பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயார் : ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
செம்மணியில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே! - நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு
இலங்கையில் முதலாவது ஷெல் எரிபொருள் நிலையம் திறப்பு
இரண்டு மாதங்களில் 162 இலங்கையர்கள் தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர்!
அடுத்த கட்ட கடனுதவியை இலங்கைக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம் !
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க அரசாங்கம் தயார் : ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
Published By: Vishnu
01 Mar, 2025 | 04:16 AM
புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் அமைந்திருந்தது என்றும், இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் அடிப்படைவாதம் தலைதூக்க தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற 2025 வரவுசெலவுத் திட்டத்தின் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் செலவினங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குவதன் மூலமோ, பொதுமக்கள் கிளர்ச்சியை உருவாக்குவதன் மூலமோ, அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் காணும் கனவுக்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாகரிகத்திற்கு வழி வகுத்துள்ளது என்றும், முடிந்தால் தற்போதைய அரசாங்கத்தின் நாகரிகத்தை மிஞ்சிச் செல்லுமாறும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி சவால் விடுத்தார்.
அவ்வாறு இல்லாமல் பழைய அரசியலிலே இருந்தால் அரசியலை விட்டு விலகுவதை தடுக்க முடியாதெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பாதாள உலகின் குற்ற குழுக்களுக்கு தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினரினதும் ஆசிர்வாதம் கிடைக்காதெனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
இலங்கை இராணுவத்தையும் பொலிஸையும் தொழில்சார்புடைய இராணுவமாகவும் பொலிஸாகவும் மாற்றுவதாக உறுதியளித்த ஜனாதிபதி, பாதுகாப்பு துறையின் எந்தவொரு இடமாற்றத்தையும் நட்பு மற்றும் அரசியல் அடிப்படையில் செய்யப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானிக்கு ஏழு தடவைகள் சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும், சகாக்களுக்கும் நண்பர்களுக்கும் நியமனங்களை வழங்குவதால் புதிய பயணத்தை செல்ல முடியாது என்பதால் புதியவர்களுக்கு நியமனங்கள் வழங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நபரொருவருக்கு பக்கச் சார்பான இராணுவத்திற்கு பதிலாக நாட்டுக்கு சார்பான இராணுவம் ஒன்றை உருவாக்கவும் தொழில்சார்பு தன்மையை மேம்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
காலத்தால் மறைந்திருக்கும் குற்றச்செயல்களுக்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும், அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் எடுக்குமெனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பாதுகாப்பு துறையின் கட்மைப்பின் மீதான நம்பிகையின் அடிப்படையிலேயே ஒழுக்கம் கட்டியெழுப்பப்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒழுக்கயீனத்தின் பாதாளம் வரையில் சென்றுள்ள இந்த நாட்டை மீண்டும் ஒழுக்கத்தை நோக்கி கொண்டுச் செல்ல தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் எதிர்க்கட்சியின் கனவு தற்போது முற்றுப்பெற்றுள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய பாதுகாப்பு தொடர்பில் நெருக்கடியிருப்பதாக காண்பித்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் எதிர்கட்சி தற்போது இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுவதாகவும் கூறினார்.
இம்மாதத்தில் நடந்த ஐந்து குற்றச் செயல்களை விசாரணை செய்யும்போது ஐந்து குழுக்களினால் அந்த குற்றச் செயல்கள் செய்யப்பட்டுள்ளதெனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது தமது பக்கம் விசாரணைகள் வருவதை குற்றச் செயல்களை செய்வோர் அறிந்துகொள்வதாகவும், அவ்வாறு பல குற்றக் குழுக்கள் ஒரே சமயத்தில் இயங்குவது சூழ்ச்சியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த சூழ்ச்சியை அறிந்துகொண்டு அதனை முடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் சூழ்ச்சிகளால் ஆட்சி மாற்றம் செய்த காலம் முடிந்துவிட்டதாகவும், ஒழுக்கத்தினால் அரசாங்கமொன்றை கட்டியெழுப்ப முடியுமெனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசியல் அதிகார தரப்பை குற்ற குழுக்கள் அற்றதாக்கும் சமூகத்தை கட்டியெழுப்புவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு துறையினரின் வெளிநாட்டு பயிற்சிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க இம்முறை வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விமானப்படை மற்றும் கடற்படைக்கு அவசியமான ஊர்திகளை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், பொலிஸ் திணைக்களத்தின் வசதிகளை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், விமானப்டைக்கும் பொலிஸூக்கும் தலா 10,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய இம்முறை வரவு செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நன்றி வீரகேசரி
செம்மணியில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே! - நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு
28 Feb, 2025 | 04:10 PM
யாழ். செம்மணியில் மீட்கப்பட்டவை எச்சங்கள் தொடர்பான வழக்கு இரண்டாவது முறையாக நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனித எச்சங்கள் தொடர்பான வழக்கு இன்றைய தினம் (28) இரண்டாவது முறையாக நீதவான் ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சட்ட வைத்திய அதிகாரி தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அந்த பகுதியில் 40க்கும் மேற்பட்ட எலும்பு மாதிரிகள் பெறப்பட்டதாகவும், அவற்றில் இரண்டு மாதிரிகளை விட ஏனைய அனைத்தும் மனித எச்சங்களின் மாதிரிகளாக உள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை மூலம் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.
இது குறித்து முதற்கட்ட ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
அத்துடன், 2 அடி ஆழத்துக்கு கீழேதான் இந்த மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்ச்சியாக மனித எச்சங்களால் நிறைந்த பகுதியாக உள்ளதா அல்லது தனிப்பட்ட புதைகுழியாக உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வினை தொடர வேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், மூத்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் ராஜ் சோமதேவா இந்த ஆய்வினை மேற்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளதாகவும், ராஜ் சோமதேவா கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வினையும் மேற்கொள்வதாக கூறினார்.
இவற்றை கருத்தில் கொண்ட நீதவான், முதற்கட்ட ஆய்வானது ஸ்கேன் மூலம் செய்யப்படும் என்றும் எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இது தொடர்பான கலந்துரையாடல் மன்றில் நடைபெறும் எனவும் காலநிலையை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி
இலங்கையில் முதலாவது ஷெல் எரிபொருள் நிலையம் திறப்பு
Published By: Digital Desk 3
26 Feb, 2025 | 02:24 PM
இலங்கையில் ஷெல் வர்த்தக குறியீடு உடைய முதலாவது எரிபொருள் நிலையம் அம்பத்தலேயில் உள்ள பி எஸ் குரே நிரப்பு நிலையத்தில் திறக்கப்பட்டது.
இது ஷெல் பிராண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஏஜி (ஷெல்) மற்றும் ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவை சில்லறை தர அடையாள உரிம ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டத்தை தொடர்ந்து, ஷெல் மற்றும் ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் துணை நிறுவனங்கள் மார்ச் 2024 இல் தயாரிப்பு விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் என்பது Tristar குழுமத்தின் (Tristar) கூட்டு நிறுவனமாகும், இது கீழ்நிலை எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் சேவை செய்யும் ஒரு முழு ஒருங்கிணைந்த எரிசக்தி தளவாட வணிகமாகும். மற்றும் ஆர்எம் பார்க்ஸ் Inc., வட அமெரிக்க எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் ஷெல் எரிபொருளின் அனுபவமிக்க விநியோகஸ்தர் ஆகும்.
ஆர்எம் பார்க்ஸ் (பிரைவேட்) லிமிடெட் இலங்கை முழுவதும் 150 சில்லறை எரிபொருள் நிலையங்களின் வலையமைப்பை ஷெல் என பெயர் மாற்றம் செய்ய உள்ளது. 2023 இல் இலங்கை பெற்றோலியம் மற்றும் எரிசக்தி அமைச்சினால் 20 வருட காலத்திற்கு செயற்படுவதற்கான ஒப்பந்தம் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
Tristar குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி யூஜின் மேய்ன் கூறியதாவது,
“ இந்த மூலோபாய கூட்டாண்மை இலங்கையின் எரிசக்தி துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது, எரிபொருள் விநியோகத்தில் ஆர்எம் பார்க்ஸ் இன் விரிவான அனுபவத்தையும் Tristarன் வலுவான போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலித் திறன்களையும் ஒன்றிணைக்கிறது. உலகளாவிய சிறந்த நடைமுறைகள், சிறந்த சேவை தரநிலைகள் மற்றும் இலங்கை நுகர்வோருக்கு நன்மை பயக்கும் புதுமையான ஆற்றல் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நாட்டின் எரிபொருள் சில்லறை வியாபாரத்தை மேம்படுத்துவதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
எமது முதலாவது ஷெல் வர்த்தகக்குறியுடைய எரிபொருள் நிலையத்தை திறப்பதன் மூலம் ஒரு அற்புதமான முன்னேற்றத்தை கண்டுள்ளோம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, ஷெல் என்பது நம்பிக்கை மற்றும் புதுமைக்கு ஒத்த பெயராக உள்ளது. உலகின் முதல் தர நிறுவனமாக ஷெல் இருப்பது அதன் தரமான எரிபொருள் மற்றும் உயவுப்பொருட்களுக்கு மட்டுமல்ல, நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காகவும் தான் . ஆர்எம் பார்க்ஸ் Inc., அமெரிக்காவின் மூன்றாம் தலைமுறை பெற்றோலியம் சந்தைப்படுத்துபவர் மற்றும் மெக்சிகோ மற்றும் உலகின் முன்னணி எரிசக்தி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றான Tristar Group, இந்த பாரம்பரியத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரவும், நாட்டின் எதிர்கால வளர்ச்சி மற்றும் வளர்ச்சியில் பங்குதாரராக இருக்கவும் உற்சாகமாக உள்ளது. இந்த வாய்ப்பை எமக்கு வழங்கிய இலங்கை மக்களுக்கு நாங்கள் நன்றி கூறுவதுடன், நாட்டிற்கான மிகச் சிறந்த சேவை வழங்குனராக இருக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.
“இலங்கையில் ஷெல் வர்த்தகக்குறியுடைய எரிபொருள் நிலையங்கள் ஆரம்பிக்கப்படுவதானது, ஒரு முக்கியமான மைல்கல்லாகும். எரிபொருள் பற்றாக்குறையினை அனுபவித்த ஒரு நாட்டிற்கு எரிபொருள் விநியோகத்திற்கான நம்பகமான தெரிவுகளை அது வழங்குகிறது. எரிபொருள் தொழிற்துறையில் அதன் தலைமைத்துவம் மற்றும் தரமான சேவையினை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக நன்கறியப்பட்ட, கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஆர்.எம். பார்க்ஸ் இன்க். எனும் நிறுவனம் விநியோக விடயங்களில் தலைமை வகிக்கும் இப்பங்காண்மையானது, அமெரிக்க வணிகம் உலகளாவிய எரிசக்திச் சவால்களைத் தீர்ப்பதற்கான ஒரு சிறந்த உதாரணமாகும். இம்முன்முயற்சியானது, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, எரிபொருள் கிடைப்பதை ஸ்திரப்படுத்தி இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் உதவி செய்யும்.” என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் குறிப்பிட்டார்.
ஃபிளாவியா ரிபேரோ பெசன்ஹா, GM (உரிமம் பெற்ற சந்தைகள், ஷெல் நகர்திறன் )மேலும் கூறியது,
“ வரவிருக்கும் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் திறக்கப்படும் பல நிலையங்களில் இது முதன்மையானது, மேலும் இலங்கை நகரங்களிலும் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகளிலும் ஷெல் தர குறியீட்டைக் காண நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும், உலகெங்கிலும் உள்ள சுமார் 33 மில்லியன் ஓட்டுநர்கள் ஷெல் சேவை நிலையத்திற்குச் சென்று தரமான எரிபொருளை பெறுவதுடன் இளைப்பாற கூடிய வசதி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வசதி, தரத்துடன் கூடிய சேவை அனுபவத்தைப் பெறுகிறார்கள்.
நன்றி வீரகேசரி
இரண்டு மாதங்களில் 162 இலங்கையர்கள் தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர்!
01 Mar, 2025 | 01:07 PM
இவ்வருடத்தின் கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் 162 இலங்கையர்கள் தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
அதன்படி, இதுவரை 2,052 இலங்கையர்கள் தாதியர் சேவைக்காக இஸ்ரேலுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
Published By: Digital Desk 2
01 Mar, 2025 | 09:27 AM
நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலரை உள்ளடக்கிய 4 ஆவது தவணைக்கான கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது.
இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மீளாய்வு கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று வெள்ளிக்கிழமை (28) ஆராய்ந்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவியை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்குக் கிடைக்கப் பெறும் கடனுதவி 1.34 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கின்றது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment