சங்கர சுப்பிரமணியன் -
தேநீர் விடுதியில் முகுந்தனும் முரளியும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கொஞ்சநாட்களாகவே முரளியின் முகத்தில் ஒரு இனம்புரியாத சோகம் தவழ்வதை உணர்ந்தவன் இன்று எப்படியும் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்துடன்,
“முரளி, நானும் கொஞ்சநாட்களாகவே கவனித்து வருகிறேன். நீ எதையோ பறிகொடுத்தது போல் இருக்கிறாயே?” என்று கேட்டான்.
“கொஞ்ச நாட்களாகவே என் மனதை ஒன்றை அரித்துக் கொண்டிருக்கிறது. யாராவது கேட்டால் அதைச் சொல்லி மனதில் உள்ளதை இறக்கி வைக்கலாம் என்றிருந்த வேளை நீ கேட்கிறாய்” என்றான்.
“அப்படியா? சொல். உன் மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்த புண்ணியம் எனக்கு கிடைக்கட்டும்” என்ற முகுந்தன் கேட்டதும் தன்மனதில் தேக்கி வைத்திருந்த சோகத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தான்.
முகுந்தா, என் சிறுவயது நண்பன் கணேசனைப் பற்றி உனக்குத் தெரியும். ஒரு வெள்ளந்தி. அவனிடம் ஒன்றை சோதனை செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில்
கடந்த வாரம் நடந்த ஒன்றைப்பற்றி கூறினான்.
எனது இன்னொரு நண்பன் பீட்டர். அவன் கைபேசி அங்காடி ஒன்றை வைத்து நடத்துகிறான். கடை வியாபாரம் எல்லாம் எப்படி நடக்குது என்று எப்ப கேட்டாலும் ஒன்னு நல்ல நடக்குதுன்னு சொல்லணும் இல்ல சுமார் என்றாவது சொல்லணும் ஆனால் அவன் பதிலில் எப்பவுமே ஒரு போலித்தனம் இருக்கும்.
அவன் சொல்லும் சூப்பர் என்ற பதிலில்தான் போலித்தனம் தெரியும் என்றான். உனக்கு தமிழில் பதில் கூறாமல் சூப்பர் என்று ஆங்கிலத்தில் பதில் சொல்கிறான். இதிலென்ன போலித்தனம் இருக்கிறது என்று நீ நினைக்கலாம். ஆனால் அவன் சொல்லும் விதம் அப்படியல்ல. அதாவது சூப்பர் என்று நாமெல்லாம் சொல்வதுபோல் சொல்லமாட்டான். சற்று வித்தியாசமாக வினோதமான தொணியில் சூ...ஊ…ஊ…ப்பர் என்பான்.
அவனிடம் என்னால் சொல்லவும் முடியவில்லை. ஆதலால் அவன் சொல்வதைப்போல மற்ற ஒருவரிடம் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் சொல்லி
எதிர்வினை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.
எந்த வினைக்கும் எதிர்வினை உண்டல்லவா? ஆதலால் ஒரு வினையை சோதிக்கும்போதும் எதிர்வினை வரவே செய்யும். அப்படி சோதிக்கும்போது எப்படிப்பட்ட எதிர்வினை வந்தாலும் தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும். அந்த எதிர்வினைதான் இப்போது எனக்கு வினையாகிவிட்டது என்று கவலையோடு சொன்னான்.
“எதிர்வினையா? உன் வினையை யாரிடம் ஆற்றினாய்? அந்த எதிர்வினையாலா இப்படி இருக்கிறாய்?”என்று அடுக்கடுக்காய் கேள்விகளைக் கேட்டான் முகுந்தன்.
“சொல்கிறேன், சொல்கிறேன் சொல்லாமல் எங்கே ஓடப்போகிறேன். கேள்” என்றவன் தொடர்ந்தான். நான் சோதனை செய்ய கணேசனைத் தேர்ந்தெடுத்ததுதான் தப்பாய் போயிற்று. அவன் எனக்கு உடுக்கை இழந்தவன் கைபோன்ற நண்பன். எனக்கு ஒன்று என்றால் ஓடிவருவான். அவனிடம் போய் சோதனை நடத்திப் பார்க்கலாமா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.
யருக்காவது நாம் விருந்து கொடுக்க வேண்டுமானால் ஒரு புதுவிதமானதை கொடுக்கலாம், அரைத்த மாவையே அரைப்பது மாதிரி கொடுத்ததையே திரும்பித் திரும்பி கொடுக்க வேண்டாம் என்பாள் என் மனைவி. அதற்கு அவளிடம் நான் தெரியாத பிசாசைவிட தெரிந்த பேய் எவ்வளவோ மேல் ஆதலால் இந்த சோதனையெல்லாம் வேண்டாம் என்பேன்.
நீ புதிதாக செய்யப் போகும் உணவை வேறொரு நாள் செய்து பார்த்து அது நன்றாக இருந்தால் விருந்தனர்களுக்கு கொடுக்கலாம் என்பேன். அப்படிப் பட்டவன் கணேசனைத் தேர்ந்தெடுத்ததுதான் சனி
உச்சத்தில் இருக்கிறான் என்பதை உணர்த்துகிறதோ?
சோதனைச் சாலைகளில்கூட
சோதனைகளை எல்லாம் எலிகளிடம்தான் செய்வார்கள். செல்லமாக வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளிடம் யாராவது சோதனை செய்து பார்ப்பார்களா?
நண்பர்கள் என்ற போர்வையில் நமக்கு வேண்டாவதற்றை எல்லாம் செய்யக் கூடியவர்கள் பலர் இருப்பார்கள்.
அவர்களால் நமக்கு பிரச்சினைகளும் வேதனைகளுமே மிஞ்சும். அப்படிப் பட்டவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து இந்த சோதனையை நடத்தியிருக்கலாம் என்று எண்ணி ஆதங்கப்பட்டான். அப்படிப் பட்டவர்கள் நம்மை விட்டுச் சென்றாலும் நமக்கு இழப்பொன்றும் ஏற்படாது என்றான்.
எதையும் நன்றாக உணர்ந்து செயல்படக் கூடியவனான அவனுக்கு யானைக்கும் அடி சறுக்கும் என்ற கதையாக அது நடந்து முடிந்தது. உணவுவகைகளில் காலை உணவு மதிய உணவு மாலையில் சிற்றுண்டி மற்றும் இரவு உணவு என்று இருப்பது போல் இப்போது இந்த ஃபாஸ்ட் புட் காலத்தில் நண்பர்களும் வகைவகையாக மாறியிருக்கிறார்கள்.
ஃபாஸ்ட் புட் என்றதும் மாடசாமி அண்ணாச்சி ஆங்கில வார்த்தைகளை
பயன்படுத்துவதாக எண்ணி தலையைச்
சொறிகிறார். செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதுபோல் இடத்துக்கு ஏற்ப சேர்க்கப்பட்டதுதான் இந்த ஃபாஸ்ட் புட் என்ற ஆங்கிலச்சொல்.
அம்மாவுக்கு சர்க்கரை நோயுள்ளது. அடுத்த வீட்டு அம்மணி எம்பெருமான் பாற்கடலில் பள்ளிகொண்டான் பக்கத்தில் தெருவிலேயே இருக்க, ஏழுமலையேறி மூட்டு நோவுடன் பகவானை கண்டுவந்த கையோடு
வீட்டுக்கு வந்து பிரசாதமும் கொடுத்தார்கள்.
அம்மாவுக்கு சர்க்கரை நோயென்று தெரிந்திருந்தும் கடவுள் பிரசாதம் என்பதால் கொடுக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக கடுகளவே லட்டை கொடுத்தார்கள் அடுத்த வீட்டு அம்மணி. நானும் கொடுத்த லட்டின் அளவைப் பார்க்காமல் அதன்பயனாக பகவானின் அருள் கிட்டுகிறதே என்ற பயனை மட்டும் பார்த்தேன்.
தினைத்துணை நன்றி செயினும் அதனை பனைத்துணையாக கருதுவார்கள் அதன் பயனைப் பெறுபவர்கள் என்கிறார் வள்ளுவர். அதேபோல் தினையளவு சேர்க்கப்பட்டதே
இந்த ஃபாஸ்ட் புட் என்பதும். ஆதலால் மாடசாமி அண்ணாச்சி மன்னித்து விடுவார் என எண்ணுகிறேன்.
ஏனென்றால் அவருக்கு எனக்கு நேர்ந்த சில அனுபவங்கள் தெரியும். தெரிந்தும் தமிழ் விரும்பி என்பதால் பழக்கத்தில் தலையைச் சொறிகிறார். ஒரு சமயம் இப்படித்தான் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது மகிழுந்தில் வந்தேன் என்றேன். அதற்கு நண்பனில் அருகில்இருந்தவன் ஐயா எந்த பள்ளியில் தமிழாசானாக இருக்கிறார் என்று பகடி செய்தான். அவனும் நண்பனே.
முகுந்தனிடம், “நான் செய்த தவறு எனக்கென்று ஒன்று வந்தால் ஓடிவருபவனிடம் சோதனை செய்ததுதான். எத்தனயோ நண்பர்கள் நடைப்பயிற்சிக்காக, நேரம் போகாவிட்டால் பொழுதுபோக்க, பண உதவி என்று வரும்போது மட்டும் நாடிவருபவர்களாக இருக்கும்போது இவர்களில் யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து சோதனை செய்திருக்க வேண்டும்” என்று சொல்லி முடித்தான் முரளி.
“இதுதான் கொஞ்சநாளாய் நீ எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க காரணமா?” என்றுகேட்டான் முகுந்தன்.
சரியாச் சொன்ன முகுந்தா.அதுதான் காரணம். கொஞ்ச நாளைக்கு முன் எப்படி இருக்கன்னு கேட்ட கணேசன்கிட்ட சூ…ஊ….ஊ….ப்பர் என்று சொன்னதின் எதிர்வினைதான் நான் எதையோ பறிகொடுத்த மாதிரி இருப்பதின் காரணம்.
அன்றிலிருந்து அவன் என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. அவனை நான் கேலி செய்வதாக தவறாக எடுத்துக் கொண்டான். எப்படித்தான் அவனுக்கு புரிய வைக்கப் போகின்றேனோ. ஒன்றும் புரியவில்ல” என்று பதிலைச் சொல்லி முடித்தான் முரளி.
தேநீர் கடையிலிருந்து வெளியேறிய நண்பர்கள் இருவரும் வீடு திரும்பினர். வீடு திரும்பும்போது முகுந்தன் சூ..ஊ….ஊ….ப்பர், சூ…ஊ….ஊ….ப்பர் என்று சொல்லிச் சொல்லிப் பார்த்தான். கணேசன் கடுப்பானதற்கும் முரளி எதையோ பறிகொடுத்தவன் போல் இருப்பதற்கும் காரணம் புரிந்தது.
நாம் புதுமை என்று நினைப்பதை வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று நண்பன் சொன்னதும் சரிதான் என்பதற்கு அறிகுறியாக பச்சோந்தி போல தலையை ஆட்டியபடியே நடந்தான்.
-சங்கர சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment