு ஆங்கிலம் உதவ கடைசியாக வாய்பேச முடியாமல் இருந்தவனுக்கு பேச்சு வந்ததுபோல் பேசித் தீர்த்துவிட்டேன். அதன்மூலம் நாங்கள் செல்லவேண்டிய இடத்துகு செல்ல இன்னும் ஒரு கிலோமீட்டருக்கும் மேல் நடக்க வேண்டும் என்று அறிந்தோம்.
வேறு வழியின்றி நடந்தோம். சீனர்களுக்கு நடப்பது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி போல். விசுக் விசுக்கென்று வேகமாக நடந்தபடி சென்றார்கள். ஒருகாலத்தில் நானும் அப்படித்தான். மெல்பன் அளித்த கொடை நடப்பதென்பது இப்போது வேப்பங்காயானது. கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல் ஒரு அதிசயம் நடந்தது. உண்மையான முயற்சியும் எண்ணமும் இருந்தால் கிட்டாததும் கிட்டும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன்.
வழி நெடுக காட்டுமல்லியாக முதல் சிம்கார்டுக்காக அலைந்து தவறவிட்ட இடம் மலர்ந்திருந்தது. ஆம் கொஞ்ச தூரம்தான் நடந்திருப்போம் நாங்கள் பார்க்க முடியாமல் போய்விட்தே என்று எண்ணிய ஹுட்டாங் வழிநெடுக இருந்தது. இப்போது சந்தர்ப்பம் வரும்போது அந்த ஹுட்டாங் பற்றி சொல்கிறேன் என்று ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன் அல்லவா அதைப்பற்றி சொல்கிறேன்.
நாங்கள் போகும்பாதையிலேயே டாங்க்ஜியாஓமின்ஸியாங் ஹுட்டாங் இருந்தது. நாங்கள் பார்க்க இருந்தது நன்லுவோகுஜியாங் ஹுட்டாங். ஆனால் இப்போது பார்க்க கிடைத்த டாங்க்ஜியாஓமின்ஸியாங்க் ஹுட்டாங். என்ன வித்தியாசம்? பிச்சைக்காரனுக்கு திருமணவீட்டு சாப்பாடு கிடைத்தமாதிரி. பிரியாணி கிடைத்த மாதிரி என்றும் சொல்லலாம்.
ஏனென்றால் இப்போது பார்க்க கிடைத்தது பீஜிங்கின் நீளமான ஹுட்டாங். இதிலிருந்து என்ன தெரிகிறது ஒரு வாய்ப்பு நம் கையை விட்டு நழுவிப் போகிறது என்று துவண்டு விடக்கூடாது. அதைவிடப் பெரிய வாயப்பு கிடைக்கும். சான்றாக என் வாழ்வில் நடந்த ஒன்றைச் சொல்கிறேன். சிங்கப்பூர் மற்றும் கனடா செல்வதற்காக செலவையும் நேரத்தையும் பெருமளவு செலவுசெய்தேன். அப்படியே சென்றிருந்தாலும் தனியாக சென்று அப்புறமே குடும்பத்தை அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆனால் எனக்கு குடும்பத்தோடு ஆஸ்திரேலியாவில் வாழ நிரந்தரமான வீசா கிடைத்தது. எனக்கு தெரிந்தவர்கள் சிங்கப்பூர் சென்றிருந்தாலும் அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குத்தான் வந்தார்கள். ஆதலால் நான் கிடைப்பது கிடைக்கும் என்ற எண்ணத்தில் வாழப் பழகிவிட்டேன். என் சொந்தக் கதையைக் கூறி உங்களை சோதனைக்குள்ளாக்கி விட்டேன். இதற்கு மேலும் தாமதிப்பது சரியல்ல ஹுட்டாங் பற்றி சொல்கிறேன்.
ஹுட்டாங் என்பது பழங்காலத்தில் சீனர்கள் வாழ்ந்த குறுகலான தெருக்களையுடைய சிறிய தெருக்களின் இருபுறங்களிலும் வரிசையாக சிறுவீடுகளைக் கொண்ட பகுதியாகும். சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த இவை 1949வரையில் கிட்டத்தட்ட 3250 எண்ணிக்கையில் இருந்தனவாம். காலப்போக்கில் நகரமயமாக்களினால் அவை படிப்படியாக குறைந்து தற்போது ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளன.
எஞ்சியவை சுற்றுலா வருபவர்களுக்காகவும் பழமையின் சின்னமாகவும் திகழ்கின்றன. ஹுடாங்கை கடந்து செல்லும்போது பழங்காலத்தில் சீனா எப்படி இருந்து என்பதை தெரிந்து கொள்ளமுடிகிறது.சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ கண்ணிரண்டும் தாமரையோ கண்கள் மின்னும் எந்தன் கண்ணா என்ற பாடல் வரிகளின் உற்சாகமூட்டலைப் போன்று புன்னகை தவழ மகிழவுடன் கண்கள் விரிய பார்த்தபடியே நடந்தோம்.
-சங்கர சுப்பிரமணியன்.




No comments:
Post a Comment