இரவும் பகலும் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோ நடிகராக ஒருவர் 1965ம் ஆண்டு


உருவானார். அவர்தான் ஜெய்சங்கர். அறுபது வருடங்களுக்கு முன் தயாரான இரவும் பகலும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்த இவர் அதன் பின் இரவும் பகலுமாக நடித்து திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டினார் .


பி ஏ பட்டதாரியான ஜெய்சங்கர் நடிப்பின் மீதான அபரிதமான

ஆர்வத்தால் டெல்லியில் தான் செய்து வந்த தொழிலை ராஜினாமா செய்து விட்டு சென்னை வந்து படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆரம்பத்தில் ஏவி எம் எடுத்த அன்னை படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியும் அவரின் கண்கள் சிறிய கண்கள் அதனால் உணர்ச்சிகளை திரையில் வெளிப்படுத்த முடியாது என்று கூறி இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு இருவரில் கிருஷ்ணனால் நிராகரிக்கப்பட்டார். ஆனாலும் இரண்டாண்டுகள் கழித்து இசையமைப்பாளர் டி ஆர் பாப்பா வழியாக வாய்ப்பு இவருக்கு கிட்டியது. சிட்டாடல் ஸ்டூடியோ அதிபர் ஜோசப் தாளியத்திடம் பாப்பா ஜெய்சங்கரை அறிமுகப்படுத்தினார். கிருஷ்ணனால் நிராகரிக்கப்பட்ட அவரின் சிறிய கண்கள் தாளியத்துக்கு பிடித்து விட்டது. தான் தயாரிக்கும் இரவும் பகலும் படத்துக்கு ஹீரோவாக ஜெய்யை ஒப்பந்தம் செய்தார் தாளியத் .

நட்சத்திர நடிகர்களை தவிர்த்து புது நடிகர்களை போட்டு படம் எடுத்து வெற்றி காணும் தாளியத் இந்த படத்தில் கதாநாயகனாக புதுமுகத்தை அறிமுகப்படுத்தியதோடு நின்று விடாமல் கதாநாயகியாகவும் சி . வசந்தாவை அறிமுகப்படுத்தினார். நகைச்சுவைக்கு தேங்காய் சீனிவாசன் தெரிவாகி , பின்னர் விநியோகஸ்த்தர்களின் வேண்டுகோளுக்கு அமைய நாகேஷ் ஒப்பந்தமானார். இவர்களுடன் எஸ் ஏ அசோகன், பண்டரிபாய், எஸ் வி ராமதாஸ், காந்திமதி, எனத்தே கன்னையா, ஆகியோரும் நடித்தனர்.


செல்வமும், தயாள குணமும் கொண்டவர்கள் மரகதவல்லியும், அவரின் மகன் ராஜுவும். ஒரு நாள் இரவு அவர்கள் வீட்டில் இடம்பெறும் பாரிய கொள்ளை சம்பவம் அவர்கள் வாழ்வை புரட்டி போட்டு விடுகிறது. இதனால் பணக்காரரான கோவிந்தனிடம் வேலைக்கு சேர்கிறான் ராஜு. பகலில் வேலை, இரவில் மாறுவேடத்தில் கொள்ளைக்காரர்களை கண்டுபிடிக்க முயற்சி என்று அவன் பாடுபடுகிறான் . கோவிந்தன் மகள் பரிமளா ஆரம்பத்தில் அவனை வெறுத்த போதும் பின்னர் அவர்களிடையே காதல் மலர்கிறது. கொள்ளையர்களை பிடிக்க ராஜு எடுக்கும் முயற்சி இறுதியில் மரகதவல்லி, கோவிந்தன் குடும்பத்தை சூழ்ந்திருந்த பல வருட மர்மங்களையும் விலக்குகிறது .

இப்படி அமைந்த படத்தின் கதையை டி என் பாலு எழுதியிருந்தார்.

ஏற்கெனவே எம் ஜி ஆரின் தெய்வத்தாய், ஆசைமுகம் படங்களுக்கு கதை எழுதியிருந்த பாலு இப் படத்துக்கும் எழுதி நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களையும் எழுதியிருந்தார். படத்தின் வசனங்களை நாஞ்சில் நாடு ராஜப்பா எழுதினார்.

படத்தின் பாடல்களை புது கவிஞரான ஆலங்குடி சோமு எழுதினார். இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான், உள்ளத்தின் கதவுகள் கண்களடா, காலை நேரம் ஒருத்தி வந்தாள் , கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ ஆகிய பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. ஆனாலும் எஸ் ஏ அசோகன் தனது சொந்தக் குரலில் பாடிய இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான் அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான் பாடல் அறுபது ஆண்டுகள் கழித்தும் தத்துவ முத்தாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

படத்துக்கு இசையமைத்தவர் டி ஆர் பாப்பா . ஜெய்சங்கரை தாளியத்திடம் அறிமுகப்படுத்தியதோடு நின்று விடாமல் பாடல்களுக்கும் நல்ல முறையில் இசையமைத்து படத்தின் வெற்றிக்கு உதவினார் அவர்.


27வயது இளைஞனான ஜெய் துடிப்புடனும், ஆர்வத்துடனும் நடித்திருந்தார். மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் இருந்ததால் உணர்ச்சிகரமாகவும் சில காட்சிகளில் அவரால் நடிக்க முடிந்தது. சண்டைக் காட்சிகளிலும் சுறுசுறுப்பாக நடித்திருந்தார். ஹீரோயின் வசந்தா சுமார், அசோகன், ராமதாஸ் இருவருக்கும் மேக் அப் பிரமாதம். நாகேஷ் படம் முழுவதும் வந்து சிரிப்பூட்டுகிறார். இளமையான காந்திமதியை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.
 
இதய கீதம், ஞான சௌந்தரி,மல்லிகா , விஜயபுரி வீரன் ஆகிய படங்களை எடுத்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருந்த ஜோசப் தாளியத் இந்தப் படத்தையும் இயக்கி வெற்றி படமாக்கினார். 1965ல் பொங்கல் வெளியீடாக எங்க வீட்டுப் பிள்ளை,பழனி, படங்களுடன் வெளியான இரவும் பகலும் படத்தை ரசிகர்கள் வெற்றி படமாக்கினார்கள்! சிவாஜி, ரவிச்சந்திரன் வரிசையில் முதல் படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகி, அந்தப் படமும் ஜெய்சங்கருக்கு வெற்றி படமானது.

No comments: