மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்கள் இயற்றியவை
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ
சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
அகலிகளுக் கின்ப முண்டோ ?
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
பேசிப் பயனென் னடீ
யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ !
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
நம்புத லற்றா ரடீ!
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!
அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ ?
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ ?
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்! - கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார்
பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை! - கிளியே!
பாமர ரேதறி வார்!
நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!
சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா - கிளியே!
வந்தே மாதர மென்பார்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கலாநிதி பாரதி இளமுருகனார் அவர்கள் இயற்றியவை
கிளிக்கண்ணிகள் - பழித்றிவுறுத்தல்
பண்டைய தமிழர்தம் பாரம்பரிய
மெல்லாம்
விண்டவர் யாரு ளரோ? – கிளியே
வீண்சொல்லில் வீர ரடீ!
அன்றைய அம்பெரும் விழுமியப்
பண்பையெலாம்
இன்று மறந்தா ரடீ! – கிளியே
என்றுதான் உணர்வா ரோடீ!
இல்லத்தில் விருந்தோம்பும்
இனிய பண்பதனை
மெல்லத்தான் விட்டா ரடீ! – கிளியே
மீண்டும்கைக் கொள்வா ரோடீ!
கண்டவுடன் காதலித்துக் கைவிட்டுப்
பிரிந்தவரைத்
தண்டிக்க எவருமுண்டோ? – கிளியே
தவிப்பவரின் நிலையு மேதோ?
சிவால யத்திலவர் திருமணம்
செய்தபின்பு
விவாக ரத்துஞ் செய்வா ரடீ!
– கிளியே
வீணரின் செயலிதுதா னோடீ?
நஞ்சையவர் நெஞ்சில் வைத்து
நகையை உதட்டில்வைத்து
வஞ்சனை செய்வா ரடீ! – கிளியே
வசதிக்கு நடிப்பா
ரடீ!
செந்தமிழோ டாங்கிலத்தைச் சேர்த்தே
எழுதிடுவோர்
மந்த புத்தி கொண்டோ ரடீ! – கிளியே
மாந்தர்களில் ஈன ரடீ!
பைந்தமிழில் இனிய சொற்கள்
பல்லாயிரம் இருந்தும்
செந்தமிழைப் படிக்கா ரடீ!
– கிளியே
சிந்தைதான் நோகு தடீ!
நிலம்விட்டுப் புலம்பெயர்ந்து
நிலைகொண்ட தமிழரவர்
கலங்கிடுவா ரோடீ – கிளியே
காதரம் கொள்ளா ரடீ!
தோத்திரம் தரும் பலனைத் துளியேனும்
நம்பாது
சாத்திரம் பார்ப்பா ரடீ! - கிளியே
பார்த்தவைதான் பலிக்கு மோடீ!
பலனை எதிர் நோக்கிப் பணத்தை
இழந்தோர்கள்
இலவு காத்த கிளியாமோ – கிளியே
ஏமாற்றும் உலக மடீ!
சுதந்திரம் தலைவிரித்து ஆடிடத்
துயரிங்கு
நிரந்தரம் பெருகு தடீ! – கிளியே
நீக்கிட வழிதா னுண்டோ?
பெருமையாய் உயிர்களில் உயர்சிவம்
காண்பது
அருமையாய் விட்டு தடீ! – கிளியே
அஞ்ஞானம் பெருகு தடீ
கள்ளமாய்ப் பொருளீட்டிக் காலங் கழிப்பவர்
புள்ளகம் கொள்ளாரடீ – கிளியே
போங்காலம் காண்பா ரோடீ?
அஞ்சிஅஞ்சிச் சாவது அறியாமை
அல்லவோ?
அஞ்சாமை வேண்டு மடீ! – கிளியே
ஐந்தெழுத்தை மறப்பா ரடீ
ஆவி பிரியும்போது அம்மாவெனக்
கதறும் ஆட்டைப்
பாவியர் வெட்டுவா ரடீ – கிளியே
பழிக்கவர் அஞ்சா ரடீ
அன்புக்கு விலைபேசும் அறிவிலிகள் கூடுகையில்
துன்பந்தான் பெருகு தடீ – கிளியே
சோதனைக் கால மடீ
விண்டவர் - அறிந்தவர்
ஈனர் - இழிந்தவர்
காதரம் - அச்சம்
இலவு காத்த கிளி
- இலவங்காய் முற்றியதும் வெடித்துப் பஞ்சு
காற்றிலே பறந்துவிடுமன்றோ?
அதனை எடுக்கலாம் என்று
பலனை எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாந்த கிளி போல
நிரந்தரம் - என்றும்
புள்ளகம் - மகிழ்ச்சி
போங்காலம் -- அழிவுக்காலம்
ஐந்தெழுத்து – பஞ்சாட்சர மந்திரம்
சிவாயநம



No comments:
Post a Comment