ஆடிய ஆட்டம் அடங்கியே போனது !














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண்  …. அவுஸ்திரேலியா 




ஓடுவார் ஆடுவார் ஓயாமல் இருக்கார் 
தேடுவார் திரட்டுவார் தெரியாது வைப்பார்
பிள்ளைக்கும் சொல்லார் பேணிபவளுக்கும் சொல்லார்
கள்ள மனத்துடன் காலத்தைக் கழிப்பார்

அரைக்காசு கொடுக்கார் அனுபவிக்க மாட்டார்
அடுத்தவர் அழுதிட ஆனந்தப் படுவார்
மனைவிக்கும் ஈயார் மக்கட்கும் ஈயார்
தெரியாது வைத்ததை தினந்தொட்டு மகிழ்வார்

தான தர்மத்தை ஈனமாய் நினைப்பார்
தற்பெருமை பேசுவதில் தனியின்பம் பெறுவார்
ஊனமுடை எண்ணத்தை உளமுளதும் நிறைப்பார்
உண்மையினை உணராமல் உயிரோடு உலவுவார்

எடுத்தெறிந்து பேசுவார் இன்சொல்லே பேசார் 
இரக்கத்தை ஒருக்காலும் எண்ணவே மாட்டார்
மனைவிக்கும் உதவார் மக்கட்கும் உதவார்
மனமுழுக்க தேடியதை நிரப்பியே வைப்பார்

மருந்துக்கும் கொடுக்கார் விருந்துக்கும் கொடுக்கார்
மற்றவர் வருத்தத்தில் மனமகிழ்ந்து இருப்பார் 
பெற்றவரைப் பேணார் உற்றவரைக் காணார்
தேடியதைப் பெரிதெனவே நினைத்தபடி இருப்பார் 

உண்ணாமல் உறங்காமல் ஓயாமல் திரிந்தார்
உடலுக்குள் புகுந்த நோயறியா இருந்தார்
செல்வத்தை நிலையென்று எண்ணியே நின்றார்
செல்லுவோம் என்பதை எண்ணாமல் சென்றார் 

இடப்பக்கம் நோவென்றார் ஏங்கினார் மனையாள்
கிடக்கப் படுத்தார் கிடந்துமே விட்டார்
மனையாள் மயங்கினாள் மக்கள் கலங்கினார்
மல்லாக்கப் படுத்தவர் மரணத்துள் புதைந்தார்

தேடிய சொத்து தெரியாமல் போனது
ஆடிய ஆட்டம் அடங்கியே போனது
கூடினை விட்டு ஆவியும் போனது
குவிந்த செல்வம் கூடவே போனதா 

No comments: