உலகச் செய்திகள்

அமெரிக்காவால் மதுரோ சிறைப்பிடிப்பு : “உலகின் நீதிபதியாக எந்த நாடும் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” – சீனா

வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசுவெலாவுடன் தொடர்புடைய 2 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் ; ஒரு கப்பலில் ரஷ்யாவின் தேசியக் கொடி!

கிரீன்லாந்தை கையகப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த அமெரிக்கா கலந்துரையாடல்

ஈரானில் இணையம், தொலைபேசி சேவைகள் முடக்கம் 



அமெரிக்காவால் மதுரோ சிறைப்பிடிப்பு : “உலகின் நீதிபதியாக எந்த நாடும் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” – சீனா

Published By: Digital Desk 3

06 Jan, 2026 | 04:24 PM

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்ததை தொடர்ந்து, “உலகின் நீதிபதியாக எந்தவொரு நாடும் செயல்படுவதை பீஜிங் ஏற்றுக்கொள்ளாது ” என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது, பாகிஸ்தானின் துணை பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான இஷாக் தாரிடம் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“உலகின் காவலராக எந்த நாடும் செயல்பட முடியாது என்பதையும், உலகின் நீதிபதியாக தன்னை அறிவிக்க எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்பதையும் நாம் ஒருபோதும் நம்பியதில்லை,” என்று அவர் கூறினார்.

அமெரிக்காவை நேரடியாக குறிப்பிடாமல், “வெனிசுவேலாவில் ஏற்பட்ட திடீர் திருப்பங்கள் ” குறித்து அவர் சுட்டிக்காட்டினார்.

“சர்வதேச சட்டத்தின் கீழ் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பும் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்,” என்றும் சீனாவின் தலைமைத் தூதுவர் வலியுறுத்தினார்.

அமெரிக்காவால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட 63 வயதான மதுரோ கண்கட்டி, கைகட்டப்பட்ட நிலையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சனிக்கிழமை வெளியாகி வெனிசுவேலா மக்களை அதிர்ச்சியடையச் செய்ததைத் தொடர்ந்து, வாங் யி வெளியிட்ட முதல் கருத்து இதுவாகும்.

நிக்கோலாஸ் மதுரோ தற்போது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் நியூயோர்க்கில் உள்ள சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

உலகளாவிய தூதரக சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற இலட்சியத்தை பீஜிங் கொண்டுள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் சவூதி அரேபியா மற்றும் ஈரான் இடையிலான எதிர்பாராத நல்லுறவை ஏற்படுத்தியதன் மூலம் அந்த நோக்கத்தை சீனா தெளிவாக வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, “உலகளாவிய முக்கிய பிரச்சினைகளில் பங்காற்றுவோம்” என சீனா உறுதியளித்திருந்தது. அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் நேரடியாக மோதித் தன்னை நிலைநாட்டிய அனுபவம், சீனாவின் தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.

“இது சீனாவுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. வெனிசுவேலாவுக்கு நம்பகமான நண்பராக தங்களை காட்ட விரும்பினோம்,” என்று மதுரோ கைது செய்யப்படும் சில மணி நேரங்களுக்கு முன்பு, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்பு பிரதிநிதி கியூ சியாவ்சியுடன் (Qiu Xiaoqi) அவர் நடத்திய சந்திப்பு குறித்து தகவல் அறிந்திருந்த சீன அரச அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், மதுரோவின் மகன் 2016ஆம் ஆண்டில் சேர்ந்து கல்வி கற்ற சீனாவின் முன்னணி பெக்கிங் பல்கலைக்கழகத்தை ((Peking University) 2024ஆம் ஆண்டில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் பல ஆண்டுகளாக கல்வி மற்றும் சீனாவுடனான உறவுகள் தொடர்பாக தூதரக ஈடுபாடுகள் இருந்தபோதும், அவர் மீண்டும் சீனாவுக்கு திரும்புவாரா என்பது குறித்து உறுதி இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, 2017ஆம் ஆண்டு அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தடைகளை கடுமையாக்கியதிலிருந்து வெனிசுவேலாவுக்கு பொருளாதார ஆதரவாக இருந்து வருகிறது. கிடைக்கப்பெறும் சமீபத்திய முழு ஆண்டுத் தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் சீனா சுமார் 1.6 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களை வெனிசுவேலாவிலிருந்து கொள்முதல் செய்துள்ளது.

சீனாவின் மொத்த கொள்முதல்களில் கிட்டத்தட்ட பாதி மசகு எண்ணெயாகும்.

மேலும், அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் (American Enterprise Institute) என்ற சிந்தனைக் குழு வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவின் அரசு கட்டுப்பாட்டிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் 2018ஆம் ஆண்டுக்குள் வெனிசுவேலாவில் சுமார் 4.6 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளன.     நன்றி வீரகேசரி 

 





வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்

Published By: Digital Desk 3

06 Jan, 2026 | 01:23 PM

வெனிசுவேலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.

அமெரிக்க இராணுவத்தால் நாடு கடத்தப்பட்ட வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ  சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலாவை நிலையான, நம்பிக்கையான ஆட்சியின் கையில் ஒப்படைக்கும் வரையில் அமெரிக்கா நிர்வாகம் செய்யும் எனவும், வெனிசுவேலா மசகு எண்ணெய் வளங்களை பாதுகாக்க இராணுவம் களத்தில் நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்க இராணுவ படைகள் ஜனவரி 3ஆம் திகதியன்று நடத்திய அதிரடி தாக்குதலில் வெனிசுவேலா  ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். அவர் வெனிசுவேலா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பூமியின் நரகம் என்று அழைக்கப்படும் ஆர்.புரோக்லின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். 

நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான வழக்கை மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ள நீதிமன்றம், அன்றைய தினம் மதுரோ ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே வெனிசுவேலாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தநிலையில், அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை இடைகால அதிபராக நியமித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்தது. 

இந்நிலையில், டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பதவியேற்றார். ரோட்ரிக்ஸுக்கு அவரது சகோதரரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

உறுதி மொழி ஏற்பதற்கு முன், எங்கள் தாயகத்திற்கு எதிரான சட்டவிரோத இராணுவ ஆக்கிரமிப்பால் வெனிசுவேலா மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட துன்பங்களுக்கு நான் வருத்தத்துடன் வருகிறேன் என்று அவர் தனது வலது கையை உயர்த்தி கூறினார்.

டெல்சி ரோட்ரிக்ஸ் 2018 ஜூன் முதல் வெனிசுலாவின் துணை ஜனாதிபதியாக பணியாற்றி உள்ளார். அவர் நிதி மற்றும் எண்ணெய் வள அமைச்சராகவும் உள்ளார். துணை ஜனாதிபதிபொறுப்புகளை தாண்டி 2 முக்கிய துறையின் அமைச்சராக இருக்கும் காரணத்தால் வெனிசுவேலா அரசில் மிக சக்திவாய்ந்த நபராக உள்ளார்.

1969 மே 18 அன்று வெனிசுவேலா காரக்காஸில் பிறந்த டெல்சி ரோட்ரிக்ஸ், ஜோர்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸ் என்ற இடதுசாரி கெரில்லா பிரிவு தலைவரின் மகள் ஆவார். 1970களில் லீகா சோசலிஸ்டா கட்சியை நிறுவியவர் அவரது தந்தை.   நன்றி வீரகேசரி 





வெனிசுவெலாவுடன் தொடர்புடைய 2 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் ; ஒரு கப்பலில் ரஷ்யாவின் தேசியக் கொடி! 

08 Jan, 2026 | 01:32 PM

வெனிசுவெலாவுடன் தொடர்புடைய 2 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா நேற்று (7) பறிமுதல் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கரீபியன் கடல் பகுதி மற்றும் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த இந்த 2 கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. 

இவற்றில் ஒரு கப்பல் ரஷ்யாவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது. 

ரஷ்யாவின் தேசியக் கொடி பொருத்தப்பட்ட அந்த கப்பல் ரஷ்யாவுக்கு சென்றுகொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் கப்பல்களை தொடர்ந்து பறிமுதல் செய்யும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வெனிசுவெலா, மெக்சிகோ உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். 

இந்நிலையில், வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதரவளிப்பதாக கூறி வெனிசுவெலா மீது அமெரிக்கா சில நாட்களுக்கு முன் தாக்குதல் நடத்தியது. 

அத்துடன் அந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஆகியோரை அமெரிக்கா கைது செய்தது.

இவ்வாறான சூழ்நிலையில் வெனிசுவெலாவில் செயற்பட்டு வரும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. 

மேலும், வெனிசுவெலாவில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் கப்பல்களையும் அமெரிக்கா பறிமுதல் செய்து வருகிறது. இவ்வாறான நிலையிலேயே மேற்சொன்ன இரண்டு கச்சா எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.    நன்றி வீரகேசரி 





கிரீன்லாந்தை கையகப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த அமெரிக்கா கலந்துரையாடல் 

Published By: Digital Desk 3

07 Jan, 2026 | 04:26 PM

கிரீன்லாந்து நாட்டை கையகப்படுத்த இராணுவத்தை பயன்படுத்த அமெரிக்கா கலந்துரையாடி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கின் அரை தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை கையகப்படுத்துவது "தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் " என வெள்ளை மாளிகை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவிக்கும் டென்மார்க்கிற்கு ஆதரவாக ஐரோப்பியத் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில் "அமெரிக்கா தனது நட்பு நாடான டென்மார்க் மீது இராணுவத் தாக்குதலை நடத்தினால், நேட்டோ கூட்டமைப்பு அங்கேயே முடிவுக்கு வரும்" என டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகளாவிய பாதுகாப்பை சீர்குலைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பிரடெரிக் நீல்சன் (Jens-Frederik Nielsen) கருத்து தெரிவிக்கையில், "கிரீன்லாந்து ஒன்றும் விற்பனைக்குரிய பொருள் அல்ல; இது எமது தாயகம். ஆக்கிரமிப்பு என்ற கற்பனைகளை அமெரிக்கா கைவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

57,000 பேரை கொண்ட கிரீன்லாந்தில் 1979 ஆம் ஆண்டு முதல் விரிவான சுயாட்சியைக் கொண்டுள்ளது.

எனினும், பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார கொள்கை டென்மார்க் கைகளிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






ஈரானில் இணையம், தொலைபேசி சேவைகள் முடக்கம் 

Published By: Digital Desk 3

09 Jan, 2026 | 02:11 PM

ஈரான் போராட்டத்தை அடக்க நாடு முழுவதும் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகளை துண்டித்துள்ளது.

ஈரானில் விலைவாசி அதிகரிப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் 12-வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது அது ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியாக உருவெடுத்துள்ளது.

முன்னாள் இளவரசர் ரெசா பஹ்லவி விடுத்த அழைப்பை ஏற்று, வியாழக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் "சர்வாதிகாரமே ஒழிக" என முழக்கமிட்டனர்.

இந்த எழுச்சியை ஒடுக்க ஈரான் அரசு நாடு முழுவதும் இணையதள சேவைகள் மற்றும் தொலைபேசி இணைப்புகளைத் துண்டித்துள்ளது

இது குறித்து AP வெளியிட்ட செய்தியில், ஈரான் தற்போது ஒரு முழுமையான 'இணைய இருட்டடிப்பு' சூழலில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், விமான போக்குவரத்துகளும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட முன்னாள் இளவரசர் பஹ்லவி, மக்களின் குரலை நசுக்க ஈரான் அரசு தகவல் தொடர்புகளைத் துண்டித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், ஈரானிய மக்களுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அவர் நன்றி தெரிவித்ததுடன், ஐரோப்பிய நாடுகளும் ஈரான் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கிடையில், வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தலைமைக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.

அதிகாரிகள் போராட்டங்களுக்கு எதிரான தங்கள் எதிர்வினையை அதிகரித்து, போராட்டக்காரர்களைக் கொல்லத் தொடங்கினால் அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

எனினும், ரெசா பஹ்லவியைச் சந்திக்கவும் அவர் மறுத்துவிட்டார்.

இந்நிலையில், போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2,260-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டால், ஈரான் அரசு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர் ட்ரோன்களைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களை கண்காணித்து வரும் நிலையில், ஈரானில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.   நன்றி வீரகேசரி 




No comments: