குழந்தைகள் இருந்தால் குதூகலம் நிறையும்
குதூகலம் குழந்தைகள் கூடவே வந்திடும்
கூடவே வந்தால் வீடெலாம் ஒளிரும்
வீடெலாம் ஒளிர்ந்தால் வேதனை ஓடிடும்
வேதனை ஓடிட வைப்பது குழந்தையே
குழந்தையே குடும்பத்தின் மாபெரும் சொத்து
மாபெரும் சொத்து மகிழ்வினைப் பொழியும்
ஆனந்த மழையாய் ஆகியே இருக்கும்
மழலையின் மழையில் நனைவது சுகமே
மழலையை மடியில் வைப்பதும் சுகமே
மழலையைக் கேட்டால் மனக்குறை பறக்கும்
குழந்தைகள் குறும்பு குழப்பத்தைத் தீர்க்கும்
குழப்பம் தீர்ந்தால் குதூகலம் பெருகும்
குதூகலம் பெருகினால் குடும்பமே மகிழும்
குடும்பமே மகிழச் செய்வது மழலையே
குழிவிழும் கன்னம் குவளைக் கண்கள்
விரிந்திடும் மலராய் பரந்திடும் வதனம்
சுருண்டிடு கேசம் சுந்தர உதடு
அனைத்துமே மழலையாய் ஆகியே இருக்கு
மழலை மொழிகள் மயக்கிடும் மந்திரம்
மந்திரம் கேட்டால் மனமெலாம் விரியும்
மனமெலாம் விரிந்தால் மயக்கம் கலையும்
மயக்கம் கலைந்தால் மகிழ்ச்சியே நிலைக்கும்
தொட்டிலில் குழந்தை துயின்றிடும் போது
எட்டியே நின்று பார்ப்பதும் மகிழ்வே
கட்டியே அணைத்துக் கொஞ்சிடும் வேளை
துப்பிடும் எச்சிலும் சுவையாய் இருக்கும்
கடவாய் வழியும் பாலும் சுவையே
கன்னம் கடிக்கும் வாயும் அழகே
உதையும் கால்கள் உருட்டும் விழிகள்
எல்லாம் மழலைகள் அழகோ அழகு
எல்லாக் குழந்தையும் அழகின் பரிசே
நிறங்கள் அழகினை தருவன அல்ல
மழலைப் பேச்சில் நிறங்கள் இல்லை
குழந்தைகள் அனைத்தும் குதூகலம் கொடுக்கும்
இருப்பார் குழந்தையும் இல்லார் குழந்தையும்
மழலை மொழியில் மனத்தை மயக்கும்
குழந்தைகள் அனைத்தும் குதூகலம் கொடுக்கும்
குழந்தைகள் உலகம் பரந்தது விரிந்தது



No comments:
Post a Comment